வில்லியம் தொபியாஸ் ரிங்கல்தௌபே

பிரித்தானிய இறைத்தொண்டர்

வில்லியம் தொபியாஸ் ரிங்கல்தௌபே (William Tobias Ringeltaube, 1770- ?) என்பவர் தென்னிந்தியாவின் முதல் சீர்திருத்தத் திருச்சபை மறைப்பணியாளர் ஆவார். [1] இவர் தன் பெரும்பாலான காலத்தை திருவிதாங்கூரில் கழித்தார். இவர் சைலீசியாவில் உள்ள பிரிசிங்குக்கு அருகில் உள்ள ஷீடெல்விட்ஸ் (தற்கால சிட்லோவிஸ்) விகார் கோட்லீப் ரிங்கெல்டாபின் முதல் குழந்தை ஆவார். இவர் 1770 ஆம் ஆண்டு ஆகத்து 8 ஆம் தேதி பிறந்தார். இவரது இறப்பிற்கான காரணமும் நாளும் சரியாகத் தெரியவில்லை. ஆனால் இவர் ஆப்பிரிக்க பயணத்தின் போது கல்லீரல் செயலிழப்பால் இறந்தார் என்று பரவலாக நம்பப்படுகிறது. சிலர் இவர் ஜகார்த்தாவிற்கு (அப்போது படாவியா என்று அழைக்கப்பட்டது) பயணம் செய்த போது பூர்வீக மக்களால் கொல்லப்பட்டார் என்று நம்புகிறார்கள்.

வில்லியம் தொபியாஸ் ரிங்கல்தௌபே
பிறப்பு(1770-08-08)ஆகத்து 8, 1770
பிரிசேக், சைலீசியா,
புருசிய இராச்சியம்
(now போலந்து)
இறப்பு27 செப்டம்பர் 1816க்குப் பிறகு
(46 அல்லது அதற்கு மேற்பட்ட வயதில்)
சாவகக் கடல்
படித்த கல்வி நிறுவனங்கள்ஹாலே பல்கலைக்கழகம
பணிமறைபணி

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இவர் பிறந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு திருமுழுக்குப் பெற்றார். வில்லியம் தொபியாஸ் ரிங்கல்தௌபே என்று பெயரிடப்பட்டார். ஏழு ஆண்டுகள் ரிங்கல்தௌபே ஊர்ப்புற வீட்டில் அமைதியாக வளர்ந்தார்; அதற்குப் பிறகு, இவரது தந்தை போலந்தில் உள்ள வார்சாவுக்குச் சென்றார், மேலும் ஒன்பது ஆண்டுகள் நகரத்தில் இருந்தார். வீட்டில் தந்தையிடமே கல்வி பயின்ற இவர் மேற்படிப்புக்கு ஹாலே பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். [2]

இவருக்கு 16 வயதாக இருந்தபோது, இவரது தந்தை சிலேசியாவில் உள்ள ஓல்ஸில் நீதிமன்றப் போதகராகவும் பொது கண்காணிப்பாளராகவும் ஆனார். அங்கு, சிறுவனாக இருக்கும்போது இவர் உடற் பயிற்சிக்களத்தில் கலந்துகொண்டார். என்றாலும் கூச்சத்தால் சக மாணவர்களுடனான பழக்கத்தைத் தவிர்த்தார். இவர் தனது 18 வயதில் நடைப்பயணத்திற்குச் சென்றார், அதில் இவர் பல நண்பர்களைப் பெற்றார். இந்த நேரத்தில், இவர் ஒரு கிறிஸ்தவ மறைப்பணியாளராக முடிவு செய்தார். 1803 ஆம் ஆண்டில் லண்டன் மறைப்பணி சங்கத்தால் (எல்எம்எஸ்) இந்தியாவுக்கான தங்கள் மறைபணியில் இணைய இவர் அழைக்கப்படுவதற்கு முன்பு கல்கத்தாவிலும் இங்கிலாந்திலும் சில காலத்தை செலவிட்டுள்ளார். [3]

ரிங்கல்தௌபேயின் தோற்றம் தொகு

ரிங்கல்தௌபே மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்தில் காணப்பட்டார். வசீகரமான முகபாவனையோடு, 5 அடி 9 அங்குலம் உயரத்தில், பொன்னிற முடியுடன். நீல நிறக் கண்களைக் கொண்டவராக, கூரிய பார்வை உடையவராக இருந்தார்.

மறைபணி தொகு

ரிங்கல்தௌபே 1804 ஆம் ஆண்டு ஐரோபாவில் இருந்து தரங்கம்பாடிக்கு வந்து தமிழைக் கற்று இறைப்பணி ஆற்றிக் கொண்டிருந்தார்.[4] இந்நிலையில் தென் திருவாங்கூரின் மயிலாடியின் முதல் சீர்த்திருத்த திருச்சபை கிறிஸ்தவரான மகராசன் வேதமாணிக்கம், ரெவ. கோல்ஹாஃப் என்பவரிடம் ஞானஸ்நானம் பெற்றவர். அவர் ரிங்கல்தௌபேயை வந்து தரங்கம்பாடியில் சந்தித்து மைலாடிக்கு வந்து இறைப்பணியாற்றவேண்டும் என்று அழைப்புவிடுத்தார்.

மகராசன் வேதமாணிக்கத்தின் அழைப்பை ஏற்று 1806, ஏப்ரல் 25, 1806 வெள்ளிக்கிழமையன்று மாலை 6 மணிக்கு, போதகர் ரிங்கல் தௌபே மைலாடிக்கு வந்தார். தென் திருவிதாங்கூருக்கு வந்த ரிங்கல்தௌபே சாதியினால் ஒடுக்கப்பட்ட மக்களின் அவலநிலையைக் கண்டு நெகிழ்ந்தார். இவர் அவர்களிடையே பணியாற்றினார். அடுத்துவந்த 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேதமாணிக்கம் தேசிகர் வீட்டில் இவர் (ரிங்கல்தௌபே) வழிபாடு நடத்தினார். மைலாடியில் தேவாலயம் கட்டும் ரிங்கல்தௌபேயின் திட்டத்தை திவான் வேலுத்தம்பி எதிர்த்தார். ஆனால் கர்னல் மெக்காலே உதவினார். மார்ச் 1807 இல், மைலாடியில் 40 பேர் திருமுழுக்குப் பெற்றனர். வேலுத்தம்பியின் கிளர்ச்சியால் மைலாடி கிறிஸ்தவர்களுக்குப் பல பிரச்சனைகள் வர ஆரம்பித்தன. கலவரத்தின் போது வேதமாணிகம் தேசிகர் மருந்துவாழ் மலையிலும் பர்வத மலையிலும் பதுங்கி இருந்தார். சில நாட்கள் ரிங்கல்தௌபே பாளையங்கோட்டையில் பணியாற்றினார். கலவரம் முடிந்த பிறகு தேவாலயம் கட்ட அனுமதி பெற அலைந்தார்.

ரிங்கல் தௌபே 1809 மேயில்ல் மயிலடியில் தேவாலயத்திற்கு அடித்தளம் அமைத்தார். நான்கு மாதங்களில் தேவாலயத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. செப்டம்பர் 1809 இல், தென் திருவிதாங்கூரின் முதல் சீர்திருத்தச் சபையின் தேவாலயத்தை ரிங்கல்தௌபே அர்ப்பணித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இவர் பல தேவாலயங்களைத் திறந்து வைத்தார். மயிலாடி, தெற்கு தாமரைக்குளம், புத்தளம், கோயில்விளை (ஜேம்ஸ் நகரம்), சீயோன்புரம், பேரின்பபுரம், அனந்தநாடார்குடி ஆகிய தேவாலயங்கள் இவருடைய ஊழியத்தின் பலனாகும்.  நாகர்கோவிலில் இருந்து திங்கள் சந்தைக்கு செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் (6.2 மைல்) தொலைவில் உள்ள பேரின்பாபுரம் தேவாலயம் இதில் ஒன்று. இந்த அனைத்து தேவாலயங்களும் 200 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளன. தாமரைக்குளம் தேவாலயம் கன்னியாகுமரியில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும், அனந்தநாடார்குடி தேவாலயம் நாகர்கோவிலில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும், மைலாடி தேவாலயம் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும் உள்ளன. இவருடைய மறைபணியின் சிறப்பை அவர் உருவாக்கிய பள்ளிகள், அனாதை இல்லங்கள் போன்றவை அவரது நற்செய்தியை அறிவித்து வருகின்றன.

மயிலாடி மக்களுக்கான பணிகள் தொகு

மயிலாடி தேவாலயத்தின் தென்புறத்தில் ஒரு கிணறு இருந்தது. மேலும் மயிலாடி மக்களின் நலக் கருதி தேவாலயத்தில் இருந்து சிறிது தூரத்தில் குளம் வெட்டி தண்ணீர் பிரச்சனையை தீர்த்தார். குளத்தின் அருகே உள்ள நிலத்தில் வயல்களை மேம்படுத்தினார். இவர் ஏழைகளுக்கு ஆடைகளையும், நோயாளிகளுக்கு இலவச மருந்துகளையும் வழங்கினார். இவர் தனது சொந்த பணத்தெ செலவிட்டு பல அடிமைகளுக்கு விடுதலைப் பெற்றுத் தந்தார். ஒவ்வொரு கிறிஸ்துமசின் போதும் மைலாடியில் உள்ள அனைத்து தேவாலய உறுப்பினர்களுக்கும் விருந்து அளித்தார். மக்கள் மீது கடுமையாக விதிக்கப்பட்ட பல வரிகளை நிறுத்த உதவினார்.

ரிங்கல்தௌபே அனுபவித்த துன்பங்கள் தொகு

மக்களின் அறியாமை இருளைப் போக்கும் பணியில் ஈடுபட்ட ரிங்கல்தௌபே பல துன்பங்களை அனுபவித்தார். மைலாடியில் தேவாலயம் கட்ட அனுமதி கேட்டு மூன்று ஆண்டுகள் போராடினார் . உடல் உபாதைகளால் மிகவும் அவதிப்பட்டார். அவ்வப்போது ஏற்படும் நோய்களால் உடலில் வலிமை இழந்து காணப்பட்டார். சிறந்த சத்தான உணவு, நல்ல அடிப்படை வசதிகள் இல்லாத எளிய வீட்டில் வாழ்வது, நல்ல ஆடை இல்லாமல், தலையில் ஒரு எளிய வைக்கோல் தொப்பியுடன் நடந்து சென்று நற்செய்தியைப் பரப்பினார்.

ரிங்கல்தௌபேயின் கடிதங்கள் தொகு

 
லண்டன் மிஷன் சொசைட்டி, அவரது இளைய சகோதரி மற்றும் நிச்சயதார்த்த மனைவிக்கு வில்லியம் தொபியாஸ் ரிங்கல்தௌபே தனது நோய் மற்றும் தென் திருவிதாங்கூரில் உள்ள கிறிஸ்தவ சமூகங்களின் வளர்ச்சியை விளக்குவதற்கு எழுதிய கடைசி கடிதம் (மலாக்காவிலிருந்து 24 செப்டம்பர் 1816)

ரிங்கல்தௌபே எழுதிய பல கடிதங்களில், அவருடைய சகோதரிக்கு எழுதிய ஒன்பது கடிதங்களும், அவரது சகோதரருக்கு எழுதிய மூன்று கடிதங்களும், லண்டன் மறைபணி சங்கத்துக்கு எழுதிய நான்கு கடிதங்களும் தற்போது உள்ளன. இக்கடிதங்கள் மூலம் அவருடைய பயணங்கள், ஊழியம், கிறிஸ்தவர்களின் நிலை, கல்லீரலில் நோய் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.

இந்தக் கடிதங்களில் தன் சகோதரிக்கு இவரால் எழுதப்பட்டவை அனைத்தும் சோகமாகவே காணப்படுகின்றன. இவருடைய கடிதத்தில் சோகம் இருந்தபோதிலும், இவர் ஒரு நற்செய்தியாளராக இருப்பதில் மகிழ்ச்சி அடைந்தாரே தவிர, அதற்காக அவர் வருத்தப்படவில்லை. கடிதங்களில் அவர் தன்னை பிறரை அண்டி வாழ்பவர், ஆதரவற்ற, வயதான மனிதர் என்று குறிப்பிடுகிறார். கடிதங்கள் மூலம் தரங்கம்பாடிக்கு தன் சகோதரன் எர்னஸ்ட்டை அழைத்ததும், வர சம்மதிக்கவில்லை என்பதையும் அறிய வருகிறது.

பயணத்தின் முடிவு தொகு

1816 ஆம் ஆண்டு சனவரி மாதம் 23 ஆம் தேதி, மைலாடியில் நடந்த பிராத்தனைக் கூட்டத்தில் இவர் தாயகம் திரும்புவதற்கான விருப்பத்தைத் தெரிவித்தார். வேதமாணிகம் தேசிகரிடம் தன் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு, பிப்ரவரி 5-ஆம் நாள் கொல்லத்திலிருந்து சென்னைக்குக் கப்பலேறினார். கப்பல் மணக்குடிக்கு வந்ததும் தன் வீட்டுச் சுவரில் எழுதிய கடன் குறிப்புகள் நினைவுக்கு வந்தது. கப்பலை நிறுத்துமாறு மாலுமியிடம் தெரிவித்து மைலாடிக்கு பயணித்து கடன் கணக்கை அழித்தார். மீண்டும் மயிலாடி மக்களிடம் விடைபெற்று சென்னைக்கு கப்பலேறி சென்றார்.

பாதிரியார் சென்னையில் இருந்து இலங்கையை அடைந்து தனது சகோதரிக்கு கடிதம் எழுதினார். பின்னர் இவர் இலங்கையிலிருந்து மலாக்காவை அடைந்தார். பின்னர் தன் சகோதரிக்கும், லண்டன் மறைப்பணி சங்கத்தின் பொருளாளர் திரு. ஜோசப் கோக்ஸனுக்கு ஒரு கடிதம் எழுதினார்

அவர் மலாக்காவை விட்டு வெளியேறி, 27, செப்டம்பர், 1816 அன்று படவியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். இவர் கப்பலில் செல்லும் வழியில் இறந்து கடலில் அடக்கம் செய்யப்பட்டார். இதற்கு சான்றாக கப்பலின் தினசரி நாட்குறிப்பில் A PASSENGER DIED என எழுதப்பட்டிருந்தது. இவரது மரணம் குறித்து பலர் பலவாறு கூறியிருந்தாலும், இது உண்மை என்று நம்பப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Kent, Eliza F. (2004). Converting Women: Gender and Protestant Christianity in Colonial South India. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780195165074. https://archive.org/details/convertingwomeng0000kent. 
  2. Mateer 1871, ப. 258.
  3. Mateer 1871, ப. 2.
  4. "ரிங்கல்தௌபே மயிலாடிக்குப் பறந்துவந்த மணிப்புறா!". இந்து தமிழ். 2023-ஆகத்து-17. பார்க்கப்பட்ட நாள் 13 சனவரி 2024. {{cite web}}: Check date values in: |date= (help)