மரபணுப் பொறியியல்

மரபணு பொறியியல் (Genetic engineering) அல்லது மரபணு மாற்றமைவு (Genetic Modification) அல்லது மரபணு கையாளுகை (Genetic manipulation) என்பது உயிரித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒரு உயிரினத்தின் மரபணுவை நேரடியாக கையாளுதல் ஆகும். இந்த முறையில் உயிரணுக்களின் மரபியல் அமைப்பானது பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாற்றப்படுகின்றது. மரபணுக்களை ஒரே இனத்திற்குள்ளேயோ அல்லது வேவ்வேறு இனத்திற்கிடையிலேயோ இடமாற்றம் செய்வதனால், ஒரு இனத்தை முன்னேற்றவோ, அல்லது ஒரு புதிய இனத்தை உருவாக்கவோ செய்வதும் மரபணுப் பொறியியலில் அடங்கும். கலப்பு டி.என்.ஏ (en:Recombinant DNA) முறையைப் பயன்படுத்தி விரும்பத்தக்க மரபியல் பொருண்மத்தை தனிப்படுத்துவதால், அல்லது பிரதி செய்வதனாலோ அல்லது செயற்கை முறையில் டி.என்.ஏ யைத் தயாரிப்பதனாலோ புதிய டி.என்.ஏ யை உருவாக்கலாம். அப்படியாக உருவாக்கப்படும் புதிய டி.என்.ஏ துண்டத்தை, இன்னொரு உயிரினத்தின் டி.என்.ஏ யுடன் இணைத்துவிடலாம். இந்த இணைப்பு எழுந்தமானமாக ஒரு இடத்திலோ அல்லது குறிப்பிட்ட இலக்கு குறிக்கப்பட்ட இடத்திலோ இணைக்கப்படலாம். இணைத்தல் செயல்முறையால் மட்டுமல்லாமல், குறிப்பிட்ட ஒரு மரபணுப் பகுதியை நீக்குவதன் மூலமும் (en:Gene knockout) மாற்றத்தை ஏற்படுத்தி, புதியவகை மரபியல் இயல்புகளைப் பெறலாம்.

இவ்வாறு மரபணுப் பொறியியலுக்கு உட்படுத்தலின் மூலம் உருவாகும் உயிரினம் மரபணு மாற்றமைவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கருதப்படுவதுடன், மரபணு மாற்றப்பட்ட உயிரினம் என அழைக்கப்படும். 1973 இல், முதன் முதலில் Herbert Boyer, Stanley Cohen ஆகியோர் இவ்வாறான ஒரு பாக்டீரியாவை உருவாக்கினர்[1]. 1974 இல் Rudolf Jaenisch என்பவர் ஒரு மரபணு மாற்றப்பட்ட எலியை உருவாக்கினார்.[2] 1976 இல் தொடங்கப்பட்ட ஜீனன்டெக் என்ற நிறுவனம் மனிதப் புரதங்களை மரபணுப் பொறியியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்க ஆரம்பித்தது.[3] 1978 இல் இம்முறையால் இன்சுலின் தயாரிக்கப்பட்டது. 1982 இல் இன்சுலினை உருவாக்கும் மரபணு மாற்றப்பட்ட பாக்டீரியா வணிகரீதியில் விற்பனைக்கு உட்படுத்தப்பட்டது.[4] பூச்சிகளின் தாக்கத்திற்கு எதிர்ப்பு காட்டக்கூடிய தக்காளி இனம் 1994 இல் உருவாக்கப்பட்டது.[5] இது மரபணு மாற்று உணவு எனப்படும். குளோ மீன் (GloFish) என்று அழைக்கப்படும் ஒளிரும் மீனானது, மரபணு மாற்று உயிரினமாக உருவாக்கப்பட்டு, அமெரிக்காவில் 2003 இல் விற்பனைக்கு வந்தது. வளர்ச்சிக்குரிய இயக்குநீர் மாற்றம் ஏற்படுத்தப்பட்ட சல்மன் ( salmon) மீன் 2016 இல் விற்பனைக்கு வந்தது.

இந்தத் தொழில்நுட்பமானது ஆராய்ச்சி, மருத்துவம், தொழிற்சாலை உயிரித் தொழினுட்பம், வேளாண்மை போன்ற பல்வேறு தளங்களில் பயன்பாட்டில் இருக்கிறது. ஆராய்ச்சியில், தொழிற்பாடுகளின் இழப்பு, தொழிற்பாடுகளின் சேர்க்கை போன்றவற்றின் ஊடாக மரபணுக்களின் தொழிற்பாடு, அவற்றின் வெளிப்பாடு போன்றவற்றை அறிய இந்தத் தொழினுட்பம் உதவுகின்றது. சில நிலைகளுக்குக் காரணமான சில மரபணுக்களைத் தொழிற்படாமல் செய்வதன் மூலம் (knocking out genes), மனிதரில் ஏற்படும் சில நோய்களுக்கான மாதிரி விலங்கு உயிரினங்களை உருவாக்க இத் தொழினுட்பம் பயன்படுகின்றது. இயக்குநீர், நோய்த்தடுப்பு மருந்து, மேலும் சில வகை மருந்துகளை உருவாக்க இது பயன்படுவதுடன், மரபணுக்கள் காரணமாக ஏற்படும் நோய்களில் இருந்து குணமடைய மரபணு சிகிச்சை அளிக்கவும் இம்முறை உதவுகின்றது.

கூடிய உற்பத்தி தரும் விதைகள், பழுதடையா காய்கறிகள், மரபணு மாற்றப்பட்ட உயிரினம், செயற்கை உடல் உறுப்புகள், செயற்கை இன்சுலின் உருவாக்கம் என பல தரப்பட்ட பயன்பாடுகள் மரபணு பொறியியலுக்கு உண்டு. இது இன்னும் வளர்ச்சி பெற்றுவரும் ஒரு தொழினுட்பம். பல வழிகளில் இது நல்லமுறையில் பயன்பட்டாலும், சில பக்க விளைவுகளும் உண்டு. எடுத்துக்காட்டாக புதிய வகை உயிரினங்களை உருவாக்கும் பொழுது, அவை சில வேளைகளில் சூழ்நிலைமண்டலங்களுக்கு ஏற்பு இல்லாமல் போகலாம். இன்னுமொரு எடுத்துக்காட்டு இவ்வாறு மாற்றப்பட்ட சில மரக்கறிகள் நீண்ட நாட்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவற்றின் சுவை சற்று குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மரபணு மாற்ற விளைவுகள் தொகு

மரபணு பொறியாளர்கள் சிலபோது, நீர்ப்பாசனம், வடிகால், பாதுகாத்தல், சுகாதாரம் போன்றவற்றை ஈடுசெய்யக்கூடிய மரபணுமாற்ற தாவரங்களை உருவாக்கலாம் அல்லது விளைச்சலை தக்கவைத்துக் கொள்ளவோ அதிகரிக்கவோ செய்யலாம். இதுபோன்ற உருவாக்கங்கள் சாதாரணமாக உலர்ந்தும், தொடர்ந்து நீர்ப்பாசனம் தேவைப்படுவதாகவும் உள்ள பகுதிகளிலும், பெரிய அளவிலான பண்ணைகளிலும் தொடரலாம். இருப்பினும், தாவரங்களின் மரபணு பொறியியல் முரண்பாடுள்ளது என்பதையே நிரூபித்துள்ளது. உணவுப் பாதுகாப்பையும் சுற்றுச்சூழல் தாக்கங்களையும் சூழ்ந்துள்ள பல பிரச்சினைகளும் மரபணு மாற்ற முறைகள் குறித்தே எழுந்துள்ளன.

மலட்டு விதைகளை உருவாக்கும் மரபணுரீதியில் மாற்றப்பெற்ற அழிப்பு விதைகள்,[6][7] போன்ற மரபணு மாற்றமுறைகளை குறித்து சூழலியலாளர்களும் பொருளாதார நிபுணர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நோய் எதிர்ப்பு விதைகள் தற்போது கடுமையான சர்வதேச எதிர்ப்பையும், உலகளவில் தடைசெய்வதற்கான தொடர் முயற்சிகளையும் எதிர்கொள்கிறது.[8]

காப்புரிமை தொகு

மற்றொரு முரண்பாடான பிரச்சினை, மரபணு மாற்ற விதையை உருவாக்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காப்புரிமை பாதுகாப்பு ஆகும். நிறுவனங்கள் தங்கள் விதைகளுக்கான அறிவுசார் உரிமையைப் பெற்றிருப்பதால், தங்கள் காப்புரிமை பெற்ற தயாரிப்பிற்கான விதிகள் மற்றும் நிபந்தனைகளை அறிவிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கி்ன்றன. தற்போது, உலகின் விதை விற்பனையில் மூன்றில் இரண்டு பங்கை பத்து விதை நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. இந்த நிறுவனங்கள் வாழ்க்கையை காப்புரிமை செய்வதாலும், லாபத்திற்காக உயிர்ப்பொருள்களை பயன்படுத்திக்கொள்வதாலும் உயிர்மத் திருட்டு என்ற குற்றத்தை செய்பவர்கள் என வாதிடுகிறார்கள்.[9] காப்புரிமை பெற்ற விதையைப் பயன்படுத்தும் விவசாயிகள் அதற்கடுத்து பயிரிடுவதற்காக அவற்றை சேமித்து வைப்பதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள், அது விவசாயிகளை ஒவ்வொரு ஆண்டும் புதிய விதைகளை வாங்கும் நிலைக்கு ஆளாக்குகிறது.

பெரும்பாலான பயிர்களில் சாகுபடி செய்யும்பொழுதே அடுத்த முறைக்கான விதை நமக்குக் கிடைத்து விடுகிறது. ஆனால், மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் இது நிகழ்வதில்லை. ஒவ்வொரு முறையும் விதைகளை பணம் செலுத்தித்தான் பெற வேண்டும். வளர்ந்த நாடுகளிலும் வளரும் நாடுகளிலும் விதை சேமிப்பு என்பது விவசாயிகளுக்கு ஒரு பாரம்பரியமான முறையாக இருப்பதால், மரபணு மாற்ற விதைகள் அவர்களது விதை பாதுகாப்பு முறையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் புதிய விதை வாங்கும் முறைக்கு மாற சட்டப்பூர்வமான முறையில் கட்டாயப்படுத்துகிறது.[10][11] ஆரம்பத்தில், இவற்றைப் பயிரிட குறைவான கட்டணம் போதும் என்று சொல்லும் நிறுவனங்கள், பிற்காலத்தில் கட்டணத்தை உயர்த்தினால், அதைச் செலுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை. இதில் யார் யாரிடமிருந்து விதைகளை வாங்குகிறார்கள் என்பது தான் அந்நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது. இதனால் பொருளாதாரம் மட்டும் அல்ல, காலப்போக்கில் அந்நாட்டை விவசாய அடிமைகளாக்கவும் (Agricultural labour) சாத்தியக்கூறு உள்ளதாகவும் வேளாண் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். விதையானது ஒருமுறை மரபணுமாற்ற மூலப்பொருளை பெற்றது என்றால், மரபணுமாற்ற மூலப்பொருளின் காப்புரிமையைப் பெற்றுள்ள விதை நிறுவனத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகிவிடுகிறது.[12]

மரபணுப் பொறியியலின் நன்மை, தீமைகள் தொகு

நன்மைகள் தொகு

மரபணுப் பொறியியல் என்பது உயிரித் தொழில் நுட்பத்தின் ஒரு பிரிவாகும். இது தாவர நோய்கள் மற்றும்,பூச்சிகளினால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது. மரபணுரீதியில் மாற்றப்பட்ட உயிர்மப்பொருள் என்பவை சாதாரணமாக மறுகலப்பு செய்யப்பட்ட டி.என்.ஏ. தொழினுட்பம் எனப்படும் மரபணுப் பொறியியல் உத்திகளைக் கொண்டு மரபணு மூலப்பொருள்களை மாற்றியமைக்கப்படும் உயிர்ப்பொருள்களாகும். இதன் முதன்மை நோக்கம் கீழ்க்காணும் நன்மை பயக்கும் பண்புகளைக் கொன்ட அயல் மரபணுக்களைப் பெற்ற தாவரங்களை உருவாக்குவதாகும்.

  • நோய்/பூச்சி/ களைகள் எதிர்ப்புத் திறன் கொண்ட தாவரங்கள்.
  • மேம்பட்ட ஒளிச்சேர்க்கைத் திறன் கொண்ட தாவரங்கள்.
  • நைதரசன் பசளையைப் பெறுவதற்காக, சிறப்பாக நைதரசன் நிலைப்படுத்தல் செய்யக்கூடிய தாவரங்கள்.
  • அளவில் பெரிதான சேமிப்புப் பகுதிகளான பழங்கள், காய்கறிகள், விதைகள்.
  • இதய நோயாளிகளுக்கேற்ற மிகைப் படுத்தப்படாத கொழுப்பு அமிலங்களைக் கொண்ட எண்ணெய்வித்துக்கள்.
  • நோய் எதிர்ப்புப் பொருள், மிகைப்படுத்தப்பட்ட மாவுப்பொருள் மற்றும் உயிர்ச்சத்து ஏ கொண்ட உருளைக்கிழங்கு.
  • மரபு மற்றம் செய்யப்பட்ட (Genitically Modified) விதைகள், உயிரி உரங்கள் மற்றும் உயிரி எரிபொருள்கள் ஆகியவை.

மரபணுப் பொறியியல் பயிர் வளர்ப்பவர்களுக்கு புதிய பயிர்களுக்கான, விரும்பிய விதைமுளைகளை உருவாக்கிக்கொள்வதற்குப் பயன்படுத்திக்கொள்ளும் விதத்தில் மரபணுகள் கிடைக்கச்செய்வதை ஊக்குவிக்கிறது. 1960 ஆம் ஆண்டுகளில் இயந்திரமய உருளைக்கிழங்கை அறுவடையாளர்கள் உருவாக்கிய பிறகு, விவசாய விஞ்ஞானிகள் இயந்திரமயமாக கையாளுவதற்கு ஏற்ற வகையில் அதிக எதிர்ப்புத் திறனுள்ள உருளைக்கிழங்குகளை மரபணுரீதியில் மேம்படுத்தியுள்ளனர். மிகச் சமீபத்தில், உலகின் பல்வேறு பகுதிகளிலும், பிற பயன்தரும் தன்மை கொண்டவற்றோடு பயிர்களை உருவாக்கும் விதமாக மரபணுப் பொறியியல் பயன்படுத்தப்பகிறது.

கத்திரிக்காய், அரிசி, சோயா பீன்ஸ், காப்பி, மிளகு, காலி பிளவர், முட்டைக்கோஸ் பட்டாணி, முலாம்பழம், உருளைக்கிழங்கு, நிலக்கடலை, வெண்டை, வள்ளிக்கிழங்கு, கூவைக்கிழங்கு, ஏலக்காய், மொச்சை, மாதுளை பருத்தி, சணல், உதட்டுச்சாயத்திற்கான செவ்வண்ணம் தரும் உலர் குங்குமபப்பூ போன்றவை மரபணு முறையில் மாற்றியமைக்கப்பட்ட சில தாவரங்களாகும்.

தீமைகள் தொகு

  • எண்ணற்ற நன்மைகள் பெற்றப்பட்டாலும் சமூக நெறிமுறைகளுக்கு ஏற்ற மரபணு தொழில்நுட்பங்களுக்கு குறிப்பிட்ட முன்னேற்றம் காணும்போது எதிர்பாராத வகையில் உயிர்க்கொல்லி நோய்கள் அல்லது மரபணு பேருருத்தன்மைக்குக் காரணமான சில புதிய நச்சுக்கிருமிகள் உருவாகக்கூடும்.
  • சில கட்டுப்பாட்டுடன் கூடிய பரிசோதனைத் தளங்களின் (Controlled experiments) மூலமாக ஆய்வு செய்ததில், மரபணு மாற்ற விதைகளைப் பயன்படுத்துவதால், பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் விவசாய நிலங்களில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை விதைத்தால், மண்ணின் தன்மையுடன், நுண்ணுயிரின் மரபணு எப்படிச் செயல்படும் என்று ஆராய்ச்சியாளர்களால் திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை.
  • மரபணு மாற்ற உயிர்கள் காட்டு உயிர்களுடன் கலப்பு-சேர்க்கை கொண்டு இயற்கையான இனங்களின் மரபு ஒருங்கிணைப்பை நிலையாக மாற்றிவிடும் என்ற கவலையும் உள்ளது. மரபணுமாற்ற இனங்களில் உள்ள மரபணு சம்பந்தப்பட்ட களை உயிர்களிடத்திலும் சென்றுசேர்கிறது என்பதும், மரபணு மாற்றப்படாத பயிர்களோடு கலப்பு-சேர்க்கை செய்துவிடுகின்றன என்பதும் ஒரு கவலைக்குரியதாக உள்ளது.
  • மரபணு பொறியியலின் இன்னொரு பாதக விளைவாக ஒரு பகுதியின் தட்ப வெப்ப சூழ்நிலைக்கேற்ப விளையும் பயிர்களை அழிப்பது உள்ளது.
  • பல மரபணு மாற்றப் பயிர்களும் அவற்றின், சூறைவிதை போன்ற, விதைகளிலிருந்தே அறுவடை செய்யப்படுவதால் சுழற்சிமுறை நிலங்களில் தானாக வளரும் தாவரங்களும் இத்தன்மையைப் பெற்று விடுகின்றன.இதனால் இத்தாவரங்களுக்கான விதை சிந்துதலும், போக்குவரத்தின் போதைய விதை சிந்துதலும் பிரச்சினைக்குரியதாகிறது.[13]
  • அத்தியாவசிய மரபுரிமையைப் பெற்றிருக்கும் உள்ளூரில் உருவாக்கப்பட்ட விதைகள் தற்போதைய கலப்பு பயிர்கள் மற்றும் மரபணு மாற்ற விதைகளிடம் தொலைந்துபோகக்கூடிய சூழ்நிலையைப் பெற்றிருக்கின்றன. நில இனங்கள் அல்லது பயிர் சூழல்-வகை என்றும் அழைக்கப்படுகிற உள்ளூரில் உருவாக்கப்பட்ட விதைகள் குறிப்பிட்ட நுண் காலநிலைகள், மண், பிற சுற்றுச்சூழல் நிலைகள், நில அமைப்புகள், மற்றும் பயிரிடுவதற்கு உரிய இடத்திற்கு மட்டுமான உள்நாட்டு முன்னுரிமை என்பவனவற்றை காலத்தை தாண்டிய திறனைப் பெற்றிருப்பதால் அவை முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.[14] ஒரு பகுதியில் கலப்பு வணிக விதைகளையும், மரபணு மாற்ற விதைகளையும் அறிமுகப்படுத்துவது உள்ளூர் நில இனங்களோடு கலப்பு-சேர்க்கைக்கான அபாயத்தை கொண்டுவருகிறது. ஆகவே,மரபணு மாற்றம் நில இனங்களின் நீடிப்புத்தன்மை மற்றும் பாரம்பரிய கலாச்சாரங்களை அச்சமூட்டுகிறது.
  • மரபணுப் பொறியியல் முறையில் உருவான பூச்சி எதிர்ப்பு நஞ்சினைத் தாவரங்களாவது தங்கள் பாகங்கள் முழுவதும் உற்பத்தி செய்யும் ஆற்றல் பெறுகின்றன. இதனால் இப்பயிர்கள் அறுவடைக்குப் பின்னர் கழிவாகிப் புதைவதனால் மண் முழுவதும் நச்சுத்தன்மை கொண்டதாக மாறி விடுகிறது. இந்த நச்சுத்தன்மையையும் அப்பயிர்கள் உறிஞ்சிக் கொள்கின்றன. அது மற்ற உயிரினங்களான மனித குலத்திற்கு சேவை செய்யும் தேனி, சுருள் பூச்சி, வண்ணத்துப் பூச்சி மற்றும் முக்கியமாக விவசாயிகளின் நண்பனான மண் புழு ஆகியவற்றைக் கொன்று விடும். இது மட்டுமின்றி அந்த நிலங்களில் மேயும் ஆடு மாடுகள் மற்ற உயிரினங்கள் இறந்து விடுகின்றன. ஆந்திராவில் பி.டி. பருத்திச் செடியை சாப்பிட்ட 1500க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்து விட்டன. ஆந்திராவில் கரீம் நகரிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள மாமிடலப்பள்ளி கிராமத்தில் பி.டி பயிரிடப்பட்ட நிலத்தில் மேய்ந்த 12 மயில்கள் இறந்து விட்டன.
  • சில காலத்திற்கு முன்னதாக மான்சான்டோ என்ற பன்னாட்டு கம்பெனி மரபணு பொறியியல் மூலமாக தயாரிக்கப்பட்ட பருத்தி விதைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அதிக மகசூல் கிடைக்கும் என்ற இந்த கம்பெனியின் பொய்ப் பிரச்சாரத்தை நம்பி ஏராளமான விவசாயிகள் அதிக கடன் வாங்கி இந்த விதைகளை பயிரிட்டனர். ஆனால் இவை மறுபடியும் பயிரிட முடியாத மலட்டு விதைகள் என்பதாலும் அதிக மகசூல் கிடைக்காததாலும் விவசாயிகள் ஆயிரக்ககணக்கானோர் தற்கொலை செய்து கொண்டனர் என்பது அனைவரும் அறிந்த செய்தி.
  • எந்தப் பூச்சிக்காக இப்பூச்சி எதிர்ப்பு நஞ்சுடன் மரபணுக்கள் செலுத்தப்படுகின்றனவோ, அந்தப்பூச்சிகள் தங்களின் உடலில் இந்த நஞ்சிற்கு எதிர்ப்பு சக்தியையும் நாளடைவில் வளர்த்துக் கொள்கின்றன. அந்தப் பூச்சியானது 3லிருந்து 5 ஆண்டுகளுக்குள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்வதாக அமெரிக்க சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தனது ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளது.
  • மண்ணின் உவர் நிலைமையை சகித்துக் கொள்ளும் மரபணுக்கள் பொருத்தப்பட்ட பயிர்கள் வளர்க்கப்படுவதால் பகுதியின் சூழல் மாசாவதோடு உவர் மண்ணுக்கேற்ப இயற்கையாக விளையும் பயிர்களுக்கு இடமில்லாத சூழ்நிலையும் ஏற்படுகிறது.
  • மரபணு பொறியியல் மூலம் ஒரே தன்மை கொண்ட ஒரே பயிர்கள் வளர்க்கப்படுவதால் அவை ஒரு நோய் தாக்கினாலே விரைவாக அழிந்து பஞ்சம் ஏற்படுகிறது.

உணவுப் பாதுகாப்பும் தொழிற்குறியீடும் தொகு

 
தேன் உணவு

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள், காய்கறிகள் மீன்கள் போன்றவற்றை உண்பதால் மனிதர்களுக்கு ஒவ்வாமை உள்ளிட்ட பல நோய்கள் தாக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுவதால், உணவுப் பாதுகாப்புப் பிரச்சினைகள் எழுந்துள்ளன. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், காய்கறிகள் மீன்கள் போன்றவைகளுக்கும் அவ்வாறு மாற்றம் செய்யப்படாத பொருள்களுக்கும் வேறுபாடு புலனாவதில்லை. எனவே மரபணு மாற்றப் பொருள்களுக்கு தொழிற்குறீயீடு வழங்க வேண்டும் என சில நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன.[15] ஒரு சில நாடுகளில் அவ்வாறான முத்திரையற்ற பண்டங்களை இறக்குமதி செய்வதிலும் தடை விதித்துள்ளன.

தற்போது உலகளாவிய புவிப்பாதுகாப்பு உடன்படிக்கை மரபணு மாற்றப்பட்ட விற்பனையைக் நெறிப்படுத்தி வருகிறது.[16] மரபணு மாற்ற உணவுகள் அனைத்திற்கும் தொழிற்குறியீடு இடப்பட வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் கோரிவருகையில், அமெரிக்கா இதற்கான உணவுகளுக்கான வெளிப்படை தொழிற்குறியீட்டைக் கேட்பதில்லை. மரபணு மாற்ற உணவுகள் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் கேடுகள் குறித்த கேள்விகள் எழுந்தபின்பு, தேர்வுசெய்வதற்கும், தாங்கள் சாப்பிடுவதைப் பற்றி தெரிந்துகொள்வதற்கும் மற்றும் மரபணு மாற்ற உணவுகள் அனைத்திற்கும் தொழிற்குறியீடு இடப்பட வேண்டும் என்பதைக் கோருவதற்குமான உரிமை பொதுமக்களிடம் இருக்கவேண்டும் என்பதில் சிலர் உடன்படுகிறார்கள்.[17]

மேற்கோள்கள் தொகு

  1. "Rudolf Jaenisch". The Global Politics of Food. American Public Media. பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்ரல் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Transgenic History". transgenicmouse.com. Archived from the original on 2018-04-06. பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்ரல் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "A History of Firsts". Genentech. Genentech, Inc. Archived from the original on 2017-08-21. பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்ரல் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. Nabih A Baeshen, Mohammed N Baeshen, Abdullah Sheikh, Roop S Bora, Mohamed Morsi M Ahmed,corresponding author Hassan A I Ramadan, Kulvinder Singh Saini, and Elrashdy M Redwan (Oct 2 2014). "Cell factories for insulin production". Microb Cell Fact 13 (141). doi:10.1186/s12934-014-0141-0. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4203937/. 
  5. G. Bruening J.M. Lyons (July 01 2000). "The case of the FLAVR SAVR tomato". California Agriculture 54 (4): 6-7. doi:Share Print Site Map University of California, Agriculture and Natural Resources. http://calag.ucanr.edu/Archive/?article=ca.v054n04p6. 
  6. Conway, G. (2000). Genetically modified crops: risks and promise. 4(1): 2. Conservation Ecology. http://www.ecologyandsociety.org/vol4/iss1/art2/#GeneticModificationAndTheSustainabilityOfTheFoodSystem. 
  7. . R. Pillarisetti and Kylie Radel (June 2004). Economic and Environmental Issues in International Trade and Production of Genetically Modified Foods and Crops and the WTO. Volume 19, Number 2. Journal of Economic Integration. பக். 332–352. http://sejong.metapress.com/app/home/contribution.asp?referrer=parent&backto=issue,6,10;journal,15,43;linkingpublicationresults,1:109474,1. [தொடர்பிழந்த இணைப்பு]
  8. ஐ.நா.வின் பயோடைவர்சிட்டி கூட்டம் நிலுவையிலுள்ள முக்கிய விஷயங்களை எதிர்கொள்ளத் தவறிவிட்டது, மூன்றாம் உலக நெட்வொர்க், Accessed on டிசம்பர் 9, 2008இல் அணுகப்பட்டது
  9. ஷிவா, வந்தனா, பயோபைரஸி , சவுத் எண்ட் பிரஸ், கேம்ப்ரி்ட்ஜ், எம்ஏ, 1997.
  10. name="Farmers Guide to GMOs"
  11. ஷிவா, வந்தனா, பயோபைரஸி , சவுத் எண்ட் பிரஸ், கேம்ப்ரிட்ஜ், எம்ஏ, 1997.
  12. ஷிவா, வந்தனாStolen Harvest: The Hijacking of the Global Food Supply சவுத் எண்ட் பிரஸ், கேம்ப்ரிட்ஜ், எம்ஏ, 2000, பக்கம். 90-93.
  13. சந்ட்லேர், எஸ்., டன்வெல், ஜேஎம், Gene flow, risk assessment and the environmental release of transgenic plants, கிரிட்டிகல் ரிவ்யூஸ் இன் பிளாண்ட் சயின்ஸ், தொகுப்பு. 27, பக்கம்25-49, 2008.
  14. நாபன், கேரி பால், Enduring Seeds, தி யுனிவர்சிட்டி ஆஃப் அரிஸோனா பிரஸ், டஸ்கன், 1989.
  15. http://www.greenpeace.org/international/en/campaigns/agriculture/solution-ecological-farming/biosafety-protocol/
  16. http://bch.cbd.int/protocol/background/
  17. ஷிவா, வந்தனா Earth Democracy: Justice, Sustainability, and Peace, சவுத் எண்ட் பிரஸ், கேம்ப்ரிட்ஜ், 2005.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரபணுப்_பொறியியல்&oldid=3909272" இலிருந்து மீள்விக்கப்பட்டது