புத்தகப்புழு (ஓவியம்)

புத்தகப்புழு (The Bookworm) என்பது 1850 ஆம் ஆண்டில் செருமன் ஓவியரும் கவிஞருமான கார்ல் இசுப்பிட்சுவெக் (Carl Spitzweg) என்பவரால் வரையப்பட்ட எண்ணெய் வண்ண ஓவியம் ஆகும். இவ்வோவியம் நெப்போலியப் போர்களுக்கும், 1848 ஆம் ஆண்டின் புரட்சிக்கும் இடைப்பட்ட காலத்து ஐரோப்பாவின் உள்நோக்கிய, பழமைவாத மனப்போக்கைப் படம்பிடித்துக் காட்டுகிறது. அதே நேரம், பரந்த உலகில் சுற்றிலும் நடப்பது பற்றிக் கவலைப்படாமல் இருக்கும் கல்விமான் ஒருவரினூடாக அவ்வாறான மனப்போக்கைக் கேலியும் செய்கிறது.

"புத்தகப்புழு"
ஓவியர்கார்ல் இசுப்பிட்சுவெக்
ஆண்டு1850
வகைகன்வசுத் துணியில்
எண்ணெய் வண்ணம்
இடம்ஜார்ச் இசுக்காபர் அருங்காட்சியகம்,
, ஷ்வைன்ஃபுர்ட், செருமனி

ஓவியத்தில், ஒழுங்கற்ற முறையில் உடையணிந்த ஒர் வயதான புத்தக விரும்பி, நூலக ஏணி மேல் ஏறி நிற்கிறார். அவர் தமது கைகளுக்கு அடியிலும் கால்களுக்கு இடையிலும் பல புத்தகங்களைச் செருகி வைத்தபடி, இன்னொரு புத்தகத்தை விரித்து வாசித்துக் கொண்டு நிற்கிறார். தனது சூழலையே மறந்தவராக அவர் தனது ஆராய்ச்சியில் மூழ்கிப்போயிருக்கிறார். சரியாக வைக்கப்படாத கைக்குட்டை ஒன்று சட்டைப் பையிலிருந்து அலங்கோலமாகத் தொங்கிக்கொண்டிருக்கிறது. உள்நோக்கிய மனப்போக்கைக் காட்டும் ஓவியங்களோடு கூடிய உட்கூரையும் பிற அழகூட்டல் கூறுகளும் ஒருகாலத்தில் அந்த நூலகம் இருந்த உயர்வான நிலையைக் காட்டினாலும், படத்தில் தூசி படிந்து காணப்படுகிறது.

ஓவியத்தின் வலது கீழ் மூலையில் நிறம் மங்கிப்போன ஒரு புவிக் கோளம் காணப்படுகிறது. கல்விமான் கையில் வைத்திருக்கும் நூல் மேலேயிருந்து வரும் மென்மையான பொன்னிற ஒளிக் கற்றைகளால் ஒளியூட்டப்படுகிறது. இவ்வாறான ஒளி இசுப்பிட்சிவெக்கின் ஓவியங்களில் காணப்படும் அவரது முத்திரை எனலாம். தரை காட்டப்படாததால், கல்விமான் ஏறி நிற்கும் ஏணியின் உயரம் படத்தில் தெரியவில்லை. எனினும் புவிக்கோள மாதிரியை வைத்து தரையின் இடத்தை ஓரளவு ஊகிக்கமுடியும். நூலகத்தின் மொத்த அளவு தெரியாவிட்டாலும், கல்விமான் மீவியற்பியல் பகுதியிலிருந்து புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருப்பது மேலே கணப்படும் பெயர்ப் பலகையில் இருந்து தெரிகிறது. இது ஓரளவுக்கு நூலகத்தின் அளவைக் கோடிட்டுக் காட்டுவதுடன், புத்தக விரும்பியின் மறு உலகத் தன்மையையும் உணர்த்துகிறது.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Carl Spitzweg - Der Bücherwurm
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தகப்புழு_(ஓவியம்)&oldid=3883989" இலிருந்து மீள்விக்கப்பட்டது