அ. குமாரசாமிப் புலவர்

(அ. குமாரசுவாமிப் புலவர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் (Kumaraswamy Pulavar, சனவரி 18, 1854 – மார்ச்சு 23, 1922) என அழைக்கப்படும் அ. குமாரசாமிப்பிள்ளை இலங்கையைச் சேர்ந்த புலவரும், தமிழறிஞரும், பதிப்பாளரும், உரையாசிரியரும் ஆவார். ஆங்கிலேயக் குடியேற்ற ஆட்சிக்காலத்தில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தவர்களில் இவரும் ஒருவராவர்.

அ. குமாரசுவாமிப் புலவர்
சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர்
பிறப்புகுமாரசுவாமி
ஜனவரி 18, 1854
சுன்னாகம், யாழ்ப்பாணம், இலங்கை
இறப்புமார்ச்சு 23, 1922(1922-03-23) (அகவை 68)
யாழ்ப்பாணம், இலங்கை
இறப்பிற்கான
காரணம்
வயிற்றுழைவு நோய்
தேசியம்இலங்கைத் தமிழர்
கல்விதமிழ் பண்டிதர்
அறியப்படுவதுசைவசமய மறுமலர்சிக்கு வித்திட்டவர்
சமயம்சைவம்
வாழ்க்கைத்
துணை
சின்னாச்சியம்மை
பிள்ளைகள்அம்பலவாணபிள்ளை, முத்துகுமாரசுவாமிபிள்ளை, விசாலாட்சியம்மை

பிறப்பு

தொகு

யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் என்ற ஊரில் பிறந்த குமாரசுவாமிப் புலவரின் தந்தை அம்பலவாணர் தமிழ் இலக்கிய இலக்கணங்களை தமது பெரிய தகப்பனாராகிய முத்துக்குமாரக் கவிராயரிடம் கற்றுத் தேறியவர். அத்துடன் சைவ சமய ஈடுபாடும் கொண்டவர். தென்கோவை குமாருடையார் மகள் சிதம்பராம்மை என்பவரை 1840 வைகாசி ஐந்தாம் நாள் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் முறையே சிவகாமிப்பிள்ளை, குமாரசுவாமி மற்றும் காமாட்சிப்பிள்ளை என மூன்று மகவுகளைப் பெற்றனர். 1854 ஆம் ஆண்டு தை 18 ஆம் நாள் குமாரசுவாமி பிறந்தார்[1].

கல்வி

தொகு

குமாரசுவாமிக்கு ஐந்து வயதானதும், தந்தையார் குலகுருவான வேதாரணியம் நாமசிவாய தேசிகர் என்பவரை அழைத்து இவருக்கு ஏடு தொடக்குவித்தார். பின்னர் மல்லாகம் ஆங்கிலப் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். இவர் ஆங்கிலத்தில் அடிப்படை புலமை அடைந்த பின்பு, இவரை ஆங்கில பாடசாலையை விட்டு விலக்கிய இவரது தந்தையார், சுண்ணாகம் முருகேச பண்டிதரிடம் இவரை தமிழ் கல்வி பயிலுமாறு அனுப்பினார். முருகேச பண்டிதரிடம் தமிழ்க் கல்வி கற்ற காலத்தே இவருடன் கூட கல்வி கற்றவருள் குறிப்பிடத்தக்கவர்கள் ஊரெழு சு. சரவணமுத்துப்புலவர், மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, சுண்ணாகம் மு. வைத்தியநாதபிள்ளை போன்றோர் ஆவர். இவர் மாணவராக இருந்த போது, சொல்லும் பொருளும் சுவைபட பாடுவதிலும், கட்டுரை எழுதுவதிலும், சொற்பொழிவு ஆற்றுவதிலும் திறமை பெற்றிருந்தமையால் இவரைப் புலவர் என்று பட்டப் பெயரால் அழைத்தனர். இப்பட்டப் பெயரே இவருக்கு பிற்காலத்தில் இயற்பெயராகிற்று என்று புலவரது மாணவராகிய புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர் செய்யுள் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்[2].

பாரேறு சுன்னைக் குமார சுவாமிப் புலவனுக்கே
ஏரே இடுகுறி யாகிப் புலவரெனும் பெயர்தான்
பாரேறு மற்றைப் புலவருக்குக் காரணப் பண்புறலற்
சீரே இடுகுறி காரண மாகித் திகழ்ந்ததுவே.

நாவலருடன் தொடர்பும் வடமொழிக் கல்வியும்

தொகு
 
உடுவில் பொதுசன நூலகவளாகத்தில் அமைந்துள்ள குமாரசாமிப்புலவரின் சிலை

புலவரவர்கள் கல்வி கற்று வரும் காலத்தே, தமிழகம் சென்று தமிழ் மற்றும் சைவத் தொண்டாற்றி விட்டு தாயகம் திரும்பிய ஆறுமுக நாவலருக்கு வெகு சிறப்பான வரவேற்பு விழா ஒன்றை யாழ்ப்பாண மக்கள் 1869 ஆம் ஆண்டு நடாத்தினர். இவ்விழாவில் புலவரவர்கள் நாவலர் பெருமானை முதலில் நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றார். இதையடுத்து நாவலர் சைவ சொற்பொழிவுகளுக்கு தவறாது சென்று செவிமடுத்து மகிழ்ந்த புலவருக்கு, உடன் கற்ற நண்பன் ஊரெழு சரவணமுத்துப் புலவர் மூலம் நாவலர் அறிமுகம் கிடைத்தது. நாவலரும் தனது பழைய நண்பனாகிய முத்துக்குமாரக் கவிராயாரின் வழிதோன்றல்தான் புலவர் என்றறிந்து, புலவரின் தமிழ்க் கல்விக்கு ஊக்கமளித்தது மட்டுமல்லாது வடமொழி மற்றும் சைவசித்தாந்தகளை முறையே கற்குமாறு அறிவுரை வழங்கினார். இந்நட்பு நாவலரின் மறைவு வரை மிக நெருக்கமாக இருந்தது என்பதை, புலவர் நாவலர் மீது கூறிய சரமகவிகள் நன்கு விளக்கும்.[1].

நாவலரின் அறிவுரைப்படி புலவரும் வடமொழி கற்கும் பொருட்டு, நெருங்கிய உறவினரும், கற்பிட்டி நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளரும், நான்கு மொழிகளில் புலமை உடையவருமாகிய நாகநாத பண்டிதரை அணுகி வடமொழி கற்று வரலானார். நீதிசாரம், இராமோதந்தம், சாணக்கிய சதகம், முக்தபோதம், மாகம், இரகுவமிசம், சாகுந்தலம் முதலிய வடமொழி நூல்களை முதலில் புலவரவர்கள் கற்றுத் தெளிந்தார். பண்டிதர் வேலை மாற்றம் பெற்று கற்பிட்டி சென்ற பின்னர், தபால் மூலம் புலவரின் கல்வி தொடர்ந்தது. இவ்வாறு பண்டிதரால் மொழிபெயர்த்து அனுப்பப்பட்ட நூல்களுக்குள் ஒன்றாகிய இதோபதேசம் புலவரால் 1886 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. இங்கனம் வடமொழியைச் செவ்வனே கற்றதன் பலனாகப் புலவர் பல வடமொழி நூல்களை மொழி பெயர்த்து தமிழில் பாடியுள்ளார். மேலும் சைவசித்தாந்த அறிவைப் பெருக்கும் பொருட்டு தனது குடியின் குரவராகிய நமசிவாய தேசிகரை அணுகி சைவசித்தாந்தம் மற்றும் சைவச் சான்றோர் வரலாறு முதலியவற்றை கற்கலானார். புலவரவர்கள் மேல் கூறிய தனது முக்குரவருக்கும் தான் இயற்றிய மேகதூதக் காரிகை என்னும் நூலின் குரு வணக்கச் செய்யுளில் வணக்கம் கூறி உள்ளார்.

வேறு புலவரை நாடுதல்

தொகு

புலவரின் தமிழ் குரவர் முருகேச பண்டிதர் தமிழகம் சென்ற சிறிது காலத்தில், ஆறுமுக நாவலர் இறந்தார். இதனால்ப் புலவர் தமிழ் இலக்கியம், இலக்கணம், சைவசித்தாந்தம் முதலியவற்றில் ஏற்பட்ட சந்தேகங்களை தீர்க்கும் பொருட்டு முறையே அளவெட்டி கனகசபைப் புலவரிடமும், இணுவில் நடராசையரிடமும் வினாவித் தெளிந்தார். புலவர் தனக்கு கம்பராமாயணத்தில் ஏற்பட்ட சந்தேகங்களை நீக்க, கவித்தலம் துரைச்சாமி மூப்பன் இயற்றிய கம்பராமாயண கருப்பொருளுரை என்னும் நூலை அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பெற முடியாததால், துரைச்சாமி மூப்பன் அவர்கள் பேரில் சிட்டுக்கவி ஒன்றை வரைந்து அவருக்கு அனுப்பினார். இச்சிட்டுக்கவியால் மகிழ்வுற்ற துரைச்சாமி மூப்பன் கம்பராமாயண கருப்பொருளுரை என்னும் நூலையும் தாம் இயற்றிய வேறு சில நூல்களையும் அனுப்பி வைத்தார்.[1]

ஆசிரியர் பணி

தொகு

சி. வை. தாமோதரம்பிள்ளை 1876 ஆம் ஆண்டு ஆவணி 10ம் நாள் யாழ்ப்பாணம், ஏழாலையில் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவினார். இப்பாடசாலையில் முருகேச பண்டிதரும் புலவரும் முறையே தலைமையாசிரியராகவும் உதவியாசிரியராகவும் பணியமர்த்தப்பட்டனர். 1878 ஆம் ஆண்டு தொடக்கத்தில் முருகேச பண்டிதர் தமிழகம் செல்ல நேரிட்டதால் புலவரவர்களை தலைமை ஆசிரியராக பணியமர்த்தினார் தாமோதரம்பிள்ளை. புலவரிடம் தனது பாடசாலைப் பொறுப்புக்கள் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு அரசுப் பணி நிமித்தம் தமிழகம் பயணமானார். ஆறுமுகநாவலர், முருகேச பண்டிதர், கொக்குவில் ச. சபாரத்தினமுதலியார், வித்துவசிரோன்மணி ச. பொன்னம்பலபிள்ளை போன்ற மூத்த அறிஞர்களால் ஆண்டுதோறும் இப்பாடசாலை மாணவர்களின் திறமை சோதிக்கப்பட்டது. இச்சோதனைகளைப் பற்றிய அறிக்கைகள் சென்னைப் பட்டணத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களுக்கு அனுப்பப்பட்டது. புலவரின் கற்பிக்கும் திறமையால் தமது பாடசாலை வளர்ச்சி அடைவதை, நேரில் பார்த்தும் சோதனையறிக்கைகள் மூலமும் அறிந்து மகிழ்ச்சி எய்திய தாமோதரம்பிள்ளை புலவருக்கு எழுதிய கடிதம்:-[1]

சென்னை,
பிரமாதீச ௵மாசி ௴ 22 ௳ (1880)
நின்னிரு பங்கண்டு நென்னலென் றன்மன நெக்குருகித்
தன்னிற் கரைந்தது தானென்சொல் கேனேத்துந் தாங்குமொரு
வன்னெஞ் சுளேனெனு மாற்றம்பொய்யாது
டின்ன மிவருனைப் போற்குமார சாமி யெனக்கன்பரே.
இங்ஙனம்,
அன்பன்,
சி. வை. தாமோதரம்பிள்ளை

புலவரின் மாணாக்கர்கள்

தொகு

ஏழாலை சைவபிரகாச வித்தியாசாலையில் புலவரிடம் தமிழ் கற்று தெளிந்தவர்களில் , வித்துவான் சிவானந்தையர்(1873 -1916), தெல்லிப்பழை பாலசுப்ரமணிய ஐயர், தெல்லிப்பழை சுப்ரமணியபிள்ளை, இளவாலை க. சங்கரப்பிள்ளை, தெல்லிப்பழை நா. மயில்வாகனம்பிள்ளை, மாவிட்டபுரம் விசுவநாத முதலியார், கையிட்டி பொன்னையர், சுண்ணாகம் மாணிக்கதியாகராச பண்டிதர், ஏழாலை வி. தம்பையாபிள்ளை, கொக்குவில் இளையதம்பிப்பிள்ளை முதலியோர் குறிப்பிடத்தக்கவர்களாக விளங்கினர். இவர்களுக்குள் ஆழ்ந்த கல்வியறிவும் செய்யுள் புனையுமாற்றலும் நூலுரைகள் இயற்றும் திறமையும் பெரிதும் பொருந்தி விளங்கியவர் சிவானந்தையராவர். இவர் தருக்க சங்கிரக மொழிபெயர்ப்பு, புலியூர்ப் புராணம், புலியூரந்தாதி, சனிதுதி முதலிய நூல்களை இயற்றியுள்ளார். மாணிக்கதியாகராசப் பண்டிதர் கதாப்பிரசங்கஞ் செய்வதிலும், தம்பையாபிள்ளை புராண படனஞ் செய்வதிலும் சிறந்து விளங்கினர்.

இல்வாழ்வு

தொகு

1884 ஆம் ஆண்டு உடுவில் மயில்வாகனம், நாகமுத்தம்மையார் தம்பதியினரின் மகளாகிய சின்னாச்சியம்மையாரை புலவருக்கு மணம் முடித்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால் புலவரின் பெற்றோர், தமக்கையார் முதலியோர் அடுத்தடுத்து இறந்தமையால் தடைப்பட்ட திருமணம் 1892 இல் நடந்தது. இவர்களுக்கு விசலாட்சியம்மையார் (1893-1925) என்னும் ஒரு மகளும், அம்பலவாணர் (1895-1974), முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை (1900-1987) என இரு மகன்களும் பிறந்தனர். மகன்கள் இருவரும் தமிழ்க் கல்வியில் பெரிதும் சிறந்து விளங்கி, யாழ்ப்பாணத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றினர். புலவரின் இளைய மைந்தர் சென்னை லயோலாக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும் 1930-1932 காலப்பகுதியில் பணியாற்றியுள்ளார். மேலும் மைந்தர்கள் இருவரும் புலவரின் நூல்கள் மற்றும் முத்துகுமாரகவிராயர் நூல்கள் எல்லாவற்றையும் பதிப்பித்துள்ளார்கள்.[3]

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தில்

தொகு

1913ஆம் ஆண்டு சென்னை அரசு தமிழ் அகராதி ஒன்றைத் தொகுக்கும் பொருட்டு பாதிரியார் சாண்டிலர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இக்குழுவினர் அகராதியின் மாதிரி நகல் ஒன்றை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்திற்கு அனுப்பினர். சங்கத்தினர் இதனை ஆராய்ந்து அறிக்கை வரையும் பொறுப்பை புலவரிடம் ஒப்படைத்தனர். 1913 ஏப்ரல் 4 இல் இடம்பெற்ற சங்கக் கூட்டத்தில் புலவரின் இவ்வறிக்கை நீண்ட தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. புலவரால் அறிக்கையில் கூறப்பட்ட பிழைகள் எல்லாவற்றையும் வாசித்து அறிந்த சாண்டிலர் யாழ்ப்பாணம் வந்து புலவரை உடுவில் மகளிர் கல்லூரியில் சந்தித்து பல தடவை அகராதி தொடர்பாக கலந்துரையாடினார். சாண்டிலர் புலவரின் அறிவுரைப்படி பல திருத்தங்களை அகராதியில் செய்திருந்தார். புலவர் தனது வாழ்நாள் முழுவதும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராக விளங்கி, அதன் சார்பாக பல கட்டுரைகளும் சொற்பொழிவுகளும் வழங்கியுள்ளார்.[1]

வண்ணார்பண்ணை நாவலர் பாடசாலை

தொகு

சி. வை .தாமோதரம்பிள்ளை புதுக்கோட்டையில் நீதிபதிப் பணியிலிருந்து இளைப்பாறிய பின் அவரது உடல் வளமும், பொருள் வளமும் நலிவுற்ற காரணத்தால், ஏழாலை சைவப்பிரகாசப் பள்ளிக்கூடம் 1898 இல் மூடப்பட்டது. புலவர் வேலையில்லாது இருந்த காலத்தில் நீதிபதி உடுப்பிட்டி கு. கதிரவேற்பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர் தொகுத்த தமிழ்ச் சொல் அகராதியை தொகுக்கும் பொருட்டு உதவி வந்தார். மேலும் இக்காலத்தில் புலவர் யாழ்ப்பாணம் வைதிக சைவபரிபாலன சபையில் முக்கிய உறுப்பினராக இருந்தமையால், சபை சார்பாக பல கோவில்களுக்கு சென்று சைவத்தின் சிறப்பு பற்றி சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். ஆறுமுக நாவலரால் 1848 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையின் தலைமை ஆசிரியர் திரு ா . வைத்திலிங்கம்பிள்ளை நோய்வாய்ப்பட்டு இறந்ததை அடுத்து, 1902 அக்டோபர் 1 இல் புலவர் அப்பதவியில் அமர்த்தப்பட்டார். இங்கு புலவர் தமது வாழ்நாள் முழுவதும் பணியாற்றி வந்துள்ளார். இங்கு இவர் தமிழ் இலக்கண இலக்கியம், சைவ சித்தாந்தம், மற்றும் வடமொழி இலக்கண இலக்கியம் முதலியவற்றை கற்பித்துள்ளார்.[3]

பிற்கால மாணாக்கர்கள்

தொகு

1898 ஆம் ஆண்டுக்குப் பின் புலவரிடத்தில் கல்வி கேட்டுத் தெளிந்தவர்களில் பலர் வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் புலவரிடத்தில் கற்றவர்கள், சிலர் புலவருடைய வீட்டுக்கு சென்று கற்றவர்களாவர். இவர்களுள் முக்கியமானவர்கள், இளவாலை க. சங்கரப்பிள்ளை, கொக்குவில் சீ. முருகேசையர், கந்தரோடை அ. கந்தையாப்பிள்ளை, வட்டுக்கோட்டை க. சிதம்பரநாதன், வண்ணார்பண்ணை ஆ. சண்முகரத்தின ஐயர், புன்னாலைக்கட்டுவன் சி. கணேசையர், தென் கோவை ச. கந்தையாப் பண்டிதர், உடுவில் வ. மு. இரத்தினேசுவர ஐயர், உடுவில் மு. ஜகநாதையர், காரைநகர் ச.பஞ்சாட்சர ஐயர், இருபாலை சி. வேதாரணிய தேசிகர், இருபாலை சி. தியாகராசபிள்ளை, தாவடி மு.பொன்னையாபிள்ளை, நாயன்மார்கட்டு செ. சிவசிதம்பரப்பிள்ளை, நீர்வேலி வி. மயில்வாகனப்பிள்ளை, தெல்லிப்பழை மேற்கு சி. கதிரிப்பிள்ளை, வேதாரணியம் தி அருணாசல தேசிகர், சிறுப்பிட்டி த. கார்த்திகேயப்பிள்ளை, நல்லூர் க. குருமூர்த்தி சிவாசாரியார், மட்டுவில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, மட்டக்களப்புப் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை முதலியோராவர். இவர்களுக்குள் புன்னாலைக்கட்டுவன் சி. கணேசையர் புலவரைப் போல் ஆழ்ந்த இலக்கண அறிவு கொண்டிருந்தமையால் பிற்காலத்தில் தொல்காப்பியக்கடல் என அழைக்கப்பட்டவர்; புலவரின் மறைவுக்குப் பின் புலவரின் வரலாற்றை எழுதியவரும் இவரே. மேலும் இருபாலை சேனாதிராசா முதலியாரின் வழித்தோன்றலாகிய தென்கோவை கந்தையா பண்டிதர், கொழும்பு அரசினர் ஆசிரியர் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகவும் வித்தகம் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். கணேசையரும் கந்தையா பண்டிதரும் பிற்காலத்தில் ஈழ நாட்டின் சிறந்த தமிழறிஞர்களாக விளங்கினர்.[1]

மதுரைத் தமிழ்ச் சங்கம்

தொகு

1901ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த பொ. பாண்டித்துரைத் தேவர் புலவரின் திறமைகளைக் கேள்வியுற்று புலவரை சங்க உறுப்பினராக்கும் பொருட்டு 1902 அக்டோபர் 17 இல் கடிதம் மூலம் வேண்டியிருந்தார். இதற்கு இணங்கிய புலவர், பல கட்டுரைகள் வரைந்து சங்கத்தின் பத்திரிகையாகிய செந்தமிழுக்கு அஞ்சல் செய்துள்ளார். மேலும் சங்கத்தினால் நடத்தப்பட்ட சோதனைகளுக்கு வினாத்தாள்களும் எழுதி அனுப்பியுள்ளார். 1909 ஆம் ஆண்டு புலவர் தமிழ்நாடு சென்ற போது தேவரினால் வரவேற்கப்பட்டு, சங்கப் புலவர்களுக்கு அறிமுகம் செய்து கௌரவிக்கப்பட்டார். மீண்டும் 1914 ஆம் ஆண்டு தமிழகம் சென்றிருந்த போது, சங்கத்தின் தலைவரான இராசராசேசுவர சேதுபதி மன்னவரால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். புலவர் இறந்தபோது அவரது 21 ஆண்டுத் தமிழ் தொண்டைப் பாராட்டி இச்சங்கத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் புலவரின் கடைசி நூலாகிய இராமோதந்தம் 1923 ஆம் ஆண்டு இச்சங்கத்தால் பதிப்பித்து வெளியிடப்பட்டது.[3].

இறுதி நாட்கள்

தொகு

1922, மார்ச்சு 10 இல் புலவரை சுரமும் வயிற்றுழைவு நோயும் வருத்தத் தொடங்கின. மருத்துவத்தால் நோய் தணியாது, 1922 மார்ச்சு 23 அதிகாலை மூன்றரை மணியளவில் உயிர் துறந்தார். புலவர் நோயுற்ற காலத்தே அங்கு இருந்து பணிவிடை புரிந்த, அவரது மாணவனாகிய பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை சுடுகாட்டில் புலவரின் உடல் எரியூட்டப்பட்ட போது பின்வரும் இரங்கற்பாவினால் தனது குரவருக்கு இறுதி வணக்கம் கூறினார்:

செந்தமிழும் ஆரியமுந் தேர்ந்து வீறித் தேயமேலாம் சென்றிலகும் சீர்த்தி ஒன்றே
இந்தநில மிசையிருப்ப இணையி லாத எண்ணில்பல கவிதழைத்த இனிய வாயும்,
அந்தமிலாக் கவிகள்பல எழுதி வைத்த அம்புயநேர் திருக்கரமும், அந்தோ! அந்தோ!
இந்தனத்திற் செந்தழலில் உருகி வீய யாமிதனைப் பார்த்திருத்தல் என்ன! என்ன!

புலவரின் செய்யுள் நூல்கள்

தொகு

குமாரசாமிப் புலவர் தொடக்கக் காலத்தில் இயற்றிய செய்யுள்கள், பதிகம், ஊஞ்சல், சிந்து, இரட்டைமணிமாலை, அட்டகம், கும்மி மற்றும் மொழிபெயர்ப்பு நூல்களாக விளங்கின.

பதிகங்கள்

தொகு
  • வதுளை கதிரேசன் பதிகம் (1884)
  • வதுளை மாணிக்கவிநாயகர் பதிகம் (1884)
  • மாவைப் பதிகம் (1892)
  • துணைவை அரசடி விநாயகர் பதிகம் (1894)
  • அமராவதி பூதூர் பாலவிநாயகர் பதிகம்(1897)

ஊஞ்சல்கள்

தொகு
  • வதுளைக் கதிரேசன் ஊஞ்சல் (1884)
  • துணைவை அரசடி விநாயகர் ஊஞ்சல் (1889)
  • கீரிமலை நகுலேசர் ஊஞ்சல் (1896)
  • ஏழாலை அத்தியடி விநாயகரூஞ்சல் (1897)
  • கைலாய பிள்ளையார் ஊஞ்சல் (1904)
  • கோப்பாய் வெள்ளெருவை விநாயகர் ஊஞ்சல் (1905)
  • விளிசிட்டி பொற்கலந்தம்பை பைரவர் ஊஞ்சல் (1912)
  • தெல்லிப்பழை தில்லையிட்டி அம்மன் ஊஞ்சல் (1915)
  • பன்னாலை வள்ளிமலை கந்தசுவாமி ஊஞ்சல் (1916)
  • அராலி முத்துமாரியம்மான் ஊஞ்சல் (1921)

வேறு சிற்றிலக்கிய நூல்கள்

தொகு
  • வதுளைக் கதிரேசன் சிந்து (1884)
  • மாவையிரட்டை மணிமாலை (1896)
  • நகுலேசர் சதகம் (தசகம்) (1896)
  • அத்தியடி விநாயகர் அட்டகம் (1897)

கும்மி

தொகு
  • மிலேச்சமதவிகற்பகக் கும்மி (1888)

மொழிபெயர்ப்புச் செய்யுள்கள்

தொகு
  • ஏகவிருத்தபாரதம் முதலியன (1896)
  • மேகதூதக் காரிகை (1896)
  • சாணக்கிய நீதிவெண்பா (1914)
  • இராமோதந்தம் (1921)

வசன அல்லது உரைநடை நூல்கள்

தொகு
  • திருக்கரைசைப் புராண பொழிப்புரை (1890)

இப்புராணம் திருகோணமலைக்கு அருகில் உள்ள கரைசையம் என்னும் மகாவலி ஆற்றங்கரையில் உள்ள இடத்தில் அமைந்துள்ள சிவன் திருக்கோவிலின் சிறப்புரைக்கும்.இது சூதமுனிவரால் வடமொழியில் இயற்றப்பட்ட ஒரு புராணமாகும். இதனை தமிழில் இயற்றியவர் யாவர் என்று புலப்படவில்லை. திருகோணமலை வாழ் நண்பரான வே அகிலேசபிள்ளை விரும்பியவாறு, இப்புராண பொழிப்புரையை புலவர் எழுதியுள்ளார்.

  • சூடாமணி நிகண்டு முதல் தொகுதிப் பதப்பொருள் விளக்கம் (1896)
  • சூடாமணி நிகண்டு இரண்டாம் தொகுதிப் பதப்பொருள் விளக்கம் (1900)
  • சூடாமணி நிகண்டு முதலைந்து தொகுதிப் பதப்பொருள் விளக்கம் (1900)

சூடாமணி நிகண்டு என்னும் நூல்ளுள் காணப்படும் தமிழ் சொற்களுக்கு பின்கலநிகண்டு மற்றும் பல இலக்கண நூல்களின் உதவியோடும், வடமொழிச் சொற்களுக்கு இலிங்கபட்டியம், அபிதநிகம், மகாவியாக்கியானம் போன்ற நூல்கள் உதவியோடு புலவர் தனது பொருள் விளக்கத்தை எழுதியுள்ளார். இந்நூலில் தெளிவற்றுக் கிடந்த பல சொற்களுக்கு பொருள் விளக்கம் கூறுவதன் மூலம் தமிழ்க் குரவரும், அதனைக் கற்போரும் பயனடையக்கூடியதாகயுள்ளது.

  • இலக்கணசந்திரிகை (1897)

தமிழில் அகராதி எழுதிய உடுப்பிட்டி கு கதிரவேற்பிள்ளை விரும்பியவாறு எழுதப்பட்ட சொல்லியல் ஆய்வு நூலாகும். இதில் பவணந்தி முனிவர் நன்னூலில் கூறிய நெறியை பின்பற்றாது திரிபுனால் விகாரம் அடைந்து இலக்கியங்களில் விளங்கும் சொற்களுக்கு விதியுரைக்குகிறார் புலவர். மேலும் தமிழில் வடிவம் மாறி வரும் வடமொழிச் சொற்கள் பற்றியும் இதில் ஆராயப்படுகிறது.

  • கண்ணகி கதை (1900)
  • யாப்பருங்கலப் பொழிப்புரை (1900)

யாப்பருங்கலம் என்பது யாப்பிலக்கணத்தை நூற்பா அகவல் எனப்படும் சூத்திர யாப்பிலமைத்துச் செய்த ஒரு பழைய நூலாகும். யாப்பருங்கலக் காரிகைக்கு மூலநூல் இதுவே. கற்போருக்கு பயனுள்ளவாறு புலவரர்கள் இப்பொழிப்புரையை வெளியிட்டார்.

  • இரகுவம்சக் கருப்பொருள் (1900)

வடமொழியில் காளிதாசர் பாடிய இரகுவம்சத்தைத், தமிழில் பாடிய அரசகேசரியின் செய்யுள்களுக்கு உடுப்பிட்டி கு கதிரவேற்பிள்ளை விரும்பியவாறு புலவரால் உரை எழுதபட்டது.

  • வெண்பா பாட்டியல் பொழிப்புரை (1900)==

இதுவும் புலவரால் பொழிப்புரை எழுதப்பட்ட ஒரு நூலாகும். இதில் வெண்பாவில் உள்ள இலக்கண விதிமுறைகளைப் பற்றி விளக்கம் தரப்படுகிறது.

  • கலைசைச் சிலேடை வெண்பா அரும்பதவுரை (1901)

தொட்டிக்கலைச் சுப்ரமணிய முனிவர் இயற்றிய இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது. ஒவ்வொரு செய்யுளும் இரண்டாமடிகள் இரண்டு மூன்று பொருள் கொள்ளும்படி சிலேடையுடையனவாகவும், பின்னிரண்டடிகளும் திரிபுயமக முடையனவாகவும் எழுதப்பட்டுள்ளது. இச்செய்யுட்களுக்கு புலவரால் அரும்பதவுரை வழங்கப்பட்டுள்ளது.[4]

திருக்குறள் முதலிய நீதி நூல்களை தழுவி குமரகுருபர சுவாமியால் வெண்பா யாப்பில் இயற்றப்பட்ட இந்நூலுக்கு எத்தனையோ நுட்பமான திருத்தங்களும், மேற்கோள்களும், பிறவும்,சுருக்கமும், விளக்கமும் உள்ளவாறு புத்துரை ஒன்றை புலவரவர்கள் வழங்கியுள்ளார்கள்.

  • மறைசையந்தாதி அரும்பதவுரை (1901)

நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் வேதாரணியேசுரர் (திருமறைக்காடுறையும் சிவன் ) மிது பாடிய இவ்வந்தாதிக்கு புலவர் அரும்பதவுரை எழுதியுள்ளார்.

  • தண்டியலங்கார புத்துரை (1903)

இந்நூல் காளிதாசரால் வடமொழியில் இயற்றபட்ட காவியதர்சம் என்னும் நூலைத் தழுவி தமிழில் தண்டிப்புலவரால் தண்டியலங்காரம் எனும் பெயரில் இயற்றப்பட்டது. இது செய்யுள்களை மேலும் சிறப்பாக்க கையாளப்படவேண்டிய விதிமுறைகளை பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் எனும் மூன்று பகுதிகளில் கூறுகிறது. இதற்கு பலர் உரை எழுதியிருந்த போதும், அவற்றில் வழுக்கள் மிகுதியாக இருந்தமையால் அவற்றைத் திருத்தி புதியதொரு உரையை புலவர் வழங்கியுள்ளார்.

  • திருவாதவூரர் புராணப் புத்துரை (1904)

மாணிக்கவாசக பெருமானின் வரலாற்றை கூறும் இந்நூல் கடவுள் மாமுனிவரால் எழுதப்பட்டது. முன்பு இதனை திருத்தி பதிப்பித்த புலவரவர்கள்,1904 ஆம் ஆண்டு இதற்கு ஒரு புத்துரையை எழுதி வெளியிட்டார்.

  • யாப்பருங்கலகாரிகைப் புத்துரை (1908)

முன்னர் பொழிப்புரையுடன் வெளியிட்ட இந்நூலுக்கு 1908 ஆம் ஆண்டு புதியதோர் உரையை புலவரவர்கள் வரைந்துள்ளார். இதன் இரண்டாம் பதிப்பை 1925 இல் கு. அம்பலவாணபிள்ளை வெளியிட்டார். இதன் மறுபதிப்பு 2015 இல் சென்னையில் வெளியிடப்பட்டது.

  • முத்தகபஞ்சவிஞ்சதி குறிப்புரை (1909)

புலவரவர்கள் தனது மூதாதையரான முத்துக்குமாரகவிராயர் இயற்றிய பல நூறு செய்யுள்கள் காலத்தால் அழிவுற்ற நிலையில் உறவினர் மற்றும் கவிராயரிடம் கற்றவரிடமும் வினவியும் தேடியுமறிந்த இருபத்தைந்து செய்யுள்களை இந்நூலில் பதிப்பித்துள்ளார். கவிராயர் பிரகேளிகை, நாமாந்தரிதை, சங்கியாதை, வியிற்கிராந்தை, மடக்கலங்க்காரம் முதலிய யாப்பணிகளை நூதனமாக நல்லிசைச் செய்யுளுள் அமைத்துப் பாடியுள்ளார். இச்செய்யுள்களை கற்றவரும் மற்றவரும் எளிதில் விளங்கிக் கொள்ளும் வண்ணம் புலவரவர்கள் இவற்றுக்கு குறிப்புரை எழுதுயுள்ளார்.

  • அகப்பொருள் விளக்க புத்துரை (1912)

1912ஆம் ஆண்டு இறையனார் அகப்பொருளுக்கு, புலவரவர்கள் திரு த.தி.கனகசுந்தரம்பிள்ளையுடன் இணைந்து புதியதோர் உரை எழுதி வெளியிட்டுள்ளார்கள்.

  • வினைப்பகுபதவிளக்கம் (1913)

இந்நூலிற் கையாளப்பட்ட இலக்கணவாராய்ச்சி முறை நன்னூலிலுள்ள 'நடவாமடிசீ' என்னுஞ் சூத்திரத்தைப் பீடிகையாகக்கொண்டு இருபத்துமூன்று பகுதிகளையும் தனித்தனியே விளக்கிக் காட்டுகின்றது. இந்நூல் மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை விரும்பியவாறு இயற்றப் பெற்றது.

  • இலக்கியச் சொல்லகராதி (1915)

இது சங்க இலக்கியங்களிலும், சங்கமருவிய இலக்கியங்களிலும், பிற்றைச் சான்றோரிலக்கியங்களிலும் வருகின்ற அருஞ் சொற்களாகிய இலக்கியச் சொற்களைத் தொகுத்து புலவரால் இயற்றப்பட்டது. மற்றைய அகராதிகளில் வழுவுற எழுதப்பட்ட சொற்களும், சொற்பொருள்களும் இதன்கண் திருத்தமுற எழுதப்பட்டுள்ளன. பிற அகராதிகளில் வராத அனேகம் புதுச்சொற்கள் இதிற் சேர்க்கப்பட்டுள்ளன. இது பண்டைக்கால இலக்கியங்களைப் பயில்வாருக்குப் பெரிதும் பயன்படும்.

  • தமிழ்ப் புலவர் சரித்திரம் (1916)

இந்நூலில் பல புலவர்களுடைய சரித்திரச் சுருக்கமும், அவர்கள் பாடிய அருங்கவிகளும், அவற்றின் உரைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நூலின் வசனங்கள் சுருக்கமும், தொடைநயமும் பொருந்த அழகுற எழுதி சேதுபதி மன்னவருக்கு அர்ப்பணித்துள்ளார். மேலும் இந்நூல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டக்கல்விப் பாடநூலாக விளங்கியது.

  • இராமாயணம் பாலகாண்டம் அரும்பதவுரை (1918)

இது புலவரவர்கள், தி. த. கனகசுந்தரம்பிள்ளையுடன் சேர்ந்து எழுதிய நூல். இராமாயணச் செய்யுள்களில் பதிக்கும்போது சொற்குற்றங்கள் பெருகிவருவதை கண்ட இவர்கள், பழைய ஏட்டுச்சுவடிகளை தமிழகத்தில் தேடிக் கண்டெடுத்து, அவற்றின் துணையுடன் திருத்தமாக அரும்பதவுரையுடன் பாலகாண்டத்தை வெளியிட்டனர். புலவரின் உடல்நலக் குறைவாலும், கனகசுந்தரம்பிள்ளை அவர்கள் சென்னையில் வசிக்க நேரிட்டதாலும் திட்டமிட்டபடி மிகுதி இராமாயணம் வெளியிடப்படவில்லை.

  • ஏரேழுபது பொழிப்புரை (1920)

கம்பரால் இயற்றப்பட்ட இந்நூலுக்கு புலவர் பொழிப்புரை வழங்கியுள்ளார்.

  • இதோபதேசம் (1920)

இது விட்டுணூசர்மர் என்பவரால் வடமொழியில் சுதர்சனர் என்னும் அரசனின் மைந்தருக்கு அரசியல் நெறி போதிக்கும் பொருட்டு எழுதப்பட்ட நூலாகும். இதனை புலவரின் வடமொழிக் குரவர் நாகநாத பண்டிதர் தமிழில் செய்யுள் வடிவில் மொழிபெயர்த்தார். அவற்றை புலவர் வசனநடையில் எழுதியுள்ளார்.

  • கல்வளையந்தாதி பதவுரை (1921)

நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் எழுதிய கல்வளையந்தாதிக்கு புலவர் பதவுரை எழுதியுள்ளார்.

  • சிசுபாலசரிதம் (1921)

சிசுபாலவதம், மகாபாரதம், பாகவதம் ஆகிய வடமொழி நூல்கள் கூறும் சேதினாட்டரசன் சிசுபாலன் வரலாற்றைப் புலவரவர்கள், மொழிபெயர்த்து உரைநடையமைப்பில் தமிழில் தந்துள்ளார்.

  • இரகுவமிச சரிதாமிர்தம் (1922)

முதலில் வடமொழியில் காளிதாசராலும், பின்னர் தமிழில் அரசகேசரியாலும் பாடப்பட்ட இந்நூலை புலவர் வசனநடையில் எழுதியுள்ளார். இரகுவமிசம் திலீபன் முதல் இலவகுசர் வரையான இரகுகுல அரசரின் வரலாற்றை கூறுகிறது.

புலவர் பதிப்பித்த நூல்கள்

தொகு
  • இதோபதேசம் (1886)'

இது புலவரின் வடமொழிக் குரவர் நாகநாத பண்டிதரால் வடமொழியிலிருந்து தமிழுக்கு செய்யுள் வடிவில் மொழி பெயர்க்கப்பட்டதாகும். இதனை பண்டிதரவர்கள் புலவருக்கு கல்வி கூறும் பொருட்டுச் செய்திருந்தார்.

  • நகுலமலைக் குறவஞ்சி நாடகம் (1895)

அராலி விசுவநாத சாத்திரிகளால் இயற்றப்பட்ட இந்நூல், புலவரால் பல மேற்கோள்களோடு பதிப்பிக்கப்பட்டது.

  • யாப்பருங்கலக்காரிகை பழையவுரை (1900)

இதில் நிலவிய சொற்குற்றங்களை நீக்கிப் புலவரால் 1900 ஆம் ஆண்டு பதிப்பிடப்பட்டது.

  • ஆசாரக்கோவை (1900)

புலவரால் பதிக்கப்பட்ட ஆசாரக்கோவை பெருவாயில் முள்ளியரால், ஆசாரமுரைக்கும் வகையில் இயற்றப்பட்டதாகும்.

  • நான்மணிக்கடிகை (1900)
  • ஆத்திசூடி வெண்பா (1901)

இராமபாரதி இயற்றிய இந்நூலை, புலவர் 1901 ஆம் ஆண்டு பதிப்பித்தார்.

  • சிவசேத்திர விளக்கம் (1901)

திருவண்ணாமலை அண்ணாமலைத்தேசிகர் இயற்றிய இந்நூலை புலவர் ஆராய்ந்து, மூன்று சிறப்புப்பாயிரப் பாக்கள் வழங்கிப் பதிப்பித்தார்.

  • உரிச்சொனிகண்டு (1902)

தமிழில் வரும் உரிச் சொற்களுக்கு பொருள் வரையறுத்துக் கூறும் இந்நூலை புலவர் திறனாய்வு செய்து பதிப்பித்தார்.

  • திருவாதவூரர் புராணமுலம் (1902)

கடவுள் மாமுனிவரால் இயற்றப்பட்ட இந்நூலின் பிற பதிப்புகளில் மிகுதியாகக் காணப்பட்ட சொல்லியல் வழுக்களை நுண்ணறிவால் களைந்தது மிகத் திருத்தமாக புலவர் இதனை பதிப்பித்தார்.

  • பழமொழி விளக்கம் (1903)

பழமொழிகளின் கதைகளைத் தழுவி இயற்றப்பட்ட இந்நூல் 1903 ஆம் ஆண்டு புலவரால் பதிப்பிக்கப்பட்டது.

  • சதாசாரக்கவித்திரட்டு (1901)
  • சிவத்தோத்திரக்கவித்திரட்டு (1911)

கண்டனங்களும், கட்டுரைகளும், சொற்பொழிவுகளும்

தொகு

புலவர் செய்யுள்கள்,கட்டுரைகள் மற்றும் சொற்பொழிவுகள் முதலியவற்றைக் கையாண்டு தமது கண்டனங்களை வழங்கியுள்ளார். இவை இரு வகைப்படும். கிறிஸ்து மதத்தவர் மேலைநாட்டு ஆட்சியாளரின் துணையுடன் தங்கள் மதத்தை தமிழரிடையே பரப்பும் பொருட்டு சைவத்தை இழிந்து வந்ததை எதிர்த்து தொடக்ககாலத்தில் புலவர் கண்டனங்கள் பல வழங்கியுள்ளார். புலவர் கிறிஸ்து மதத்தவரின் சைவநிந்தனையை மறுத்து வரைந்த கட்டுரைகள் பின்வருமாறு.

இலங்கை நேசன் என்னும் செய்தித்தாளில் வெளிவந்த கண்டனங்கள்.

  • கிறீஸ்து தேவனா? (1878)
  • பன்னகவரி (1881)

உதயபானு என்னும் செய்தித்தாளில் வெளிவந்த கண்டனங்கள்:

  • நற்புத்தி (1880)
  • அஞ்ஞானி என்னுஞ் சொன்மறுப்பு (1881)
  • கிறீஸ்து சிருட்டிகர் (1881)
  • பாதுகாவலன் பத்திராதிபருக்கு (1881)
  • காரைக்கால் சத்திய வேத ஆசாரப் பிரியருக்கு (1881)
  • வடவிலங்கைக் கிறீஸ்த வித்தகருக்கு (1882)
  • நாகரீகசார விநாசம்(1882)

ஆறுமுக நாவலர் இறந்தபோது, கிறிஸ்துவ மதச்சபைகள் தங்கள் மதத்தை பரப்ப நல்ல தருணம் எனக் கருதிப் பல சைவமதக் கண்டனங்களை வெளியிட்ட போது அவற்றை மறுத்து மேல்க்கூறிய தலைப்புக்களில் புலவரவர்கள் கண்டனங்களை வெளியிட்டார். 1889 ஆம் ஆண்டுக்கு பின் மதம் பரப்பும் நடவடிக்கை ஓரளவு தணிவுற்றதால் புலவரும் கண்டனம் எழுதுவதை கைவிட்டார்.

இலக்கண இலக்கிய நூல்களுக்கு உரையேழுதுபவர்கள் மற்றும் அவற்றைப் பதிப்பிப்போர் செய்யும் பொருள் மற்று சொற் குற்றங்களை தனது நுண்ணறிவால் கண்டறிந்து, அவற்றைத் திருத்தும் பொருட்டு கண்டனங்கள் வரைவதில் புலவரவர்கள் அக்காலத்தில் தலைசிறந்தவராக விளங்கினார். இதனை கண்டு வியந்த நல்லூர் சரவணமுத்துப் புலவர் யாப்பருங்கலக் காரிகைப் பதிப்புக்கு வழங்கிய சிறப்புப் பாயிரத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்.

எம்மை விஞ்சிடுவோர் எவருமிங் கிலையெனாத்
தம்மைத் தாமே தனிவியந் தெழுதும்
போலி நாவலர் புரைபட இயற்றிய
நூலுரைப் பிழைகளை நுண்ணிதி னாய்ந்தோன்

புலவர் தனது காலத்தே பல பல கண்டனங்களை வரைந்துள்ளார், ஆனால் மிகுந்த பரபரப்பையும், அறிஞர்களின் வரவேற்பையும் பெற்ற மூன்று கண்டனங்கள் வருமாறு:

  • கந்தபுராண வியாக்கியானம் (1876)

புலவர் இளமைக்காலத்தில் வரைந்த இக்கண்டனம் நகைச்சுவை ததும்பும் வகையில் உள்ளது. கந்தபுராணம் முதலியவற்றைப் பிரசங்கஞ் செய்யும் உரையாசிரியர்கள் செய்யும் பிழைகளைக் கண்டித்துக் கூறும் இக்கண்டனத்தை வாசித்த ஆறுமுக நாவலர் அதன் உரைநடையின் சிறப்பையும், தருக்கரீதியாக எழுதப்பட்டிருப்பதையும் கண்டு களித்ததோடமையாது அதற்குச் சார்பாக ஒரு கடிதம் வரைந்து இலங்கை நேசனில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் புலவரின் கண்டன திறமையை தமிழ் அறிஞர்கள் எல்லோரும் அறிந்தனர்.

  • இலக்கண வினா(1880)

இப்பெயருடைய கண்டனம், யோன் சங்கரப்பிள்ளை என்பவர் புதிய முறையில் இலக்கணச் சல்லாபம் என்னும் நூலைத் தமிழ் மரபு கவனியாது எழுதியமையால் புலவரால் வரையப்பட்டு உதயபானுவில் வெளிவந்தது. இது அக்காலத்தில் அறிஞர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

  • சிவக சிந்தாமணிப் பிழைகள் (1901)

புலவர், உ. வே. சாமிநாதையர் பதிப்பித்த சிவக சிந்தாமணிப் பதிப்பிலுள்ள பிழைகளை திரட்டி மேல் கூறிய பெயரில் வெளியிட்டார். முன்னைய நாட்களில் சாமிநாதையரின் மாணவகராகிய சண்முகம்பிள்ளை, புலவரின் தமிழ்க் குரவராகிய முருகேசப் பண்டிதரை ஈழநாட்டாரும் சாதாரண இலக்கிய விலக்கணக் கல்வியறிவில்லாத அற்பரும் என இழிந்து கண்டனம் எழுதியதால், சாமிநாதையர் புலவரின் கண்டனத்தை பழிவாங்கும் நடவடிக்கை எனக் கருதினார். இதனால் புலவருக்கும் சாமிநாதையருக்கும் இடையே நிலவிய நட்பில் பன்னிரு ஆண்டு கால இடைநிறுத்தம் ஏற்பட்டது.

புலவரவர்கள் கண்டனக் கட்டுரைகள் தவிர சில நூறு இலக்கணவிலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் மற்றும் சைவான்மீகக் கட்டுரைகளையும், உதயபானு, இலங்கை நேசன், திராவிடகோகிலம், செந்தமிழ், சிறிலோகரஞ்சனி முதலிய பத்திரிகைகளுக்கும் பிற வெளியீடுகளுக்கும் வழங்கி உள்ளார். மேலும் அக்காலத்தில் கோவில்கள் மற்றும் கல்விக்கூடங்கள் போன்ற இடங்களில் புலவரவர்கள், ஆன்மீகம் மற்றும் இலக்கணவிலக்கியம் சார்ந்த தலைப்புகளில் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 குமாரசுவாமி புலவர் வரலாறு - கு முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, 1952.
  2. குமாரசுவாமிப் புலவர் சரிதம் - சி. கணேசையர், 1935.
  3. 3.0 3.1 3.2 குமாரசுவாமிபுலவர் சரிதம் சி கணேசையர்., 1935. .
  4. இராகவையங்கார், இரா. (பெப்ரவரி 1904). "புத்தகக் குறிப்பு". செந்தமிழ். மதுரைத் தமிழ்ச் சங்கம். p. 37. {{cite magazine}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
தளத்தில்
அ. குமாரசாமிப் புலவர் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._குமாரசாமிப்_புலவர்&oldid=4040962" இலிருந்து மீள்விக்கப்பட்டது