அப்துல் கரீம் தெலி

அப்துல் கரீம் தெல்கி (Abdul Karim Telgi; 29 சூலை 1961 – 23 அக்டோபர் 2017) கோடிக்கணக்கான இந்திய ரூபாய் மதிப்புள்ள அரசு முத்திரைத் தாள்களை போலியாக அச்சடித்து வெளியிட்ட வழக்கில் நீதிமன்றத்தால் தண்டனையளிக்கப்பட்டு, 13 ஆண்டுகள் சிறையில் கழித்து பல்வேறு நோய்கள் காரணமாக 23 அக்டோபர் 2017-இல் இறந்தவர்.

அப்துல் கரீம் தெலி
பிறப்பு(1961-07-29)29 சூலை 1961
கானாபூர், பெல்காம், மைசூர் மாநிலம், இந்தியா
இறப்பு23 அக்டோபர் 2017(2017-10-23) (அகவை 56)
பெங்களூரு, கருநாடகம், இந்தியா
குற்றம்முத்திரைத் தாள்களை போலியாக அச்சடித்தல்
தீர்ப்பு(கள்)30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.

இளமை வாழ்க்கை தொகு

கர்நாடகா மாநிலம் பெல்காம் அருகேயுள்ள கனபூர் எனும் சிற்றூரில் 1961-ஆம் ஆண்டில் பிறந்த அப்துல் கரீம் தெல்கியின் தந்தை மற்றும் தாய் இருவரும் இந்திய ரயில்வே துறையில் கடைநிலை ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். தெல்கியின் சிறிய வயதிலேயே அவரின் தந்தை மரணமடைந்துவிட, சகோதரர்கள் மூவர் இருந்ததால் தெல்கியின் தாயின் சிறிய அளவு வருமானத்தால் குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் போனது. இதன் காரணமாக பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே பகுதி நேரமாக தொடருந்துகளிலும், தொடருந்து நிலையம்|தொடருந்து நிலையங்களிலும்]] காய்கறி விற்பனை செய்து தன் கல்வி செலவை ஈடுகட்டினான். பின்னர் சவுதி அரேபியாவிற்கு பணிக்கு சென்ற தெல்கி, 7 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா திரும்பினான். சவுதியில் இருந்து திரும்பிய நிலையில் அப்துல் கரீம் தெல்கியின் கவனம் சட்டவிரோத செயல்கள் மீது திரும்பியது.

போலி முத்திரைத் தாள் அச்சடிப்பு தொகு

முதன்முதலில் போலி பாஸ்போர்ட் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்த அப்துல் கரீம் தெல்கி, இந்தியாவில் பத்திரப்பதிவுக்கு தேவையான முத்திரைத்தாள்களுக்கு நல்ல தேவை இருந்தும், அவை குறைந்த அளவிலேயே மக்களின் பயன்பாட்டிற்கு கிடைத்து வந்ததையும் கவனித்தான்.

அக்கால கட்டத்தில் முத்திரைத்தாள்கள் அனைத்தும் நாசிக்கில் உள்ள அரசு அச்சு மையத்திலேயே அச்சடிக்கப்பட்டன. அரசு அச்சு மையத்தில் பணியாற்றிய சிலரின் உதவியுடன் போலி முத்திரைத்தாள் தயாரிக்க தேவையான பழைய அச்சுக் கருவிகளையும், மையையும் பெற்றான்.

இதன் காரணமாக போலியாக முத்திரைத்தாள் அச்சடிக்க தொடங்கினான் தெல்கி. ரூபாய் 10 முதல் 100 வரையிலான மதிப்புகளில் போலி முத்திரைத்தாள் அச்சடித்து விற்பனை செய்து வந்த தெல்கியின் செயலை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் கர்நாடகாவையும் கடந்து தனது தொழிலை நாடு முழுவதும் பரப்பினான்.

1990 ஆண்டு காலகட்டத்தில் போலி முத்திரைத்தாள் மோசடியில் தெல்கி கொடிகட்டிப் பறக்க துவங்கினான் தெல்கி. எனினும் 1991 மற்றும் 1995-ஆம் ஆண்டுகளில் அவன் மீது மும்பை போலீசார் வழக்குகள் பதிவு செய்தனர்.

இருப்பினும் தெல்கி காவல்துறையினர் சிலரை சரிக்கட்டினான். இரண்டு வழக்குகள் மீதான விசாரணையும் போதுமான அளவுக்கு நிருபிக்கப்படாதால் அதிலிருந்தும் தப்பினான் தெல்கி.

10 ஆண்டுகளுக்கும் மேலாக முத்திரைத்தாள் மோசடியில் கோலோச்சிய தெல்கி காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அதிகார வர்க்கத்தினரின் நெருக்கத்தால் இந்திய அளவில் மிகப்பெரிய முத்திரைத்தாள் மோசடி மன்னனாக உருவெடுத்தான்.

முத்திரைத்தாள் மொத்தமாக கொள்முதல் செய்யும் வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், பங்கு வர்த்தக நிறுவனங்கள் மற்றும் 350 தனிநபர்கள் அவனுடைய இலக்காகின.

அதிகாரவர்க்கத்தினரின் அரவணைப்பில் வளர்ந்த தெல்கியை கர்நாடக காவல்துறை 2001 நவம்பரில் கைது செய்தது. தெல்கியின் மோசடித் தொழில் ஒருவழியாக 2001-ஆம் ஆண்டில் முடிவிற்கு வந்தது.

ரூபாய். 2,000 கோடி அளவிற்கு முத்திரைத்தாள் மோசடி நடந்திருக்கலாம் என துவக்கக் கட்டத்தில் மதிப்பிடப்பட்டது, இருப்பினும் உண்மை நிலவரம் 26,000 முதல் 32,000 கோடி ரூபாய்களாக இருக்கும் என்று கூறப்பட்டது. [1]

இது தொடர்பாக விசாரிக்க காவல்துறை உயர் அதிகாரி சுபோத் ஜெய்ஸ்வால் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக்குழுவை மகராஷ்டிர அரசு அமைத்தது. தெல்கியை காவல்நிலையத்துக்கு அழைத்துச்செல்ல வேண்டிய மும்பை காவல்துறையினர் அவனுடன் சேர்ந்து பண்ணை வீடுகளில் குடித்து கும்மாளம் அடித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தெல்கிக்கு உதவிய காவல்துறை உதவி விசாரணை அதிகாரிக்கு ஒரு பில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதை மேல் விசாரணையில் கண்டறிந்தனர்.[2] பின்னர், ஏப்ரல் 2003-இல் தெல்கி மீதான முத்திரைத்தாள் மோசடி தொடர்பான அறிக்கையை சிறப்பு விசாரணைக்குழு நீதிமன்றத்தில் அளித்தது.[3]

மும்பை சிறப்பு நீதிமன்றம் 17 சனவரி 2006-இல் அப்துல் கரீம் தெல்கிக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது.[4] [5]தெல்கிக்கு 28 சூன் 2007-இல் வேறு ஒரு மோசடி வழக்கில் 13 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேலும் 10 பில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. வருமான வரித்துறையினர், தண்டனைத் தொகையை வசூலிக்க தெல்கியின் அனைத்துச் சொத்துக்களையும் பறிமுதல் செய்தனர்.[6] [7] [8]

மறைவு தொகு

பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரகார மத்தியச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த தெல்கியின் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 23 அக்டோபர் 2017 அன்று மரணமடைந்தார்.[9]

மேற்கோள்கள் தொகு

  1. "Telgi Scam". The Financial Express. 19 November 2003 இம் மூலத்தில் இருந்து 15 May 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130515034250/http://www.financialexpress.com/news/telgi-scam/83736/0. பார்த்த நாள்: 27 May 2011. 
  2. Dharker, Anil (30 November 2003). "Telgi is so Indian". The Hindu இம் மூலத்தில் இருந்து 27 மார்ச் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040327203754/http://www.hindu.com/mag/2003/11/30/stories/2003113000110200.htm. பார்த்த நாள்: 27 May 2011. 
  3. Year After His Death, Abdul Karim Telgi Cleared In Stamp Paper Scam Case
  4. Telgi conviction[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Stamp paper scam: Telgi gets 10-year RI". indianexpress.com. Indian Express. 2011. பார்க்கப்பட்ட நாள் 7 November 2011.
  6. Abdul Kareem Telgi: From a vegetable vendor to scam mastermind[தொடர்பிழந்த இணைப்பு]
  7. Abdul Karim Telgi dead: How the brains behind multi-crore fake stamp paper scam defrauded India
  8. "Telgi gets 13 years jail, Rs 1000 crore fine". Rediff India Abroad. 28 June 2007. http://www.rediff.com/news/2007/jun/28telgi.htm. பார்த்த நாள்: 27 May 2011. 
  9. https://timesofindia.indiatimes.com/india/abdul-karim-telgi-kingpin-of-fake-stamp-paper-scam-dies/articleshow/61244235.cms
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_கரீம்_தெலி&oldid=3809883" இலிருந்து மீள்விக்கப்பட்டது