அகசு விராகதிகுசுமா

இந்தோனேசிய இராணுவ அதிகாரி
(அகஸ் விராகதிகுசுமா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அகசு விராகதிகுசுமா (Agus Wirahadikusumah) (அக்டோபர் 17, 1951 – ஆகஸ்ட் 30, 2001), இவர் ஒரு இந்தோனேசியாவின் உயர் இராணுவ அதிகாரியும் கோஸ்ட்ராட்டின் தளபதியும் ஆவார். இந்தோனேசிய ஆயுதப்படை தலைமையகத்தில் திட்டமிடல் இயக்குநரகத்தின் தலைவராக இருந்தார்.

அகசு விராகதிகுசுமா

இராணுவ வாழ்க்கை தொகு

விராகதிகுசுமா 1973 இல் இந்தோனேசிய இராணுவ பயிற்சி மையத்தில் பட்டம் பெற்றவர். ஆர்வர்டு பல்கலைக்கழகம் உட்பட அமெரிக்காவிலும் உள்ள கல்வி நிறுவனங்களில் படித்தார். 20 ஆம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில், இந்தோனேசியாவின் ஆயுதப்படை தலைமையகத்தில் திட்டமிடல் இயக்குநரகத்தின் தலைவரானார்.

சுகார்த்தோவின் பதவி விலகலுக்குப் பிறகு, விராகதிகுசுமா ஆயுதப்படைகளின் வரிசையில் ஒரு சீர்திருத்தவாதியாக உருவெடுத்தார். 1998 வாக்கில், இவர் ஒரு மேஜர் ஜெனரலாக, ஆயுதப்படை தலைமையகத்தில் பணியமர்த்தப்பட்டார். அங்கு இவர் அரசியல் விவகாரங்கள் மற்றும் பாதுகாப்புக்கு பொறுப்பான ஆயுதப்படைகள் ஊழியர்களில் பணியாளர் அதிகாரியாக இருந்தார். அதே ஆண்டில், இந்தோனேசிய இராணுவம் அரசியல் விவகாரங்களில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்றும் அதற்கு பதிலாக இராணுவம் ஒரு தொழில்முறை பாதுகாப்பு சக்தியாக மாற வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

சனவரி 1999 இல், மேஜர்-ஜெனரல் அகசு விராகதிகுசுமா, இராணுவ பணியாளர்கள் மற்றும் கட்டளைப் பள்ளியின் தலைவராக இருந்தார். பின்னர் ஆயுதப்படைத் தளபதியின் பொதுத் திட்ட உதவியாளரானார்.

2000 ஆம் ஆண்டில், அதிபர் அப்துர் ரகுமான் வாகித் இவரை மூலோபாய தனிப் படைகளின் தளபதியாக நியமித்தார். இவர் இந்த பதவியில் 29 மார்ச் 2000 முதல் ஆகஸ்ட் 1 வரை பணியாற்றினார். ஜெனரல் விராண்டோவை பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது உட்பட வாகித்தின் முடிவுகளை விராகதிகுசுமா ஆதரித்தார். விராண்டோ இவரை "மோசமான ஆப்பிள்" என்று குறிப்பிட்டார்.

விராகதிகுசுமா சாதாரண வீரர்களிடையே பிரபலமாக இருந்தபோதும், கோஸ்ட்ராட்டிற்குள் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை இவர் மேற்கொண்டதால், இவருக்காகவும் எதிரிகளை உருவாக்கிக் கொண்டார். இந்த நடவடிக்கைகளின் விளைவாக, 2000 மாவது ஆண்டின் கோடையில் இவர் கோஸ்ட்ராட் தளபதி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும், இந்தோனேசிய இராணுவத் தலைவர் (டி.என்.ஐ) பதவி 23 ஜூலை 2001 அன்று அகசு விராகதிகுசுமாவுக்கு வழங்கப்பட்டது என இவரது மாமா உமர் விராகதிகுசுமா கூறுகிறார்.[சான்று தேவை]

இறப்பு தொகு

ஆகஸ்ட் 30, 2001 அன்று, விராகதிகுசுமா தெற்கு சகார்த்தாவில் உள்ள பெர்தாமினா மருத்துவமனைக்கு 06:19 மணிக்கு அழைத்து வரப்பட்டார். மருத்துவமனை ஊழியர் ஒருவர் அழைத்து வரப்பட்டபோது இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், மரணத்திற்கான காரணம் தெரியவில்லை என்றும் பிரேத பரிசோதனை எதுவும் நடத்தப்படவில்லை என்றும் கூறினார். சகார்த்தா போஸ்ட்" என்ற இதழின் கூற்றுப்படி, மரணத்திற்கு சாத்தியமான காரணம் இதய செயலிழப்பாக இருக்கலாம் எனத் தெரிகிறது. எனினும், இவரது சீர்திருத்தவாத நிலைப்பாடு காரணமாகவும், இராணுவத்திற்கு சொந்தமான தொண்டு நிறுவனமான யயாசன் தர்ம புத்ரா கோஸ்ட்ராட்டில் 189 பில்லியன் ரூபியா ஊழலைக் கண்டுபிடித்ததற்காகவும் இவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சிலர் குற்றம் சாட்டினர். பின்னர் இவரது உடல் சகார்த்தாவின் கலிபாட்டா நாயகர்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.[1][2]

விளையாட்டு சங்கங்கள் தொகு

இராணுவ விவகாரங்களைத் தவிர, விராகதிகுசுமாவும் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். இந்தோனேசியாவின் இறகுப்பந்தாட்டச் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார். இந்தச் செயல்பாட்டில், இந்தோனேசியாவின் முன்னாள் இறகுப்பந்தாட்டப் போட்டியின் வெற்றியாளர்களுக்கும் ( டான் ஜோ ஹோக் போன்றவர்கள் ) மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கும் இடையில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், வரவிருக்கும் போட்டிகளுக்கு அவர்களைத் தயார்படுத்துவதற்கும் 1998 ஆம் ஆண்டு திட்டத்தில் அவர் முக்கிய பங்கு வகித்தார். 1998 ஆம் ஆண்டில், இந்த ஆண்டு கோப்பையை வென்ற இந்தோனேசிய தாமஸ் அணியின் மேலாளராக இருந்தார். இந்த சாதனைக்காக விராகதிகுசுமாவுக்கு சத்ய கெபுதயான் பதக்கம் 1998 செப்டம்பர் 9 அன்று இந்தோனேசிய அதிபர் ஹபீபி மூலம் வழங்கப்பட்டது.[சான்று தேவை]

குடும்பம் தொகு

விராகதிகுசுமா இந்தோனேசியாவின் முன்னாள் துணைத் தலைவரும் முன்னாள் கோஸ்ட்ராட் தளபதியுமான உமர் விராகதிகுசுமாவின் மருமகன் ஆவார். அகஸ் விராகதிகுசுமா திரி ராச்மானிங்கிச் என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்: ஒரு மகன், யுனான் மகசுத்ரா சத்ரியா (பிறப்பு 22 ஜூன் 1977) மற்றும் ஒரு மகள், தியா குசுதினார் சாவித்திரி (பிறப்பு 14 ஜூலை 1975).

மேற்கோள்கள் தொகு

  1. Rachland Nashidik Interview in Radio Nederland பரணிடப்பட்டது அக்டோபர் 4, 2006 at the வந்தவழி இயந்திரம்
  2. "George Aditjondro Article". Archived from the original on 2008-06-11. பார்க்கப்பட்ட நாள் 2006-10-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகசு_விராகதிகுசுமா&oldid=3857050" இலிருந்து மீள்விக்கப்பட்டது