பறவை

(அலகு (பறவை) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

'இறக்கைகள் கொண்ட இருகாலி'யைப் பறவை எனக் கூறுவர்[3]. பறவைகள் முதுகெலும்புடைய இளஞ்சூட்டுக் குருதியுடைய, இறகுகளுடைய, முட்டையிட்டு இனம்பெருகும் விலங்குகளைக் குறிக்கும். பறவைகள்[4] இருகால்கள் உள்ள, தன் உடல்வெப்பம் காக்கும், முதுகெலும்புள்ள (முள்ளந்தண்டுள்ள) புள் என்றும் குரீஇ என்றும் சிறப்பித்துக் கூறும் வகையைச் சேர்ந்த, முட்டையிடும் விலங்குகள் ஆகும். முன்னங்கால்கள் அல்லது கைகள் போல் முன் உறுப்புகளாய் இறகுகளால் ஆன சிறகுகள் இருத்தலும், பறப்பதற்குத் துணையாக காற்றறைகள் கொண்ட இலேசான, பொள் எலும்புகள் கொண்டிருப்பதும் பறவைகளின் தனிச் சிறப்பியல்புகள் ஆகும். விலங்குகளிலேயே இறகுகள் உள்ள ஒரே வகுப்பு பறவைகள்தான். விலங்குகளில் பறவை என்னும் வகுப்பில் மொத்தம் 9672 பறவையினங்கள் உள்ளன என்று பறவையியல் அறிஞர்கள் கணித்து குறிப்புகள் எழுதியுள்ளார்கள்.[5]

பறவைகள்
புதைப்படிவ காலம்:
Late Cretaceous – Holocene,[1] 85–0 Ma
Red-crested turacoSteller's sea eagleமலை இருவாட்சிSouthern cassowaryGentoo penguinBar-throated minlaகாலணி-அலகு நாரைமாகேம்அனா ஓசனிச்சிட்டுவானவில் கிளிசாம்பல் நாரைகொம்பன் ஆந்தைWhite-tailed tropicbirdஇந்திய மயில்அத்திலாந்திக் கடற்கிளிஅமெரிக்க பூநாரைBlue-footed boobyவானவில் அலகுத் தூக்கான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
உயிரிக்கிளை:
வகுப்பு:
வாழும் வரிசைகள்
வேறு பெயர்கள்
  • Neornithes Gadow, 1883

அறிமுகம்

தொகு
 
பட்டாணிக்குருவி (grey tit, Parus major)

மனிதர்தம் விரல் நீளமும் (5 செ.மீ அல்லது இரண்டேகால் அங்குலம்) 1.8 கிராம் எடையுமே உள்ள மிகச் சிறிய பறவையான ஒரு வகை தாரிச்சிட்டு (ஓசனிச்சிட்டு) களிலிருந்து, 9 அடி உயரமும் 156 கிலோகிராம் எடையும் கொண்ட (பறக்காத) பெரிய தீக்கோழி மற்றும் ஈமியூ வரை, பறவைகள் பல பரும அளவுகளிலும் உள்ளன. அதிக எடையுள்ள 'பறக்கும்' பறவையான 'கானமயில்' (Great Indian Bustard) 18 கிலோ வரை பெருக்கும். பறவைகளில் மணிக்கு 160 கி.மீ விரைவில் பறக்கும் இனமும் உண்டு. நிலம், நீர், வானம் இவற்றில் விரைந்து நகரக்கூடிய விலங்கினங்கள் யாவற்றினும் மிக விரைந்து செல்லக்கூடியது பறவையினத்தைச் சேர்ந்த பொரி லகுடு (அ) அலையும் வல்லூறு(Falco peregrinus) என்னும் பறவையே. சில பறவைகள் நெடுந்தொலைவு ( 17,000 கி.மீ வரை) செல்ல வல்லன.

பல பறவைகள், பறப்பதையே முக்கியமான சிறப்பியல்பாகக் கொண்டிருப்பினும், சில பறவைகள் பறக்க முடியாதவையாகும். மற்றும் பல இனங்கள், குறிப்பாகத் தீவுகளில் வசிப்பவை பறக்குமியல்பை இழந்துவிட்டன. பறக்கமுடியாத பறவைகளுள், பென்குயின்கள், தீக்கோழிகள், நியூசிலாந்தின் கிவிகள், அழிந்துபோன டோடோக்கள் என்பன அடங்குகின்றன. பாலூட்டிகள் இன்மை அல்லது குறைவு என்ற சூழலில் (நியூசிலாந்து முன்பிருந்தது போன்ற சூழலில்) பறவைகள் பாலூட்டிகளின் சூழற்கூறை நிரப்பத் துவங்குகின்றன. இந்தப்படிமலர்ச்சியின்போது பறக்கும் தன்மையை அவை விடுக்கக்கூடும். மனிதர்கள் அல்லது மனிதர்களால் அறிமுகப்படுத்தப்படும் விலங்குகள் பறக்கமுடியாத பறவைகளின் வாழிடங்களுக்குள் வரும்போது, இப்பறவைகள் அழிந்து போவதற்கான வாய்ப்புகள் மிகுதி. பெரிய ஓக், பறக்கமுடியாத ரெய்ல் எனப்படும் ரால்லிடேக்கள் (Rallidae) கள், நியூசிலாந்தின் மோவாக்கள் என்பன இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

பறவைகளின் உள்ளமைப்பு மற்ற வகைகளின் கலவையாக உள்ளது. பறவைகள் முதுகெலும்புள்ளவை. பாலூட்டிகளைப் (Mammals) போல நான்கு அறை இதயத்தையும் வெதுவெதுப்பான இரத்தத்தையும் கொண்டவை. இதன் காரணமாக சீரான தன் உடல் வெப்பத்தையும், வேறுபட்ட சூழ்நிலைகளில் வாழும் தன்மையும் பெறுகின்றன. ஆனால் ஊர்வன (Reptiles) போன்று முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன.

உடலமைப்பு

தொகு
 
பறவையின் புற உறுப்புகளும் அமைப்பும்:1 அலகு, 2 தலை, 3 பாப்பா (கருவிழி) (Iris), 4 கண்மணி(Pupil), 5 Mantle, 6 புன் முன்னிறகு (Lesser coverts) 7 தோளிறகு (Scapulars), 8 நடு முன்னிறகு (Median coverts), 9 (துணையிறகு)Tertials, 10 பின்புறம் (Rump), 11 பறக்கும் இறகு (Primaries), 12 கழிவாய் (Vent), 13 தொடை (Thigh), 14 முட்டு (Tibio-tarsal articulation), 15 அடிக்கால் (Tarsus), 16 அடி (பாதம்) , 17 முன்னங்கால் (Tibia), 18 வயிறு (Belly), 19 பக்கம் (Flanks), 20 மார்பு (Breast), 21 கழுத்து (Throat), 22 அதள் (அல்) மணி (Wattle)

சிறகுகள்

தொகு

பறவைகளின் சிறகுகளில் உள்ள முக்கிய பொருள் 'கெரோட்டின்'. நமது தலைமுடி, விரல் நகம் அகியவற்றில் உள்ள அதே கெரோட்டின், ஆனால் நமது தலைமுடி, நகங்களைப் போல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போகாமல் ஓர் அளவுடன் நின்று விடும். இதனால் பெரும்பாலும் வளர்ந்த பறவைகள் வருடம் ஒரு முறையாவது சிறகுகளை உதிர்த்து புதுப்பித்துக் கொள்ளும். இந்த சிறகுகள் எடை குறைவான ஆனால் வலுவான பறப்பதற்கேற்ற 'ஏரோடைனமிக்' மேற்பரப்பை பறவைகளுக்கு அளிக்கிறது. பறக்கும் போது சிறகுகள் இடையே சிறு சிறு காற்று பொட்டலங்கள் ஏற்பட்டு மிக வெப்பம், குளிர் அகியவற்றிலிருந்து பறவைகளைக் காக்கிறது.

கண்கள்

தொகு

பறவைகள் பெரும்பாலும் கூரிய பார்வை உடையன. ஒரு கண்ணுக்கு மூன்று இமைகள் இருக்கும். மேல் இமை மனிதர்களின் கண் இமையைப் போன்றது. கீழ் இமை தூங்கும் போது மட்டும் மூடிக் கொள்ளும். இது தவிர பக்கவாட்டில் அலகின் அருகிலிருந்து துவங்கும் ஒரு மெலிதான தோல் உண்டு. இது ஒளி ஊடுருவக்கூடிய தோல், கண்களை ஈரப்படுத்தவும், காற்று, அதிக வெளிச்சத்திலிருந்து காக்கவும் உதவுகிறது.

காது

தொகு

பறவைக்கு காது மிக முக்கியமானது. ஆனால் முழுவதும் உள்புறமாகவே அமைந்துள்ளது. கண்ணுக்குச் சற்று கீழே சிறிய துளை இருக்கும். பெரும்பாலும் சிறிய இறகுகளால் மூடப்பட்டிருக்கும். பறவைகளுக்கு காது ஒலியைக் கேட்பதற்காக மட்டுமல்லாமல் பறக்கும் போது ஈடான உடல் நிலைக்காகவும் தேவைப்படுகிறது.

மூளை

தொகு

பறவைகளின் மூளை பலவிதங்களில் முழுமை பெற்றது. பறக்கும் போது விமானத்தைப் போல உடலில் அனைத்து இயக்கங்களின் ஒருங்கிணைப்பு, உள்ளுணர்வு, உடனடியாக உணர்ந்து கொண்டு திசை மாறுதல் போன்றவற்றை செயல்படுத்துகிறது. பறவைகளின் அறிவுத் திறனும் வியப்பூட்டுமாறு சிறப்பாக உள்ளது. மனித மூளையில் உள்ள சிந்திக்கும் பகுதியான பெருமூளைப் புறணி (Cereberal Cortex) பறவைகளில் மிகப் பின்னடைந்த நிலையிலேயே உள்ளது. ஆனால் மாந்தர்களுக்கும், பிற பாலூட்டிகளுக்கும் இல்லாத மீயடுக்கு மூளை (Hyperstriatum) என்னும் ஒரு பகுதி பறவைகளில் மூளையில் உள்ளது. பொதுவாக அறிவுத்திறனுக்கு உதவுவதாகக் கருதும் பெருமூளைப் புறணிக்கு மாறாக பறவைகளில் இந்த மீயடுக்கு மூளை இத்திறமைக்கு உறைவிடமாக இருக்கக்கூடும் எனக் கருதுகின்றனர், ஏனெனில் அறிவுத்திறம் கொண்டாதாகக் கருதப்படும் பறவைகளில் இப்பகுதி பெரிதாக இருக்கின்றது. இந்தப் பகுதியே பாடும் பறவைகள் பாட்டுக்களைக் கற்றுக் கொள்ள உதவுகிறது. பறவைகளின் அறிவுத்திறனுக்கும் இதுவே காரணமாக இருக்கலாமென்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.

அலகு

தொகு
 
பல்வேறு உணவுப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ற அலகுகள்

பறவைகளின் உணவுமுறைக்கேற்ப அலகுகள் அமைந்துள்ளன. வானம்பாடி போன்ற மலர்களில் தேன் குடிக்கும் பறவைகளுக்கு நீண்ட நுண்ணிய அலகு. கழுகு, ஆந்தை போன்ற ஊன்தின்னிப் பறவைகளுக்கு சதையைப் பிய்த்து உண்ண ஏற்ற உறுதியான கூர் அலகு. மீன்களை உண்டு வாழும் வாத்து போன்ற பறவைகளுக்கு வழுக்கவல்ல இரையை பிடித்துக் கொள்ள வாகான ரம்பம் போன்ற விளிம்புடைய அலகு. பழக்கொட்டைகளை உடைக்க உறுதியான அலகு, மரங்கொத்திப் பறவைக்கு உளி போன்ற உறுதியும் கூர்மையும் கொண்ட அலகு.

பறவைகள் வாழ்நாளில் பெரும்பகுதியை இரை தேடவும், உண்ணவுமே செலவழிக்கின்றன. அதிக எடை பறப்பதற்கு இடைஞ்சல் என்பதால் பறவைகளால் உடலில் உணவைச் சேமித்து வைக்க இயலாது. சிறிய பறவைகள் அடிக்கடி உண்பது அவசியமாகிறது.

பறவைகளில் சைவமும் அசைவமும் உண்டு. காக்கை போன்றன இரண்டையுமே உண்கின்றன. சில பறவைகள் சிறப்பாக குறிப்பிட்ட இரைகளை மட்டுமே உண்ணும். எடுத்துக்காட்டாக, எவர்கிளேட் கைட் என்ற பறவை நத்தைகளை மட்டுமே உண்ணும். பறவைகளின் வயிறு சிறப்புத் திறன் பெற்றது. கடினமான கொட்டைகள், செல்பிசு போன்றவற்றைக் கூட நொறுக்கி செரிமானம் செய்துவிடும். சில பழக்கொட்டை தின்னும் பறவைகள் சிறிய கூழாங்கற்களையும் சேர்த்து தின்கின்றன. இவை வயிற்றில் கொட்டைகளை நொறுக்க உதவுகின்றன. குஞ்சுகளுக்கு இரை எடுத்துச் செல்ல பல பறவைகள் வாய்க்குள் சிறிய பை போன்ற உறுப்புக்களைக் கொண்டுள்ளன.

உறைவிடம்

தொகு

இரவில் வேட்டையாடும் ஆந்தை போன்றவற்றைத் தவிர பெரும்பாலான பறவைகள் பகலில் விழித்து இரவில் உறங்குகின்றன. குஞ்சு பொரிக்கும் காலங்களில் மட்டுமே கூட்டில் உறங்குகிறது. மற்ற நேரங்களில் கிளையோ, மரப்பொந்தோ, சில சமயம் ஒற்றைக் காலிலோ கிடைத்த இடத்தில் உறங்கிக் கொள்ளும். அவைகளுக்கு மனிதனைப் போல நீண்ட நேரத்தூக்கம் தேவைப்படுவதில்லை, மூளைக்கு ஓய்வளிப்பதற்காக் உறங்குவதுமில்லை. தசைகளை தளர்த்தவும், சக்தியைச் சேமிக்கவும் மட்டுமே தூக்கம் தேவைப்படுகிறது.

உருமறைப்பு

தொகு

பல பறவையின் சிறகுகள் அவை வாழும் நிலத்திற்கு ஏற்றவாறும், அங்குள்ள மரஞ்செடி கொடிகளுக்கு ஏற்றவாறும், நிறத்திலும் சாயலிலும் ஒத்து உருமறைப்பு தன்மையைக் கொண்டிருப்பதால் அவற்றின் நிறமே அவற்றிற்கு தற்காப்பு அளிப்பதாக உள்ளன. உள்ளான், கானாங்கோழி போன்ற பறவைகள் மரங்களிலிருந்து விழும் தழைகளின் இடையிலும், புல் பூண்டு இவற்றின் இடையிலும் வாழ்கின்றன. அவற்றின் உடல் அமைப்பு வளைந்த கோடுகளையும் திட்டுக்களையும் கொண்டதாய் எளிதில் கண்டு கொள்ள முடியாதவாறு இருக்கின்றது. வேட்டையாடப்படுகின்ற கவுதாரி, காடை போன்ற பறவைகளின் நிறம் அவை வாழ்கின்ற வயல் மண்ணின் நிறம்போலப் பழுப்பாகவும் அங்கங்கே கரும்புள்ளிகள் உடையதாகவும் இருப்பதால், பக்கத்தில் போகும்போது கூட அவற்றை எளிதில் கண்டு கொள்ள முடியாது. கதிரவன் ஒளி பளிச்சென்று வீசும் பசுமையான தழைகள் அடர்ந்த இடங்களில் வாழும் பறவைகள் கரு நீலம், பச்சை , மஞ்சள், சிவப்பு, ஆகிய நிறங்களைக் கொண்டிருக்கின்றன. பகைவர்களின் கண்கள் கூசும்படியாக இந்த நிறங்கள் அமைந்துள்ளன.

வலிமையற்ற சில பறவைகளின் உருவம் வலிமையுள்ள வேறு இனத்தைச் சேர்ந்த பறவைகளின் உருவத்தை ஒத்திருப்பதாகவும் உள்ளன. வைரிபோலத் தோன்றும் கொண்டைக் குயில் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.[6]

பெரும்பாலான பறவைகள் வாழ்நாளில் அல்லது குறைந்தது ஒரு கூடல்காலத்திற்காவது ஒரே இணையுடன் வாழ்பவை. வழக்கம் போல் இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு. பாடுகின்ற பறவைகள் பாட்டாலேயே தங்கள் துணையைப் பிடிக்கின்றன. பெரும்பாலும் சத்தமாக நீளமாக பாடும் ஆணின் பாட்டிற்குத் தான் பெண் மயங்கி வந்து சேரும். மற்ற பறவைகள் தங்கள் இறகு அலங்காரத்தால் துணையை அசத்துகின்றன.

ஆண், பெண் இரண்டுமே முட்டையை அடைகாப்பதுண்டு. வெளிவரும் குஞ்சுகளில் பொதுவாக 10% மட்டுமே ஓர் ஆண்டு தாண்டி உயிர் வாழ்கிறது.

இடப்பெயர்ச்சி

தொகு

உணவுத் தேவைகளுக்காகவும் மிக வெப்பம், மிகவும் குளிர் கால நிலைகளை தவிர்ப்பதற்காகவும் பறவைகள் வருடாந்த இடப்பெயர்ச்சி செய்கின்றன. கடல் பறவைகள் மிக அதிக தூரம் (சில வகைகள் ஒரு வருடத்தில் 32,000 கிமீ வரை) பயணிக்கின்றன.

இடப்பெயர்ச்சி செய்யும் போது அது பல அடையாளங்களைக் கொண்டு சரியான இடத்திற்கு சென்று சேர்கிறது. பகலில் சூரியனின் திசையைக் கொண்டும், இரவில் சில நட்சத்திரங்களை அடையாளமாகக் கொண்டும், பூமியின் காந்த அலைகளைக் கொண்டும், சில நில அடையாளங்களைக் கொண்டும், சில தனிப்பட்ட ஒலி வேறுபாடுகளைக் கொண்டும் பாதையை உணர்ந்து கொள்கின்றன.

பறவைகள் கூட்டமாகச் செல்லும் போது 'V' போன்ற வடிவத்தில் பறப்பதைப் பார்த்திருக்கலாம். இவ்வாறு செல்லும் போது முதல் பறவையைத் தவிர மற்ற எல்லாப் பறவைகளும் முன்னால் செல்லும் பறவையின் இறக்கை வீச்சில் உருவாகும் காற்றழுத்தம் காரணமாக எளிதாக பறக்கிறது.

தனியே பறந்து செல்லும் முன்னனுபவமில்லாத (முன்துய்ப்பில்லாத) சில இளம் பறவைகள் சமயங்களில் வழி தப்பி அதன் இனம் செல்லும் வழக்கமான வழியை விட ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தள்ளி வந்து விடுவதையும் காணலாம்.

படிமலர்ச்சி

தொகு
 
தொல்சிறகியின் ஒரு மாதிரி ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில்

விஞ்ஞானிகள் தொன்மாக்களிலிலிருந்து பறவைகள் தோன்றினவா என்று ஆய்ந்திருக்கிறார்கள். டினோசாரின் ஒரு வகையான தெரொபோட் (Theropod) இனத்திலிருந்து பறவைகள் தோன்றின என்று ஒரு சாராரும், அதற்கு முன்பே தெகோடோன்ட்லிருந்து (Thecodont) (இது டினோசாரின் மரபுவழி முன்னோடி) பறவைகள் உருவானது என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். பறவைகளின் படிமலர்ச்சி (பரிணாம வளர்ச்சி) பற்றிய ஆய்வுகளில் தொல்லுயிர் படிவங்கள் பெரிதும் துணையாயிருக்கின்றன. இவற்றுள் 1861-ம் ஆண்டு செருமனியிலுள்ள பவேரியாவில் ஒரு சுண்ணாம்புக் காளவாயில் கிடைத்த புதைபடிவம் குறிப்பிடத்தக்கது. அது 14 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வா்ழ்ந்த தொல்சிறகி (Archeopteryx) என்ற பறவையினுடையது. வாயில் பற்கள், அசைக்கத்தக்க மூன்று விரல்கள், சிறகில் நகங்கள் என மரக்கிளைகளில் தொற்றித்தாவும் வசதிகளையும் பெற்றிருந்த அவ்விலங்கு தொன்மாக்களுக்கும் இன்றைய பறவைகளுக்கும் இடைப்பட்ட படிமலர்ச்சிநிலையில் இருந்திருக்கக் கூடும்.[7]

பறப்பதைப் பற்றியும் இரு கருத்துக்கள் உள்ளன. பறவைகளின் முன்னோர்கள் மரத்துக்கு மரம் தாவி அப்படியே பறக்கத் துவங்கினர் என்று சிலர் சொன்னாலும், நிலத்திலிருந்து இரைக்காகவும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் தாவித் தாவி பறக்கத் துவங்கியதாக பொதுவாக நம்புகின்றனர்.

இவ்வாறு இரு கருத்துக்கள் இருந்தாலும் 'கிரெடாசியசு' (Cretaceous) யுகத்தில், அதாவது 138 மில்லியன் ஆண்டுகள் முன்பிலிருந்து 65 மில்லியன் வருடங்கள் முன்பு வரை உள்ள காலகட்டத்தில், பறவைகள் இருந்ததற்கான சான்றுகள் கிட்டியுள்ளன.

பறவை இனங்கள்

தொகு

மனிதனும் பறவைகளும்

தொகு

பண்டைக்காலம் தொட்டே பறவைகள் கடவுளாக வணங்கப்பட்டும் கடவுளரின் ஊர்தியாக உருவகப்படுத்தப் பட்டும் வந்துள்ளன. மேலும் கோழி, வாத்து போன்ற பறவைகள் மனிதனுக்கு உணவாகவும் பயன்படுகின்றன.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

தொகு
  1. Lee, Michael S. Y.; Cau, Andrea; Naish, Darren; Dyke, Gareth J. (May 2014). "Morphological Clocks in Paleontology, and a Mid-Cretaceous Origin of Crown Aves". Systematic Biology (Oxford Journals) 63 (1): 442–449. doi:10.1093/sysbio/syt110. பப்மெட்:24449041. https://academic.oup.com/sysbio/article-pdf/63/3/442/9164850/syt110.pdf. 
  2. Brands, Sheila (14 August 2008). "Systema Naturae 2000 / Classification, Class Aves". Project: The Taxonomicon. பார்க்கப்பட்ட நாள் 11 June 2012.
  3. இந்தியாவில் பறவையியலின் தந்தை எனப்படும் சலிம் அலி இப்படிக் கூறுவார்
  4. பறவை என்பது ஒரு சிறப்பான பொருளில் இங்கு ஆளப்பட்டுளது. பறவை என்பது பறக்கும் எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும் என்றாலும் பொதுவாக இறகுகளால் ஆன சிறகுகளைக் கொண்ட, பொள்ளெலும்புகள் கொண்ட முதுகெலும்புடைய காக்காய்,குருவி, கழுகு போன்ற பறவையினங்களைக் குறிக்கும் பொதுச்சொற்களுள் ஒன்று. பறவை என்பது பிற இடங்களில் பறக்கும் பூச்சிகளாகிய பட்டாம்பூச்சி வண்டுகள் முதலிவற்றையும் குறிக்கும். இக்கட்டுரையில் உள்ள பறக்கும் விலங்குகளின் சிறப்பான பெயர் புள் என்பதாகும். மற்றொரு சிறப்பான சொல் குரீஇ என்பதாகும். புள் = பறவைப் பொது (கழகத் தமிழ் அகராதி), குரீஇ = பறவை (கழகத் தமிழ் அகராதி, சென்னை பல்கலைக்கழக அகராதி , பிங்கல நிகண்டு). எ.கா: குன்றத் திறுத்த குரீஇயினம் (புறநானூறு 19)
  5. Sibley, Charles G. and Monroe, Burt, L, Distribution and Taxonomy of Birds of the World, Yale University Press, New Haven and London, 1990
  6. ஜமால் ஆரா (1993). "பறவைகளைப் பார்". நூல். நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா. pp. 5–6. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2020.
  7. அலி, ச. முகமது (திசம்பர் 2007). இயற்கை: செய்திகள் சிந்தனைகள். பொள்ளாச்சி: இயற்கை வரலாறு அறக்கட்டளை.
  8. அலி, சலீம்; அலி, லயீக் பதே (2004). பறவை உலகம். புது தில்லி: நேசனல் புக் டிரஸ்ட். p. 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-237-4146-4. {{cite book}}: Check |first= value (help)

வெளி இணைப்புகள்

தொகு

பின்வருவனவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பறவை&oldid=3802084#அலகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது