Pigeon
புதைப்படிவ காலம்:Early Miocene – Recent
Feral Pigeon (Columba livia) in flight
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
துணைத்தொகுதி: முள்ளந்தண்டுளி
வகுப்பு: பறவை
வரிசை: Columbiformes
குடும்பம்: Columbidae
யொஃகான் இல்லிகெர், 1811
Subfamilies
Geographic range of the Columbidae Family

புறா முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். உயிரின வகைப்பாட்டில் இது கொலம்பிடே (Columbidae) குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் ஏறத்தாழ 310 வகை இனங்கள் உள்ளன.

பரவல் மற்றும் வாழ்விடம் தொகு

புறாக்கள் உலகெங்கிலும் அதிகமாகக் காணப்படுகின்றன என்றாலும், சகாரா பாலைவனம், ஆர்க்டிக், அண்டார்க்டிக் பகுதிகளில் இவை காணப்படுவதில்லை. வெப்ப மண்டலக் காடுகளில் இவை அதிகம் வசிக்கின்றன. மேலும் இவை வெப்பப்புல்வெளிகள்(சவானாக்கள்), பிற புல்வெளிகள், சில பாலைவனங்கள், மிதவெப்ப மற்றும் சதுப்புநிலக் காடுகள் , வட்டப்பவளத்திட்டுகளில் உள்ள சரளை மற்றும் மலட்டு நிலங்கள் போன்றவற்றிலும் வசிக்கின்றன. புறாக்கள் பல்வேறு வேறுபட்ட அளவுகளில் காணப்படுகின்றன. நியூகினியாவைச் சேர்ந்த க்ரோண்ட் புறாக்கள் அளவில் பெரியவை. இரண்டு முதல் நான்கு கிலோ எடையுடையவை. மிகச் சிறியவை ஜெனஸ் கொலம்பினா என்ற இனத்தைச் சேர்ந்தவை ஆகும். இவை சுமார் 22 கிராம் எடை உடையவை.

உடற்கூற்றியல் விளக்கம் தொகு

உடலமைப்பும் உறுப்புகளும் தொகு

புறாக்கள் பறக்கும் திறனுடைய பறவைகள். இவற்றின் உடல் முழுவதும் பறத்தலுக்கென மாறுபட்டுள்ளது. இவை பறத்தலுக்கென இறகுகள் , அலகு , கால் அமைப்பு போன்றவற்றைப் பெற்றுள்ளன. புறாக்கள் கதிர் வடிவம் உடையவை. இவற்றின் அளவு 20-25 செமீ ஆகும். உடலானது தலை, கழுத்து, நடுவுடல், வால் எனும் பகுதிகளையுடையது. உருண்டை வடிவத் தலைப்பகுதி முன்புறத்தில் கூர்மையான அலகுப் பகுதியைக் கொண்டுள்ளது. அலகுகளின் மேல்புறத்தில் தடித்த ராம்போதீக்கா எனும் உறை உள்ளது. மேல் அலகின் அடிப்புறத்தில் இணை நாசித்துவாரங்கள் உள்ளன. அவற்றைச் சுற்றிலும் அலகுப்பூ எனும் பருத்த தோல் பகுதி உள்ளது. ஓர் இணைக் கண்கள் உண்டு. கண்கள் சற்றுப் பெரியவை. கண்களின் பாதுகாப்பிற்கு மேல்-கீழ் இமைகளும் சிமிட்டுமென்றகடு அல்லது நிமிட்டுச்சவ்வு என்றழைக்கப்படும் மென்படலமும் உள்ளன. கண்களின் பின்புறம் இணை செவித்துவாரங்கள் உண்டு. இவை உள்ளாக செவிப்பறையில் திறந்துள்ளன. நீண்ட கழுத்து உண்டு. நடுவுடல் பகுதியில் ஓரிணை இறக்கைகளும் கால்களும் உள்ளன. உடலின் பின் முனையில் பொதுக் கழிவாய்த் துளையும் அதனைத் தொடர்ந்து வால் பகுதியும் உள்ளன. வால் பகுதியில் கோதுசுரப்பி எனும் எண்ணெய்ச் சுரப்பிகள் உள்ளன. இவை சுரக்கும் எண்ணெய்ப் பொருள் இறகுகளை அலகினால் நீவிவிட்டுப் பாதுகாக்க உதவும்.

இறகுகள் தொகு

புறாக்களின் உடலில் மூன்று வகை இறகுகள் உண்டு. அவை

  1. இறக்கை இறகுகள்
  2. உருவ இறகுகள்
  3. இழை இறகுகள்

இறக்கையில் 23 இறக்கை இறகுகள் உள்ளன. இதில் மேல்கையில் இணைந்துள்ள 11இறகுகள் முதனிலை இறகுகள் எனப்படும். நடுக்கையில் இணைந்துள்ள 12 இறகுகள் இரண்டாம் நிலை இறகுகள் எனப்படும். வால் பகுதியில் 12 இறகுகள் உண்டு. இவை விசிறி வடிவில் இணைக்கப்பட்டுள்ளன. உருவ இறகுகள் சற்றுச் சிறியவை, மென்மையானவை. இவை உடலின் வெப்பத்தைப் பாதுகாக்கும். இழை இறகுகள் மிகவும் மென்மையானவை ஆகும்.

வாழ்க்கைப் பழக்கவழக்கங்கள் தொகு

உணவு தொகு

இது தானிய வகைகளை உணவாக உண்ணும் பயிறுண்ணிப் பறவை ஆகும். இது விதைகள், பழங்கள், செடிகள் போன்றவற்றையும் உட்கொள்ளுகின்றது.பறவைகளிலேயே புறா மட்டுமே தண்ணீரைத் தன் அலகால் உறிஞ்சிக் குடிக்கும் பழக்கமுடையது என்றும் சொல்லப்படுவதுண்டு. பழங்கள் போன்றவை அல்லாது பிறவற்றை உண்ணும் புறாக்களும் உண்டு. நிலப்புறாக்கள், காடைகள் ஆகியவை புழுக்கள், பூச்சிகள் போன்றவற்றை விரும்பி உட்கொள்ளுகின்றன. பவளத்திட்டுப் பழந்திண்ணிப் புறா ஊர்வனவற்றையும் ஆரஞ்சுப் புறாக்கள் நத்தைகளையும் உண்கின்றன.

கூடு தொகு

புறாக்கள் மரங்களில் குச்சிகள் மற்றும் குப்பைகளை வைத்துக் கூடு கட்டுகின்றன. இவை ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் இடுகின்றன. ஆண், பெண் புறாக்கள் குஞ்சுகளை கவனித்துக்கொள்ளுகின்றன. குஞ்சுகள் 7 முதல் 27 நாட்களில் கூட்டை விட்டு வெளியே வருகின்றன.[1] பாறைப் புறாக்கள் சற்றே வித்தியாசமாக இறந்த பறவையுடன் உடலுறவு கொள்ள முயல்கின்றன.

வகைகள் தொகு

புறாக்களில் பலவகையான புறாக்கள் இருக்கின்றன. அலங்கார புறாக்களில் நிறைய வகைகள் உள்ளன இவைகள் பார்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால் இவைகளை அதிகமாக விரும்பி வளர்கின்றனர்.

புறாக்களின் அழிவும் அவற்றைப் பாதுகாத்தலும் தொகு

பல புறாக்கள் எண்ணிக்கையில் அதிகமாகி இருப்பினும் புறாக்களின் 10 வகைகள் அழிந்து, தற்போது இல்லாமல் போய் விட்டன. அவற்றுள் டூடூ(Dodo) போன்ற புறா வகைகள் அடக்கம். தற்காலத்தில் 59 புறா வகைகள் அழிவின் விழும்பில் உள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை வெப்ப மண்டலக் காடுகளிலும் தீவுகளிலும் வாழ்கின்றன.இவை கொன்றுண்ணிகள், வாழ்விட அழிவு, வேட்டையாடுதல் போன்றவற்றால் அச்சுறுத்தப்படுகின்றன. தற்போது இவ்வினத்தைப் பாதுகாக்க பல்வேறு சட்டங்களை அரசுகள் அமல் படுத்தியுள்ளன.

தூது மற்றும் பந்தயம் தொகு

மன்னர்கள் காலத்தில் கடிதப்போக்குவரத்து மற்றும் தூது ஓலை அனுப்புவதற்கு நன்கு பயிற்சிகொடுத்துப் பழக்கப்பட்ட புறாக்கள் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவின் ஒடிசா மாநில காவல் துறையில் 1946-ஆம் ஆண்டிலிருந்து புறாக்கள் தகவல் தொடர்பு இல்லாத இடங்களுக்கு செய்திகள் கொண்டு செல்ல பயன்டுத்தப்பட்டு வருகிறது.[2]தமிழ்நாட்டில் இப்போதும் புறாக்களுக்கான பந்தயம் நடைபெறுகிறது. பழக்கப்பட்ட புறாக்கள் வெகுதொலைவில் கொண்டுவிடப்பட்டு அவை தங்கள் கூட்டுக்குத் திரும்பி வரும் நேரத்தை வைத்து இப்பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.இது வீட்டிலும் செல்லப்பறவையாக வளர்க்கப்படுகிறது. வீட்டில் வளர்க்கப்படும் புறாக்கள் உருவத்தில் சிறியனவாகவும் சாதுவாகவும் காணப்படும். காட்டுப்புறாக்கள் உருவத்தில் சற்றுப்பெரியவை.

மதங்களில் புறாக்கள் தொகு

எபிரேய விவிலியத்தில் விலையுயர்ந்தவற்றைக் கடவுளுக்குப் படைக்க முடியாத மக்கள் புறாக்களைப் பலியிட்டுப் படைப்பது ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இயேசுவின் உயிர்த்தெழுப்புக்குப் பின்னர் அவரது பெற்றோர் புறாவைப் பலியிட்டு இறைவனுக்குப் படைத்ததாகக் கூறப்படுகிறது.நபிகள் நாயகத்திற்கு உதவிய காரணத்தால், இசுலாமிய மதத்திலும் புறாக்கள் மிகவும் மதிக்கப் படுகின்றன. இந்து மதத்திலும் புறாக்களுக்கு உணவளித்தல் புண்ணியச் செயலாகக் கருதப்படுகிறது.

குறியீடாகப் புறாக்கள் தொகு

இசுரேலியக் கடவுள் அசெரா, உரோமானியக் கடவுள் வீனஸ், போர்சுனேட்டா, போன்பேசியக் கடவுள் தனித் ஆகியோரினை பிரதிநிதித்துவம் செய்யும் குறியீடாகப் புறாக்கள் பயன்படுத்தப்பட்டன.[3] கிறித்தவத்தில் புறாக்களின் அலகில் தாங்கப்பட்ட ஒலிவ் இலைக் கொத்துக்கள் சமாதானத்தின் குறியீடாகக் கருத்தப்படுகின்றன.

noicon
கோதுமை அரிசி இரண்டில், கோதுமையை மட்டும் உண்ணும்

மனிதர்களும் புறாவும் தொகு

இராணுவம் தொகு

முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போர்களில் புறா பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா, பிரித்தானியா, பிரான்சு, செருமனி, அமெரிக்கா ஆகிய நாடுகளியே புறாக்கள் போரின் போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போரில் வழங்கப்பட்ட பங்களிப்புக்களுக்காக 32 புறாக்களுக்கு டிக்கின் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

உணவாக தொகு

 
பொரித்த புறா இறைச்சி

புறாக்களில் ஒரு சில உணவாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும், அனைத்துப் புறா வகைகளும் உண்ணக்கூடியவையே ஆகும்.[4] புறா இறைச்சியில் மார்பு இறைச்சியே மிகவும் சுவையானதாகும். பண்டைய மத்திய கிழக்கு, பண்டைய உரோம், மத்திய ஐரோப்பா ஆகிய காலப்பகுதிகளில் இருந்தே வேட்டையாடப்பட்ட அல்லது வீட்டில் வளர்க்கப்பட்ட புறாக்கள் உணவாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. யூதர்கள், அசாமியர்கள், அரேபியர்களின் உணவில் புறா பொதுவாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. ஆசியர்களில், இந்தோனேசியரும், சீனரும் புறாக்களை உண்கின்றனர்.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Crome, Francis H.J. (1991). Forshaw, Joseph. ed. Encyclopaedia of Animals: Birds. London: Merehurst Press. பக். 115–116. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85391-186-0. 
  2. "Odisha has a Police Pigeon Service, the Only One of Its Kind In the World!". Archived from the original on 2021-08-08. பார்க்கப்பட்ட நாள் 2021-08-08.
  3. "The enduring symbolism of doves, from ancient icon to biblical mainstay by Dorothy D. Resig BAR Magazine". Archived from the original on 2013-01-31. பார்க்கப்பட்ட நாள் 2017-05-10.
  4. (http://www.eattheweeds.com/eggs-for-survival-and-food-2/ )
"https://ta.wikipedia.org/w/index.php?title=புறா&oldid=3564416" இலிருந்து மீள்விக்கப்பட்டது