அடங்காப்பற்று வன்னிமைகள் (1658 - 1697)

பிரித்தானியர்கள் இலங்கையை ஆக்கிரமிப்புச் செய்து அவர்களது ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்கு முன்னர் பல நூற்றாண்டுகளாக நிலவிய குறுநில அரசுகளே வன்னிமைகள் என்னும் சிற்றரசுகளாகும். மானிய முறையிலான சமுதாய அமைப்பு நிலைபெற்ற காலத்தில், இலங்கையின் அரசியலிலும், பொருளாதார அமைப்பிலும் வன்னிமைகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. பொதுவாக அவை இலங்கையின் வறட்சி வலயங்களிலேயே அமைந்திருந்தன. அடங்காப்பற்று, திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வன்னிநாடுகள் தமிழ் வன்னியர்களாலேயே ஆளப்பட்டு வந்தன.[1]

குறுநில மன்னர்களின் பதவியைக் குறிக்கும் வன்னிமை, வன்னியம், வன்னியன், வன்னிராசன் என்னும் சொற்கள் சோழர்களின் ஆட்சிக் காலத்திலே தொண்டை மண்டலத் தொடர்பின் காரணமாக இலங்கையில் வழக்கில் நிலவின. வேளைக்காரப் படைகளின் தலைவர்கள் பிரதேசங்களின் தலைவர்களாகியதன் விளைவாகவே குறுநில அரசுகளை வன்னிமைகள் என்று குறிப்பிடும் வழக்கம் ஏற்பட்டிருத்தல் வேண்டும்.[2] காலப்போக்கிலே சிங்களவர், வேடர்கள் வாழ்ந்த குறுநிலப் பிரிவுகளும் அவற்றின் தலைவர்களும் முறையே வன்னி, வன்னிராஜ எனக் குறிப்பிடும் மரபு வலுப்பெற்றது. வையா பாடல், கோணேசர் கல்வெட்டு, யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்கள், வன்னியர்களின் முன்னோர்கள் தமிழகத்திலிருந்து இங்கு வந்து இலங்கையின் பிரதேசங்களைக் கைப்பற்றி ஆட்சி புரிந்தார்கள் எனக் குறிப்பிடுகின்றன. பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து வன்னியர்களின் ஆட்சி நடைபெற்றதாக, இலங்கையின் வரலாற்றைக் கூற முற்படும் பிரசித்தி பெற்ற நூலான சூளவம்சம் மற்றும் சில சிங்கள நூல்கள்கள் போன்றவற்றில் வன்னியர்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. கலிங்கமாகன் பொலன்னறுவை இராச்சியத்தைக் கைப்பற்றிய போது, அதன் பகுதிகளை முக்குவர், மறவர், படையாட்சி வன்னியருக்குப் பகிர்ந்து கொடுத்தான் என்று மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் குறிப்பிடுகின்றது. இரண்டாம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக்காலத்தில் (1236–1271) இராசரட்டை, மாயாரட்டை, உறுகுணைரட்டை ஆகிய முப்பெரும் பிரிவுகளையும் சேர்ந்த வன்னிமைகளைப் பற்றி சூளவம்சம் குறிப்பிடுகின்றது. வன்னிமைகள் பதினெட்டு என்றும், அவற்றை மாகாவன்னி. சிறிவன்னி என்றும் சிங்கள இலக்கியங்கள் குறித்து நிற்கின்றன. ஆனால் இந்த மரபு தென்னிந்தியாவிலே தோன்றியதாகும்.

மத்தியகால இலங்கையிலே இராச்சியங்களின் எல்லைப் பகுதிகளிலும், கரையோரப் பகுதிகளிலும் அடர்த்தியான காடுகளினால் சூழப்பட்டிருந்த வன்னிமைகள் யாழ்ப்பாணம், கோட்டை, கண்டி ஆகிய இராச்சியங்களில் அமைந்திருந்தன. இராச்சியங்களின் தலைநகரங்களுக்கு மிக தூரத்தில் அமைந்திருந்ததனால், அங்கிருந்த வன்னியர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது மன்னர்களுக்கு சிரமமாக இருந்தது. முடிமன்னர்களுக்கும் வன்னியர்களுக்கும் இடையிலான தொடர்புகள், வரையறையான சம்பிரதாயங்களினாலும்,மரபுகளினாலும் பிணைக்கப்பட்டிருந்ததால், அரசனுடைய ஆதிக்கம் மற்றும் அமைதி ஆகியவைகளினாலேயே வன்னியர்கள் அதிகாரம் பெற்றனர் என்றொரு குற்றச்சாட்டு அரண்மனைகளில் உலவியது. எல்லைப் பகுதிகளில் அரசனுடைய படைவலிமையும், அதிகாரமும் குன்றியிருந்ததால் வன்னியரின் ஆதிக்க வளர்ச்சியினை அவர்களால் கட்டப்படுத்த முடியாதிருந்தது. வன்னியர்களின் ஆட்சியுரிமை தலைமுறை தலைமுறையாக பரம்பரை வழியே சென்றது. அவர்கள் ஒரு மன்னனுக்குரிய கொடி, கவசம், படைக்கலங்கள், படைவீரர்கள், சிறப்புச் சின்னங்கள் போன்றவற்றைக் கொண்டிருந்தார்கள். தமது பிரதேசங்களிலே நிர்வாகத்துக்கும், நீதிபரிபாலனத்துக்கும் அவர்களே பொறுப்பாக இருந்து சகல அதிகாரிகளையும் அவர்களே நியமித்தனர். வன்னிப் பிரதேசங்களில் மக்கள் அரசுக்கு ஆற்ற வேண்டிய சேவைகள், செலுத்தும் வரிகள் ஆகியவை வன்னியருக்கே சமர்ப்பிக்கப்பட்டன. பொதுவாக வன்னியர்கள் மன்னருக்குரிய சகல அதிகாரங்களையும் கொண்டிருந்ததால், அவர்கள் குறுநில மன்னர்கள் என அழைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் மன்னர்களைப் போல அபிஷேகம் செய்து முடி சூடிக்கொள்ளவில்லை. வன்னியர்கள் தம்மீது மேலாதிக்கம் கொண்டிருந்த மன்னனுக்கு திறை செலுத்துதல், சிறப்பான அரசியல் விழாக்களில் கலந்து கொள்ளுதல், தேவைப்படும் போது படையினரை வழங்குதல் போன்ற கடமைகளைக் கொண்டிருந்தனர். இரண்டாம் பராக்கிரமபாகு வடமத்திய இலங்கையிலும். உறுகுணையிலும் அதிகாரம் பெற்றிருந்த வன்னியர்களிடமிருந்து திறை பெற்றுக்கொள்ள முடிந்தது. ஆறாம் பராக்கிரமபாகுவின் (1415–1457) காலம் வரை ஆட்சி புரிந்த சிங்கள மன்னர்கள் எந்தப் பிரதேசத்திலேனும் வன்னியர்கள் மீது மேலாதிக்கம் செலுத்தவில்லை.[3]

பதின்மூன்றாம் நூற்றாண்டிலே ஆரியச்சக்கரவர்த்திகள் பாண்டி நாட்டிலிருந்து வந்து இலங்கையைக் கைப்பற்றி ஆதிக்கத்தைப் பலப்படுத்திய போது, அவர்களுக்கு ஆதரவாக இருந்த பிரதானிகள் பலர் வன்னி நாடுகளைக் கைப்பற்றி தமது ஆட்சியினை ஏற்படுத்திக் கொண்டார்கள். அதிலிருந்து அடங்காப்பற்று வன்னிமைகளிலே ஒரு புதிய அதிகாரவர்க்கம் தோன்றியது. பதினேழாம் நூற்றாண்டிலே பனங்காமம், மேல்பத்து, முள்ளியவளை, கருநாவல்பத்து, கரிக்கட்டுமூலை, தென்னமரவாடி, செட்டிகுளம் ஆகிய ஏழு வன்னிமைகள் யாழ்ப்பாண இராச்சியத்தின் எல்லைக்குள் இருந்தன.

ஒல்லாந்த தேசாதிபதி பான்கூன்ஸ் என்பவரால் 31. அக்டோபர் 1658 ஆம் திகதியில் எழுதப்பட்ட அறிக்கையிலே " வலிகாமம், வடமராச்சி, தென்மராச்சி, பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு மாகாணங்களும், பதின்மூன்று தீவுகளும் யாழ்ப்பாண பட்டின இராச்சியம் என்று அழைக்கப்படுகின்றன. வன்னி என்று அழைக்கப்படும் வன்னியருடைய மாநிலம் யாழ்ப்பாணப் பட்டின அரசர்களினால் கைப்பற்றப்பட்டு அவர்களின் மேலாதிக்கத்தின் கீழ் அமைக்கப்பட்ட பெருநிலப்பகுதியாகும். இந்நிலை போர்த்துக்கேயர்களினாலும் பேணப்பட்டது. இப்பொழுது யாழ்ப்பாண பட்டின மாநிலத்தின் ஒரு பகுதியாக உள்ள இது, எங்களது ஆட்சியின் கீழ் இருந்த போதிலும் அதன்மேல் எங்களது பூரண இறைமை ஏற்படுத்தப்படவில்லை. அதன் எல்லைகள் கடலோரத்திலிருந்து மூன்று அல்லது நான்கு மைல்கள் உட்புறமாக செட்டிகுளத்திலே தொடங்கி கொழும்புத்துறைக்கு எதிரேயுள்ள கல்முனை வரை நீடித்து, அங்கிருந்து கிழக்கு நோக்கித் திருகோணமலை வரை பரந்து, பின் அப்பகுதியிலிருந்து மேற்குப்புறமாக கற்பிட்டி, மாதோட்டம், மன்னார் ஆகிய இடங்கள் வரை செல்கின்றன. ஏறத்தாள 50 கிராமங்களைக் கொண்ட தென்னமரவாடிப்பற்று, 100 கிராமங்களைக் கொண்ட கரிக்கட்டுமூலைப்பற்று, 70 கிராமங்களைக் கொண்ட முள்ளியவளைப்பற்று, 5 கிரமங்களைக் கொண்ட செட்டிகுளப்பற்றின் ஒரு பகுதி ஆகியவை அடங்கிய வன்னி மாநிலத்திலே ஆறு மாகாணங்களும், முந்நூற்றுக்குக் குறையாத கிராமங்களும் உள்ளன. யாழ்ப்பாணப் பட்டினத்தைச் சேர்ந்த செட்டிகுளம், பூனேரி, மேல்பத்து என்பவற்றை உள்ளடக்கிய வன்னிப் பிரதேசம் ஏறக்குறைய 80,000 ஜெர்மன் சதுரமைல்கள் சுற்றளவினைக் கொண்டதாகும். அது 42 ஆண்டுகளுக்கு மேலாக பழமையானதும், இறையாதிக்கமுள்ளதுமான அரசவம்சத்தைச் சேர்ந்த சங்கிலி என்ற அரசனாலே ஆளப்பட்டது."என்று பதிவாகியுள்ளது.[4]

Jaffna Kingdom-es

கயிலாய வன்னியனும் ஒல்லாந்தரும் தொகு

ஆரியச்சக்கரவர்த்திகளின் ஆட்சியிலே ஆண்டுதோறும் வன்னியர்கள் யாழ்ப்பாணத்துக்குச் சென்று திறை செலுத்திவிட்டு வருவது வழக்கமாயிருந்தது. போர்துக்கேய படையெடுப்புக்கள் நடந்த காலங்களில், முள்ளியவளை, பனங்காமம் ஆகிய பிரதேசங்களின் வன்னியர்கள் யாழ்ப்பாண அரசுக்கு படையுதவியளித்ததோடு மட்டுமன்றி தாங்களும் நேரடியாக போர்த்துக்கேயருக்கெதிரான போர்களில் பங்குபற்றினர். பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதும், வன்னியர்களிடமிருந்து திறைகளைப் பெற்றுக் கொள்வதில் அக்கறை கொண்டனர். ஆனால் அவர்களால் வன்னியர்கள் மீது இலகுவாக மேலாதிக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியாதிருந்தது. வன்னிகளிலேயே மிகப் பெரிய பரப்பளவைக் கொண்டிருந்த பனங்காமப் பற்றின் அதிபதியான கயிலாயவன்னியன், போர்த்துக்கேய ஆட்சியின் 14 ஆண்டு காலத்தில் யாழ்ப்பாணத்துக்குச் செல்லவுமில்லை, தான் செலுத்த வேண்டிய திறைகளைச் செலுத்தவுமில்லை.[5] அடங்காப்பற்று வன்னிமைகளிலே பதினேழாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த வன்னியர்களுள் கயிலாயவன்னியனே அதிக பிரசித்தம் பெற்றவனாக விளங்கினான். அடங்காப்பற்று வன்னிமைகளிலே அரைவாசிக்கும் மேலாக அவன் அதிகாரம் செலுத்திய பனங்காமப்பற்று அமைந்திருந்ததால், அங்கிருந்தே மிக அதிகமான வரிகளைப் போர்த்துக்கேயர் பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். கயிலாய வன்னியன் மிகப் பரந்ததொரு பிரதேசத்தை ஐரோப்பிய மேலாதிக்கத்திற்குக் கட்டுப்படாமல் சுதந்திரமான அரசனொருவனுக்குரிய அதிகாரங்களோடு ஆட்சி புரிந்தமையினால், ஐரோப்பிய அதிகாரிகளும், வரலாற்றாசிரியர்களும் அவனை "அரசன்" என்றே வர்ணித்தார்கள்.[6]

வடஇலங்கையிலே ஆட்சி புரிந்த போர்த்துக்கேய மற்றும் ஒல்லாந்த அதிகாரிகளிடம் அடங்காப்பற்றைக் கைப்பற்றி அதன் மீது அதிகாரம் செலுத்துவதற்கான போதியளவு படைபலம் இருக்கவில்லை. அத்தோடு வன்னியர்கள் கண்டி அரசனோடு வைத்திருந்த நெருங்கிய தொடர்பைத் தடுத்து நிறுத்துவதே ஐரோப்பியர்களின் பிரதான நோக்கமாயிருந்தது. மேலும் வன்னியர்களோடு தாம் நட்புக்கொண்டால் கண்டி அரசனின் இரகசியங்கள் தமக்குத் தெரிய வரலாம் என்றும் நம்பினார்கள். அதனால் நிர்வாகப் பொறுப்புக்கள் அனைத்தையும் வன்னியர் வசம் விடுத்து, அவர்கள் மூலமாக யானைகளைத் திறையாகப் பெற்றுக்கொள்ள விரும்பினார்கள். 1658ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய ஒல்லாந்தர்கள் காலத்துக்குக் காலம் தனியாகவும், கூட்டாகவும், திறைகள் மற்றும் அரசாங்கத்துக்குச் செய்ய வேண்டிய கடமைகள் போன்றவற்றின் அடிப்படையில் உடன்படிக்கைகளைச் செய்தார்கள். வன்னியர்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கின்ற தானியவரியின் பெறுமதிக்கமைய யானைகளை வழங்க வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. ஆண் யானையொன்றின் பெறுமதி 300 இறைசால் எனவும், பெண் யானையொன்றின் பெறுமதி 250 இறைசால் எனவும் கணிக்கப்பட்டிருந்தது. அதேபோல் யாழ்ப்பாணத்திலே ஒல்லாந்த அரசாங்கத்தின் கட்டட வேலைகளுக்கு மரங்களும், வேலை செய்யும் யானைகளைப் பிணைக்க பட்டிகள் செய்வதற்கு மான் தோல்களும் தேவைப்பட்டன. அந்த அடிப்படையில் ஒவ்வொரு வன்னிமையும் ஒரு வருடத்துக்குச் செலுத்த வேண்டிய திறைகள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டன.[7][8]

வன்னிமைகள் யானைகள் மரங்கள் மான் தோல்கள்
பனங்காமம் 16 25 40
கரிக்கட்டுமூலை 07 40 20
கருநாவல்பத்து 04 -- 20
தென்னமரவாடி 01 -- --
மேல்பத்து 01 30 20
முள்ளியவளை 01 15 20

மேலே குறிப்பிடப்பட்ட திறைகளை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு சென்று செலுத்துவதோடு, வன்னிப் பிரதேசங்களுக்குள் யாரேனும் குற்றவாளிகள், கொலைகாரர்கள், தப்பியோடிய அடிமைகள் நுழைகின்ற போது அவர்களைப் பிடித்துக் கொடுத்தால் 02 திறைசால் போர்த்துக்கேய அதிகாரிகளால் வழங்கப்படுமென்றும் , மேற்குறிப்பட்ட குற்றவாளிகள் வன்னிப்பிரதேசத்தினூடாக கண்டி இராச்சியத்துக்குச் சென்றிருந்தால், அது வன்னியர்களின் கவனக்குறைவு என்று பொறுப்பேற்று அதற்காக 50 திறைசால் அதிகாரிகளுக்குச் செலுத்த வேண்டுமென்றும் விதிக்கப்பட்டது. மேலும், வன்னிப் பிரதேசத்தினூடாக அதிகாரிகளும் அவர்களது சேவையாளர்களும் பிரயாணம் செய்யும் போது, அவர்களுக்கு பாதுகாப்பளித்தல் மற்றும் வழி காட்டுதல் ஆகியவை வன்னியர்களின் பொறுப்பெனவும் கூறப்பட்டது. ஒல்லாந்தர் வன்னியர்களோடு செய்துகொண்ட ஒப்பந்தம் ஒல்லாந்தருக்கே மிகச் சாதகமாக காணப்பட்டது.[9] இந்த ஒப்பந்தம் வன்னியர்கள் ஒல்லாந்தர்கள் மீது வெறுப்புக் காட்டுவதற்கான காரணங்களில் ஒன்றாக அமைந்தது.

ஆரம்பத்திலிருந்தே ஒல்லாந்தருக்கெதிரான நடவடிக்கைகளுக்கு கயிலாய வன்னியன் பொறுப்பேற்றான். வன்னியர்கள் மீது தமது மேலாதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ள முற்பட்ட ஒல்லாந்தரின் கட்டளைகளுக்கு வன்னியர்கள் கீழ்ப்படியவில்லை. ஏனைய வன்னியர்கள் யாழ்ப்பாணத்துக்கு திறைகளை கொண்டு சென்று செலுத்தியபோதும், கயிலாய வன்னியன் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. 1665 ம் ஆண்டுக்குப் பின் கண்டி இராச்சியத்தோடு ஒல்லாந்தர்கள் போர் செய்தபோது வன்னியர்கள் கண்டியரசனோடு நெருங்கிய தொடர்பு கொண்டு ஒல்லாந்தருக்கெதிரான செயல்களில் ஈடுபட்டனர். ஒல்லாந்த தேசாதிபதியின் மகன் இளைய பான்கூன்ஸ் 1671 ம் ஆண்டு பாணமை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளைக் கைப்பற்றியதும், வன்னியர்களை அடக்குவதற்கான வாய்ப்பினைப் பெற்றான். அவன் தனது படையுடன் முல்லைத்தீவினூடாக கயிலாய வன்னியனின் பகுதியாகிய "ஐயன்பெருமாள்" என்னுமிடத்தில் தங்கினான். இதை அறிந்த வன்னியர்கள் அனைவரும் அங்கு சென்று அவனிடம் மன்னிப்புக் கோரி சமாதானத்தை ஏற்படுத்திக் கொண்டனர். ஆனால் தனது உடல் நலக்குறைவைக் காரணம்காட்டி கயிலாய வன்னியன் தனக்குப் பதிலாக உறவினர் ஒருவரை அனுப்பியிருந்தான்.[10] புதிய உடன்படிக்கை ஏற்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குள் வன்னியர்கள் அரசாங்கத்திற்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால் 1678 ம் ஆண்டு கயிலாய வன்னியன் இறந்ததனால், வன்னிமைகள் உறுதிப்பாடும் பலமும் கொண்டதொரு தலைவனை இழந்தன. இதனால் ஒல்லாந்தர்கள் தமது மேலாதிக்க நிலையை பலப்படுத்திக் கொள்வதற்கான புதிய வாய்ப்பைப் பெற்றுக்கொண்டனர். இச்சந்தர்ப்பத்தில் கண்டி அரசன் இலங்கையில் ஒல்லாந்தரின் ஆட்சி எற்பட்டிருந்த பகுதிகளில், அவர்களுக்கு எதிரான கிளர்ச்சிகளைத் தூண்ட ஆரம்பித்தபோது வன்னியர்கள் அவனோடு சேர்ந்து கொண்டனர். இதனை அறிந்து கொண்ட ஒல்லாந்தர்கள் வன்னியர்களை அடக்குவதற்கு படைகளை வன்னிக்கு அனுப்பிப் பயமுறுத்தி, ஒவ்வொரு வன்னியனோடும் தனித்தனி உடன்படிக்கைகளைச் செய்தார்கள். வன்னிப்பிரதேசங்களுக்குச் செல்லும் வழியிலெல்லாம் ஆங்காங்கே காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. வன்னியர்க்ள மீண்டும் கிளர்ச்சி செய்தால் அவர்களுடைய நிலங்கள் பறிக்கப்படும் என்றும், மரணதண்டனை வழங்கப்படும் என்றும் அரசாங்கம் எச்சரித்தது.[11] இதனால் வன்னியர்கள் வெளிப்படையாக அவர்களது எதிர்ப்பை வெளிக்காட்டாது இராஜதந்திரத்தினால் தமது நலவுரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதில் அக்கறை செலுத்தினார்கள்.

1690 ம் ஆண்டு வரை பூநெரி, பல்லவராயன்கட்டு, இலுப்பைக்கடவை, மாதோட்டம் ஆகிய பகுதிகள் 'அதிகாரி' என்னும் பெயரைக் கொண்ட ஒருவராலேயே நிர்வகிக்கப்பட்டன. அவர் மூலமாகவே குடியானவர்களிடமிருந்து திறைகள் மற்றும் காடுகளிலிருந்து வேட்டையாடப்பட்ட யானைகள் அறவிடப்பட்டன. 1690 ஆண்டிலே அதிகாரி முறை ஒழிக்கப்பட்டு, அப்பிரதேசங்கள் மீண்டும் பனங்காமத்துப்பற்று வன்னியரிடம் ஒப்படைக்கப்பட்டன. பல்லவராயன்கட்டு, இலுப்பைக்கடவை ஆகியன நல்லமாப்பாண வன்னியனிடமும், பூநெரிப்பகுதியும், யானை வேட்டைக்களத்தின் மேலான அதிகாரமும் நிற்செயசிங்க நாதராயனிடமும் ஒப்படைக்கப்பட்டன.[12] 1690 ல் வன்னியர்களை யாழ்ப்பாணத்துக்கு வந்து சந்திக்குமாறு அதிகாரிகளினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், அவர்கள் அதைக் கருத்தில் கொள்ளாது கொழும்புக்குச் சென்று தேசாதிபதியைச் சந்தித்தனர்.[11] இதனால் கொழும்புக்குச் சென்ற நல்லமாப்பாணன், இலங்கநாரண முதலியார், நிற்செயசிங்க நாதராயன் ஆகியோர் மீது யாழ்ப்பாண உயரதிகாரிகள் கோபமடைந்தனர்.

யாழ்ப்பாணப் பட்டினத்தைப் பொறுத்த வரையில் யானைகள் மூலமாகவே அரசாங்கத்திற்கு நல்ல வருமானம் கிடைத்தது. ஆண்டு தோறும் வன்னியிலிருந்து 42 யானைகள், மாதோட்டம், முசலிப்பத்து, நானாட்டான் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள் தமது தானியவரி, தலைவரி ஆகியவற்றிகுப் பதிலாக 29 யானைகள் மற்றும் பூநெரிக் காடுகளிலிருந்து 20 அல்லது 25 யானைகள், ஆகக் குறைந்தது ஆண்டொன்றிற்கு 80 யானைகளை வன்னிப் பிரதேசத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் கருதிய போதிலும், எதிர்பார்த்தளவு யானைகளை அவர்களால் பெற்றுகொள்ள முடியவில்லை. இந்தியாவில் முகலாயப் பேரரசர்களுக்கும், பாஹ்மானி சுல்தான்களுக்கும், மதுரை, தஞ்சாவூர் நாயக்கர்களுக்கும் ஒரு யானை 800 திறைசால்களுக்கு விற்கப்பட்டது. யானைகள் மூலம் கிடைத்துக் கொண்டிருந்த பெரும் வருமானம், வன்னியர்கள் யானைகளைப் பிடித்துக் கொடுக்காததனால் இழக்கப்பட்டு விட்டதாக கொம்மாந்தர் சுவாதிகுருன் 1967ம் ஆண்டு தான் எழுதிய சுற்றறிக்கையிலே குறிப்பிட்டுள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. வன்னியர், சி.பத்மநாதன், பேராதனை-1970. பக்கம் 34-37
  2. The Kingdom of Jaffna, S.Pathmanathan,Colombo 1978, PP. 126 – 132
  3. மட்டக்களப்பு மான்மியம், சி.எப்.எக்ஸ்.நடராசா, பக்கம் -93
  4. Instructions from the Governor General and Council of India to the Governor of Ceylon, 1656–1665
  5. Instructions from the Governor General and Council of India to the Governor of Ceylon, 1656–1665 Trans. Sophia Peters, Colombɔ 1908 PP.85-86
  6. The Vanniyar of North Ceylon, A study of Feudal power and central authority, 1660-1760.The Ceylon Journal of Historical and Social Studies(CJHSS) Vol.9No.2 July-December 1966 P.104
  7. The Vanniyar of North Ceylon, A study of Feudal power and central authority, 1660-1760.The Ceylon Journal of Historical and Social Studies(CJHSS) Vol.9No.2 July-December 1966 P.89
  8. Memoir of Rijicklof Van Goens Junr., Governor of Ceylon, 1675–1679 trans. Sophia Peieters, Colombo 1910,31-32, S.Arasaratnam, Vol. 9 No.2, p 106
  9. மேலது பக்கம் 108
  10. மேலது பக்கம் 108-109
  11. 11.0 11.1 மேலது பக்கம் 7
  12. Memoir of Hendrick Zwaardecroom Commander of Jaffna patnam 1697