விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சனவரி 29, 2012

பாபர் மசூதி இடிப்பு என்பது 1992, டிசம்பர் 6 அன்று அயோத்தியின் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதியைக் கைப்பற்றும் பொருட்டு இந்துக் கரசேவகர்கள் அதனை அழித்ததைக் குறிக்கும். இந்த அழிப்பு பல மாதங்களாக நடந்த இந்து முஸ்லிம் மதக்கலவரங்களுக்குக் காரணமாக அமைந்தது. இந்தக் கலவரங்களால் மொத்தம் 2,000 பேர் உயிரிழந்தனர். ‎அயோத்தி நகரம் இராமர் பிறந்த இடமென்றும் இந்தியாவின் புனிததன்மை வாய்ந்த இடங்களுள் ஒன்றாகவும் இந்துக்களால் கருதப்படுகிறது. 1528இல் முகலாயர் படையெடுப்பிற்குப் பின் முகலாய படைத்தலைவர் மிர் பாங்கியினால் முகலாயப் பேரரசர் பாபரின் பெயரால் ஒரு மசூதி கட்டப்பட்டது. அங்கிருந்த இராமர் கோயிலை இடித்த பின்னரே மீர் பாங்கி மசூதியைக் கட்டினார் என்று இந்துக்களில் ஒரு சாரர் நம்புகின்றனர். பல ஆண்டுகளாக இவ்விடம் இந்துக்களாலும் இசுலாமியர்களாலும் மத வழிபாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு, பல இயக்கங்கள் அவ்விடத்தைச் சொந்தம் கொண்டாடி வழக்குகள் தொடர்ந்தன. பாரதிய ஜனதா கட்சி 1989 தேர்தலின் போது அயோத்திச் சிக்கலை தேர்தல் களத்தில் பரப்புரைக்காகப் பயன்படுத்தியது. செப்டம்பர் 1990இல் பாஜக தலைவர் எல். கே. அத்வானி அயோத்திச் சிக்கலை நாடெங்கும் எடுத்துச் செல்லும்பொருட்டு ஓர் இரதப் பயணத்தைத் தொடங்கினார். மேலும்...


சி. கணேசையர் (1878-1958) யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களில் ஒருவர். வித்துவசிரோன்மணி என்ற பட்டம் பெற்றவர். குமாரசுவாமிப் புலவரின் மாணவர். ஆராய்ச்சிகளும் விமரிசனங்களும் எழுதியவர். ஈழத்தின் இரண்டு நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சியில் இவர் இமயம்போல் போற்றப்படுகிறார். இவர் இயற்றிய தொல்காப்பிய உரை விளக்கக் குறிப்புகள் இவரை புகழின் சிகரத்திற்கு கொண்டு சென்றது. தொல்காப்பிய உரைகளின் ஏட்டுப் பிரதிகளைத் தேடி எடுத்து அவற்றை ஒப்புநோக்கி பல ஆண்டுகாலமாகக் குறிப்புகள் எழுதி வந்தார். தான்கண்ட பிழைகளின் திருத்தங்களை அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிப்படுத்தி அறிஞர்களின் ஒப்புதலையும் பெற்றனர். இறுதியாக விளங்காத பகுதிகளுக்குக் குறிப்புகளுமெழுதி அந்நூலுரைகளைத் திருத்தமாக அச்சிற் பதிப்பித்து வெளியிட்டார். மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக வெளிவந்த ‘செந்தமிழ்’ இதழ்களில் அரிய ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதிவந்தார். மிகச்சிறந்த ஆசிரியராகவும் விளங்கினார். நயினாதீவின் சைவப்பாடசாலையில் கற்பித்த ஏழாண்டுகள் அவருடய ஆசிரியப் பணியின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. இக்காலப்பகுதியிலேயே இவர் ஏராளமான கட்டுரைகளையும், உரைகளையும் எழுதியுள்ளார். மேலும்...