அலெக்சாண்டர் குப்ரின்

(அலெக்ஸாண்டர் குப்ரின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அலெக்சாண்டர் இவானவிச் குப்ரின் (Aleksandr Ivanovich Kuprin, உருசியம்: Александр Иванович Куприн), (செப்டம்பர் 7 [யூ.நா. 26 ஆகத்து] 1870 - ஆகத்து 25, 1938) புகழ்பெற்ற உருசிய எழுத்தாளர். உருசிய சிறுகதைகளில் சாதனைகள் புரிந்தவர்.

அலெக்சாண்டர் குப்ரின்
Aleksandr Kuprin
குப்ரின்
குப்ரின்
பிறப்புஆகத்து 26 [யூ.நா. 7 செப்டம்பர்] 1870
நரோவ்ச்சாத், பென்சா வட்டாரம்
இறப்புஆகத்து 25, 1938(1938-08-25) (அகவை 68)
லெனின்கிராத்
தொழில்எழுத்தாளர், விமானி, நாடுகாண் பயணி
வகைசிறுகதைகள்
இலக்கிய இயக்கம்இயல்புவாதம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்இளைய காப்டன் ரீப்னிக்கொவ்

வாழ்க்கை

தொகு

7 செப்டெம்பர் 1870 ல் உருசியாவில் நரோவ்சாத் என்ற மாவட்டத்தில் பிறந்தார். அவரது தந்தை இவான் இவானவிச் குப்ரின் ஒரு அரசு ஊழியர். குப்ரினுக்கு ஒரு வயதாக இருக்கும்போதே அவர் வாந்திபேதியில் உயிரிழந்தார். வெகுவிரைவில் குடும்பம் மாஸ்கோவுக்கு இடம்பெயர்ந்தது. தாய் லியுபோவ் அலெக்ஸீனா குரினா டார்டார் இனத்தைச் சேர்ந்த சீமாட்டி. ஆனால் நிலங்களை இழந்து வறுமைப்பட்டவர். இதனால் குப்பரினுடைய ஏழாவது வயதில், அவரை அநாதைப் பள்ளிக்கு அனுப்பவேண்டிய கட்டாத்திற்கு அவரது தாய் ஆளானார்.

மூன்று ஆண்டுகளுக்ப் பின் குப்குப்ரின் மாஸ்கோ இராணுவப் பள்ளியில் உயர்கல்வி கற்றார். தொழில்முறை விமானமோட்டி சாகசங்களில் ஈடுபாடு கொண்டவர். பயிற்சி முடிந்த பின்னர் உருசியக் கிராமங்களில் நில அளவையாளராகவும் மருத்துவராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

சிறுவயதிலேயே இராணுவப் பள்ளியில் எதிர்கொண்ட அநீதியான நடைமுறையினாலும், அங்கு பின்பற்றப்பட்ட தனிமைச்சிறை போன்ற கடுமையான தண்டனைகளாலும், தாயாரால் நீதி நேர்மை குறித்த உயர்குணங்கள் ஊட்டி வளர்க்கப்பட்ட குப்ரின் இராணுவத்தின் மேல் நம்பிக்கை இழந்தார்.[1]

1897 இல் குப்ரின் பிரபல ருஷ்ய எழுத்தாளர் அன்டோன் செகவையும் நவம்பர் 1902 இல் மற்றோர் பிரபல எழுத்தாளர் மாக்சிம் கார்கியையும் சந்தித்தார். இருவருமே குப்ரினின் படைப்புகளைப் பெரிதும் பாராட்டினர்.

1901 இல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு குடிபெயர்ந்தார். பதிப்பகத்தாரின் மகள்களில் ஒருவரான மரியாவை மணந்தார். 1903 இல் லிடியா என்ற மகள் பிறந்தாள்.[1]

உருசியாவில் போல்ஷெவிக் புரட்சி நிகழ்ந்தபோது குப்ரின் அந்த புரட்சியால் மக்கள் கொடுமைக்குள்ளாவதைக் கண்டு கொதிப்படைந்தார். ‘என் பிரியத்துக்குரிய அனைத்தும் நொறுங்குகின்றன’ என மனமுடைந்தார். 1919 இல் நாட்டை விட்டு வெளியேறி பாரிசில் எளிய வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்.

பாரிசில் குப்ரின் வறுமையில் இருந்தார். பிழைப்புக்காக சுதந்திர இதழாளராகப் பணியாற்றினார். அங்கே இருக்கும்போது அவரால் எந்த இலக்கிய ஆக்கத்தையும் உருவாக்க முடியவில்லை. அவர் மனச்சோர்வுற்றும் தாய்நாட்டைப்பற்றிய ஏக்கத்துடனும் இருந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி உடல்நலத்தை இழந்தார்.

”என் நரம்புகள் உருசிய மண்ணுக்காக ஏங்குகின்றன” என்று அவர் மனமுடைந்து தன் நாட்குறிப்பில் எழுதினார். உருசிய அதிபர் ஸ்டாலினுக்கு அவர் மன்னிப்புக் கடிதம் எழுதி உருசியா திரும்ப அனுமதிக்கும்படி கோரினார். அவரது கோரிக்கையை ஸ்டாலின் ஏற்றார். குப்ரின் நாடு திரும்பியதை முதலாளித்துவ ஐரோப்பாவின் தோல்வி என்று இடதுசாரிகள் எழுதினார்கள். ஸ்டாலின் காலத்து உருசியாவில் எழுத்தாளர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக சொல்லப்படுவது அவதூறு என்பதற்கு அதுவே ஆதாரம் என்றார்கள்.

1937 மே மாதம் நாடு திரும்பிய குப்ரின் ‘நான் மிகவும் மனமகிழ்ச்சியுடன் இருக்கிறேன், என்னைச் சுற்றியுள்ளவர்கள் எல்லோரும் எனது சொந்த உருசி மொழி கேட்க. இங்கே ஒரு சிறப்பான வேலை நிகழ்கிறது’ என்று பேட்டி கொடுத்தார். அவருக்கு அங்கே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் லெனின்கிராடில் தங்கிய அவரால் அங்குள்ள உண்மை நிலையுடன் ஒத்துப்போக முடியவில்லை. ஸ்டாலினியத்தை துதித்து எழுதும்படி அவர் கட்டாயப்படுத்தப்பட்டார். அதற்கு அவர் மறுத்தார். ஆகவே அவர் பலவிதமான அழுத்தங்களுக்கு உள்ளானார்.

நாடு திரும்பியபின் குப்ரின் எதையுமே எழுதவில்லை. உருசியாவிற்கு மீண்டால் எழுத முடியும் என்ற அவரது கனவு வீணாகியது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1938 ஆகஸ்ட் 25 அன்று அவர் உயிர்துறந்தார். அவரது சடலம் வோல்கோவோ இடுகாட்டில் பிற எழுத்தாளர்களின் சமாதிகளுக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது.[1] 1979ல் அந்த சமாதியிடத்துக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது

நூல்கள்

தொகு

1896 ல் வெளிவந்த மலோஹ் என்ற குறுநாவல் குப்ரினை புகழ்பெறச்செய்தது. இரட்டையர்சண்டை (1905) அவரை உருசிய வாசகர்கள் நடுவே மிக விரும்பத்தக்கவராக நிலைநிறுத்தியது. ஆண்டன் செக்கோவ், மாக்சிம் கார்க்கி ஆகியோருக்கு நிகராக அவரும் கருதப்பட்டார்.

ஆங்கிலத்தில்

தொகு
  • The Last Debut (Poslednii debiut) (1889)
  • Psikheia (1892; translated as Psyche, 1929)
  • Lunnoi noch'iu (On a Moonlit Night, 1893)
  • V pot'makh (In the Dark 1893)
  • Doznanie (The Inquiry, 1894).
  • Moloch (1896)
  • Olesja (1898)
  • At the Circus (1902)
  • The Horse Thieves (1903)
  • Poedinok (1905; translated as The Duel, 1916)
  • The River of Life (1906)
  • Yama (The Pit) (1909–1915)
  • The Garnet Bracelet (1911)
  • Iunkera (Junkers, written 1928–1932, published 1933) (autobiographical)

தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொகு

தமிழில் குப்ரினின் யாமா தி பிட் என்ற நாவல் பலிபீடம் என்றபேரில் புதுமைப்பித்தனால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

கார்னெட் பிரெஸ்லெட் என்ற நாவல் நா.முகமது செரீபு மொழியாக்கத்தில் ‘செம்மணி வளையல்’ என்றபேரில் வெளிவந்துள்ளது (ராதுகா பிரசுரம்). இதில் அவரது புகழ்பெற்ற கதைகளான மலோஹ், ஒலேஸ்யா, காம்பிரீனுஸ், எமரால்டு போன்றவை உள்ளன.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சாண்டர்_குப்ரின்&oldid=2793452" இலிருந்து மீள்விக்கப்பட்டது