விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 6, 2011

முள்நாறிப் பழம் என்பது கெனஸ் டுரியோ என்கின்ற மரத்தில் இருந்து விளைகின்ற ஒரு பழம். இப்பழத்தின் மேற்பரப்பு முட்கள் நிறைந்திருந்தாலும் அதிலுள்ள சுளைகள் மிகவும் சுவையாக இருக்கும். மலாய் மொழியில் இப்பழத்தை டுரியான் என்றழைப்பார்கள். முள்நாறிப் பழம் ஒரு பருவக் காலப் பழம். மழைக் காலங்களில் மட்டுமே இவ்வகைப் பழங்கள் கிடைக்கும். இவை தென்கிழக்கு ஆசியாவைப் பிறப்பிடமாக கொண்டது. முள்நாறிப் பழத்தை ஏற்றுமதி செய்வதில் தாய்லாந்து முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும் விளைகின்றது. மேற்பரப்பு பச்சை நிறமும் பழுப்பு நிறமும் கலந்த ஒரு கலவை நிறத்தில் இருக்கும். அதே நேரத்தில் அதன் உள்ளே இருக்கும் பழத்தின் சுளை பெரும்பாலும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சில நேரங்களில் இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறச் சுளைகள் அரிதாக கிடைப்பதுண்டு. சராசரி ஒரு முள்நாறிப் பழம் 30 செமீ நீளமும் மற்றும் 15 செமீ சுற்றளவும் கொண்டிருக்கும். மேலும் ஒரு முள்நாறிப் பழம் 1 கிலோ முதல் 3 கிலோ வரை வளரக்கூடியவை. கூர்மையான முற்களை தவிர முள்நாறிப் பழத்திற்கு மற்றொருத் தன்மையுமுண்டு. அதாவது அப்பழத்தின் வாடை. மேலும்...


த. பிரகாசம் (1872–1957) இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வரும் பிரபல வழக்கறிஞரும் ஆவார். இவர் ஆந்திர மாநிலம் உருவான போது அதன் முதலாவது முதலமைச்சராகப் பணியாற்றினார். 1921 இல் இந்திய தேசியக் காங்கிரசில் இணைந்தார். வழக்கறிஞர் பணியைத் துறந்து, சுராஜ்யம் என்ற தேசியவாத நாளிதழைத் தொடங்கினார். ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கேற்றார். 1926 ஆம் ஆண்டு மத்திய நாடாளுமன்றத்திற்கு காங்கிரசு வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1928 இல் சைமன் கமிஷனுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு தீரத்துடன் காவல்துறை அடக்குமுறைகளை எதிர் கொண்டதால், "ஆந்திர கேசரி" என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. 1930 இல் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். மாநில சுயாட்சியின் கீழ் 1946 இல் நடைபெற்ற இரண்டாம் தேர்தலில் காங்கிரசு மீண்டும் வெற்றி பெற்றது. தெலுங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரகாசம் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். மேலும்...