அ. மலைச்சாமி
அ. மலைச்சாமி (11 மார்ச் 1954 - 14 செப்டம்பர் 1989) தமிழ்நாட்டைச் சேர்ந்த தலித்தியச் செயல்பாட்டாளர் மற்றும் வழக்கறிஞர் ஆவார். பாரதிய தலித் பேந்தர்ஸ் இயக்கத்தின் மாநில அமைப்பாளராக 1982 முதல் 1989 வரை பணியாற்றினார்.[1][2][3][4][5]
அ. மலைச்சாமி | |
---|---|
தமிழ்நாடு மாநில அமைப்பாளர், பாரதிய தலித் பேந்தர்ஸ் இயக்கம் | |
பதவியில் 24 ஏப்ரல் 1982 – 14 செப்டம்பர் 1989 | |
முன்னையவர் | பதவி உருவாக்கம் |
பின்னவர் | தொல். திருமாவளவன் (விசிக) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 11 மார்ச் 1954 அவனியாபுரம், மதுரை மாவட்டம், மதராசு மாநிலம் (தற்போது தமிழ்நாடு), இந்தியா |
இறப்பு | 14 செப்டம்பர் 1989 மதுரை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 35)
குடியுரிமை | இந்தியர் |
தேசியம் | தமிழர் |
உறவுகள் | விஜயன் (சகோதரர்) |
பிள்ளைகள் | வினோத் அம்பேத்கர் |
பெற்றோர் | இருளாயி (தாய்) அழகப்பன் (தந்தை) |
முன்னாள் கல்லூரி | |
வேலை | சமூகச் செயல்பாட்டாளர் வழக்கறிஞர் |
புனைப்பெயர்(s) | ‘மாவீரன்’ மலைச்சாமி ‘பேந்தர் மலைச்சாமி’ |
தொடக்க வாழ்க்கை
தொகுமதுரை மாநகரை அடுத்த அவனியாபுரம் பகுதியில் நீர் மேலாண்மை சார்ந்த மடைப்பணி செய்துவந்த இருளாயி - அழகப்பன் இணையருக்கு மகனாக 11 மார்ச் 1954 அன்று பிறந்தார் மலைச்சாமி.[1][6] இவர் தந்தை அழகப்பன் ஒரு அரசு எழுத்தராகவும் பணியாற்றினார்.[7]
கல்வியும் தொழிலும்
தொகுதொடக்கக் கல்வியை அவனியாபுரம் தொடக்கப்பள்ளியிலும் உயர்நிலைக் கல்வியை மதுரை தெற்குவாசலில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளியிலும் (1973) நிறைவு செய்தார்.[8]
மதுரையிலுள்ள முகையத் ஷா சிர்குரோ வக்பு வாரியக் கல்லூரியில் இளங்கலை பொருளியல் பட்டப் படிப்பை முடித்தார். இதனால் தன் குடும்பத்தில் முதல் கல்லூரிப் பட்டதாரியானார்.[7]
1981-இல் மதுரை அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலைச் சட்டம் பயின்று பிப்ரவரி 1984-இல் மதுரை வழக்கறிஞர் சங்கத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார்.[6][8]
தனி வாழ்க்கை
தொகு1 சூலை 1983 அன்று திராவிடர் கழக (தி.க.) தலைவர் கி. வீரமணி தலைமையில், சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்டார்.[6] அவருக்கு 1986-இல் வினோத் அம்பேத்கர் என்ற மகன் பிறந்தார்.[9]
அரசியல் மற்றும் சமூகச் செயல்பாடுகள்
தொகுஇளமைப் பருவத்தில் "பெரியார்" ஈ. வெ. இராமசாமியின் கொள்கையில் ஈடுபாடு கொண்டிருந்தார் மலைச்சாமி. பள்ளிப் பருவத்தில் பிற மாணவர்களுடன் இணைந்து தான் சார்ந்த வடக்குப் பச்சேரி, பெரிய பச்சேரி ஆகிய பகுதிகளை "தந்தை பெரியார் நகர்" என மாற்றப் பாடுபட்டார்.[8] திராவிடர் கழகத்தின் தொடர்பு அவரிடம் மரபு மீறல் சிந்தனையை உருவாக்கியது.[1] தி.க.வின் இளைஞரணி ஒருங்கிணைப்பாளராகவும் செயலாற்றினார்.[7]
புகழ்பெற்ற அவனியாபுரம் சல்லிக்கட்டில் பட்டியலினத்தைச் சேர்ந்த வீரர்கள் காளைகளைப் பிடிப்பதை எதிர்த்து 1980-இல் ஒரு சாதிய மோதல் திட்டமிடப்பட்டது. பெரியார் நகர் மக்களைத் திரட்டி அதை முறியடித்த மலைச்சாமி கைதுசெய்யப்பட்டார். சிறையிலிருந்து விடுதலையான பிறகு அம்பேத்கரின் சிந்தனைகளைப் பின்பற்றி, தலித் மக்களின் விடுதலையில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கினார். சுயமரியாதைத் திருமணங்கள், சாதி மறுப்புத் திருமணங்கள் போன்றவற்றின் தேவையை மக்களிடம் எடுத்துரைத்தார்.[1][6]
தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மாணவர் அமைப்பு
தொகுகல்லூரிக்காலத்தில் பிற மாணவர்களுடன் இணைந்து தாழ்த்தப்பட்ட மலைவாழ் மாணவர் அமைப்பு, மாணவர் எழுச்சி மன்றம்[1] ஆகியவற்றை ஏற்படுத்தி, அவர்களின் சிக்கல்களைத் தீர்க்க முனைந்தார். மாணவர்கள் தங்கள் சிக்கல்களுக்காக மட்டும் போராடாமல், சமுதாயப் பிரச்சினைகளுக்காகவும் குரல் எழுப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.[6]
பாரதிய தலித் பேந்தர்ஸ்
தொகுசாதிய வன்முறைக்கு எதிராகத் தேசிய அளவில் பரவிய மகர் சமூகத்தின் எழுச்சியின் அடையாளமாக, 1972-இல் மகாராட்டிரா மாநிலத்தில் ‘தலித் பேந்தர்ஸ்’ (ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் / "கரும் சிறுத்தைகள்") இயக்கம் உருவாகியிருந்தது. அமெரிக்கக் கறுப்பின மக்கள் நடத்திவந்த கருஞ்சிறுத்தைக் கட்சியின் கருத்தியல் தாக்கம் கொண்ட தலித் பேந்தர்ஸ், ஆட்சி அதிகாரத்தின் வழியாகத் தலித் விடுதலை அடையும் பாதையில் செயல்பட்டது. அதன் ஒருங்கிணைந்த தலைவராக அம்பேத்கரின் இணையரான சவிதா அம்பேத்கர் இருந்தார். அவ்வமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான அருண் காம்ப்ளே, மலைச்சாமியை நேரில் சந்தித்துப் பேசினார். இதையடுத்து மலைச்சாமி, 19 செப்டம்பர் 1983 அன்று தலைமையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் அண்ணளவாகப் பத்தாயிரம் பேர் முன்னிலையில் பாரதிய தலித் பேந்தர்ஸ் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு அதன் தமிழ்நாட்டு அமைப்பாளராகப் பொறுப்பேற்றார்.[6] அவ்வமைப்பின் சார்பாக ‘தலித் விடுதலை’ எனும் இதழும் வெளிவந்தது. இதையடுத்து ‘பேந்தர் மலைச்சாமி’ என்று அறியப்பட்டார்.
மதுரை மாவட்டம் மாணிக்கம்பட்டி ஊராட்சியில் சாதி இந்துக்கள் வாழும் பகுதியில் பட்டியலின வகுப்பைச் சார்ந்தவர்கள் 17 சனவரி 1983 அன்று[8] தண்ணீர் எடுத்தார்கள் என்ற காரணத்தைச் சொல்லி காட்டு ராசா என்னும் பட்டியலின இளைஞர் கொலை செய்யப்பட்டார். இதைக் கண்டித்தும், காட்டு ராசாவுக்கு நீதி கோரியும் மலைச்சாமி, 14 பிப்ரவரி 1983 அன்று மதுரையில் தலித் பேந்தர்ஸ் சார்பாக இவர் நடத்திய பேரணியில் சுமார் பத்தாயிரம் மானவர்கள் கலந்துகொண்டனர். கட்டபொம்மன் சிலை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையில் நடந்த இந்தப் பேரணி, பட்டியலின மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியமான மைல் கல்லாக அமைந்தது.[6] இதன்பின் ‘மாவீரன்’ மலைச்சாமி என அவர் அழைக்கப்பட்டார்.[1] அதே ஆண்டில் மதுரை தெற்கு வட்டம் பெருங்குடி ஊராட்சியைச் சேர்ந்த ஏழை பட்டியலின மக்களுக்கு அளிக்கப்பட்ட பட்டா நிலத்தை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்து 23 சூலை அன்று நடத்திய போராட்டத்தில், சிறுவிவசாயிகள் நல சங்கம், பாரதி தேசிய பேரவை, அம்பேத்கர் மக்கள் இயக்கம், மக்கள் சிவில் உரிமைக் கழகம், தமிழக மக்கள் முன்னணி, கிராமிய இறையியல் நிறுவனம் ஆகிய இயக்கங்களோடு தன்னை இணைத்துக் கொண்டு போராடி, பெருங்குடி மக்களுக்கு அந்த நிலத்தை பெற்றுத் தந்தார். இதனால் இன்றும் பெருங்குடி மக்கள், அவரை நினைவுகூர்கின்றனர்.[6]
நவீனமடைதல் வழியாக சாதிய இறுக்கத்தை உடைக்க முடியும் என்றும் "நாம் பிறப்பதற்கு முன் இருந்த சாதியை, இறப்பதற்கு முன் அழித்தே தீர வேண்டும்" என்றும் பேசினார் மலைச்சாமி. கல்வியே சமூக விடுதலைக்கு அடிப்படை என்பதைப் உணர்ந்து, டாக்டர் அம்பேத்கர் கல்வி கழகத்தை 6 திசம்பர் 1985 முதல் தொடங்கி நடத்தினார்.[1][6][8]
1987 இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின்போது தென் ஆற்காடு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களின் சார்பாகப் போராடினார்.
வஞ்சிநகரம் ஊராட்சியைச் சேர்ந்த ஆதி திராவிட இளைஞர் கந்தன் 8 அக்டோபர் 1987 அன்று படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மேலூரில் 28 அக்டோபர் அன்று போராட்டம் நடத்தினார் மலைச்சாமி.
மதுரை மேலவாசலில் வாழ்ந்து வந்த செருப்பு தைக்கும் தொழிலாளி சி. பாக்கியம் என்பவர் அப்பகுதியின் தலித் பேந்தர்ஸ் இளைஞரணிச் செயலாளராகவும் இருந்ததார். இவர் அப்பகுதியில் சாராய வியாபாரம் செய்த ஒருவரைக் கண்டித்தமைக்காக 9 மார்ச் 1988 அன்று அவர் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டு 13 மார்ச் அன்று உயிரிழந்தார். இதைக் கண்டித்து மார்ச் 30 அன்று மாபெரும் பேரணியையும் ஏப்ரல் 6 அன்று கண்டனக் கூட்டத்தையும் நடத்தினார் மலைச்சாமி.[8]
1988-இல் தன் தம்பியான மதராசு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் விஜயன் வழியே அன்றைய தலித் மீனவ இளைஞர் நல இயக்கத்தின் பொதுச்செயலாளரும் மதுரை தடய அறிவியல் துறையில் இரண்டாம் நிலை உதவியாளராகவும் இருந்த தொல். திருமாவளவனின் பேச்சாற்றலை அறிந்த மலைச்சாமி, அவரைப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.[7][10][11]
3 ஆகஸ்ட் 1989 அன்று மதுரை உசிலம்பட்டி வட்டம் உத்தப்புரத்தில் நடந்த சாதிக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு சார்பாக அனைத்து தலித் இயக்கங்களோடும் இணைந்து போராடினார்.[8]
இந்திய அளவில் பட்டியலின மக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வேண்டும், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டு அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டார். முதல் முறையாக அம்பேத்கருக்கு மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் சிலை அமைத்தார்.[6][8]
மறைவும் பின் நிகழ்வும்
தொகு14 செப்டம்பர் 1989 அன்று காலையில் உடல்நலக் குறைவால் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மலைச்சாமி, அன்று மாலையில் காலமானார் [6] அவர் உடல், திருமாவளவன் உள்ளிட்டோர் முன்னிலையில் மறுநாள் (செப்டம்பர் 15) மாலை 5:30 மணியளவில் எரியூட்டப்பட்டது.[12][13] பின்னர் திசம்பர் 31 அன்று திருமாவளவன் தலைமையில் ஒரு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.[10]
மலைச்சாமி வகித்த தலித் பேந்தர்ஸ் மாநில அமைப்பாளர் பொறுப்பை ஏற்கும்படித் திருமாவளவனை அவ்வமைப்பினர் பலமுறை வலியுறுத்தினர். இறுதியாக 21 சனவரி 1990 அன்று திருமாவளவன் அவ்வமைப்பின் பெயரை "இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் " என மாற்றி அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் அப்பெயரில் "ஒடுக்கப்பட்ட" என்ற சொல்லை நீக்கி "விடுதலைச் சிறுத்தைகள்" என மாற்றினார். 14 ஏப்ரல் 1990 அன்று மதுரை கோ. புதூர் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் முதல் கொடியை அவர் ஏற்றினார்.[10]
புகழ்
தொகுமலைச்சாமி நடத்திய டாக்டர் அம்பேத்கர் கல்விக்கழகமானது தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக உழைப்பது, அம்மக்களுக்கு எளிதில் கல்வி கிடைக்கச் செய்து கல்வி கற்கத் தூண்டுவது, வேலைக்காக மனு செய்யும் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி கொடுப்பது போன்ற நோக்கங்களுக்காக நடத்தப்பட்டது. இப்போது அவரது நினைவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அவனியாபுரத்தில், கட்டியுள்ள மணிமண்டபத்தின் முதல் தளமானது இப்பணியைச் செய்யும் வகையில், திட்டமிட்டு கட்டப்பட்டு வருவதாக விசிகவினர் தெரிவித்தனர்.[6]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "மலைச்சாமி: தலித் விடுதலையின் தலைமகன்!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-03-24.
- ↑ Mathi (செப்டம்பர் 13, 2017). "மதியின் முக்கிய தினங்கள் ... World Important Days...: தலித் பேந்தர் இயக்கத்தின் மாநில அமைப்பாளர் மாவீரன் மலைச்சாமி நினைவு தினம் செப்டம்பர் 14 . 1989". மதியின் முக்கிய தினங்கள் ... World Important Days... பார்க்கப்பட்ட நாள் March 24, 2023.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "உருவானார் திருமாவளவன்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-03-24.
- ↑ என்.சுவாமிநாதன். "தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியான திருமா!". காமதேனு. பார்க்கப்பட்ட நாள் 2023-03-24.
- ↑ "அம்பேத்கர் திடல். - ஏகே47-இரா.திருமாவளவன் முதல்.. முனைவர் தொல்.திருமாவளவன் வரை.. .. | Facebook". www.facebook.com. பார்க்கப்பட்ட நாள் 2023-03-24.
- ↑ 6.00 6.01 6.02 6.03 6.04 6.05 6.06 6.07 6.08 6.09 6.10 6.11 கே.எஸ்.கிருத்திக். "நாளை மதுரையில் மலைச்சாமி மணிமண்டபத் திறப்பு விழா!". காமதேனு. பார்க்கப்பட்ட நாள் 2023-03-25.
- ↑ 7.0 7.1 7.2 7.3 Collins,, Michael Adrian (2017). "Recalling Democracy: Electoral Politics, Minority Representation, And Dalit Assertion In Modern India". Publicly Accessible Penn Dissertations: 53. https://core.ac.uk/download/pdf/219377671.pdf.
- ↑ 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 8.6 8.7 "முன்னோர்கள் வழிவந்த அழகியல் : விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் A. மலைச்சாமி B.A, B.L., அவர்களின் வீரவரலாற்று வாழ்க்கை சுருக்கம்". முன்னோர்கள் வழிவந்த அழகியல். 2016-10-03. பார்க்கப்பட்ட நாள் 2023-03-25.
- ↑ "thirumaofficial/status". Twitter. பார்க்கப்பட்ட நாள் 2023-03-26.
- ↑ 10.0 10.1 10.2 "ஆகஸ்ட் 17 திருமா என்னும் நெருப்பு பிறந்த தினம் இன்று. - Chennai Reporters" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-08-17. பார்க்கப்பட்ட நாள் 2023-03-26.
- ↑ "பாரதிய தலித் பேந்தர் இயக்கத்தின் மாநில அமைப்பாளர் மலைச்சாமி நினைவேந்தல் நிகழ்ச்சி | பாரதிய தலித் பேந்தர் இயக்கத்தின் மாநில அமைப்பாளர் மலைச்சாமி அவர்களுக்கு இன்று காலை 11 மணிக்கு அம்பேத்கர் திடலில் அஞ்சலி செலுத்தி வழங்கிய நினைவேந்தல் உரை.. | By Thol.Thirumavalavan | Facebook". www.facebook.com. பார்க்கப்பட்ட நாள் 2023-03-26.
- ↑ "மாவீரன் மலைச்சாமி அவர்களின் இறுதி ஊர்வலம் 14.9.1989 | மாவீரன் மலைச்சாமி அவர்களின் இறுதி ஊர்வலம் -தலைவர் திருமா இரங்கல் உரை 14.9.1989 | By விடுதலைச்சிறுத்தைகள் கட்சி | Facebook". www.facebook.com. பார்க்கப்பட்ட நாள் 2023-03-25.
- ↑ "1989 செப்டம்பர் 15 -தேவேந்திர குல மக்களுக்காக முதல் அரசியல் கட்சி தொடங்கியவர் தலைவர் மலைச்சாமி . அவர்களின் இறுதி ஊர்வலம் | By தேவேந்திர குல வேளாளர்கள் சங்கம் | Facebook". www.facebook.com. பார்க்கப்பட்ட நாள் 2023-03-26.