விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 16, 2014

எமிலி டிக்கின்சன் (டிசம்பர் 10, 1830மே 15, 1886) ஒரு அமெரிக்கப் பெண் கவிஞர் ஆவார். ஆங்கிலக் கவிதையுலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். ஐக்கிய அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த இவர் தனிமையைப் பெரிதும் விரும்பியவர். வெள்ளை நிற ஆடைகளை மட்டும் அணிதல், விருந்தினருடன் பேசுவதில் தயக்கம் காட்டுதல், அறையை விட்டு வெளியே வராதிருத்தல் போன்ற பழக்க வழக்கங்களால் விந்தையான பெண்ணாக அறியப்பட்டார். டிக்கின்சன் ஆயிரத்து எண்ணூறு கவிதைகளை எழுதினாலும் அவரது வாழ்நாளில் அவற்றுள் வெகு சிலவே அச்சில் வெளியாகின. அவ்வாறு வெளியானவையும் பதிப்பாளர்களால் அக்கால கட்ட கவிதை மரபுகளுக்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. டிக்கின்சனின் கவிதைகள் அவரது காலகட்டத்தின் கவிதை மரபுகளை மீறி புதிய வடிவங்களைக் கொண்டிருந்தன. மரணம் மற்றும் மரணமின்மை ஆகியவற்றை கருப்பொருள்களாகக் கொண்டிருந்தன. டிக்கின்சன் தன் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களும் இவ்விசயங்களையே கருப்பொருள்களாகக் கொண்டிருந்தன. மேலும்...


பேரரசரின் புதிய ஆடைகள் ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் எழுதிய ஒரு குட்டிக் கதை ஆகும். இரு நெசவாளர்கள் பேரரசர் ஒருவருக்கு புதிய ஆடைகள் செய்து தருவதாக வாக்களிக்கின்றனர். அவ்வாடைகளை முட்டாள்களாலும் தகுதியற்றவர்களாலும் காணமுடியாது என்று கூறுகின்றனர். புதிய ஆடைகள் தயாரானதாகப் பாசாங்கு செய்கின்றனர். பேரரசர் உட்பட அனைவரும் தங்கள் கண்களுக்கு ஆடைகள் புலனாகவில்லை என்பதை ஒப்புக்கொள்ளக் கூசி ஆடைகள் இருப்பது போல நடிக்கின்றனர். ”புதிய ஆடைகளை” அணிந்த பேரரசர் தனது குடிமக்கள் முன் ஊர்வலமாகச் செல்கிறார். அப்போது மக்களும் அவர் ஆடையின்றி நிர்வாணமாக இருப்பதை சுட்டிக்காட்டாது விடுகின்றனர். ஆனால் ஒரு குழந்தை மட்டும் பெரியவர்களைப் போன்று பாசாங்கு செய்யாமல் ”பேரரசர் அம்மணமாகப் போகிறார்” என்று கத்திவிடுகிறது. டேனிய மொழியில் எழுதப்பட்ட இக்கதை நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும்...