மால்மெடி படுகொலை

மால்மெடி படுகொலை (Malmedy Massacre) இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு படுகொலைப் போர்க் குற்றம். இது பல்ஜ் சண்டையின் போது நடைபெற்றது. இச்சம்பவத்தில் நாசி ஜெர்மனியின் எஸ். எஸ் அமைப்பின் காம்ப்கிரெஃப்ஃபே பெய்பெர் என்ற படைப்பிரிவு டிசம்பர் 17, 1944 அன்று சரண்டைந்த 84 அமெரிக்கப் போர்க்கைதிகளை சுட்டுக் கொன்றது.

மால்மெடி படுகொலை
கொலைசெய்யப்பட்ட அமெரிக்க போர்க்கைதிகளின் உடல்கள் (ஜனவரி 14, 1945)
இடம்மால்மெடி, பெல்ஜியம்
நாள்டிசம்பர் 17, 1944
தாக்குதல்
வகை
படுகொலை; போர்க் குற்றம்
இறப்பு(கள்)84 அமெரிக்க போர்க்கைதிகள்
தாக்கியோர்நாசி ஜெர்மனி

டிசம்பர் 1944ல் மேற்குப் போர்முனையில் நேசநாட்டுப் படைகளை முறியடிக்க ஜெர்மனி பல்ஜ் தாக்குதலைத் தொடங்கியது. பல்ஜ் போர்முனையின் வடகளத்திற்கான பொறுப்பு ஜெனரல் செப்ப டயட்ரிக் தலைமையிலான 6வது பான்சர் ஆர்மியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதன் முக்கியப் படைப்பிரிவு யோக்கீம் பெய்ப்பரின் கீழான காம்ஃப்குருப்பே பெய்ப்பர் என்பதாகும். நேச நாட்டுப் படைநிலைகளை முறியடித்து முன்னேறும் போது எரிபொருள் கிடங்குகளைக் கைப்பற்ற வேண்டுமென்ற இலக்கும் பெய்ப்பரின் படைப்பிரிவுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 17ம் தேதி முன்னேறத் தொடங்கிய பெய்ப்பரின் படைப்பிரிவு, கைப்பற்றிய பியூலிங்கன் எரிபொருள் கிடங்குகளில் சிக்கிய அமெரிக்க வீரர்களை போர் விதிகளை மீறி சுட்டுக் கொன்றது. பெல்ஜியக் குடிமக்கள் பலரும் அவர்களால் காரணமின்றி படுகொலை செய்யப்பட்டனர். பெல்ஜியத்தின் மால்மெடி நகரருகே பாவ்கென்சு என்ற இடத்தில் அமெரிக்க ஊர்திக்குழாம் (convoy) ஒன்றை பெய்ப்பரின் படையினர் தோற்கடித்து 120 அமெரிக்கப் படைவீரர்களைக் கைது செய்தனர். அவர்களைப் பனிப்பொழிவால் நிறைந்திருந்த ஒரு திறந்த மைதானத்தில் நிற்கவைத்து எந்திரத் துப்பாக்கியால் சராமாரியாக சுட்டு வீழ்த்தினர். அமெரிக்கர்களுள் தப்பி ஓடியவர்களையும் விரட்டி சுட்டனர். பின்னர் குண்டடி பட்டும் உயிருடன் இருந்தவர்களைத் தேடி அவர்களைக் கொன்றனர். கைது செய்யப்பட்ட சுமார் 120 அமெரிக்க வீரர்களில் 43 பேர் மட்டும் தப்பி ஓடிவிட்டனர். பெய்ப்பரின் படைப்பிரிவு மீண்டும் முன்னேறத் தொடங்கியது. இது போல மேலும் பல இடங்களில் போர்க்கைதிகளைச் சுட்டுக் கொன்றது. பல்ஜ் சண்டை ஓய்வதற்குள் மேலும் நூற்றுக்கணக்கில் போர்க்கைதிகளை இப்படைப்பிரிவினர் கொன்றனர் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படுகொலையின் செய்தி அமெரிக்கப்படையினரிடையே பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பதிலுக்கு பல அமெரிக்கப் படைப்பிரிவுகளும் ஜெர்மானிய எஸ். எஸ் மற்றும் வான்குடை வீரர்களை உயிருடன் பிடிக்காமல் கண்ட இடத்தில் (சரணடைந்தாலும் கூட) சுடத் தொடங்கினர். நேச நாட்டுத் தளபதிகள் நேரடியாகத் தலையிட்டு இதனைத் தடுக்க வேண்டியதாயிற்று. ஜனவரி 1945 மத்தியில் ஜெர்மானியத் தாக்குதல் முறியடிக்கப்பட்டு நேசநாட்டுப் படைகள் பாவ்கென்சு மைதானத்தை மீண்டும் கைப்பற்றின. அதிலிருந்து உறைந்த நிலையில் 84 அமெரிக்க வீரரகளின் உடல்கள் மீட்கப்பட்டன.

இரண்டாம் உலகப்போர் முடிந்தபின் டயட்ரிக், பெய்ப்பர் உட்பட 70 ஜெர்மானிய வீரர்கள் மால்மெடிப் படுகொலைக்காகக் கைது செய்யப்பட்டனர். பெய்ப்பர் உட்பட 43 பேருக்கு மரணதண்டனையும் 22 பேருக்கு ஆயுள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டன. ஆனால் விடுதலை அடைந்த மேற்கு ஜெர்மனியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட அனைவருக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டது. அனைவருக்கும் தண்டனைக் காலமும் குறைக்கப்பட்டது. சில ஆண்டுகளில் பெரும்பாலானோர் விடுதலை செய்யப்பட்டனர். 1956ல் பெய்ப்பரும் விடுதலையானார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்மெடி_படுகொலை&oldid=2917237" இலிருந்து மீள்விக்கப்பட்டது