மாத்ருபூமி (இதழ்)

மாத்ருபூமி மலையாள மொழியின் இரண்டாவது பெரிய நாளிதழ். கே. பி. கேசவ மேனன் என்ற சுதந்திரப் போராட்ட வீரரால் ஆரம்பிக்கப்பட்டது. தேசிய நோக்கு கொண்டது. 2010ல் எடுக்கப்பட்ட கணக்குகளின்படி கிட்டத்தட்ட பத்து லட்சம் பிரதிகள் விற்கும் நாளிதழ் இது

வரலாறு தொகு

வடகேரளத்தில் கோழிக்கோடு நகரில் இருந்து மாத்ருபூமி வெளிவருகிறது. 1923ல் கேசவ மேனன் இதை ஆரம்பித்தார். கேசவ மேனனும் டி. கே. மாதவனும் தலைமை எடுத்து நடத்திய வைக்கம் கோயில் நுழைவு சத்தியாக்கிரகத்திற்காக இநத நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டது. இதே நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டதே ”கேரளகௌமுதி” நாளிதழும். வைக்கம் சத்யாக்கிரகம் கேரளத்தில் காங்கிரஸை பெரும் சக்தியாக நிறுவியது. அதை பயன்படுத்திக்கொண்டு மாத்ருபூமியும் புகழ்பெற்று வேரூன்றியது.

கேசவமேனன், கெ. கேளப்பன், சி. எச். குஞ்ஞப்பா, பி. நாராயணன் நாயர், கெ. ஏ. நாராயணன் நாயர், ஏ. பி. உதயபானு போன்ற சுதந்திரப்போராட்ட வீரர்கள் மாத்ருபூமிக்கு ஆசிரியர்களாக இருந்துள்ளார்கள். 1932ல் மாத்ருபூமி வாரஇதழ் ஒன்றை வெளியிட ஆரம்பித்தது. மலையாளத்தின் முக்கியமான இலக்கியவார இதழாக இது உள்ளது. 1940ல் விஸ்வரூபம் என்ற கேலி இதழை வெளியிட்டது. இதன் ஆசிரியராக இருந்த சஞ்சயன் கேரளத்தின் முக்கியமான கேலி எழுத்தாளர். மாத்ருபூமியின் ஆசிரியர்களாக இருந்தவர்களில் புகழ்பெற்ற கவிஞரான என். வி. கிருஷ்ண வாரியரும் நாவலாசிரியரான எம். டி. வாசுதேவன் நாயரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

நிர்வாகம் தொகு

மாத்ருபூமி நிறுவனத்தின் மொத்த பங்குகளும் 350 பேரிடம் இருக்கின்றன. பங்குகளுக்காக நடந்த வணிகம் நீதிமன்ற வழக்குகளாக மாறியது. இன்று மூன்று தரப்புகளாக மாத்ருபூமியின் பங்குகள் உள்ளன. கேசவமேனனின் நாலப்பாட்டு குடும்பத்திற்கு முக்கியமான பங்குகள் உள்ளன. கேரளத்தில் புகழ்பெற்ற தனியார் வாகன நிறுவனமான கேரள டிரான்ஸ்போர்ட் கார்பரேஷனின் உரிமையாளரான சந்திரன் என்பவர் கணிசமான பங்குகளை வாங்கினார். கர்நடகத்தைச் சேர்ந்த சமணரான எம். பி. வீரேந்திர குமார் பங்குகளில் ஒரு பகுதியை வைத்துள்ளார். இந்த மூன்று தரப்புகளில் இரண்டு இணைந்து செயல்படும்போது மாத்ருபூமி நிர்வாகம் அவர்கள் கைக்குச் செல்கிறது.

நாலப்பாட்டு குடும்பத்தைச் சேர்ந்தவரும் மலையாள எழுத்தாளர் கமலா தாஸின் மகனுமான எம். டி. நாலப்பாடு தன் பங்குகளை டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். இது அந்த நாளிதழுக்கு மாத்ருபூமியில் ஒரு முக்கியமான இடம் வந்தது. அதற்கு எதிராக வீரேந்திரகுமார் நீதிமன்றம் சென்றார். வழக்கு இன்னமும் நீடிக்கிறது. இன்று மாத்ருபூமி நாளிதழில் எம். பி. வீரேந்திரகுமார் நிர்வாகபொறுப்பில் இருக்கிறார். இவர் ஜனதா தளத்தைச் சேர்ந்த அரசியல்வாதி மற்றும் முன்னாள் அமைச்சர். இவரது மகன் எம். வ். ஷ்ரேயஸ் குமார், சந்திரனின் மகனாகிய பி. வி. கங்காதரன், அவரது மகன் பி. வி .நிதீஷ் ஆகியோர் நிர்வாகக்குழுவில் உள்ளனர்

பதிப்புகள் தொகு

மாத்ருபூமிக்கு கோழிக்கோடு, திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், கொச்சி, கண்ணூர், பாலக்காடு, மலப்புறம், ஆலப்புழா ஆகிய கேரள நகரங்களில் பதிப்புகள் உள்ளன. பிற மாநிலங்களில் சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி பதிப்புகளும் உள்ளன. 94,44,000 பிரதிகள் விற்கின்றன

மாத்ருபூமி குழும இதழ்கள் தொகு

  • பாலபூமி [சிறுவர் இதழ்]
  • கிருகலட்சுமி [பெண்கள் இதழ்]
  • தொழில்வார்த்தா [வேலைவாய்ப்பு]
  • ஆரோக்கியமாசிகா [ஆரோக்கியம்]
  • மாத்ருபூமி வார இதழ் [இலக்கியம்]
  • மாத்ருபூமி ஸ்போர்ட்ஸ் [விளையாட்டு]
  • மாத்ருபூமி இணைய இதழ்
  • மாத்ருபூமி யாத்ரா [சுற்றுலா]
  • மாத்ருபூமி மின்னாமினி [சிறுகுழந்தைகளுக்காக]
  • மாத்ருபூமி கார்ட்டூன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாத்ருபூமி_(இதழ்)&oldid=1896460" இலிருந்து மீள்விக்கப்பட்டது