அகன்றவெளி பறவையகம்

அகன்றவெளி பறவையகம் (Aviary of Hong Kong) என்பது ஹொங்கொங்கில், ஹொங்கொங் பூங்காவில் கட்டப்பட்டுள்ள ஒரு அகன்ற வெளி நிலப்பரப்புக்குள் கட்டப்பட்டிருக்கும் பறவையகம் அல்லது பாரிய பறவைக்கூடு ஆகும். இந்த "அகன்றவெளி பறவையகம்" கட்டப்பட்டுள்ள நிலப்பரப்பளவு 3,000 சதுர மீட்டர்களாகும். இதன் உயரம் கீழ் பள்ளத்தாக்கில் இருந்து 30 முதல் 46.5 மீட்டர் உயரம் கொண்டதாகும். இந்த அகன்றவெளி பறவையகத்தின் உள்ளே 600 பறவைகள், 80 வகையான பூச்சி புழுக்கள் போன்ற உயிரினங்கள் உள்ளன. இந்த பறவையகத்தை ஹொங்கொங் அரசாங்கத்தின் ஒரு பிரதானப் பிரிவான ஓய்வாற்றல் மற்றும் பண்பாட்டுச் சேவைகள் திணைக்களம் பராமறித்து வருகிறது.

அகன்றவெளி பறவையகம் வெளிக்காட்சி
பறவையகத்தின் உள்ளே நடக்கும் சாலையின் வடிவமைப்பு

பறவையத்தின் உள்ளே மக்கள் சென்று பார்வையிடுவதற்காக, பள்ளத்தாக்கின் மேலே நிலமட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 15-20 மீட்டர்கள் உயரத்தில் நடந்து செல்வதற்கான சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை மரப் பலகைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன. பறவையகத்தின் உள்ளே உயர்ந்த மரங்கள், செடிகள், கொடிகள் என அடர்ந்த காணகத்தைப் போன்று இயற்கை வளத்துடன் காட்சித் தருகின்றன. அத்துடன் விக்டோரியா சிகரத்தில் இருந்து ஓடும் ஒரு அருவியும் இந்த பறவையகத்தின் ஊடே ஓடுகிறது.[1][2]

அமைவிடம் தொகு

 
பறவையகத்தின் உள்ளே நடை சாலையில் பார்வையாளர்கள்; கீழே அருவி.

இந்த பறவையகத்தின் அமைவிடம் ஹொங்கொங்கில், ஹொங்கொங் தீவின், மையம் நகரத்தில், விக்டோரியா சிகரத்தின் பள்ளத்தாக்கில், ஹொங்கொங் பூங்காவின் தென்முனையில் உள்ளது.

வரலாறு தொகு

இந்த அகன்றவெளி பறவையகம் பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் 1992 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திறந்து வைக்கப்பட்டது. அப்போது அதனை ஹொங்கொங் நகர சபை பராமரித்து வந்தது. அப்போது ஹொங்கொங்கின் முன்னாள் ஆளுநராக இருந்த "எட்வட் யூட்" (Edward Youde) என்பவர் (1982 முதல் 1986) காலஞ்சென்றதன் பின்னர் அவர் நினைவாக, அவரது பெயர் இந்த அகன்றவெளி பறவையகத்திற்கு சூட்டப்பட்டது. எனவே இந்த பறவையகத்தை எட்வட் யூட் பறவையகம் என்றே தற்போது அழைக்கப்படுகிறது.

நுழைவு தொகு

இந்த அகன்றவெளி பறவையகத்தின் நுழைவு பகுதி, பச்சை நிறத்திலான, கனம் குறைந்த சங்கிலிகள் தொங்கவிடப்பட்டிருக்கும். சங்கிலிகள் இரட்டை வரிசைகளாக உள்ளன. காரணம் பார்வையாளர்கள் நுழையும் வழியின் ஊடாக, உள்ளே இருக்கும் பறவைகள் வெளியேறி விடாமல் இருப்பதற்கான பாதுகாப்பு வசதிக்காகவே அவை தொங்கவிடப்பட்டுள்ளன. பாடசாலை மற்றும் கல்லூரி போன்றவற்றில் இருந்து வருவோருக்கான சிறப்பு வசதிகள் செய்துக்கொடுக்கப்படுகின்றன. 12 வயதுக்கு குறைந்தோர் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இன்றி உள்ளே அனுமதிக்கப் படுவதில்லை. நுழைவின் போது இந்த பறவையகம் தொடர்பான முழு விபரங்கள், மற்றும் உள்ளே உள்ள பறவைகள், அவற்றின் பெயர்கள், அவை தாயகம் போன்ற முழுவிபரப்பட்டியலும் வழங்கப்படுகின்றன.

பறவையகம் காலை 9:00 முதல் மாலை 5:00 வரை ஒவ்வொரு நாளும் திறந்திருக்கும். நுழைவு இலவசமாகும்.

அத்துடன் பார்வையாளர் கருத்துக் கணிப்பு அனைத்து பார்வையாளர்களிடம் இருந்தும் வரவேற்கப் படுகிறது. நுழைவுப் பகுதியிலேயே அதற்கான படிவம் உள்ளது. அதில் இந்த பறவையகத்தின் பணியாளர்களின் நடத்தை, பறவையகத்தின் தூய்மை, பராமறிப்பு போன்ற விடயங்கள் என பட்டியல் இடப்பட்டுள்ளன. அவை தொடர்பாகவும் அல்லது மேலதிக எமது கருத்துக்களையும் அப்படிமத்தில் நிரப்பி கொடுக்கலாம்.

படக்காட்சியகம் தொகு

வெளியிணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Edward Youde Aviary
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. Stone, Andrew; Chow, Chung Wah; Ho, Reggie (2008). Hong Kong and Macau - Andrew Stone, Chung Wah Chow, Reggie Ho - Google Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781741046656. https://books.google.com/books?id=PgJTSYeEnNkC&q=hong+kong+%22largest+in+southeast+asia%22&pg=PA63. பார்த்த நாள்: 2012-05-25. 
  2. "Hong Kong Park - Specialities - Birds Collection". 2015-12-31 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-01-02 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகன்றவெளி_பறவையகம்&oldid=3752015" இருந்து மீள்விக்கப்பட்டது