வலைவாசல்:வைணவம்/வைணவ அடியார்/9

ஆளவந்தார் நாதமுனிகளின் பேரன்; ஈசுவரமுனியின் மகன். இளமையில் 'யமுனைத்துறைவன்' எனப் பெயர் சூட்டப்பட்டவர். ஆளவந்தார் இராமானுசரின் குரு. தென்மொழி வேதமாகிய திவ்வியப் பிரபந்தத்தின் மேன்மையைப் பரப்பியவர் இந்த இராமானுசர். இப்பணியால் 'இளையாழ்வார்' எனப் போற்றப்பட்டவர் இராமானுசர். மணக்கால் நம்பிக்குப் பிறகு ஆசாரிய பட்டம் பெற்றவர் ஆளவந்தார். நாதமுனிகள், தன் மகன் ஈசுரமுனிக்குப் பிறக்கும் குழந்தைக்கு யமுனைத்துறைவன் எனப் பெயர் சூட்டி, வைணவத் திருமறையெழுத்துக் காப்புப் புகட்டுமாறு தன் மாணாக்கர் உய்யக்கொண்டாரை வேண்டிக்கொண்டு நாதமுனிகள் திருநாடு சென்றார். அந்தப் பணியை உய்யக்கொண்டார், தன் மாணாக்கர் மணக்கால் நம்பியிடம் ஒப்படைத்துவிட்டுக் காலமானார்.

மணக்கால் நம்பி ஈசுவரமுனியின் மகனுக்கு முறைப்படி யமுனைத்துறைவன் எனப் பெயர்சூட்டி வாழ்த்தினார். யமுனைத்துறைவன் செல்வச் செழிப்புடன் வாழ்ந்துவந்தார். இந்த யமுனைத்துறைவன் தூதுவளைக் கீரையை விரும்பி உண்ணும் பழக்கம் உள்ளவர். ஆறுமாத காலம் மணக்கால் நம்பி தூதுவளைக் கீரையை யமுனைத்துறைவன் மடப்பள்ளிக்கு வழங்கிவிட்டு நிறுத்திக்கொண்டார். யமுனைத்துறைவன் நம்பியை அழைத்து, கீரை தரப் பொருள் வேண்டுமா என வினவினார். நம்பி தாம் கொள்ள வரவில்லை என்றும், கொடுக்க வந்துள்ளதாகவும் கூறினார். யமுனைத்துறைவன் தருமாறு வேண்ட நம்பி அவருக்குக் கீதை, திருவெழுத்து முதலானவற்றைப் புகட்டினார். பெற்றவர் ஆளவந்தார் ஆனார்.