மைய இடக் கோட்பாடு

மைய இடக் கோட்பாடு (Central Place Theory) என்பது குடியிருப்புக்களினது (settlement) அளவு, அவற்றுக்கிடையேயுள்ள தூரம், பரம்பல் அவற்றின் படிநிலையமைப்பு என்பவை தொடர்பான கோட்பாடு ஆகும். இக் கோட்பாட்டை ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த புவியியலாளரான வால்டர் கிறிஸ்டலர் (Walter Christaller) என்பவர் அறிமுகப் படுத்தினார். இதனைப் பின்னர் அதே நாட்டைச் சேர்ந்த ஆகஸ்ட் லொஸ்ச் (August Losch) என்னும் பொருளியலாளர் மேலும் வளப்படுத்தினார். இவ்விருவரும் இக் கோட்பாட்டைத் தனித்தனியாக உருவாக்கியதாகவும் சிலர் கூறுகிறார்கள்.

மைய இடக் கோட்பாட்டை விளங்கிக் கொள்வதில் பின்வரும் கருத்துருக்கள் முக்கியமானவை ஆகும்.

மாறுநிலை என்னும் கருத்துருவை விளக்கும் வரைபடம்
  1. மாறுநிலை (Threshold)
  2. மையச் செயற்பாடு (Central Function)
  3. பொருட்களின் வீச்சு (Range of Goods)
  4. பொருட்களின் ஒழுங்கு (Order of Goods)
  5. மைய இடங்களின் ஒழுங்கு (Order of Central Place)

மாறுநிலை: ஒரு விற்பனை நிலையம் அல்லது ஒரு சேவையை வழங்கும் நிலையம் அவற்றினுடைய செயற்பாடுக்குரிய செலவுகளையும், கூலி முதலிய செலவுகளையும் ஈடு செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு விற்பனை இருத்தல் வேண்டும். இவ்வாறான மிகக் குறைந்த விற்பனை அளவே அவ்வுற்பத்திப் பொருள் அல்லது சேவைக்குரிய மாறுநிலை எனப்படும். இன்னொரு வகையில் இதனை, ஒரு குறிப்பிட்ட மையச் செயற்பாடொன்றை ஆதரிப்பதற்குத் (Support) தேவையான கேள்வி நிலை (Level of Demand) என்றும் கூறலாம்.

மையச் செயற்பாடு: மைய இடம் ஒன்றில், ஓர் உற்பத்திப் பொருள் அல்லது சேவையை விற்பனை செய்தல் மையச் செயற்பாடு ஆகும்.

வீச்சு என்னும் கருத்துருவை விளக்கும் வரைபடம்

பொருட்களின் வீச்சு: ஒரு பொருளை விற்பனை செய்யும் ஒரு கடையிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு தூரத்திலிருக்கும் ஒருவருக்கு, அப்பொருளின் விலை, கடையில் அப்பொருளுக்கு அவர் செலுத்தும் பணத்தின் அளவுடன் போக்குவரத்துச் செலவையும் கூட்டிய தொகைக்குச் சமம் ஆதலால், கடையின் தூரம் அதிகரிக்கும் போது அவருக்கு அப்பொருளின் விலையும் அதிகரித்துச் செல்லும். விலை அதிகரிக்கும் போது கேள்வி (Demand) குறையும் என்பது பொருளியல் விதி. கடையிலிருந்து ஓரிடத்தின் தூரம் அதிகரித்துச் செல்லும்போது அவ்விடத்தில், அக் கடையிலிருக்கும் குறிப்பிட்ட பொருளுக்கான கேள்வியும் குறைவடையும். ஓரளவு தூரத்தில் அந்தக் கடையிலுள்ள குறிப்பிட்ட பொருளுக்கான கேள்வி எதுவுமே இல்லாத நிலை ஏற்படும். இந்தத் தூரமே அப்பொருளுக்கான வீச்சு எனப்படும். வெவ்வேறு வகையான பொருட்களுக்கு வீச்சு மாறுபடும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைய_இடக்_கோட்பாடு&oldid=2204486" இலிருந்து மீள்விக்கப்பட்டது