விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 15, 2012

வேளாண்மை என்பது உணவு, பிற பயன்பாடுகளுக்காக சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும் கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான். வீட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் உற்பத்தியைக் கொண்டு நாகரிகங்களுக்கு வழிவகுத்திட்ட சிறப்பான மானிடவியல் வளர்ச்சி வேளாண்மையாகும். பயிரிடக்கூடிய நிலத்தில் பயிர்களை சாகுபடி செய்தல் மற்றும் கால்நடைகளை வளர்த்தல், மேய்ச்சல் நிலம் அல்லது தரிசு நிலத்தில் கால்நடைகளை மேய்த்தல் ஆகியவை விவசாயத்தின் அடித்தளமாக விளங்குகின்றன. மேலும்...


பெண்கள் வாக்குரிமை என்பது தேர்தல்களில் பெண்கள் வாக்கு அளிக்கவும், பொதுப்பணிப் பதவிகளில் பங்கேற்க வாக்கெடுப்புகள் வழியாக பெண்கள் தேர்ந்தெடுக்கப்படவும் கொண்டுள்ள உரிமையைக் குறிக்கிறது. பெண்கள் வாக்குரிமையைப் பரவலாக்குவதற்காக எழுந்த பொருளாதார மற்றும் அரசியல் இயக்கங்களும் இதில் அடங்கும். சொத்து இருக்கவேண்டும், வரி செலுத்த வேண்டும், திருமணம் ஆகியிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு உட்படாமலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்னும் கருத்தும் இதில் அடங்கும். நவீன காலத்தில், பெண்கள் வாக்குரிமை இயக்கம் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்சு நாட்டில் தொடங்கியது. அந்நாட்டின் முழுமையிலும், கனடாவின் பிரெஞ்சு மொழி புழங்கிய கியூபெக் மாநிலத்திலும் பெண்களுக்கான முழு உரிமை கிடைக்க மேலும் காலம் பிடித்தது. 1860களில் சில பெண்கள் சுவீடன், பிரித்தானியா, மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் சில மேற்கு மாநிலங்களில் வாக்களிக்க உரிமை பெற்றனர். மேலும்...