மங்கடா இரவி வர்மா

மலையாளத் திரைப்பட இயக்குநர்

மங்கடா இரவி வர்மா (Mankada Ravi Varma) (பிறப்பு:1926 ஜூன் 4 - இறப்பு: 2010 நவம்பர் 22 ) என்பவர் மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றிய இந்திய ஒளிப்பதிவாளரும் மற்றும் இயக்குனருமாவார். இவர் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் அடூர் கோபாலகிருஷ்ணனுடனான தொடர்புக்காக இவர் பிரத்தியேகமாக அறியப்படுகிறார்.[1][2] ஜி.அரவிந்தன் மற்றும் பி. என். மேனன் போன்ற பிற முக்கிய இயக்குனர்களுடன் இவர் தொடர்பு கொண்டிருந்தார். மேலும் இரண்டு திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் பல்வேறு பிரிவுகளில் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளையும் ஏழு கேரள மாநில திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார் .

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இரவி வர்மா மலப்புரம் மாவட்டத்திலுள்ள மங்கடாவில் ஜூன் 4, 1926 ஆம் ஆண்டு பிறந்தார். கே. கே. தம்புராட்டி மற்றும் ஏ. எம். பரமேஸ்வரன் பட்டாதிரிபாத்துக்கு மகனாகப் பிறந்தார். வர்மா சிறுவயதிலிருந்தே புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். பாலக்காட்டின் விக்டோரியா கல்லூரியில் பட்டம் பெற்ற இவர் , பின்னர் சென்னையில் உள்ள திரைப்பட தொழில் நுட்ப நிறுவனத்தில் (எஃப்.டி.ஐ.ஐ) திரைப்பட ஒளிப்பதிவு குறித்து கற்றார்.[3]

தொழில் தொகு

திரைப்பட தொழில் நுட்ப நிறுவனத்தில் படிப்புக்குப் பிறகு, பல ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். இவரது முதல் திரைப்படம் அவள் (1966) என்பதாகும். திரைப்பட தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவர் அஜீஸ் என்பவர் இயக்கியுள்ளார். இவரது முதல் குறிப்பிடத்தக்க படைப்பு பி.என். மேனன் இயக்கிய ஒலவம் தீரவம் (1970) திரைப்படம் என்பதாகும். இதற்கு, எம்.டி. வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதியுள்ளார். இது முழுக்க முழுக்க வெளிப்புறத்தில் படமாக்கப்பட்ட முதல் மலையாளத் திரைப்படம் என்பதால் இது மலையாளத்தில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.

இரவி வர்மா அந்த நாட்களை நினைவு கூர்ந்தார், "நாங்கள் கிடைத்த ஒளியை பயன்படுத்தினோம். படத்தின் காட்சியமைப்புகள் மற்றும் கலவை மற்ற திரைப்படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைக்கும் அனைத்து வண்ணச்சாயல்களுக்கும் இடமளிக்க முயற்சித்து திரைப்படத்தை படமாக்கினேன். நான் மிகவும் மோசமான சூழ்நிலைகளிலும் கூட ஆவணப்படங்களை படமாக்கியுள்ளதால், அந்த அனுபவங்கள் அனைத்தையும் ஒரு திரைப்படத்தில் பயன்படுத்த முடிவு செய்தேன். வழக்கமாக மோசமான வெளிச்சத்தில், ஒரு ஒளிப்பதிவாளர் படப்பிடிப்பை நிறுத்திவிடுவார். நான் செய்தது என் நன்மைக்காக பயன்படுத்தப்பட்டது." என்று கூறியுள்ளார்.[4]

ஒரு ஒளிப்பதிவாளராக, அவரது மற்ற குறிப்பிடத்தக்க திரைப்படங்களில், சிங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கிய திக்கற்ற பார்வதி (1973) மற்றும் ஜி அரவிந்தனின், உத்தராயணம் (1974) போன்றவை ஆகும். அடூர் கோபாலகிருஷ்ணனின் அனைத்து படங்களுக்கும் இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

அடூருடன் தொடர்பு தொகு

இரவி வர்மா சமீக்சா என்ற பத்திரிகையில் திரைப்படங்களைப் பற்றி ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். இது திரைப்பட தொழில் நுட்ப நிறுவனத்தின் மாணவர் கோபாலகிருஷ்ணன் என்பவரால் படிக்க நேர்ந்தது. இவர் இரவி வர்மாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். இவர் ஒரு நிறுவனத்திற்கு மற்றொரு பகுதியை எழுதும்படி கேட்டுக்கொண்டார். புகழ்பெற்ற இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணனுக்கும் இரவி வர்மாவுக்கும் இடையிலான தொடர்பும் நட்பும் அப்படித்தான் தொடங்கியது. அடூர் கோபாலகிருஷ்ணன், கேரளாவுக்கு வரும்போதெல்லாம், சென்னைக்குச் சென்று இவரை சந்திப்பார். 60களில் தொடங்கிய நட்பு 70களின் முற்பகுதியில் அடூர் கோபாலகிருஷ்ணன் சுயம்வரம் (1971) திரைப்படம் செய்தபோது ஒரு தொழில்முறை தொடர்பாக மாறியது.[4]

இயக்குநராக தொகு

1984 ஆம் ஆண்டில், இவர் தனது முதல் படமான நோக்குக்குதி"யை இயக்கினார். இது அவருக்கு மற்றொரு தேசிய விருதையும் மாநில விருதையும் பெற்றுத் தந்தது. இத்திரைப்படம் பிரபல மலையாள கவிஞர் எம் கோவிந்தன் எழுதிய ஒரு கவிதையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது.. இத்திரைப்படத்தைப் பற்றி, இரவி வர்மா கூறும்போது, "நான் அதை என் சொந்த திருப்திக்காக செய்தேன். என்னைப் போன்றவர்களும் எனது படத்தைப் பார்த்த திருப்தியைப் பெறுவார்கள் " என்று கூறியுள்ளார்.[4] 1989 இல் குஞ்சிகூனன் என்கிற படத்தையும் இயக்கியுள்ளார்.[5]

ஒளிப்பதிவு பற்றி சித்ரம் சாலா சித்ரம் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். இது திரைப்படம் குறித்த சிறந்த புத்தகத்திற்கான மாநில விருதை வென்றது.

இறப்பு தொகு

பல ஆண்டுகளாக அல்சைமர் நோயால் அவதிப்பட்டு வந்த இரவி வர்மா 22 நவம்பர் 2010 அன்று சென்னையில் காலமானார்.[6]

மங்கடா இரவி வர்மாவின் ஒரு இரங்கல் நிகழ்ச்சியில் அடூர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: "அவர் ஏன் என்னுடன் மட்டுமே பணியாற்றினார் என்று நான் அவரிடம் ஒருபோதும் கேட்டதில்லை, ஏனெனில் அவர் நல்ல படங்களை மட்டுமே செய்ய விரும்புவதாகக் கூறினார். எனது திரைக்கதையை உருவாக்கும் முன்பு நான் கதை- விவாதத்திற்கு பயன்படுத்திய ஒரே நபர் இரவிஏட்டன் மட்டுமே. எனது திரைக்கதையில் அவரது பதிலும் தெளிவும் என்னை மிகவும் ஊக்குவித்தன." [7]

குறிப்புகள் தொகு

  1. S Nanda Kumar. "Directpr's Cut". டெக்கன் ஹெரால்டு. http://www.deccanherald.com/content/112496/directors-cut.html. பார்த்த நாள்: 23 November 2010. 
  2. "Painting with light". The Hindu இம் மூலத்தில் இருந்து 2007-12-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071203223207/http://www.hindu.com/thehindu/fr/2007/09/07/stories/2007090750230100.htm. 
  3. "Mankada Ravi Varma dead". 
  4. 4.0 4.1 4.2 Shobha Warrier. "Goodbye, Mankada Ravi Varma". Rediff. பார்க்கப்பட்ட நாள் 23 November 2010.,
  5. "മങ്കട രവി വര്‍മ അന്തരിച്ചു". மலையாள மனோரமா. 22 November 2010. Archived from the original on 24 நவம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 23 November 2010.
  6. KOL News (22 November 2010). "Cinematographer Mankada Ravi Varma passes away". Asianet. Archived from the original on 23 November 2010. பார்க்கப்பட்ட நாள் 22 November 2010.
  7. "Mankada Ravi Varma passes away". சிஃபி. பார்க்கப்பட்ட நாள் 23 November 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கடா_இரவி_வர்மா&oldid=3747530" இலிருந்து மீள்விக்கப்பட்டது