மருத்துவம் (சங்ககாலம்)

மூச்சுப் பிடிப்புக்கு

சங்ககாலத்தில் செய்யப்பட்ட மருத்துவம் பற்றி, சங்கப் பாடல் ஒன்று தெரிவிக்கிறது.[1] மூச்சுப் பிடிப்பால் வளைந்திருக்கும் முதுகில், அரக்கைக் காய்ச்சி இளஞ்சூட்டில், பத்து போட்டனர். அந்தப் பத்து உலர்ந்து முதுகில் காணப்படுவது போல், பிடவ மலர்களில் தேன் உண்ணும் வண்டுகளின் முதுகில் அம் மலரின் தாதுகள் உதிர்ந்து, மாற்றுப் பார்க்கப் பொன்னைக் கட்டளைக் கல்லில் உரைத்துப் பார்த்த கோடுகள் போலப் படிந்திருந்தன என்று அந்தப் பாடல் தெரிவிக்கிறது.

வெட்டுக் காயத்துக்கு

சங்க காலத்தில் போரில் காயம் பட்டவனைப் பேணி எவ்வாறு மருத்துவம் செய்தனர் என்று ஒரு பாடல் கூடுகிறது.[2] இரவம், வேம்பு மரத் தழைகளை வீட்டு வாயிலில் செருகி வைத்தனர். வளைந்த கொம்பு, யாழ், முதலான பல இசைக்கருவி முழக்கத்துடன் வெண்சிறு கடுகு எண்ணெய்யைக் காயத்தில் தடவி விட்டனர். குழலில் ஆம்பல் பண் பாடினர். மணி அடித்துக்கொண்டு காஞ்சிப் பண்ணிசையில் பாடல்களைப் பாடினர். வீடெல்லாம் மணக்கும்படி புண்ணைப் பாதுகாக்கும் புகையை மூட்டினர். பலரும் கூடி இவ்வாறு அவனுக்கு மருத்துவம் செய்தனர்.

மேற்கோள் தொகு

  1. அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன
    செவ் வரி இதழ சேண் நாறு பிடவின்
    நறுந் தாது ஆடிய தும்பி, பசுங் கேழ்ப்
    பொன் உரை கல்லின், நல் நிறம் பெறூஉம்
    வள மலை நாடன் - நற்றிணை பாடல் 25

  2. தீம் கனி இரவமொடு வேம்பு மனைச் செரீஇ,
    வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்க,
    கை பயப் பெயர்த்து மை இழுது இழுகி,
    ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,
    இசை மணி எறிந்து, காஞ்சி பாடி, 5
    நெடு நகர் வரைப்பில் கடி நறை புகைஇ,
    காக்கம் வம்மோ காதலம் தோழி!
    வேந்துறு விழுமம் தாங்கிய
    பூம் பொறிக் கழல் கால் நெடுந்தகை புண்ணே. புறநானூறு 281

"https://ta.wikipedia.org/w/index.php?title=மருத்துவம்_(சங்ககாலம்)&oldid=3482527" இலிருந்து மீள்விக்கப்பட்டது