அடல் சேது
அடல் சேது (Atal Setu) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பதான்கோட் நகரத்திற்கு அருகில் அமைந்திருக்கும் ஒரு பாலமாகும். ராவி ஆற்றின் மேல் 592 மீட்டர் நீளம் கொண்டு கம்பி வடம் தாங்கும் வகை பாலமாக இது கட்டப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 அன்று முன்னாள் பாதுகாப்பு மந்திரி மனோகர் பாரிக்கர் பாலத்தை திறந்து வைத்தார். பதான்கோட் மாவட்டத்திலுள்ள துனேரா கிராமத்தில் தொடங்கும் அடல் பாலம் பசோலி சாலை வரை நீண்டுள்ளது. இந்தியாவின் பஞ்சாப், சம்மு-காசுமீர் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிடையேயான இணைப்பை இப்பாலம் வழங்குகிறது. வட இந்தியாவில் முதன்முதலில் கட்டப்பட்ட கம்பிவடம் தாங்கும் பாலம் என்ற சிறப்பு இப்பாலத்திற்கு உண்டு. இந்த வகை பாலங்கள் வரிசையில் நாட்டின் நான்காவது பாலம் என்ற சிறப்பும் அடல் சேது பாலத்திற்கு உண்டு.இதுபோன்ற மற்ற மூன்று பாலங்கள் மும்பை (பாந்த்ரா-வொர்லி சீலிங்கு), அலகாபாத் (நைனி) மற்றும் கொல்கத்தா (ஊக்ளி) ஆகிய இடங்களில் உள்ளன.
புது தில்லி இந்திய தொழில்நுட்ப நிறுவனம் அடல் பாலத்தின் வடிவமைப்பிற்கு ஒப்புதல் அளித்தது. 2011ஆம் ஆண்டு மே மாதம் தேசிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார். கனடாவைச் சேர்ந்த ஆலோசகர் மெகல்கன்னி ஆலோசனை சேவை நிறுவனம் பாலத்தை வடிவமைத்தது. போக்குவரத்து உட்கட்டமைப்பில் ஈட்டுபட்டு வந்த பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனங்களான இந்தியாவின் எல்லை சாலைகள் நிறுவனம், இர்க்கொன் பன்னாட்டு நிறுவனம், எசு.பி.சிங்ளா கட்டுமான நிறுவனங்கள் பாலத்தின் கட்டுமான பணிகளை மேற்கொண்டன. முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாச்பாயின் பெயரை நினைவூட்டும் விதமாக பாலத்திற்கு அடல் சேது என்று பெயரிடப்பட்டது. வாச்பாயின் பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னதாக அடல் பாலம் தேசத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டது.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Atal Setu opens, to improve connectivity with HP, Punjab". The Tribune. http://www.tribuneindia.com/news/jammu-kashmir/atal-setu-opens-to-improve-connectivity-with-hp-punjab/174885.html. பார்த்த நாள்: 25 December 2015.
- ↑ "Vajpayees birthday present atal setu dedicated to country (हिमाचल व पंजाब को जम्मू-कश्मीर के और भी करीब लाने वाला केबल ब्रिज गुरुवार को देश को समर्पित हो गया। रक्षामंत्री मनोहर पर्रिकर ने अटल सेतु का उद्घाटन किया।)" (in Hindi). Jagran. http://www.jagran.com/news/national-vajpayees-birthday-present-atal-setu-dedicated-to-country-13348934.html. பார்த்த நாள்: 25 December 2015.
.