அல் எயின் அருங்காட்சியகம்

அல் எயின் அருங்காட்சியகம் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அல் எயின் பாலைவனச்சோலையின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இது 1971 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில், தொல்லியல், இனவரைவியல், பரிசுப் பொருட்கள் என்னும் மூன்று முக்கியமான பிரிவுகளின் கீழ் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள காட்சிப் பொருட்கள் ஐக்கிய அரபு அமீரக வாழ்க்கையின் பல அம்சங்களை எடுத்துக் காட்டுகின்றன. இவற்றுள் நிழற்படங்கள், பெதூ இன மக்களின் அணிகலன்கள், இசைக் கருவிகள் ஆயுதங்கள் போன்ற பல வகையான பொருட்களும் அடங்கும்.

தொல்லியல் பிரிவில் பழமை வாய்ந்த பல பொருட்கள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. சில கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள இலி தொல்லியல் பூங்காவில் இருந்து கிடைத்த ஏராளமான தொல் பொருட்களும் இங்கே வைக்கப்பட்டுள்ளன.

பரிசுப் பொருட்கள் பகுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் முன்னாள் அதிபரான சேக் சயத் பி சுல்தான் அல் நகியான் வாழ்ந்த காலத்தில் அவருக்குக் கிடைத்த பரிசுப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் தங்கத்தினால் செய்யப்பட்ட வாள், வெள்ளியினால் செய்யப்பட்ட கட்டாரிகள், பொன்னால் செய்த ஒரு பேரீச்ச மரம் என்பன அடங்கும்.

இந்த அருங்காட்சியகமும், 1910 ஆம் ஆண்டில் கட்டப்பட சேக் சுல்தான் பின் சயத் கோட்டை அல்லது கிழக்குக் கோட்டை எனப்படும் கோட்டையும் ஒரே வளாகத்தினுள்ளேயே அமைந்துள்ளன.