பீறிடும் வெந்நீரூற்று

வெந்நீரூற்று அல்லது வெந்நீர்ச்சுனை (Geyser) என்பது நீரானது, நீராவியுடன் சேர்ந்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் கிளர்ந்தெழுந்து, மேல்நோக்கி மிகவும் வேகத்துடன் வெளியேற்றப்படும் ஒரு நீர் நிலையாகும். குறிப்பிட்ட சில நிலத்தடி நீர்ப்படுகைகளில் மட்டுமே இவ்வாறான வெந்நீரூற்றுகள் காணப்படுகின்றன. புவியின் ஒரு சில இடங்களில் மட்டுமே இவ்வகையான வெந்நீரூற்றுகள் இருப்பதனால், இது ஒரு அரிதான தோற்றப்படாகவே கருதப்படுகிறது. பொதுவாக இவை இயக்கநிலையிலுள்ள எரிமலைகள் இருக்கும் இடங்களில், பாறைக் குழம்புகளுக்கு அண்மையாகவே தோன்றும். நிலத்தடி நீரானது நிலத்தினடியில் கிட்டத்தட்ட 2000 மீட்டர் ஆழத்தில் சூடான பாறைகளைத் தொட்டுச் செல்லும். அப்போது உருவாகும் அழுத்தத்தோடு கூடிய கொதிக்கும் நீரானது சூடான ஆவியுடன் கூடிய நீராக, நிலத் துளைகளூடாக வேகத்துடன் வெளியேறும் செயற்பாட்டினால் இந்த வெந்நீரூற்றுகள் உருவாகின்றன.

ஐசுலாந்தில் உள்ள ஸ்ட்ரோக்குர் வெந்நீரூற்று
யெல்லோஸ்டோன் தேசியப் பூன்க்காவில் உள்ள கேசில் வெந்நீரூற்று

உலகில் இருக்கும் கிட்டத்தட்ட 1000 வெந்நீரூற்றுகளில் 50% அமெரிக்காவிலுள்ள வயோமிங்கு என்னும் இடத்தில் உள்ள எல்லோசுட்டோன் தேசியப் புரவகம் (யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா) என்ற இடத்திலேயே இருப்பதாக அறியப்படுகிறது. வெந்நீரூற்றுப் பகுதியில் ஏற்படும் கனிமப் படிவுகள், அருகில் ஏற்படும் எரிமலை வெடிப்புக்கள், ஏனைய அருகாமையிலுள்ள பீறிட்டு மேலே நீர் பீச்சியடிக்காமல் காணப்படும் வெந்நீரூற்றுக்களின் (Hot springs) தாக்கம், மனிதர்களின் குறுக்கீடுகள் போன்றவற்றால், ஒரு வெந்நீரூற்று இடையே நிறுத்தப்படவோ, அல்லது முற்றாக நின்று போகவோ நேரலாம்.[1]

உருவாக்கமும் தொழிற்பாடும் தொகு

 
யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவில் ஸ்டீம்போட் வெந்நீரூற்று

வெந்நீரூற்றானது, ஒரு தற்காலிகமான புவியியல் தொழிற்பாடேயாகும். ஒரு வெந்நீரூற்றின் வாழ்வுக் காலம், சில ஆயிரம் ஆண்டுகள் மட்டுமே. பொதுவாக இவை எரிமலை செயற்பாட்டுடன் தொடர்புடையதாகவே இருக்கும்.[2] நிலத்தின் கீழாக நீர் கொதிக்கும்போது உருவாகும் அழுத்தம், உயர் வெப்பநிலையைக் கொண்ட நீரையும், நீராவியையும் நிலத்தின் உள்ளிருந்து வரும் குழாய்நிரல் அமைப்பினூடாக மேற்பரப்பை நோக்கி வேகமாக வெளியேற்றும்.

காரணிகள் தொகு

வெந்நீரூற்றின் தோற்றத்திற்கு, உயர் வெப்பநிலை, நிலத்தடி நீர், நிலத்தினடியில் இருந்து மேற்பரப்பை நோக்கி வரும் குழாய் போன்ற அமைப்பு ஆகிய மூன்று நிலவியல் நிலைமைகளும் காரணிகளாக அமைகின்றன.

உயர் வெப்பநிலை தொகு

இந்த நிலைமை எரிமலையில் இருந்து வெளியேறிய நிலப்பரப்பிற்கு அண்மையாக நிலத்தினுள்ளே படிந்திருக்கும் பாறைக் குழம்பினால் ஏற்படும். இவ்விடங்களில் இருக்கும் மேலதிக அழுத்தம் காரணமாக, சாதாரண வளிமண்டல வெப்பநிலையில், நீரின் இயல்பான கொதிநிலை அளவைக்காட்டிலும் அதிகரித்த கொதிநிலையிலேயே நீர் கொதிநிலையை அடையும்.

நிலத்தடி நீர் தொகு

நிலத்தினடியில் காணப்படும் நீர், நிலத்தில் ஏற்பட்டிருக்கும் வெடிப்புக்களினால் உண்டான நிலத் துளைகள் ஊடாக, நிலத்தினடியிலிருந்து மேற்பரப்புக்கு வர வேண்டும்.

குழாய் அமைப்புக்கள் தொகு

இவ்வமைப்பில், நிலத்தினடியில் நீரைக் கொண்டுள்ள நீர்த்தேக்கமும் அடங்குகின்றது. நிலத்தினுள் காணப்படும் குழாய் அமைப்புக்களில் ஏற்படும் ஒடுக்கங்களினால் வரும் அழுத்த மாற்றமே இவ்வகையான நீர் வெளித்தள்ளலுக்கு உதவுகின்றது. நிலத்தினுள் காணப்படும், வெடிப்புகள், துளைகள், குழிகள் போன்ற அமைப்புக்களே, இத்தகைய குழாய் அமைப்பை ஏற்படுத்துகிறன.

       
1. சூடாகிய நீரிலிருந்து ஆவி எழுகிறது
2. நீர்த்திரள்கள் மேலெழும்புகின்றன
3. மேற்பரப்பை உடைக்கினறன
4. மேலே பீய்ச்சி அடித்து கீழ் விழுகின்றன

வெந்நீரூற்றுக்களின் உயிரியல் தொகு

வெந்நீரூற்றுகளில் காணப்படும் வழக்கத்திற்கு மாறான சூழ்நிலைகளையும் மீறி அங்கு வாழும் உயிரினங்களே, வெந்நீரூற்றுகளின் வேறுபட்ட நிறத்துக்கு காரணமாகின்றன. பொதுவாக உயர் வெப்பநிலையில் வாழக்கூடிய நிலைக்கருவிலிகள் என்னும் உயிரினங்களே இங்கு காணப்படுகின்றன. 60 பாகை செல்சியசுக்கு மேலான வெப்பநிலையில் வாழக்கூடிய மெய்க்கருவுயிரி எதுவும் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.[3] ஆதலால் அவை வெந்நீரூற்றுகளில் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனலாம்.

1960 ஆம் ஆண்டுகளில் வெந்நீரூற்றுகளைப் பற்றி ஆய்ந்த அறிவியலாளர்கள், 73 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் உயிரினங்கள் வாழ முடியாது என்ற கொள்கையையே நம்பியிருந்தனர். அதுவே நீலப்பச்சைப்பாசியின் (சயனோபாக்டீரியா) உயர்ந்த தாங்கும் வெப்பநிலையாகக் கருதப்பட்டது.[3] ஆனால் பின்னர் பல பாக்டீரியாக்கள் நீரின் கொதிநிலை வரை கூட வாழக்கூடியவை எனக் கண்டறியப்பட்டது.[4] அப்படியான உயிரினங்கள் இந்த வெந்நீரூற்றுகளில் வாழும்போது, அவற்றின் நிறத்திற்கேற்ப வெந்நீரூற்றின் நிறமும் மாறுபடுகிறது.

முக்கியமான வெந்நீரூற்றுக்கள் காணப்படும் இடங்கள் தொகு

வெந்நீரூற்றுகள் உருவாவதற்கு உயர் வெப்பநிலை, நிலத்தடி நீர், நிலத்தினுள் காணப்படும் குழாய் அமைப்புகள் ஆகிய மூன்றும் இணைந்திருத்தல் அவசியம் என்பதனால் உலகில் மிகச்சில இடங்களிலேயே இவை காணப்படுகின்றன.[5][6]

யெலோஸ்டோன் தேசியப் பூங்கா, ஐக்கிய அமெரிக்கா தொகு

இங்கு அதிகளவிலான வெந்நீரூற்றுகள் உள்ளன. உலகிலுள்ள வெந்நீரூற்றுகளில் 50% இங்கேயே காணப்படுகிறது. ஆயிரக் கணக்கில் நீர் மேலே பீறிட்டு எழும்பாத வெந்நீரூற்றுகளும் (Hot springs), 300-500 நீர் பீறிட்டு எழும் வெந்நீரூற்றுகளும் இங்கே உள்ளன. அதிக எண்ணிக்கையில் வயோமிங், ஐக்கிய அமெரிக்கா பகுதியிலும் ஏனையவை மொன்டானா, ஐடஹோ போன்றா பகுதிகளிலு காணப்படுகின்றன.[7] இங்கு அதிக இயங்கு நிலையிலுள்ள உயர்வெப்ப வெந்நீரூற்றும் உள்ளது.[6]

வெந்நீரூற்றுப் பள்ளத்தாக்கு, உருசியா தொகு

வெந்நீரூற்றுப் பள்ளத்தாக்கு (Valley of Geysers) உருசியாவில் காம்ச்சட்கா (Kamchatka) மூவலந்தீவில் (தீபகற்பத்தில்) உள்ளது. இந்த ஒரு இடத்தில் மட்டுமே உருசியாவில் வெந்நீரூற்றுகள் இருப்பதாயும், அவையே உலகில் இரண்டாவது பெரிய வெந்நீரூற்றுகள் நிறைந்த இடம் எனவும் அறியப்படுகிறது. இந்த இடத்தை 1941 இல் தாத்தியானா உசித்தினோவா (Tatyana Ustinova) என்பவர் கண்டுபிடித்தார். இங்கே அதிகளவிலான நீரை வெளியே உயரத்துக்கு எழுப்பாத வெந்நீரூற்றுகளுடன் சேர்ந்து, கிட்டத்தட்ட 200 வெந்நீரூற்றுகள் உள்ளன. மிகவும் தீவிரமான எரிமலை வெடிப்புக்களாலேயே இவை இங்கு உருவாகியுள்ளன. இங்கு மிகவும் மாறுதலான வகையில், சாய்வாக நீர் பீறிட்டு எழும்.[6] ஜூன் 3, 2007 இல் ஏற்பட்ட மண்சரிவினால் இப்பள்ளத்தாக்கின் மூன்றில் ஒரு பகுதி சேதமடைந்தது.[8] இதனால் இந்த இடத்தில் சூடான ஏரி உருவானதாக அறியப்பட்டது.[9] ஆனாலும் முற்றாக மூடப்படாமல், வெந்நீரூற்றுகள் தொடர்ந்து இயங்குநிலையில் இருந்ததாக பின்னர் சில நாட்களில் கண்டறியப்பட்டது.[10]

எல் டாத்தியோ, சிலி தொகு

எல் தாத்தியோ வெந்நீரூற்று

எல் தாத்தியோ (El Tatio) என்பது தென்னமெரிக்காவில் உள்ள சிலி நாட்டில் கடல் மட்டத்திலிருந்து 4200 மீ. உயரத்திலுள்ள ஆண்டிசு மலைப்பகுதியில், மிகவும் கனன்று கொண்டிருக்கும் நிலையிலுள்ள எரிமலைகளால் சூழப்பட்ட பெரிய பள்ளத்தாக்கில் இருக்கும் ஒரு இடமாகும். இந்த பள்ளத்தாக்கில் கிட்டத்தட்ட 80 வெந்நீரூற்றுகள் காணப்படுவதுடன், இது மூன்றாவது பெரிய வெந்நீரூற்று நிலப்பகுதியாகக் கருதப்படுகிறது. இவை உயரம் குறைந்தவையாகும். இவை அதி உயரமாக 6 மீட்டர் மட்டுமே இருப்பினும், நீராவியுடன் சேர்த்து 20 மீட்டர் வரை செல்லும்.[6][11]

தாவுப்போ எரிமலை வலயம், நியூசிலாந்து தொகு

நியூசிலாந்தின் வடக்குத் தீவிலுள்ள தாவுப்போ எரிமலை வலயத்தில் (Taupo Volcanic Zone) வெந்நீரூற்றுகள் உள்ளன. இங்குள்ள வெந்நீரூற்றுக்கள் 500 மீட்டர் உயரம் வரை மேல்நோக்கிப் பீறிட்டுச் செல்லக் கூடியவையாகும்.[6]

ஐசுலாந்து தொகு

ஐசுலாந்து அதிகளவில் வெந்நீரூற்றுகளைக் கொண்ட ஒரு நாடாகும். ஐசுலாந்து தீவு முழுமையிலும், இவ்வகையான வெந்நீரூற்றுகள் பரவிக் காணப்படுகின்றன. 5-8 நிமிடங்களுக்கு ஒரு தடவை 30 மீட்டர் உயரத்திற்கு நீரை வெளியேற்றக் கூடிய ஒரு வெந்நீரூற்று இசுற்றோக்கூருக்கு (Strokkur) அருகில் காணப்படுகின்றது.[6][12]

மறைந்த/ இயங்கு நிலையிழந்தவை தொகு

அமெரிக்காவின் நெவாடா பகுதியில் காணப்பட்ட இரு பெரிய வெந்நீரூற்றுகள், அப்பகுதியில் உருவாக்கப்பட்ட புவி வெப்பஆற்றல் மின் உற்பத்தி நிலையத்தால் அழிந்து போனது. இவ்வாறான நிலையங்களை உருவாக்கும்போது, நிலத்தடி நீரும், வெப்பமும் குறைவதால் வெந்நீரூற்று தன் இயங்கு நிலையை இழக்கிறது.[6]

கடந்த நூற்றாண்டில் நியூசிலாந்தில் உள்ள பல வெந்நீரூற்றுகள் மனிதர் நடவடிக்கைகளால் அழிக்கப்பட்டன. பல இயற்கையாகவும் தன் இயங்கு நிலையை இழந்தது. தற்போது இருப்பவை முக்கியமாக ரோட்டூருவாவில் உள்ள வாக்கரேவரெவா (Whakarewarewa, Roturua) என்ற இடத்திலேயே உள்ளன.[13] ஒராக்கீ கொராக்கோவில் (Orakei Korako) இருந்த மூன்றில் ஒரு பங்கு வெந்நீரூற்றுகள் 1961 இல் வெள்ளத்தால் அழிந்தன. 1958 இல் வாயிராக்கீயில் (Wairakei) இருந்தவை, புவி வெப்ப ஆற்றல் மின் உற்பத்தில் நிலைய உருவாக்கத்தால் அழிந்தன.

வணிக நோக்கிலான பலன்கள் தொகு

மின்சார உற்பத்தி, சுடுநீர்த் தேவை, சுற்றுலாத்துறை போன்ற வணிகநோக்கிலான தேவைகளுக்கு இந்த வெந்நீரூற்றுக்கள் பயன்படுகின்றன. 1920 ஆம் ஆண்டு முதல், ஐசுலாந்தில் உணவுக்கான தாவரங்களை வளர்க்கப் பயன்படும் பசுமைக்குடில்களை (greenhouse) சூடாக்கி வைத்திருக்க இந்த வெந்நீரூற்றுக்கள் பயன்படுகின்றன். ஐசுலாந்தின் தட்பவெப்பநிலை வெளியிலே தாவரங்களை வளர்த்தெடுக்க உகந்ததாக இல்லாமல் இருப்பதால் இந்த முறை மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.[14] 1943 ஆம் ஆண்டு முதல் வீடுகளை சூடாக்குவதற்கும் அங்கே இவை பயன்படுத்தப்படுகின்றன.

அடிக்குறிப்புகள் தொகு

  1. Bryan T.Scott (1995). "The Geyers of Yellowstone". University Press of Colorado (Niwot, Colorado). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-87081-365-X. 
  2. How geysers form பரணிடப்பட்டது 2011-06-17 at the வந்தவழி இயந்திரம் Gregory L.
  3. 3.0 3.1 Lethe E. Morrison, Fred W. Tanner; Studies on Thermophilic Bacteria Botanical Gazette, Vol. 77, No. 2 (Apr., 1924), pp. 171-185
  4. Michael T. Madigan and Barry L. Marrs; Extremophiles பரணிடப்பட்டது 2008-04-09 at the வந்தவழி இயந்திரம் atropos.as.arizona.edu Retrieved on 2008-04-01
  5. Glennon, J.A. and Pfaff R.M. 2003; Bryan 1995
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 Glennon, J Allan "World Geyser Fields" பரணிடப்பட்டது 2007-06-30 at the வந்தவழி இயந்திரம் Retrieved on 2008-04-04
  7. "Yellowstone geysers" nps.gov Retrieved on 2008-03-20
  8. Mehta, Aalok (2008-04-16). "Photo in the News: Russia's Valley of the Geysers Lost in Landslide". National Geographic. http://news.nationalgeographic.com/news/2007/06/070605-geyser-valley.html. பார்த்த நாள்: 2007-06-07. 
  9. Harding, Luke (2007-06-05). "Mudslide fully changes terrain in Kamchatka’s Valley of Geysers". Guardian Unlimited. http://www.guardian.co.uk/russia/article/0,,2095579,00.html. பார்த்த நாள்: 2008-04-16. 
  10. Shpilenok, Igor (2007-06-09). "June 2007 Special release – The Natural Disaster at the Valley of the Geysers" இம் மூலத்தில் இருந்து 2008-04-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080412111753/http://www.shpilenok.com/new/index.htm. பார்த்த நாள்: 2008-04-16. 
  11. Glennon, J.A. and Pfaff. R.M., 2003)
  12. Gardner Servian, Solveig "Geysers of Iceland" Retrieved on 2008-04-16
  13. "Whakarewarewa, The Thermal Village" Retrieved 2008-04-04
  14. Geysers and Energy american.edu Retrieved on 2008-04-12

மேற்கோள்கள் தொகு

  • Bryan, T. Scott (1995). The geysers of Yellowstone. Niwot, Colorado: University Press of Colorado. ISBN 0-87081-365-X
  • Glennon, J.A., Pfaff, R.M. (2003). The extraordinary thermal activity of El Tatio Geyser Field, Antofagasta Region, Chile, Geyser Observation and Study Association (GOSA) Transactions, vol 8. pp. 31–78.
  • Glennon, J.A. (2005). Carbon Dioxide-Driven, Cold Water Geysers பரணிடப்பட்டது 2007-09-02 at the வந்தவழி இயந்திரம், University of California, Santa Barbara. Originally posted February 12, 2004, last update 6 May 2005. Accessed 8 June 2007.
  • Glennon, J.A. (2007). About Geysers பரணிடப்பட்டது 2007-09-02 at the வந்தவழி இயந்திரம், University of California, Santa Barbara. Originally posted January 1995, updated June 4, 2007. Accessed 8 June 2007.
  • Glennon, J.A., Pfaff, R.M. (2005). The operation and geography of carbon-dioxide-driven, cold-water geysers, GOSA Transactions, vol. 9, pp. 184–192.
  • Kelly W.D., Wood C.L. (1993). Tidal interaction: A possible explanation for geysers and other fluid phenomena in the Neptune-Triton system, in Lunar and Planetary Inst., Twenty-Fourth Lunar and Planetary Science Conference. Part 2: 789-790.
  • Rinehart, J.S. (1980) Geysers and Geothermal Energy. Springer-Verlag, 223 p.
  • Schreier, Carl (2003). Yellowstone's geysers, hot springs and fumaroles (Field guide) (2nd ed.). Homestead Pub. ISBN 0-943972-09-4
  • Soderblom L.A., Becker T.L., Kieffer S.W., Brown R.H., Hansen C.J., Johnson T.V. (1990). Triton's geyser-like plumes — Discovery and basic characterization. Science 250: 410-415.
  • Allen, E.T. and Day, A.L. (1935) Hot Springs of the Yellowstone National Park, Publ. 466. Carnegie Institute of Washington, வாசிங்டன், டி. சி., 525 p.
  • Barth, T.F.W. (1950) Volcanic Geology: Hot Springs and Geysers of Iceland, Publ. 587. Carnegie Institute of Washington, Washington, D.C., 174 p.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீறிடும்_வெந்நீரூற்று&oldid=3574148" இலிருந்து மீள்விக்கப்பட்டது