பொருள்முதல் வாதம்

அண்டம் பொருட்களாலேயே ஆனது, பொருளே ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டது, நிகழ்வுகள் அனைத்தும் பொருட்களுகிடையான செயற்பாடே என பொருள்முதல் வாதம் (materialism) எடுத்துரைக்கிறது. இது பொருட்களுக்கு அப்பாலான கடவுள், அல்லது பொருள், பொருள் அல்லாதது என்ற கருத்து முதல்வாதத்தை மறுக்கிறது. தமிழில் இதை பொருண்மைய வாதம் என்றும் குறிப்பிடுவர்.

பொருள் என்றால் இது என்று பொருள்முதல்வாதம் இறுதியாக வரையறை செய்யமுடியவில்லை.

பொருள் முதல் வாத வரலாறு தொகு

உலகத்தைப் பற்றிய பொருண்முதல் வாதக் கண்ணோட்டம் புராதன காலத்திலேயே தோன்றி வேரூன்றி விட்டதாகும். அது எகிப்து நாட்டிலும் பாபிலோனியாவிலும் கி.மு. மூவாயிரம் ஆண்டின் முடிவிலும், இந்தியாவில் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பும் துவங்கி உருப்பெற்றது.

சாவுக்குப் பின்னரும் வாழ்க்கை என்ற கருத்து முதல் வாதக் கோட்பாடுகளையும் அன்று நிலவிய சமுதாய அமைப்பு ஆகியவற்றையும், அடிமை சமுதாய சொந்தக்காரர்களின் உலகக் கண்ணோட்டத்திற்கும், முற்போக்கு சிந்தனையான பொருள் முதல்வாதம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியது. சில சிந்தனையாளர்கள் இயற்கையின் நிகழ்வுகள் பொருளாயத் தோற்றுவாய்களை அனுமானித்தனர் என்பதை எகிப்தியக் கலாச்சாரத்தின் நினைவுச் சின்னங்கள் காட்டுகின்றன.

இந்திய பொருள் முதல்வாதிகள் தொகு

இந்தியாவில் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய இந்திய தத்துவஞானி கபிலர்கபிலா " நிரந்தரமானது எதுவும் இல்லை. எந்த ஒரு பொருளும் வெற்றிடத்திலிருந்து தோன்றவில்லை, மாறாக மற்ற பொருள்களிலிருந்து தான் தோன்றுகிறது. ஏனெனில் அழிகின்ற பொருள்கள் ஒன்றும் இல்லாமல் போவதில்லை. புதிய பொருள்கள் தொன்றுவதற்கான ஆதாரப் பொருள்களாக அவை அமைகின்றன" என்று கூறியுள்ளார். இவர்கள் இந்தியாவில் லோகாயிதவாதிகள் என்று குறிக்கப்படுகின்றர். இவர்களின் தத்துவ கோட்பாடுகள் குறித்த ஆதாரங்கள் கிடைக்க வில்லையாயினும் இந்திய கருத்துமுதல்வாதிகளான ஆதி சங்கரர், போன்றவர்கள் எழுதியுள்ள மறுப்புரைகளிலிருந்து அறியமுடிகிறது.[1]

பொருள் பற்றிய பண்டைய தத்துவஞானம் தொகு

இந்திய தத்துவஞானி கபிலரைப்போலவே கிரேக்கத் தத்துவஞானிகளில் ஒருவரான தாலெஸ் (தேலேஸ்) இயற்கையில் நேரடியாக நம்முன்னுள்ள எல்லாப் பொருள்களுக்கும் மூலம் தண்ணீர் அல்லது ஈரம் என்று கருதினார். அனாக்சிமேனஸ் இயற்கையில் நேரடியாக நம்முன்னுள்ள எல்லாப் பொருள்களுக்கும் மூலம் காற்று என்றார். ஹெராக்ளிடஸ் இயற்கையில் நேரடியாக நம்முன்னுள்ள எல்லாப் பொருள்களுக்கும் மூலம் நெருப்பு என்றார். எல்லாவற்றுக்கும் மூலம் காற்று, தண்ணீர், நெருப்பு, மண் என்ற நான்குமே என்றார். ஆனால் டெமாக்ரிடஸ்(டெமோக்கிரட்டிசு) கண்ணால் காணவோ, தொட்டறிய முடியாத மிகச் சிறிய பொருளான அணுக்கள் (கிரேக்க மொழியில் "atom" என்னும் சொல்லுக்கு "பிரிக்க முடியாதது என்று பொருள்") என்ற நிரந்தரமான, அழிக்க முடியாத, மாற்றமுடியாத அணுக்கலிலிருந்து தோன்றுவதுதான் பொருள் என்றார் உறுதியாக. குறிப்பிட்ட பருமன், வடிவம், எடை, இயக்கம் ஆகியன கொண்டவை அனைத்தும் குறிப்பிட்ட முறையில் இணைந்த அணுக்களைக் கொண்டவை. அணு அடுக்குகளின் பதிவுகளே நமது புலனுணர்வுகளும், கருத்துருவங்களும் ஆகும் என்று போதித்தார்.[1]

டெமாக்ரிடஸ் தந்த போதனையின் சுருக்கம் தொகு

  1. பருப்பொருள் என்பது (பொருள்வகை வஸ்துகளைப்போலவே) நமது உணர்வுக்கு வெளியே அதனைச் சாராமல் எதார்த்தத்தில் இருந்து வருகிறது;
  2. பருப்பொருள் என்பது நம்மிடம் புலனுணர்வுகளைத் தோற்றுவிக்கிற ஒன்று;
  3. புலனுணர்வுகளும், கருத்துருவங்களும் பொருள் உருவாக்கும் பதிவுகளே ஆகும்;
  4. பருப்பொருளுக்குத் திட்டவட்டமான பௌதிகப்பண்புகள் உண்டு, இதிலிருந்துதான் எல்லா வஸ்துகளும் உருவாகின்றன, இதுவே இயற்கையின் மூலாதாரக் கோட்பாடு;
  5. பருப்பொருள் என்பது மாறாத ஒன்று, அணுக்கள் இன்று இருப்பது போலவே எப்போதும் இருந்து வந்தன, எப்போதும் இருந்தும் வரும்.[1]

பொருளினுடைய இயக்கம் தொகு

  • பருப்பொருளினுடைய இயக்கத்தின்
    • பௌதிக வடிவங்கள் - பரப்பிடம், வேகம், நிறை, ஆற்றல், மின்னேற்றம், வெப்பம், பருமன் () போன்ற உண்மைப் பொருள்களின் தன்மைகளிலான மாற்றம்;
    • இரசாயன வடிவங்கள்- ஒருவிதமான பொருள்கள் இன்னொரு விதமான பொருள்களாக மாறுவது அதாவது அணுக்களின் இணைப்பும் மறு இணைப்பும்
    • சமுதாய வடிவங்கள்- மனித சமுதாயத்துக்கு மட்டுமே உரித்தான, சமுதாயத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள். இவை ஒரு குறிப்பிட்ட இயக்க வடிவமும், மனித மனத்திற்கு வெளியே எதார்த்த உண்மையாய் நிலவுகிறது, பொருளாதாய நிகழ்ச்சிப் போக்காக இருக்கிறது.
  • மனித உணர்ச்சிகள், மனநிலைகள், கருத்துகள் ஆகியவற்றின் இயக்கமோ மனிதனது மனதில் மட்டுமே இருந்து வருகிறது.
  • உணர்ச்சிகளும், கருத்துகளும், அவற்றின் பொருள்வகைத் தன்மையான மூளை இல்லாமல் தோன்றுவதில்லை.
  • இதை சிந்தனைப் பொருள்வகை தன்மையது என்று கூறுவது பிழையாகும், பொருள் முதல்வாதத்தையும், கருத்து முதல்வாதத்தையும் போட்டு குழப்புவதாகும்.[2]

இயக்கவியல் பொருள் முதல்வாதம், வரலாற்றியல் பொருள் முதல்வாதம் ஆகியவற்றிற்கான அடிப்படைகள் தொகு

இவ்விரண்டு பொருள் முதல்வாதங்களும் மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானவையாகும். இயக்கவியல் பொருள் முதல்வாதமும் வரலாற்றுப் பொருள் முதல்வாதமும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. இவை, பொருள்களையும் அவற்றின் இயக்கத் தன்மைகளையும் வளர்ச்சிப் போக்குகளையும் முன்னிலைப்படுத்துவதாக உள்ளன. இதனடிப்படையில், சமூக அமைப்பை இவற்றின் செயல்பாட்டு உறவுகளின் தொடர்பு காரணமாக, இரண்டு கட்டுமான நிலைகள் இருப்பதாக மார்க்சியம் எடுத்துரைக்கிறது. இவை அடிக் கட்டுமானம் (Basic Structure) , உயர் கட்டுமானம் (Super Structure) எனப்படும்.[3]

அடிக் கட்டுமானம் தொகு

அடிக் கட்டுமானம் எனப்படுவது பொருளாதார வாழ்க்கையின் பயன்பாடுகளால் கிடைக்கப்பெற்ற பொருளாதார உற்பத்தி உறவு நிலைகளைக் குறிப்பிடுவதாக அமையும். இதனைச் சமூக இருப்பு (Social Being) என்றழைப்பர்.

உயர் கட்டுமானம் தொகு

இத்தகு வாழ்வியல் தன்மையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் அதன் உயர்மட்ட கருத்தாக்கங்கள், சமய நெறிகள், அரசமைப்புகள், சமூக மரபுகள், அழகியல் கோட்பாடுகள் போன்றவற்றின் ஒட்டுமொத்தத்தைச் சமூக உணர்வு (Social Consciousness) எனக் குறிப்பிடுவர். இத்தகைய, சமூக உணர்வே மனித சமுதாய அமைப்பின் உயர் கட்டுமானம் என்றழைக்கப்படுகிறது. இவ் அடிக் கட்டுமானமும் உயர் கட்டுமானமும் தமக்குள் ஒன்றுடனொன்று சார்ந்து காணப்பட்டு பல்வேறு உள்ளீடுகளைக் கொண்டதாக இருக்கின்றன.

இரு கட்டுமானங்களுக்கு இடையேயான தொடர்பு தொகு

அடிக் கட்டுமானமும் உயர் கட்டுமானமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஒன்றுக்கொன்று ஒருமித்தவை. ஒன்றின் மீது மற்றொன்று செல்வாக்கைக் காட்டுவதாக அமைந்துள்ளது. இரண்டு கட்டுமானங்களும் வேறுவேறானது அல்ல. தனித்துச் செயற்படும் தன்மையற்றது. அடிக் கட்டுமானத்தைச் சார்ந்தே எப்போதும் உயர் கட்டுமானம் அமைந்துள்ளது. அதேபோல், உயர் கட்டுமானமானது, பொருளாதார உற்பத்தி உறவுமுறைகளால் உருவான அடிக் கட்டுமானத்தைப் பாதிப்படையச் செய்கின்றது. இத்தகைய, உயர் கட்டுமானத்தில் மொழி, கலை, இலக்கியம், அழகியல் முதலானவை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பொருள் உற்பத்திமுறை தொகு

மனித சமுதாய வாழ்கையின் அடிப்படையாகப் பொருள் உற்பத்திமுறை விளங்கிறது. இந்தப் பொருள் உற்பத்திமுறையானது உற்பத்திச் சக்திகள் (Productive Forces) மற்றும் உற்பத்தி உறவுகள் (Objects of labour) ஆகிய கூறுகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது.

உற்பத்திச் சக்திகள் தொகு

சமூகத்தின் அடிப்படையாகப் பொருள் உற்பத்தி உள்ளது. மனித சமூகம் வாழ்வதற்கு அடிப்படையான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றிற்குரிய தேவையான, இன்றியமையாதப் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டி இருக்கின்றது. உற்பத்தி என்பது மனித வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களைத் தோற்றுவிக்கும், மக்களின் செயல்பாடாகும். இந்த உற்பத்தியை மேற்கொள்வதற்கு, மனிதனுக்கு உழைப்பின் குறிப்பொருள், உழைப்புக் கருவிகள் (Instruments of labour), உழைப்பு ஆகிய மூன்றும் இன்றியமையாததாக உள்ளன.[4]

உழைப்பின் குறிபொருள் தொகு

மனித சமூகம் உற்பத்தியைத் தொடங்குவதற்கும், அவ் உற்பத்தி மூலமாக உருவான விளைபொருட்களைப் பெறுவதற்கும் தேவைப்படும் பொருளுக்கு உழைப்பின் குறிபொருள் என்று பெயர். அதாவது, எந்தப் பொருட்களின் மீது மனித சக்தி, தமது உழைப்பை செலுத்துகிறதோ, அந்தப் பொருளானது உழைப்பின் குறிபொருள் என அழைக்கப்படுகின்றது. வழக்கத்தில் இரு வகையான உழைப்பின் குறிபொருள்கள் உள்ளன.[4]

இயற்கைக் குறிபொருள்கள் தொகு

இயற்கைக் குறிபொருள்கள் என்பவை இயற்கையிலிருந்து நேரடியாக பெறப்படுபவையாகும். பூமியிலிருந்து கிடைக்கும் மண் வளம், கனிம வளம், நீர் வளம், மீன்வளம், காட்டு வளம், இயற்கையாகக் கிடைக்கும் பொருட்கள் மற்றும் நிலப்பகுதிகள் முதலானவை எடுத்துக்காட்டுகளாவன. பயிரிடுவதற்கான உரிய, உகந்த நிலம் உழவுத்தொழில் மேற்கொள்வதற்குரிய உழைப்பின் குறிபொருளாக அறியப்படுகிறது.

மனித ஆக்க மூலப்பொருள்கள் தொகு

இயற்கைக் குறிபொருளைப் பயன்படுத்தி மனிதனால் உருவாக்கப்படும் கசசாப் பொருள்களுக்கு மனித ஆக்க மூலப் பொருள்கள் எனப்படும். நெல், பருத்தி, இரும்பு, கரும்பு, தங்கம், செங்கல் முதலாவை மனித ஆக்க மூலப் பொருள்களுக்குச சான்றுகளாகும்.

உழைப்புக் கருவிகள் தொகு

உற்பத்திக்குக் கருவிகளின் பயன்பாட்டுத் தன்மை இன்றியமையாதது. மனித உழைப்பிற்கு உபயோகப்படும் கருவிகளே உழைப்புக் கருவிகள் ஆகும். மனிதன் என்பவன், உழைப்புக் கருவிகளைப் பயன்படுத்தி, உழைப்பின் குறிபொருளின் மீது வினையாற்றிப் பொருள் உற்பத்தியில் ஈடுபடுகிறான். தொடக்கக் காலத்தில் கற்கோடாரி, மண்வெட்டி, வில் அம்பு உள்ளிட்ட ஆயுதங்களும், அண்மைக் காலத்தில் நவீன இயந்திரங்கள், சாலை வசதிகள், போக்குவரத்து வாகனங்கள், தொழில்நுட்ப வசதிகள், தொலைத்தொடர்புகள் முதலியன உழைப்புக் கருவிகளாகச் செயற்படுகின்றன. உழைப்புக் கருவிகளுடன் இணைந்த தொழிற்கூடங்கள், கிடங்குகள், இருப்புப்பாதைப் போக்குவரத்து, நீர்ப்பாசன வசதிகள், மின்சாரம் போன்றவையும் உழைப்புக் கருவிகளுக்குள் அடங்கும்.[4]

உழைப்பு தொகு

பொருள் உற்பத்திக்கு இன்றியமையாதது உழைப்பு ஆகும். உழைப்பின் குறிபொருள் மற்றும் கருவிகள் தாமாகவே இயங்கி எந்தவொரு உற்பத்தியையும் செய்திடவியலாது. அவற்றுள், மனிதனது உழைப்பு செயற்படுத்தப்படும் போதுதான் உற்பத்தி நிகழ்கிறது. உழைப்பு என்பது இயற்கையிடமிருந்து பெறப்படும் பொருட்களைக் கொண்டு மனிதனின் தேவைகளை ஈடேற்றிட முற்படும் நடவடிக்கையாகும். உழைப்பின் பயனாக மனித சமூகம் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் உற்பத்திச் செய்துள்ளது. உழைப்பானது மனிதனுக்குத் திறமையையும் திறன்களையும் தருகின்றது. மனித சமுதாயம் வளர்ச்சியும் மேம்பாடும் அடைய உழைப்பு உறுதுணையாக உள்ளது. உழைப்பே புதிய கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாகும்.

இவற்றையும் பார்க்க தொகு

சான்றாவணம் தொகு

  1. 1.0 1.1 1.2 "இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்"- முன்னேற்ற பதிப்பகம்-மாஸ்கோ-1978
  2. Collected works, V. I. Lenin-Vol-14, page-244 -
  3. தி. சு. நடராசன் (2008). திறனாய்வுக் கலை. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிட். பக். ப. 170. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-234-0485-9. 
  4. 4.0 4.1 4.2 "வரலாற்றியல் பொருள்முதல்வாதம்". பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொருள்முதல்_வாதம்&oldid=2315509" இலிருந்து மீள்விக்கப்பட்டது