மாலத்தீவுகளின் கதீஜா

அல்-சுல்தானா கதீஜா சிறீ ராதா அபாரணா மகா ரெகெந்தி (திவெயி: އައްސުލްޠާނާ ޚަދީޖާ ސިރީ ރާދަ އަބާރަނަ މަހާރެހެންދި; இறப்பு 1380) அல்லது பரவலாக கதீஜா அரசி என்ற பொருள்படும் ரெகெந்தி கதீஜா (திவெயி: ރެހެންދި ޚަދީޖާ) மாலத்தீவுகளின் சுல்தானாவாக 1347 முதல் 1380 வரை இருந்தவர். இவர் முசுலிம் நாடொன்றில் ஆட்சியில் அமர்ந்த முதல் பெண்மணிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

மாலத்தீவுகளின் கதீஜா
பன்னிரண்டாயிரம் தீவுகளின் சீமாட்டி
மாலத்தீவுகளின் சுல்தானா
ஆட்சிக்காலம்1347-1380
முன்னையவர்அகமது சிகாபுதீன்
மொகமது எல்-ஜமீல் (1363-1364)
அப்துல்லா I (1374-1376)
பின்னையவர்ராதாஃபதி
இறப்பு1380
துணைவர்மொகமது எல்-ஜமீல் (1347-1364)
சுல்தான் அப்துல்லா I (1374-1376)
மரபுதீமுகெ வம்சம்
தந்தைமாலத்தீவின் ஓமர் I

கதீஜா மாலத்தீவுகளின் முதலாம் ஓமரின் மூத்த பெண் ஆவார். 1341இல் தந்தை சுல்தான் ஓமர் இறந்த போது அவரது மகன் அகமது சிகாபுதீன் அரசரானார். 1347இல் கதீஜா தனது தமையனைக் கொன்று மாலத்தீவுகளின் முதல் பெண் ஆட்சியாளராக அரியணை ஏறினார். தீமுகெ வம்சாவளியின் முதல் பெண் அரசியாகவும் விளங்கினார்.

மாலத்தீவு படைகளில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் படைவீரர்களாக இருந்தனர்; ஒரு சிலரே உள்நாட்டவர். ஒவ்வொரு நாளும் இவர்கள் தர்பார் மண்டபத்திற்கு வந்து அரசிக்கு வணக்கம் செலுத்துவது கட்டாயமாக இருந்தது.[1]

வாழ்க்கை வரலாறு தொகு

முதல் ஆட்சிக்காலம் தொகு

கதீஜா மாலைத்தீவுகளின் சுல்தான் முதலாம் ஓமரின் மூத்த மகளாவார். பின்னாளில் இவரை அடுத்து அரியணை ஏறிய ராதாஃபதி இவரது ஒன்றுவிட்ட உடன்பிறந்தாள் ஆவார். கதீஜா தனது உடன்பிறந்த தம்பி அகமது சிகாபுதீனைக் கொன்று 1347இல் முதன்முதலில் ஆட்சியைப் பிடித்தார். இந்த ஆட்சி 1363 வரை இருந்தது.

இப்னு பதூதா: "இந்தத் தீவுகளில் அரசியாக கதீஜா என்ற பெண் ஆள்வது ஓர் அதிசயம் ஆகும்.... மன்னராட்சியை இவரது பாட்டனார் நிறுவினார்; தொடர்ந்து தந்தை ஆட்சி செய்தார். தந்தை இறந்த பிறகு இவரது தம்பி சிகாபுதீன் பதவி ஏற்றார். மிக இளவயதினராக இருந்தமையால் வேசிர் 'அப்துல்லா சிகாபுதீனின் தாயை மணம்புரிந்து அதிகாரத்தைக் கைப்பற்றினார். இவரே பின்னர் தன் கணவனை இழந்த கதீஜாவையும் மணம் புரிந்தார்."[2] இப்னு பதூதா ஆட்சியைக் கைப்பற்ற நிகழ்ந்த சண்டையில் கதீஜாவின் தம்பி இறந்ததையும் கதீஜா ஆட்சியில் அமர்ந்ததையும் விவரித்துள்ளார்: "இந்த சண்டையில் ஆட்சி வம்சாவளியில் எஞ்சியவர்கள் மூன்று உடன்பிறந்த பெண்கள் மட்டுமே ... . மாலைத்தீவு மக்கள் கதீஜா அரியணை ஏறுவதையே ஆதரித்தனர், அவரது கணவர் சமாலுதீன் வேசிர் ஆனார். அவர் ஆரியணை ஏறினார் . . . ஆனால் அரசாணைகள் கதீஜா பெயரிலேயே இடப்பட்டன. இந்த ஆணைகள் பனையோலைகளில் கத்தி போன்ற வளைந்த இரும்பு கம்பியால் எழுதப்பட்டன. காகிதம் குரான் மற்றும் அறிவு நூல்கள் எழுத பயன்படுத்தப்பட்டது."[2][3]

மேலும் இப்னு பதூதா:

"சமயப் பொழிவாளர் (கதீப்) வெள்ளிக்கிழமை வழிபாடுகளின் போதும் பிற நேரங்களிலும் அரசிக்காக வேண்டுதல் செலுத்தினார். 'ஓ அல்லாவே!' 'அனைத்து உயிரினங்களிலிருந்தும் தங்கள் மேலான அறிவால் தாங்கள் தேர்ந்தெடுத்து அனைத்து முசுலிம்களுக்கும் உங்கள் கருணையை செலுத்தும் கருவியாக்கிய உங்கள் பெண் அடிமைக்கு உதவி புரிக."[2]

மாலத்தீவுகள் பெண்களும் அரசியும் மற்ற முசுலிம்கள் போல முகத்திரை அணிந்திருக்கவில்லை என்று இப்னு பதூதா கூறுகிறார்.[2][3]:234

இரண்டாம் ஆட்சிக்காலம் தொகு

1363இல் கதீஜாவின் கணவரும் முதலமைச்சருமான முகமது எல்-ஜமீல் ஆட்சியைக் கைப்பற்றினார். ஆனால் 1364இல் தனது முதல் கணவரைக் கொலை செய்து மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார். கதீஜாவின் இரண்டாம் ஆட்சிக் காலம் 1364 முதல் 1374 வரை நீடித்தது. 1374இல் அவரது இரண்டாம் கணவரும் அமைச்சருமான அப்துல்லா I ஆட்சியைக் கைப்பற்றினார்.

மூன்றாம் ஆட்சிக்காலம் தொகு

1376இல் தனதாட்சியைக் கவிழ்த்த மூன்றாண்டுகளில் இரண்டாம் கணவர் அப்துல்லாவையும் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினார். இந்த மூன்றாவது ஆட்சிக் காலம் 1376 முதல் 1380 வரை இருந்தது. தனது கணவர்களால் ஏமாற்றப்பட்டு இரண்டு முறை ஆட்சி இழந்தாலும் கதீஜா கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆண்டுள்ளார். இவரை அடுத்து இவரது கடைசித் தங்கை ராதாஃபதி ஆட்சி புரிந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. Batuta, Ibn. "Ibn Batuta in Maldives and Ceylon". Of the Queen of These Islands: 18. 
  2. 2.0 2.1 2.2 2.3 Mernissi, Fatima; Lakeland, Mary Jo (2003). The forgotten queens of Islam. Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-579868-5. 
  3. 3.0 3.1 Battutah, Ibn (2002). The Travels of Ibn Battutah. London: Picador. பக். 236–237. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780330418799. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலத்தீவுகளின்_கதீஜா&oldid=3288634" இலிருந்து மீள்விக்கப்பட்டது