மாயா காலக்கணக்கு முறை

மாயா காலக்கணக்கு முறை என்பது கொலம்பசுக்கு முந்திய இடையமெரிக்காவின் மாயா நாகரிக மக்களும்; குவாத்தமாலா, மெக்சிக்கோவின் ஒவாக்சக்கா ஆகியவற்றின் மேட்டுநிலப் பகுதியில் வாழும் தற்கால மாயா சமூக மக்களும் பயன்படுத்திய காலக்கணக்கு முறை. இது, காலக்கணக்கு முறைகளையும், நாள்கோள் விவரங்களையும் உள்ளடக்கியது.

மாயா காலக்கணக்கு முறையின் முக்கிய அம்சங்கள், இடையமெரிக்கப் பகுதி முழுதும், குறைந்தது கிமு 5 ஆம் நூற்றாண்டில் இருந்தாவது பொதுப் பயன்பாட்டில் இருந்த முறைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இந்த முறை சப்போட்டெக், ஒல்மெக் போன்ற முந்திய இடையமெரிக்க நாகரிகங்களும்; மிக்சுட்டெக், அசுட்டெக் போன்ற சமகால அல்லது பிந்திய நாகரிகங்களும் பயன்படுத்திய காலக்கணக்கு முறைகளின் அம்சங்கள் பலவற்றையும் உள்ளடக்கி இருந்தது. இடையமெரிக்கக் காலக்கணக்கு முறையை மாயாக்கள் தோற்றுவிக்கவில்லை எனினும், அவர்கள் செய்த விரிவாக்கங்களும், மெருகூட்டலுமே அக் காலக்கணக்கு முறைக்குச் உயர்நயத் தன்மையைக் கொடுத்தது. மாயா காலக்கணக்கு முறை உரிய முறையில் ஆவணப்படுத்தப்பட்டதும், முழுமையாக விளங்கிக்கொள்ளப் பெற்றதுமான ஒரு காலக்கணிப்பு முறை.

மாயாக்களின் தொன்ம மரபுகள், குடியேற்றவாதக் காலத்தில் ஆவணப்படுத்திய யுக்காடிய விவரிப்புகள், பிந்திய செந்நெறிக்காலத்தையும் பின்செந்நெறிக் காலத்தையும் சேர்ந்த கல்வெட்டுக்கள் போன்றவை, காலக்கணிப்பு முறை பற்றிய அறிவையும், எழுத்து, பண்பாட்டின் பிற அடிப்படையான அம்சங்களையும், இட்சாம்னா என்னும் கடவுள் மாயர்களின் முன்னோருக்குக் கொடுத்ததாகச் சொல்கின்றன.

மேலோட்டம் தொகு

260 நாட்களைக் கொண்ட கால அளவு முறை அறிஞர்களால் சோல்க்கின் (Tzolk'in) என அழைக்கப்படுகிறது. இம் முறையை இன்றும், குவாத்தமாலாவின் மேட்டுநிலப் பகுதிகளில் வாழும் இக்சில், குவெச்சி, கிச்சே இன மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சோல்க்கினை, 365 நாட்களைக் கொண்ட ஆப் (Haab) எனப்படும் சூரிய ஆண்டுடன் சேர்த்து சுழற்சி முறையில் அமைந்த கால அலகு ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஒரு சுழற்சி அலகு 52 "ஆப்"களைக் கொண்டது. இது ஒர் காலக்கணக்கு வட்டம் எனப்படும். 13 நாட்களைக் கொண்ட டிரெசேனா, 20 நாட்களைக் கொண்ட வெயின்டேனா ஆகிய சிறிய வட்டங்கள் முறையே சோல்க்கின், ஆப் ஆகியவற்றின் முக்கிய கூறுகளாக அமைகின்றன.

நீண்ட கால அளவுகளைக் கையாள்வதற்கும், கல்வெட்டுக்களில் காலத்தைக் குறிப்பதற்கும் இன்னொரு வகையான காலக்கணக்கு முறை பயன்பட்டது. இதை நீண்ட கணக்குமுறை என்கின்றனர். இது காலத்தைத் தொன்மவியல் தொடக்கப்புள்ளி ஒன்றில் இருந்து தொடங்கி நாட்களைக் கணக்கிட்டு அளக்கும் ஒரு முறை. நீண்ட கணக்குமுறைக்கும், மேற்கத்திய காலக்கணிப்பு முறைக்கும் இடையேயான இயைபுபடுத்தலின்படி, இந்தத் தொடக்கப் புள்ளி, ஜார்ஜியக் காலக்கணிப்பு முறைப்படி கிமு 3114 ஆம் ஆண்டு ஆகத்து 11 ஆம் தேதியும், ஜூலியன் காலக்கணக்கு முறைப்படி செப்டெம்பர் 6 ஆம் தேதியும் ஆகும். இதன் நீளியத் (linear) தன்மை காரணமாக, நீண்ட கணக்குமுறையை இறந்த காலத்திலும், எதிர் காலத்திலும் உள்ள எந்த எந்தவொரு காலத்தையும் தெளிவாகக் குறிப்பதற்குப் பயன்படுத்தலாம். இந்தக் கணக்குமுறை இடஞ்சார் குறியீட்டு முறையைப் பயன்படுத்துகிறது. இம்முறையில் ஒன்றின்மேல் இன்னொன்றாக எழுதப்படும் இடங்களின் எண்மதிப்பு பெருக்கல் முறையில் கூடிச்செல்கிறது. மாயா எண்முறை 20 ஐ அடியாகக் கொண்டது. ஒவ்வொரு இடத்தின் எண்மதிப்பும் அதற்கு முந்திய இடத்தின் எண்மதிப்பின் 20 மடங்காக இருக்கும். நீண்ட கணக்குமுறைக்கு மேலதிகமாகச் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கணக்கும் உள்ளது. இதில், அரையாண்டுச் சுழற்சி வட்டத்தில் சந்திரனின் கலைகள், நிற்கும் இடங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன.

வெள்ளிக் கோளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சுழற்சிக்கால முறையொன்றும் உள்ளது இதில் 584 நாட்கள் அடங்கியுள்ளன. இந்த வட்டத்தில் அமையும் நிகழ்வுகள் பல தீய பலன்களைக் கொடுப்பவை என நம்பினர். சில வேளைகளில் இத்தகைய தீய காலங்களுடன் பொருந்துமாறு போர்களுக்கு நாள் குறித்தனர். இவை தவிர குறைந்த அளவு பயன்பட்ட அல்லது குறைவாக விளங்கிக்கொண்ட வேறு சுழற்சிக்கால முறைகளும் இருந்ததாகத் தெரிகிறது. சில கல்வெட்டுக்கள் 819 நாட்களைக்கொண்ட ஒரு முறைபற்றிக் குறிப்பிடுகின்றன. 9 நாட்கள், 13 நாட்கள் போன்ற எண்ணிக்கைகளுடன் கூடிய, திரும்பத்திரும்ப வரும் கால அளவுகளும் இருந்துள்ளன. இவை கடவுளர், விலங்குகள், வேறு குறிப்பிடத்தக்க கருத்துருக்கள் போன்றவற்றுடன் தொடர்பு உள்ளவையாக இருந்தன.

மாயாக்களின் நேரம் பற்றிய கருத்துருக்கள் தொகு

இடஞ்சார் குறியீட்டு நீண்ட கணக்குமுறையின் உருவாக்கத்தினால், மாயாக்கள், நிகழ்வுகளை நீளியத் தொடர்பு முறையில் பதிவு செய்யக்கூடிய சிறந்த முறையொன்றைப் பெற்றனர். இந்த முறைக்கான அடிப்படைகளை மாயாக்கள் தமக்கு முந்திய இடையமெரிக்கப் பண்பாடுகளிடம் இருந்து பெற்றுக்கொண்டதாகவும் பலர் நம்புகின்றனர். அடுத்தடுத்த மட்டங்களில் இடஞ்சார் குறியீடுகளைச் சேர்ப்பதன் மூலம், இந்த முறையைப் பயன்படுத்தி எவ்வளவு காலத்தையும் குறிக்கமுடியும். மாயாக்களின் கல்வெட்டுக்கள் காலத்தைக் குறிக்க ஐந்து இடங்களை மட்டுமே பயன்படுத்தி உள்ளன. இது அக்காலத்திய தேவைகளுக்குப் போதுமானதாகவே இருந்தது.

பிற இடையமெரிக்கச் சமூகங்களில் இருந்தது போலவே, திரும்பத்திரும்ப வரும் பல்வேறு சுழற்சிக் கால முறைகள், பார்த்து அறியக்கூடிய தோற்றப்பாடுகளின் சுழற்சி நிகழ்வுகள், மாயாக்களின் தொன்மங்களில் காணப்படும் திரும்பத்திரும்ப நிகழும் பிறப்பு, மறுபிறப்புப் பற்றிய கருத்து, என்பன மாயாக்களின் சமூகத்தில் முக்கியமான செல்வாக்குச் செலுத்தின. காலத்தின் சுழற்சி இயல்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தக் கருத்துரு சார்ந்த நோக்கே முதன்மையானதாக இருந்ததுடன், பல்வேறு சடங்குகளும் கூட முடிவதும் மீண்டும் நிகழ்வதுமான பல்வேறு சுழற்சிகள் தொடர்பானவையாகவே இருந்தன.

சோல்க்கின் தொகு

சோல்க்கின் (Tzolkin) என்பது மாயாக்களின் 260 நாட்களைக் கொண்ட காலக்கணக்கு ஆகும். யுக்காட்டெக் மாயா மொழியில் நாட்களின் எண்ணிக்கை எனப் பொருள் தரும் இச்சொல் 1992 ஆம் ஆண்டில் கோ (Coe) என்பவரால் உருவாக்கப்பட்டது. கொலம்பசுக்கு முற்பட்ட மாயாக்கள் இதனை எவ்வாறு பெயரிட்டு அழைத்தனர் என்பது குறித்துச் சர்ச்சை நிலவுகிறது.

சோல்க்கின், நாட்களுக்குரிய 20 பெயர்களையும், 13 எண்ணிக்கையான டிரெசீனா எனப்படும் சுழற்சிகளையும் சேர்த்து 260 தனித்துவமான நாட்களை உருவாக்குகிறது. இது சமய நிகழ்வுகளுக்கும், சடங்குகளுக்குமான நேரங்களைக் குறிப்பதற்குப் பயன்படுகின்றது. நாட்களை 1 இலிருந்து 13 வரை எண்ணி, அது முடிய மீண்டும் 1 இல் தொடங்கி எண்ணுவர். இதற்குப் புறம்பாக நாட்களுக்கான 20 பெயர்கள் உள்ளன. இதுவும் முதற் பெயரில் இருந்து தொடங்கி 20 முடிய மீண்டும் முதற் பெயரிலிருந்து தொடங்கும்.

சோல்க்கின் காலக்கணக்கு: நாட் பெயர்களும் அவற்றுக்கான குறியீடுகளும்
தொ.
எண். 1
நாட்
பெயர் 2
குறி
எ.கா 3
16வது நூ.
யுக்காட்டெக் 4
மீளுருவாக்கிய
செந்நெறி மாயா 5
தொ.
எண். 1
நாட்
பெயர் 2
குறி
எ.கா 3
16th C.
Yucatec 4
மீளுருவாக்கிய
செந்நெறி மாயா 5
01 இமிக்சு'   இமிக்ஸ் இமிக்ஸ் (?) / ஹா' (?) 11 சுவென்   சுவென் (தெரியாது)
02 இக்'   இக் Ik' 12 எப்'   எப் (தெரியாது)
03 அக்பால்   அக்பால் Ak'b'al (?) 13 பென்   பென் C'klab
04 கான்   கான் K'an (?) 14 இக்ஸ்   இக்ஸ் Hix (?)
05 சிக்ச்சான்   சிக்ச்சான் (தெரியாது) 15 மென்   மென் (தெரியாது)
06 கிமி   சிமி சம் (?) 16 கிப்'   சிப் (தெரியாது)
07 மனிக்'   மனிக் மனிச்' (?) 17 கபான்   கபான் சாப்' (?)
08 லாமத்   லாமத் எக்' (?) 18 Etz'nab'   Etznab (தெரியாது)
09 முலுக்   முலுக் (தெரியாது) 19 கவாக்   கவுவாக் (தெரியாது)
10 ஒக்   Oc (தெரியாது) 20 அஜாவ்   அகாவ் அஜாவ்
NOTES:

குறிப்புக்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயா_காலக்கணக்கு_முறை&oldid=3212482" இலிருந்து மீள்விக்கப்பட்டது