வண்ணப்புறக் கந்தரத்தனார்

வண்ணப்புறக் கந்தரத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் கொகுப்பில் அவரது பாடல்கள் இரண்டு உள்ளன. அவை: அகநானூறு 49, நற்றிணை 71. இவை இரண்டு பாடல்களுமே பாலைத்திணை மேலவை.

புலவர் பெயர் விளக்கம் தொகு

வண்ணப்புறம் என்பது இவர் வாழ்ந்த ஊர். புலவர் பெயர் கந்தரத்தனார். கந்தர்+அத்தனார் என்றும், கந்து அரத்தனார் என்றும் பிரிக்கும் வகையில் இவரது பெயர் அமைந்துள்ளது.

கந்தர் அத்தனார் தொகு

அத்தம் என்றால் வழி. அத்தனார் = வழிநிற்பவர். கந்தர் வழியில் நிற்பவர். கந்து = வழித்துணை. (காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் - திருக்குள். இதில் கந்து என்னும் சொல் பற்றுக்கோடு என்னும் பொருளில் கையாளப்பட்டுள்ளதை எண்ணிக்கொளவோம்) இந்த வகையில் வழித்துணைவர் என்னும் பொருளை இப்பெயர் தரும்.

கந்து அரத்தனார் தொகு

கந்து என்பது தூண். (கந்திற்பாவை) அரத்தம் என்பது செந்நிறக் குருதி. (அரக்கு = செந்நிறப் பசை). தூணில் குருதி.

அகம் 49 செய்தி தொகு

தலைவனுடன் தலைவி சென்றுவிட்டாள். அவளை நினைந்து செவிலித்தாய் கலங்குகிறாள்.

என் மகள் என் வீட்டில் இருக்கும்போது கிளியோடு பேசி மகிழ்வாள். பந்தும், கழங்கும் கொண்டு விளையாடி மகிழ்வாள். செல்லுமிடமெல்லாம் நிழல் தொடர்வது போலத் தோழியர் ஆயம் பின்தொடரக் காற்சிலம்பு ஒலிப்ப ஓடி ஓரை விளையாடுவாள். அவள் விளையாடும் இடங்களிலெல்லாம் நான் இருந்தேன்.

இப்போது அவள் முன்னாளில் இருந்தது போல இல்லை. அவளது அளி, அன்பு, சாயல், இயல்பு ஆகியன மாறிவிட்டன.

ஒருநாள் அவள் நெற்றியைத் தடவிக் கொடுத்தேன். வயின் மரத்தில் கட்டப்பட்டிருக்கும் கன்றுக்குட்டியை அதன் தாய்ப்பசு நாவால் தடவிக்கொடுப்பது போல் தடவிக் கொடுத்தேன். அவளை ஆரத் தழுவினேன். அவள் தன் முலைகளுக்கு இடையில் வியர்க்கும்படி என்னைப் பலமுறை திரும்பத் திரும்பத் தழுவிக்கொண்டாள். அதற்குக் காரணம் அன்று எனக்குப் புரியவில்லை. இன்று புரிந்துவிட்டது.

வறட்சிக் காலத்தில் நிழல் இல்லாத மர நிழலில் படுத்திருக்கும் பெண்மான் மரல் என்னும் கானல் நீரைச் சுவைத்து மகிழ்வது போல அவள் என்னை அப்போது தழுவி மகிழ்ந்திருக்கிறாள்.

நற்றிணை 71 செய்தி தொகு

தலைவன் பொருள் ஈட்டச் செல்ல இருக்கிறான். இதனைத் தலைவியிடம் சொல்லி ஒப்புதல் பெற்றுத் தருமாறு தோழியிடம் பலமுறை தலைவன் மன்றாடுகிறான். தலைவியைத் தடவிக்கொடுத்து அவளிடம் பலமுறை கெஞ்சினால் ஒருவேளை அவள் ஒப்புதல் தரக்கூடும். தன்னிடம் கெஞ்சுவதால் பயனில்லை என்று தோழி கூறிவிடுகிறாள். மேலும் சொல்கிறாள். ஒருவேளை அவள் ஒப்புதல் தந்து பிரிந்து சென்றுவிட்டால், வீட்டில் வளரும் இணைபுறாக்களில் பெண்புறாவை அதன் செங்கால்சேவல் ஆண்புறா தன்னுடன் இருக்கும்படி அழைப்பதைக் கேட்கும்போது அவள் எப்படித் துடிப்பாள் என்பதை எண்ணிப் பார்த்தாயா என்கிறாள். (தலைவன் தோழி கூறியதை எண்ணிப் பார்த்துத் தன் செலவைக் கைவிட்டுவிட்டானாம்)