வானதி (கதைமாந்தர்)

வானதி கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற கொடும்பாளூர் இளவரசி ஆவார். அருண்மொழி வர்மன் மீதான காதலைச் சொரிபவளாகவும், இளைய பிராட்டி குந்தவை நாச்சியாரின் நற்றோழியாகவும் வருகிறார். கொடும்பாளூர் சிற்றரசரும் சோழநாட்டு சேனாதிபதியுமான பூதிவிக்கிரம கேசரியின் சகோதரரின் மகள் வானதி தேவியார். பிற்காலத்தில் வானதி தேவியார் இராசராச சோழன் மனைவியும், இராசேந்திர சோழன் தாயும் ஆவார்.

வானதி
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர்
குந்தவையும் வானதியும் (நடுவில்) குடந்தை சோதிடருடன்
முதல் தோற்றம் பொன்னியின் செல்வன்
உருவாக்கியவர் கல்கி
வரைந்தவர்(கள்) மணியம், வினு, மணியம் செல்வன்
தகவல்
பிற பெயர்கொடும்பாளூர் இளவரசி, வானமா தேவியார்
குடும்பம் கொடும்பாளூர் பெரிய வேளார் கொடும்பாளூர் சிறிய வேளார்
துணைவர்(கள்)அருள்மொழிவர்மன்
பிள்ளைகள்இராசேந்திரன்
உறவினர் ஆதித்த கரிகாலன்
மதம்சைவம்
தேசிய இனம்சோழ நாடு
தோழர்/தோழிகள் இளைய பிராட்டி குந்தவை, பூங்குழலி

கதாபாத்திரத்தின் இயல்பு தொகு

கொடும்பாளூர் இளவரசியாக இருந்தாலும் வானதி அடிக்கடி மயங்கி விழுகின்ற கோழைப் பெண்ணாகவே அறிமுகம் செய்கிறார் ஆசிரியர் கல்கி. வானதிக்கு வீரமூட்டுவதற்காக இறந்து போன முதலையை வைத்து விளையாட்டு செய்கிறாள், வானதியின் தோழி குந்தவை. அது இறந்த முதலை என்பதை அறிந்து கொண்டு சற்றும் பயம்கொள்ளாமல் இருக்கிறாள் வானதி. ஈழத்திற்கு செல்லவிருக்கும் இளவரசரின் முகத்தினை நேருக்கு நேராகப் பார்த்து மயக்கமிட்டு விழுகிறாள். அருண்மொழி வர்மனின் அக்காவான குந்தவைக்கு வானதியை அருண்மொழிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசையிருக்கிறது. சோழ நாட்டின் சேனாதிபதி கொடும்பாளூர் பெரிய வேளாருக்கும் (வேளிர்) அதே ஆசை இருக்கிறது. அவர்கள் இருவரும் அவ்வப்போது இதுபற்றி இளவரசரிடம் உரையாடுகிறார்கள்.

சுந்தர சோழர் தனிமையில் பிதற்றுவதை கேட்டு, மன்னரை யாரோ பயம்செய்விக்கின்றார்கள் என்பதை வானதி அறிகிறாள். அந்த விபரீதத்தினை கண்டு வழக்கம் போல மயக்கமிட்டும் கீழே விழுகிறாள். மறுநாள் தான் கண்டவைகளை குந்தவையிடம் உரைக்கின்றாள். இளவரசர் அருண்மொழி வர்மன் கடலில் புயற்காற்றில் சிக்கிக் கொண்டான். அவனைப் பற்றி செய்தி எதுவும் கிடைக்காததால் அவன் இறந்துவிட்டான் என்று தஞ்சையிலிருந்து தூதர்கள் வந்து கூறுகிறார்கள். பழையாறை மக்கள் வெகுண்டெழுந்து பழையாறை மாளிகையில் கூக்குரல் எழுப்புகிறார்கள். இதனை அறிந்த வானதி மயக்கமிட்டு விழுகிறாள். அவளை குந்தவையும், வந்தியத்தேவனும் மீட்கின்றார்கள். வானதி நினைவிழந்து இருக்கிறாள் என்று நினைத்து வந்தியத்தேவன் பூங்குழலி இளவரசர் அருள்மொழிவர்மனை விரும்புவதை கூறுகிறான். இதனை வானதி அறிந்து பூங்குழலி மேல் வெறுப்பு கொள்கிறாள்.

கொடும்பாளூர் சென்று பெரிய வேளாரை சந்திக்க எண்ணம் கொள்கிறாள். அதற்காக குந்தவையை பிரிந்து தனித்து செல்கிறாள். செல்லும் வழியில் குடந்தை சோதிடரின் வீட்டில் வந்தியத்தேவனை சந்திக்கிறாள். இளவரசர் அருள்மொழிவர்மன் நாகைப்பட்டினத்தில் இருப்பதை அறிந்து கொள்கிறாள். வந்தியத்தேவனை நாகைப்பட்டினத்திற்கு தன்னை அழைத்து செல்லும்படி கேட்கிறாள். ஆனால் வந்தியத்தேவன் மறுத்துவிடுகிறான். குடந்தை சோதிடரின் வீட்டிலிருந்து சென்ற வானதியை சில காளமுக சைவர்கள் பிடித்துக் கொண்டு போய் பாழைடைந்த கோவிலில் வைத்து இளவரசரைப் பற்றிய விவரங்களை கேட்டார்கள். அதை கூற மறுத்துவிட்ட வானதிக்கு அவள் இருக்கும் இடத்தினை நோக்கி அநிருத்தர் வருவதை கண்டாள், ஆனால் இவ்வாறு விசாரனை செய்ய சொன்னதே அநிருத்தர்தானென அறிந்து விய்ப்புருகிறாள். அநிருத்தர் கேட்டும் இளவரசரைப் பற்றி ஒன்றும் கூறாததால், யானையை விட்டு தூக்கி எறிய சொல்கிறார். யானையும் வானதியை துதிக்கையால் சுற்றி வளைத்து தூக்குகையில், வானத்தில் மிதந்த தேவி நினைவிழந்தாள்.

வானதியின் நினைவுதிரும்புகையில் குந்தவை தேவின் மடியில் தலைவைத்து உறங்குவதையும், இருவரும் யானை மீதேறி எங்கோ செல்வதையும் உணர்ந்தாள். தன்னுடைய எண்ணப்படி இளவரசரை காணவே குந்தவை தேவி அழைத்து செல்கிறாள் என்பதை அறியாமலேயே சென்றாள். இருவரும் நந்தி மண்டபத்தில் தங்கினார்கள். பூங்குழலியும், சேந்தன் அமுதனும் இளவரசரை நந்தி மண்பத்திற்கு அழைத்துவந்தார்கள். இளவரசரை பார்த்த வானதி வெட்கம் கொண்டாள். குந்தவையும், இளவரசரும் பேசுவதை பார்த்துக் கொண்டே இருந்தாள். குந்தவை வானதியை அழைத்து இளவரசருடன் பேசும்படி கூறினாள். அத்துடன் வானதியின் வீரத்தினையும் எடுத்துக் கூறினாள்.

குடந்தை சோதிடர் திடர் வீட்டில் வானதியும், குந்தவையும் இருக்கும் போது, பெரிய பழுவேட்டரையர் உள்ளே நுழைந்து ஒரே நாளில் ஆதித்த கரிகாலன் உயிருக்கும், அருள்மொழி உயிருக்கும், சுந்தர சோழர் உயிருக்கும் ஆபத்து நேரவிருப்பதாக கூறி சென்றார். காவிரி ஆற்றுநீரால் குடந்தை சோதிடர் வீடு அடித்து செல்லப்பட்டது. அதனை பற்றியிருந்த வானதியும் ஆற்றோடு சென்றாள். மற்றவர்கள் அருகிலிருந்த மண்டபத்தில் இருந்தார்கள். அவளை காப்பாற்ற பூங்குழலி சென்றாள். பூங்குழலிக்கு மிக அருகில் முதலையொன்று இருப்பதை அறிந்து வேற்றுமை பாராமல் வானதி பூங்குழலியை காப்பாற்ற முயற்சி செய்தாள். அந்நேரத்தில் அங்கு வந்த இளவரசர் அருள்மொழிவர்மன் இருவரையும் யானையின் உதவியால் காப்பாற்றினார். தஞ்சை கோட்டை கொடும்பாளூர் வேளார் கைப்பற்ற இருப்பதை அறிந்து வானதி, பூங்குழலியுடன் தஞ்சைக்கு சென்றார்.

நூல்கள் தொகு

வானதியைக் கதாபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வானதி_(கதைமாந்தர்)&oldid=3596651" இலிருந்து மீள்விக்கப்பட்டது