வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/6

மாலைத்தீவுகள் அல்லது மாலைத்தீவுகள் குடியரசு இந்தியப் பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளாலான தீவு நாடாகும். இது இந்தியாவின் இலட்சத்தீவுகளுக்கு தெற்கேயும் இலங்கையிலிருந்து சுமார் 700 கிமீ தென்மேற்காகவும் அமைந்துள்ளது. 90,000 ச.கி.மீ பரப்பளவுள்ள இத்தீவின் மக்கள் தொகை 3 இலட்சத்து 13 ஆயிரத்து 920 ஆகும். மொத்தம் 26 பவளத்தீவுகளில் 1,192 தீவுகள் காணப்படுவதோடு இவற்றில் சுமார் 200 இல் மட்டும் மனித குடியேற்றங்கள் காணப்படுகிறன. தீவுகளால் அமைந்த மாலை போல் காணப்படுவதால் தமிழில் மாலைத்தீவுகள் என்றும் சமஸ்கிருத மொழியில் "மாலத்வீப"(தீவுகளின் மாலை)என்றும் குறிப்பிடப்படுகிறது. வேறு சிலரின் கருத்துப்படி இது "மகால்" என்ற அரபு மொழிச் சொல்லின் மரூஉ ஆகும். சோழர்கள் காலம் வரை அவர்களது ஆட்சியில் இருந்த இந்தத் தீவுகள் பின்னர் சிங்களர்கள் ஆட்சிக்குட்பட்டது. 1153இல் இசுலாம் மதம் இங்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் மாலைத்தீவுகள் 1558 இல் போர்த்துக்கேயரிடமும், 1654 டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியிடமும் பின்பு 1887 முதல் பிரித்தானியரிடமும் அடிமைப்பட்டது. 1965ஆம் ஆண்டு மாலைத்தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. 1968 இல் சுல்தான் ஆட்சியில் இருந்து குடியரசாக மாறியது.