அமராந்தேசியே

அமராந்தேசி (தாவர வகைப்பாட்டியல்: Amaranthaceae) ஒருபூவிதழ் வட்டமுடைய (Monochlamydeous) இருவிதையிலைக் குடும்பமாகும். அமராந்தேசியில் (Amaranthaceae) 64 பேரினங்களும் ஏறக்குறைய 800 சிற்றினங்களும் அடங்கியுள்ளன. இதற்கு அமரந்த் குடும்பம் (Amaranth family) என்ற பெயரும் உண்டு. இது வெப்ப மண்டலப் பகுதிகளில் (Tropics) முக்கியமாக ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் பரவியிருக்கின்றது.

ஒரு வகை அமராந்தேசி செடி

தென்னிந்தியாவில் இதன் 13 பேரினங்களும் 33 சிற்றினங்களும் இருக்கின்றன.[1]

பொதுப்பண்புகள்

தொகு

இதில் ஒரு அல்லது பல பருவச் (Annual or Perennial) செடிகளுண்டு. புதர்செடிகள் (Shrubs) குறைவு. இலைகள் தனித்தவை: மாற்று அல்லது எதிரமைவு (Opposite phyllotaxy) கொண்டவை: இலையடிச்சிதல்கள் இல்லை. மலர்கள் இருபாலானவை: சிலவற்றில் ஒரு பால் (Unisexual) மலர்களும் உண்டு: ஆரச்சமச்சீரானவை (Actinomorphic) ஒவ்வொரு மலருக்கும் சவ்வு போன்ற அல்லது மெல்லிய நிலைத்திருக்கக்கூடிய மலரடிச் சிதலுண்டு (Bract). இது போன்ற சிறு சிதல்கள் சோடியாக இருக்கும்.

 
அமராந்தேசி மலர்

மலர்கள் தனித்தோ, ஸ்பைக் (Spike) அல்லது ரெசிம் (Raceme) மஞ்சரியிலோ காணப்படும். பூவிதழ் வட்டம் ஓர் அடுக்கில் (Perianth) 3-6 இதழ்களுடன் இருக்கும். முற்றிலும் இணையாமலோ, சற்று இணைந்தோ உலர் தோற்றத்துடன் காணப்படும். மகரந்தத் தாள்கள் 5 உண்டு. இவை இதழ்களுக்கு எதிர்ப்புறமாக அமைந்திருக்கும். பெரும்பாலும் தாள்கள் இணைந்து குழல் போன்று அமைந்திருக்கும். ஒவ்வொரு மகரந்தப் பையும் 4 அல்லது 2 அறைகள் கொண்டது. சூற்பை 2-3 சூலக இலைகளினால் ஆக்கப்பட்டு ஓர் அறையுடன், மேல்மட்டத்தில் அமைந்திருக்கும். சூல்கள் கேம்பைலோடிரோபஸ் (Campylotropous) வகையைச் சார்ந்து ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டு அடித்தளச் சூல் அமைவுடன் (Basal Placentation) காணப்படும். சூலகத்தண்டும், சூலகமுடிகளும் 1-3 வரை இருக்கும். இதன் கனி, மேல் பாதியில் பிரியக்கூடிய வெடிகனி அல்லது சிறுகொட்டை (Circumscissile capsule) கனியாகும். கருமுளைசூழ் சதையைச் (Endosperm) சுற்றி வளைந்து காணப்படும்.

பொருளாதாரச் சிறப்பு

தொகு

முள்ளுக்கீரை (Amaranthus spinosus), பண்ணைக்கீரை (Celosia argentea), அல்மானியா நோடிஃபுளோரா (Allmania nodiflora), நாயுருவி ஆகியவைகளைச் செடிகளாக எங்குப் பார்த்தாலும் வளர்கின்றன. டிலாந்தீரா ஃபைக்காய்டிஸ் (Telanthera ficoldes), சீலோசியா (Celosia spp) காம்ஃபீரினா (Gomphrena spp) ஆகியவற்றின் சில சிற்றினங்கள் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. தண்டுக்கீரை (Amaranthus tricolor) (A.paniculatus), பொன்னாங்கண்ணிக்கீரை (Alternanthera sessilis), (Alternanthera triandra) ஆகியவை சமைத்து உண்ணப்படுகின்ற கீரை வகைகளாகும். பால் சுரத்தலை அதிகரிக்க முள்ளுக்கீரையைப் பயறு வகைகளுடன் கொதிக்க வைத்து மாடுகளுக்குக் கொடுப்பார்கள். நாயுருவியின் சாறு சிறுநீர்ப்போக்கியாகப் (Diuretic) பயன்படுகிறது. மேலும் இது சிறுநீரக மகோதரத்தை (Renal Dropsy) குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது. இதன் மஞ்சரி அல்லது விதைகளை அரைத்துப் பற்றுப்போட்டு பூச்சிக்கடியினால் ஏற்படும் நச்சு விளைவைப் போக்க முடியும்.

நூலோதி

தொகு
  1. Gamble J.S. FI. Pres. Madras. Vol.-II (Repr.) 815-826, 1956
  2. Lawrence G.H.M. Taxonomy of Vascular plants. Pp. 823, The Macmillan Co., New York, 1951.
  3. The Wealth of India, Vol.I pp. 254 CSIR pubi., New Delhi, 1948.
  4. Willis, J.C.A Dictionary of Flowering Plants & Ferns (7th Ed.Revd.Airy Shaw, H.K.) pp. 1214, Cambridge University Press, London, 1966.

மேற்கோள்கள்

தொகு

[2]

  1. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியீடு : அறிவியல் களஞ்சியம் தொகுதி 1 பக்கம் எண்:898
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமராந்தேசியே&oldid=3912427" இலிருந்து மீள்விக்கப்பட்டது