விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 8, 2013

முன்னேசுவரம் இலங்கையில் உள்ள சிவன் கோவில்களில் காலத்தால் மிகவும் முற்பட்டது ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன முறையாய் அமைந்த இத்திருத்தலம் அழகேசுவரம் எனவும் வழங்கப்படுகின்றது. இக்கோவில் இலங்கையில் உள்ள பஞ்ச ஈசுவரங்களில் முதன்மையானது. இக்கோயிலில் இன, சமய, மொழி வேறுபாடின்றி பல இனத்தவரும் வழிபட்டு வருகின்றனர். இலங்கையின் வடமேற்கே புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தை இராமர், வியாசர் முதலியோர் வழிபட்டதாக தட்சணகைலாசபுராணம் குறிப்பிடுகின்றது. குளக்கோட்ட மன்னன் இவ்வாலயத்தைப் புனர்நிர்மாணம் செய்ததுடன், அதற்கு 64 கிராமங்களை வழங்கியதாகவும் முன்னேஸ்வர மான்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோட்டை அரசன் ஆறாம் பராக்கிரமபாகு இக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்ததுடன் பல கிராமங்களையும் மானியமாக அளித்துள்ளான். போர்த்துக்கேயர் 1578 இல் முன்னேசுவர ஆலயத்தை அழித்துச் சூறையாடி, இத்தலத்துக்கு உரித்துடையதான வளம் மிகுந்த நிலங்களையும் அபகரித்தனர். மேலும்...


சுந்தர சண்முகனார் (1922-1977) புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர், கவிஞர், எழுத்தாளர். தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்டவர். நூல் தொகுப்புக்கலை, அகராதியியல்கலை ஆகிய துறைகள் பற்றி முதன்முறையாக முறையியல் நூல்களைப் படைத்தவர். ஆற்றுப்படுகை அணுகுமுறையில் பண்பாட்டு ஆய்வைத் தொடங்கி வைத்த முன்னோடி. 70 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய படைப்புகள் அனைத்தும் 2010 ஆம் ஆண்டில் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டு உள்ளன. சண்முகனார் திருவையாறு அரசர் கல்லூரியில் படித்து வித்துவான் பட்டம் பெற்றார். 1952 இல் ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் தேர்ந்தார். ஞானியார் அடிகளின் பரிந்துரையைப் பெற்று மயிலம் சிவஞானபாலைய அடிகள் தமிழ்க் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும் பணியேற்றார். 1947-இல் புதுச்சேரியில் பைந்தமிழ் பதிப்பகம் என்னும் நூல் வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். புதுச்சேரி பெத்திசெமினார் பள்ளியில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பின்னர் புதுவை அரசினர் ஆசிரியர் பயிற்சி நடுவத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.மேலும்...