மூவேளை செபம்

மூவேளை செபம் (Angelus Prayer) என்பது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் இறைவேண்டல் முறைகளில் ஒன்றாகும். கடவுள் மனிதரானதை மையப்படுத்தி, மீட்பு வரலாற்றில் இயேசு கிறிஸ்து மற்றும் அன்னை மரியாவின் பங்களிப்பை நினைவுபடுத்தும் செபமாக இது அமைந்துள்ளது. காலை, நண்பகல், மாலை ஆகிய மூன்று வேளைகளில் செபிக்கப்படுவதால், இது மூவேளை செபம் என்று அழைக்கப்படுகிறது.

ஜான் பிரான்க்கோயிசின் மூவேளை செபம் ஓவியம்.

செபத்தின் வரலாறு தொகு

கி.பி.14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அன்னை மரியாவுக்கு வணக்கமாக மூவேளை செபம் செபிக்கும் பழக்கம் மக்களிடையே தோன்றியது. காலை, நண்பகல், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் இந்த செபத்தை செபிப்பதற்கு நினைவூட்ட ஆலய மணிகளின் ஓசையை எழுப்பும் முறையும் வழக்கத்துக்கு வந்தது. முதலில், ஆலய மணி ஓசையைக் கேட்டதும் மூன்று முறை மங்கள வார்த்தை செபத்தை செபிக்கும் பழக்கம் மட்டுமே இருந்தது.

திருத்தந்தை 22ம் ஜான் (1316-1334), மூவேளை செபத்தை தவறாமல் செபிக்குமாறு கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் 1318 மற்றும் 1327ஆம் ஆண்டுகளில், மூவேளை செபம் செபிப்போருக்கு திருத்தந்தை 22ம் ஜான் சில ஆன்மீக பலன்களை அறிவித்தார். பிற்காலத்தில் சில மாற்றங்களைக் கண்ட இந்த செபமுறை, 17ஆம் நூற்றாண்டில் தற்போதைய நிலையை அடைந்ததாக நம்பப்படுகிறது.

பொதுவான மூவேளை செபம் தொகு

கிறிஸ்தவ திருவழிபாட்டு ஆண்டில், பாஸ்கா காலம் தவிர மற்ற காலங்களில் பின்வரும் மூவேளை செபம்[1] செபிக்கப்படுகிறது.

ஆண்டவருடைய தூதர் மரியாவுக்குத் தூதுரைத்தார்.
மரியா தூய ஆவியாரால் கருவுற்றார். (1 மங்கள வார்த்தை செபம்)
இதோ ஆண்டவரின் அடிமை.
உமது சொற்படியே எனக்கு நிகழட்டும். (1 மங்கள வார்த்தை செபம்)
வாக்கு மனிதர் ஆனார்.
நம்மிடையே குடிகொண்டார். (1 மங்கள வார்த்தை செபம்)
கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி /
இறைவனின் தூய அன்னையே / எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மன்றாடுவோமாக: இறைவா! / உம் திருமகன் மனிதர் ஆனதை / உம்முடைய வானதூதர் வழியாக / நாங்கள் அறிந்திருக்கிறோம். / அவருடைய பாடுகளினாலும் இறப்பினாலும் / நாங்கள் உயிர்ப்பின் மாட்சி பெற / உமது அருளைப் பொழிவீராக./ எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக / உம்மை மன்றாடுகிறோம்./ ஆமென்.

பாஸ்கா கால மூவேளை செபம் தொகு

கிறிஸ்தவர்கள், இயேசுவின் உயிர்ப்பையும் விண்ணேற்றத்தையும் கொண்டாடும் பாஸ்கா காலத்தில் பின்வரும் மூவேளை செபம்[2] செபிக்கப்படுகிறது.

விண்ணக அரசியே! மனம் களிகூரும். அல்லேலூயா.
ஏனெனில் இறைவனைக் கருத்தாங்கும் பேறு பெற்றீர். அல்லேலூயா.
தாம் சொன்னபடியே அவர் உயிர்த்தெழுந்தார். அல்லேலூயா.
எங்களுக்காக இறைவனை மன்றாடும். அல்லேலூயா.
கன்னி மரியே! அகமகிழ்ந்து பூரிப்பு அடைவீர். அல்லேலூயா.
ஏனெனில் ஆண்டவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்தார். அல்லேலூயா.

மன்றாடுவோமாக: இறைவா / உம்முடைய திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலால் / உலகம் மகிழத் திருவுளம் கொண்டீரே! / அவருடைய அன்னையாகிய கன்னி மரியாவின் பரிந்துரையால் / நாங்கள் நிலை வாழ்வின் பெரு மகிழ்வில் பங்கு பெற / அருள் புரியும். / எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக / உம்மை மன்றாடுகிறோம். / ஆமென்.

ஆதாரங்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூவேளை_செபம்&oldid=1472925" இலிருந்து மீள்விக்கப்பட்டது