பூசலார் நாயனார்

சைவ சமய 63 நாயன்மார்களில், 'மறையவர்' குலத்தைச் சேர்ந்த நாயன்மார்.

பூசலார் நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[2]. தொண்டை நாட்டில் திருநின்றவூரில் மறையவர் குலத்திலே தோன்றியவர் பூசலார் என்னும் பெருந்தகையார்[3]. இவர் சிவனடியாராகிய அன்பர்க்கு ஏற்றபணி செய்தலே பிறவிப்பயன் எனக் கொண்டு பொருள்தேடி அடியார்க்கு அளித்து வந்தார். சிவபெருமானுக்குத் திருக்கோயில் அமைத்துப் பணிசெய்ய விரும்பிய இவர் தம்மிடத்துப் பொருள் இல்லாமையால் அதற்குரிய பொருளை வருந்தித் தேடியும் பெற இயலாதவராயினர். இந்நிலையில் மனத்திலே சிவபெருமானுக்குத் திருக்கோயில் அமைக்க எண்ணினார். மனத்தின்கண் சிறிதுசிறிதாகப் பெரும்பொருள் சேர்த்தார். திருப்பணிக்கு வேண்டிய கல் மரம் முதலிய சாதனங்களையும் பணிசெய்தற்குரிய தச்சர் முதலிய பணியாளர்களையும் மனத்தில் தேடிக்கொண்டார். நல்ல நாள் பார்த்துத் திருக்கோயிற் பணியைத் தம் மனத்துள்ளே தொடங்கி இரவும் துயிலாமல் அடிப்படை முதல் உபானம் முதலிய வரிசைகளை அமைத்து உரிய அளவுப்படி விமானமும் சிகரமும் அமைத்து அதன்மேல் தூபியும் நட்டனர். சுதைவேலை முடித்து அக்கோயிலினுள்ளே கிணறு திருக்குளம், மதில் முதலான எல்லாம் வகுத்தமைத்து இவ்வாறு தம்மனத்தில் உருவாகிய திருக்கோயிலுள்ளே சிவபெருமானை எழுந்தருளச் செய்வதற்கேற்ற நல்லநாளும் வேளையும் நிச்சயித்தார்.

பூசலார் நாயனார்
பெயர்:பூசலார் நாயனார்
குலம்:அந்தணர்
பூசை நாள்:ஐப்பசி அனுஷம்
அவதாரத் தலம்:திருநின்றவூர்
முக்தித் தலம்:திருநின்றவூர் [1]

இவரது திருப்பணி இவ்வாறு நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், காடவர்கோனாகிய வேந்தர்பெருமான் காஞ்சி நகரத்திலே இறைவனுக்குத் திருக்கற்றளி அமைத்துத் தன் பெரிய பொருள் முழுவதையும் அத்திருக்கோயிற் பூசனைக்கென்று வகுத்துத் தான் அமைத்த கற்றளியிலே சிவபெருமானை எழுந்தருளுவிப்பதற்குப் பூசலார் அகத்தில் வகுத்த அந்த நாளையே குறித்தார். பூசலாரது அன்பின் திறத்தை உலகத்தார்க்கு அறிவிக்கத் திருவுளங் கொண்ட சிவபெருமான், அந்நாளின் முதல் நள்ளிரவில் காடவர் கோமான் முன் கனவில் எழுந்தருளி நின்றவூர்ப்பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்மை மிக்க ஆலயத்துள் நாளை நாம் புகுவோம்; நீ இங்கு செய்யத்துணிந்த தாபனத்தினை நாளைய தினத்தில் வைத்துக் கொள்ளாது பின்னர் மற்றொரு நாளில் செய்வாயாக’ என்று பணித்தருளி மறைந்தருளினார்.

பல்லவர்கோன், துயிலுணர்ந்தெழுந்து இறைவர் உளமுவக்கும் வண்ணம் பெரியதிருக்கோயிலை அமைத்த பெருந்தகையாரைச் சென்று காணவிரும்பித் திருநின்றவூரை அடைந்தான். அங்கு அருகணைந்தவர்களை நோக்கி, ‘பூசலார் அமைத்த கோயில் எங்கே உள்ளது?’ என்று கேட்டார். அதுகேட்ட நின்றவூர் மக்கள், ‘பூசலார் இவ்வூரிற் கோயில் எதுவும் கட்டவில்லை’ என்றனர். மன்னன் அவ்வூர் மறையவர்களை அழைத்து ‘பூசலார் யார்’ எனக்கேட்டறிந்து, ஆசில் வேதியராகிய அவர் இருக்குமிடத்திற்குத் தானே சென்று அவரை வணங்கி, ‘தேவரீர் அமைத்த திருக்கோயில் யாது? அக்கோயிலில் சிவபெருமானை எழுந்தருளச் செய்யும் நாள் இந்த நாள் என்று இறைவர் தெரிவித்தருளத் தெரிந்து உம்மைக்கண்டு பணிதற்கு வந்தேன்’ என்றார். பூசலார், அரசன் உரைகேட்டு மருண்டு, ‘இறைவர் என்னையும் பொருளாக அருள்செய்தாராயின் அக்கோயிலின் பெருமை எத்தகையது? என்று தமக்குள்ளேயே சிந்தித்துத் தாம் மனத்தால் முயன்று செய்த திருக்கோயிலின் அமைப்பினை மன்னனுக்கு விளங்க எடுத்துரைத்தார். அரசன் அதிசயித்துப் பூசலாரை நிலமுற்றத் தாழ்ந்து வணங்கித் தனது நகருக்குச் சென்றான்.

பூசலார் நாயனார் தாம் கட்டிய மனக்கோயிலிலே குறித்த நற்பொழுதில் சிவபெருமானைத் தாபித்துப் பூசனைகள் எல்லாம் பெருஞ்சிறப்புடன் பலநாட்கள் பேணிச் செய்திருந்து சிவபெருமான் திருவடிநீழலையடைந்தார்.

நுண்பொருள் தொகு

  1. இறைவர் மகிழ்ந்துறைதற்கான கோயிலமைத்தல் சிறந்த சிவபணி.
  2. பெருஞ்செல்வம் கொண்டு அமைக்கும் ‘கற்றளி’ (கருங்கற்கோயில்) யை விட, பெருகிய அன்பினோடும் நினைப்பினால் எடுக்கும் ஆலயம் சிவபெருமானுக்கு உவப்பானது.

பூசலார் நாயனார் குருபூசை தினம்: ஐப்பசி அநுட்டம்.

மேற்கோள்கள் தொகு

  1. நாயன்மார் பெருமக்கள் அவதாரத் தலங்கள் மற்றும் முக்தித் தலங்கள்
  2. 63 நாயன்மார்கள், தொகுப்பாசிரியர் (28 பிப்ரவரி 2011). பூசலார் நாயனார். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php?id=1930. 
  3. மகான்கள், தொகுப்பாசிரியர் (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php?id=39. 

உசாத்துணைகள் தொகு

  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூசலார்_நாயனார்&oldid=3482960" இலிருந்து மீள்விக்கப்பட்டது