வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/25

இமயமலை என்பது இந்திய துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். இது ஆசியாவில் அமைந்துள்ளது. இந்நில உலகிலேயே ஒப்பற்ற மிகப்பெரிய, மிகவுயர்ந்த, மாபெரும் மலைத்தொடர் இந்த இமயமலைத் தொடர்தான். இமயமலைத்தொடர் உலகின் சில மிக உயர்ந்த சிகரங்களின் இருப்பிடமாகும். இதில் எவரெஸ்ட் சிகரமும் ஒன்றாகும். எப்பொழுதும் உறைபனி மூடி இருக்கும். இந்திய துணைக்கண்டத்தின் வட எல்லையாக அமைந்துள்ளது. இது மேற்கே காஷ்மீர்-சிங்காங் பகுதி முதல் கிழக்கே திபெத்-அருணாசல பிரதேசம் பகுதி வரை நீண்டு இருக்கிறது. இமயமலைத்தொடரில் நூற்றுக்கு மேற்பட்ட சிகரங்கள் உள்ளன. இதில் சிலவற்றின் உயரம் 7200 மீட்டருக்கு மேலாகும். இதற்கு மாறாக, ஆசியாவுக்கு வெளிய உள்ள மிகப்பெரிய சிகரம் அக்கோன்காகுவா அன்டேஸ் மலைத்தொடரில் உள்ளது. இதன் உயரம் 6961 மீட்டராகும். இமயமலை மூன்று இணையான உப தொடர்களை கொண்டது. இது ஐந்து நாடுகளில் பரவியுள்ளது. அவை பூடான் இந்தியா,நேபாளம்,சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகும். இதில் முதல் மூன்று நாடுகளில் அதிகமான மலைத்தொடர் பரவியுள்ளது. இமயமலை வடக்கே திபத்திய பீடபூமியையும், வடமேற்கே காரகோரம் மற்றும் இந்துக்குஷ் மலைத்தொடரையும் மற்றும் தெற்கே சிந்து-கங்கை சமவெளியையும் எல்லையாக கொண்டுள்ளது. உலகின் சில பெரிய நதிகளான சிந்து, கங்கை, மற்றும் பிரமபுத்திரா உற்பத்தியாகிறது. இந்நதிகளின் மொத்த வடிகால் 60 கோடி மக்களின் இருப்பிடமாகும். இமயமலை தெற்காசிய மக்களின் கலாச்சாரத்தை வடிவமைத்துள்ளது. இமயமலையில் உள்ள பல சிகரங்கள் இந்து மற்றும் புத்த மதங்களில் புனிதமாக கருதப்படுகிறது.