புகழேந்திப் புலவர் (நளவெண்பா)

நளவெண்பா படைத்தவர்

புகழேந்திப் புலவர் என்னும் பெயருடன் இருவேறு காலங்களில் இருவேறு புலவர்கள் வாழ்ந்துவந்தனர்.

புகழேந்தி நளவெண்பா எழுதிய புகழ்பெற்ற சோழர் கால புலவர் ஆவார். புகழேந்தியும், புலவர் ஒட்டக்கூத்தரும் போட்டிப் போட்டுக்கொண்டு பாடிய பாடல்கள் சுவை மிக்கவை. நளவெண்பா மிகச் சிறந்த 427 (பாயிரம் +7+420) வெண்பாக்களையுடையது; இதன் காரணமாக வெண்பாவிற் புகழேந்தி என்றும் புகழப்படுகிறார்.

பெருமை தொகு

எந்தெந்த வகையான பாடல்களில் யார் யார் சிறந்து விளங்கினர் என்பதைத் தெரிவிக்கும் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாடல் இவரை வெண்பா பாடுவதில் மிகச் சிறந்தவர் என்று குறிப்பிடுகிறது.[1]

புகழேந்தி பற்றிய கட்டுக்கதைகள் தொகு

புகழேந்தி, ஒட்டக்கூத்தன் காலத்தவர் என்ற கருத்து நீண்ட காலமாக இருந்து வருகிறது, அவர் தொண்டை நாட்டில் 'களந்தை' என்னும் ஊரில் பிறந்து, பாண்டிய அரசர்களிடம் பணிபுரிந்ததாகவும், பிறகு சோழ அரசன் ஒருவன் பாண்டிய இளவரசி ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்ட போது, இவனும் பாண்டிய அரசனால் சோழர் அரண்மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்குக் கூத்தன், புகழேந்தி மீது பொறாமை கொண்டான் என்றும் கூத்தனுக்கும் புகழேந்திக்கும் ஏற்பட்ட பூசல் அரச குடும்பத்துக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தியது என்றும், கடைசியில் அரசனே தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினார். பிறகு அவர்கள் தங்கள் சண்டைகளை நிறுத்திக் கொண்டார்கள்.[சான்று தேவை]

நளவெண்பா தொகு

செஞ்சியர்கோன் என்றழைக்கப்படும் செஞ்சி நாட்டுச் சிற்றரசனான கொற்றண்டை என்பவனைப் பலவகைப் பாக்களில் புகழ்ந்து புகழேந்தி ஒரு கலம்பகம் பாடியதாகத் தொண்டை மண்டல சதகம் என்ற நூல் கூறுகிறது. ஒட்டக்கூத்தரும், புகழேந்தியும் சமகாலத்தவர் என்ற கருத்தால் செஞ்சியை ஆண்ட இந்தச் சிற்றரசன் விக்கிரம சோழ உலாவில் குறிப்பிடப்பட்டவனாக இருக்கவேண்டும். ஆனால் இதுவும் சந்தேகத்திற்குரியதே! புகழேந்தி ஒட்டக்கூத்தருக்கு ஒரு நூற்றாண்டுக்கு பின்னரே வாழ்ந்திருக்க வேண்டும், புகழேந்தி நளவெண்பா மூலம் புகழ் பெற்றவர். "வெண்பாவிற் புகழேந்தி" என்பது ஒரு சொற்றொடர் இதன் காரணமாகவே வழக்கத்தில் இருந்தது. நளவெண்பா நளன் கதையை 427 வெண்பாக்களில் கூறுகிறது, சமஸ்கிருதத்தில் அனுஸ்டுப் என்பதற்குச் சமமானது தமிழ் வெண்பா; இதன் காரணமாகத் தக்க திறமையும் புலமைமுடைய கவிஞர்கள் மட்டுமே கையாளக் கூடியதாக வெண்பா இருந்தது, அத்தகைய இலக்கணங்கள் உடைய வெண்பாவில் மிகுந்த தேர்ச்சி பெற்றவராகப் புலவ புகழேந்தி இருந்தார். புகழேந்தியின் வெண்பாக்கள் மிகச்சிறந்த தரும் உடையனவாகயிருந்தன. நளன் கதையில் மக்கள் கொண்டிருந்த ஆர்வத்தால் நளவெண்பா மிகவும் பரவியது.

இலக்கியச் சிறப்பில்லாத வேறு பல நூல்களைப் புகழேந்தியால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறன. நளவெண்பாவைப் புகழேந்தி, எளிய முறையில் எழுதியதால், அதே முறையைப் பின்பற்றி வேறு சிலர் எழுதிய நூல்களையும் புகழேந்தியுடன் தொடர்புப்படுத்திச் சொல்லும் மரபாகத்தான் இதைப் பார்க்க முடியும் ஏனென்றால் நளவெண்பாவுக்கும், இந்த நூல்களுக்கும் உள்ள வேற்றுமை, மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு போன்றது. புகழேந்தியின் காலத்தைப் பற்றி அறுதியிட்டு ஒன்றும் சொல்லமுடிவதில்லை.

வாழ்ந்த காலம் தொகு

மாளுவ நாட்டில் முரணைநகர் சந்திரன் சுவர்க்கி என்பவனைப் புகழேந்தி குறிப்பிடுகிறார். இவனைப் பற்றி எந்தக் கல்வெட்டிலும் தகவல் இல்லை. கம்பனுடைய கருத்துகளும், கம்பன் கையாண்டுள்ள சொற்றொடர்களும், புகழேந்தியின் நளவெண்பாவில் காணப்படுவதால், புகழேந்தி, கம்பனுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவராக இருக்க முடியாது என்ற தீர்வுக்கு வரலாம்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. "வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர்
    சயங்கொண்டான் விருத்தமென்னும்
    ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா
    அந்தாதிக் கொட்டக் கூத்தன்
    கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்
    வசைபாடக் காள மேகம்
    பண்பாகப் பகர்சந்தம் படிக்காச
    லாலொருவர் பகரொ ணாதே." - பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்