புனித இலாரன்சு பெருங்கோவில்

புனித இலாரன்சு பெருங்கோவில் அல்லது சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித இலாரன்சு பெருங்கோவில் என்பது உரோமை நகரில் உள்ள தலைசிறந்த கத்தோலிக்க இளம் பெருங்கோவில்களுள் ஒன்றாகும். இது அதிகாரப்பூர்வமாக Papal Basilica of St. Lawrence Outside the Walls (இலத்தீன்: Basilica Sancti Laurentii extra moenia; இத்தாலியம்: Basilica Papale di San Lorenzo fuori le Mura) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பங்குக் கோவிலாகவும் உள்ளது[1].

சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித இலாரன்சு பெருங்கோவில்
Basilica Papale di San Lorenzo fuori le Mura (இத்தாலியம்)
சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித இலாரன்சு பெருங்கோவில் உரோமையில் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு உயிர்துறந்த திருத்தொண்டர் இலாரன்சுக்கு நேர்ந்தளிக்கப்பட்ட கோவில். 1943, சூன் 19இல் நேச நாடுகள் பொழிந்த குண்டுகளால் அழிவுற்ற கோவில் முகப்பு பின்னர் சீரமைக்கப்பட்டது
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம் இத்தாலி உரோமை, இத்தாலியா
புவியியல் ஆள்கூறுகள்41°54′09″N 12°31′14″E / 41.90250°N 12.52056°E / 41.90250; 12.52056
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
வழிபாட்டு முறைஇலத்தீன் வழிபாட்டுமுறை
நிலைதிருத்தந்தை இளம் பெருங்கோவில், பங்குக் கோவில்
தலைமைபுரூனோ முஸ்தாக்கியோ
இணையத்
தளம்
புனித இலாரன்சு பெருங்கோவில்

இக்கோவில் உரோமையில் அமைந்துள்ள ஏழு திருப்பயணக் கோவில்களுள் ஒன்றாகும். மேலும் இதற்கு "குலமுதுவர் பெருங்கோவில்" என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. இக்கோவில் வெரானோ கல்லறைத் தோட்டத்தின் அருகே உள்ளது.

புனித இலாரன்சு கல்லறை தொகு

புனித இலாரன்சு பெருங்கோவிலில் கி.பி. 258இல் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு உயிர்துறந்த இலாரன்சு என்னும் உரோமைச் சபை முதன்மைத் திருத்தொண்டர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை உள்ளது.

இக்கோவிலில் திருத்தந்தை ஹிலரி, ஒன்பதாம் பயஸ் (பத்திநாதர்) போன்ற புனித திருத்தந்தையர்களின் கல்லறைகளும் இத்தாலிய அரசியல் தலைவர் ஆல்சிதே தே காஸ்பெரி என்பவரின் கல்லறையும் உள்ளன.

கோவிலி்ன் வரலாறு தொகு

புனித இலாரன்சு பெருங்கோவில் முதல்முதலாக நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அதைக் கட்டியவர் காண்ஸ்டண்டைன் மன்னர் ஆவார். கிறித்தவ நம்பிக்கைக்காக உயிர் துறந்த இலாரன்சு என்பவரின் கல்லறைக்கு அருகே அவரது நினைவாக இக்கோவிலைக் காண்ஸ்டண்டைன் கட்டினார்.

வேறு புனிதர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளை உள்ளடக்கி எழுந்த சில கோவில்கள்: ஆப்பியா பெருஞ்சாலையில் அமைந்த புனித செபஸ்தியான் பெருங்கோவில்; சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித ஆக்னஸ் கோவில்; புனிதர்கள் மர்செல்லீனோ, பியேத்ரோ கோவில்.

புனித இலாரன்சின் கல்லறைக்கு நேர் மேலே ஒரு சிறு வழிபாட்டிடம் எழுப்பப்பட்டது. அது திருத்தந்தை இரண்டாம் பெலாஜியுஸ் (579-590) என்பவரின் ஆட்சியில் விரித்துக் கட்டப்பட்டது. எனவே, பல ஆண்டுகளாக காண்ஸ்டண்டைன் கட்டிய "முது பெருங்கோவிலும்" பெலாஜியுஸ் கட்டிய "இளம் பெருங்கோவிலும்" அருகருகே இணையாகச் செயல்பட்டன. எனினும், 9-12 நூற்றாண்டுக் காலத்தில் காண்ஸ்டண்டைன் கோவில் கைவிடப்பட்டதாகத் தெரிகிறது.

பெலாஜியுஸ் கட்டிய கோவிலின் விரிவாக்கம் 1217இல் நடந்தது. பழைய கோவிலின் பீடப் பகுதி அகற்றப்பட்டு, மேற்கு நோக்கி கோவில் நீளமாக்கப்பட்டது. இப்பணி திருத்தந்தை மூன்றாம் ஹோனோரியஸ் என்பவரால் செய்யப்பட்டது.

புதிய பெருங்கோவில் பழைய கோவிலோடு இணைக்கப்பட்டு சிறிது உயர்ந்த தரைமட்டத்தில் அமைக்கப்பட்டது. புனித இலாரன்சு, புனித ஸ்தேவான் ஆகியோரின் வாழ்க்கை நிகழ்வுகள் கோவில் சுவர்களில் சித்திரமாக எழுதப்பட்டன. கோவிலின் மையப் பீடத்தின் அடியில் இவ்விரு புனிதர்களின் கல்லறைகளும் அமையும் வகையில் கட்டடம் வடிவமைக்கப்பட்டது.

எருசலேம் குலமுதுவர் கோவில் தொகு

புனித இலாரன்சு கோவிலின் ஒரு தனிச் சிறப்பு அது 1347இலிருந்து 1847 வரை எருசலேம் நகர் இலத்தீன் குலமுதுவர் பேராயரின் ஆட்சிப்பீடமாக இருந்ததுதான். 1847இல் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் எருசலேம் குலமுதுவர் ஆட்சிப்பீடமாக எருசலேம் நகரையே ஒப்படைத்தார். இத்திருத்தந்தை புனித இலாரன்சு கோவிலில் அடக்கம் செய்யப்பட்டிருப்பதும் சிறப்பாகும்.

பரோக்கு கலையின் தாக்கமும் இக்கோவிலில் இருந்தது. ஆனால் அக்கலையின் அம்சங்களை விர்ஜீனியோ வெஸ்பிக்னானி என்னும் கட்டடக் கலைஞர் 1855-1864 கால கட்டத்தில் நிகழ்த்திய சீரமைப்பின்போது அகற்றிவிட்டார். இரண்டாம்.உலகப்போரின்போது இக்கோவில் சேதமுற்றது. உரோமை நகரை நேசப்படைகள் தாக்கியபோது இக்கோவில் குண்டுகளுக்கு இரையாகியது. 1943, சூலை 19ஆம் நாள் நிகழ்ந்த இத்தாக்குதலின்போது கோவிலுக்குப் பேரழிவு ஏற்பட்டது. கோவில் முகப்பில் வரையப்பட்டிருந்த அழகிய சித்திரங்கள் முற்றிலுமாக அழிந்துபோயின. இருந்தபோதிலும், இடிமானப் பொருள்களைப் பயன்படுத்தி சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.

 
புனித இலாரன்சு கோவிலின் உட்பகுதி

அகழ்வாய்வுகள் தொகு

1957இல் புனித இலாரன்சு கோவிலின் அடியில் அகழ்வாய்வுகள் நிகழ்ந்தன. அப்போது காண்ஸ்டண்டைன் மன்னரால் நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்த பழைய கோவிலின் இடிமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அக்கோவிலின் பீடப் பகுதி பெரிய வட்ட வடிவத்தில் அமைந்திருந்ததும், கோவிலின் நெடுநீளப் பகுதிகள் மூன்றும் பெரிய தூண்களால் தாங்கப்பட்டிருந்ததும், ஆழ்நிலக் கல்லறைகளும் அகழ்வாய்வில் தெரியவந்தன.

கோவில் ஆட்சிமுறை தொகு

இக்கோவில் கப்புச்சின் சபைத் துறவியரின் கண்காணிப்பில் உள்ளது. 1709, சூலை 4ஆம் நாளிலிருந்து இக்கோவில் ஒரு பங்குக் கோவிலாகவும் செயல்பட்டு வருகிறது. பங்குப்பொறுப்பு முதலில் இலத்தரான் ஒழுங்குமுறைத் துறவியரிடம் இருந்தது. 1855இல் கப்புச்சின் சபையினர் பொறுப்பேற்றனர்.

கோவிலின் சிறப்புக் கூறுகள் தொகு

இக்கோவிலுக்கு அழகூட்டும் கூறுகள் பல உண்டு. அவற்றுள் சில கீழே தரப்படுகின்றன:

  • கோவிலின் வெளிப்புறம்:

கோவிலுக்கு வெளியே ஒரு பரந்த முற்றமும் அதில் உயர்ந்தெழும் தூணும் உள்ளன. தூணின் மேல் புனித இலாரன்சின் செப்புச் சிலை உள்ளது. அதை ஸ்தேஃபனோ கல்லேற்றி என்பவர் 1865இல் வடித்தார். கோவிலின் அருகே துறவியர் இல்லமும் 12ஆம் நூற்றாண்டு உரோமைக் கலைமுறையில் அமைந்த மணிக்கூண்டும் உள்ளன.

  • கோவிலின் முகப்பும் முகப்பு வாயிலும்:

1943இல் அழிந்துபோன முகப்பு மீண்டும் சீரமைக்கப்பட்டது. மூன்று சாளரங்களைக் கொண்ட முகப்பு முழுவதிலும் வரையப்பட்டிருந்த கற்பதிகைச் சித்திரங்கள் அழிந்துபட்டன. சில பகுதிகளே எஞ்சின. அவற்றில் இயேசு கிறித்து ஆட்டுகுட்டியாக உருவகிக்கப்பட்டிருப்பதையும், புனித இலாரன்சின் உருவையும் காணமுடிகிறது.

முகப்பு வாயிலில் ஆறு பெரும் தூண்கள் உள்ளன. வாயிலைச் சூழ்ந்த சுவர்களில் புனித இலாரன்சு மற்றும் புனித ஸ்தேவானின் வாழ்க்கை வரலாறு சித்தரிக்கப்பட்டுள்ளது. நேசப்படைகள் புனித இலாரன்சு கோவில் பகுதியில் குண்டுவீசி சேதம் ஏற்பட்டதும் கோவிலுக்கு திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் வருகை தந்து அழிவைப் பார்வையிட்டதை நினவுகூர்கின்ற கல் ஆங்குள்ளது.

ஆதாரங்கள் தொகு