ஆக்னெலோ டிசூசா

ஆக்னெலோ குஸ்தாவோ அதோல்பொ டிசூசா (Agnelo Gustavo Adolfo de Souza) பில்லர் புனித பிரான்சிஸ் சேவியர் மறைபரப்பு பணியாளர்கள் சபையைச் சேர்ந்த கத்தோலிக்க குரு ஆவார். போர்த்துகேய இந்தியாவின் கோவா மாகாணத்தில் கிறிஸ்தவ மறைபரப்பு பணிகளில் ஈடுபட்ட இவர், கத்தோலிக்க திருச்சபையால் வணக்கத்திற்குரியவர் என்று போற்றப்படுகிறார்.[1]

வணக்கத்திற்குரிய
ஆக்னெலோ டிசூசா
கத்தோலிக்க குரு
பிறப்பு(1869-01-21)சனவரி 21, 1869
அஞ்சுனா, வடக்கு கோவா, போர்த்துகேய இந்தியா
இறப்பு(1927-11-20)நவம்பர் 20, 1927
ராச்சோல், தெற்கு கோவா, போர்த்துகேய இந்தியா
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை

இளமைப் பருவம் தொகு

கோவா மாநிலத்தில் உள்ள அஞ்சுனா பகுதியில் மிங்குவேல் மரியானோ டிசூசா - மரிய பெர்பெத்துவா மகால்ஹேஸ் தம்பதியருக்கு 6வது குழந்தையாக 1869 சனவரி 21ந்தேதி ஆக்னெலோ பிறந்தார். இவரது முழுப் பெயர் ஆக்னெலோ குஸ்தாவோ அதோல்பொ டிசூசா. பக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்த இவரும் சிறு வயது முதலே ஞான காரியங்களில் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார். திருப்பலியில் குருக்கள் ஆற்றும் மறையுரைக் கேட்டு மனதில் பதித்து, மற்ற சிறுவர்களுக்கு மறைக்கல்வி போதிக்கும் அளவுக்கு திறமை பெற்றிருந்தார். ஆக்னெலோவை விட வயதில் மூத்தவர்களும் அவரது மறைக்கல்வி போதனையைக் கேட்க ஆர்வம் காட்டினர்.[1] பதினோராம் வயதில் தமது பெற்றோரை இழந்த இவருக்கு, குடும்பத்தின் மூத்த சகோதரர்கள் வழிகாட்டியாகத் திகழ்ந்தனர்.

குருத்துவப் பணி தொகு

ஏற்கனவே கத்தோலிக்க குருவாக இருந்த தமது மூத்த சகோதரர் அளித்த ஊக்கத்தால், ஆக்னெலோவும் குருத்துவ வாழ்வைத் தேர்ந்துகொண்டார். ராச்சோலில் உள்ள மறைமுதுவர் குருமடத்தில் மெய்யியலும் இறையியலும் பயின்றார். அடிக்கடி உடல்நலம் பாதித்த வேளையிலும் விடாமுயற்சியுடன் பயிற்சியைத் தொடர்ந்த இவர், 1897 சூலை 17ந்தேதி 'பில்லர் புனித பிரான்சிஸ் சேவியர் மறைபரப்பு பணியாளர்கள்' சபையில் இணைந்தார். 1898 செப்டம்பர் 24ந்தேதி கிழக்கிந்திய மறைமுதுவரும் பேராயருமான அந்தோனியோ செபஸ்தியாவோ வாலெந்தே, இவரை குருவாக திருநிலைப்படுத்தினார்.[1]

குருவான பின்னர் பத்து ஆண்டுகள் சபை இல்லத்திலேயே வாழ்ந்த ஆக்னெலோ, நற்செய்தி பணிக்காக தம்மையே தயார் செய்தார். 1908 செப்டம்பர் 8ந்தேதி மரியன்னை பிறந்த நாளில், தம்மை மறைபரப்பு பணிக்கென அர்ப்பணிப்பதாக இவர் கடவுளுக்கு வாக்கு கொடுத்தார். சிரோதா, சான்வொர்தம் (கோவா), கும்தா (கர்வார்) ஆகிய பகுதிகளில், அருட்தந்தை ஆக்னெலோ மறைப்பணியில் ஈடுபட்டார். அங்கு வாழ்ந்த மக்களுக்கு ஆன்மிக வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும், நல்ல குருவாகவும் திகழ்ந்தார். 1918ல் ராச்சோல் மறைமுதுவர் குருமடத்தின் ஆன்மிக இயக்குநராக இவரை கோவா பேராயர் நியமித்தார்.

இறப்பும் வணக்கமும் தொகு

தாழ்ச்சி, செபம், தன்மறுப்பு ஆகியவற்றின் வழியாக சிறந்து விளங்கிய அருட்தந்தை ஆக்னெலோ, வாழும்போதே புனிதர் என்று பலராலும் அழைக்கப்பட்டார். 1927 நவம்பர் 20ந்தேதி இயேசுவின் திரு இதய விழாவன்று மாலை ஆராதனையில் மறையுரை ஆற்றிக் கொண்டிருந்த வேளையில் மயங்கி விழுந்த ஆக்னெலோ, நற்கருணை ஆசீரைப் பெற்று இறப்பைத் தழுவினார்.[2] மறுநாள் நடைபெற்ற இவரது அடக்கச் சடங்கில், கோவாவின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

ராச்சோலில் ஆக்னெலோவின் உடல் புதைக்கப்பட்ட கல்லறையில் இருந்து எடுக்கப்பட்ட மண் பலரது நோய்களை குணப்படுத்தியதாக மக்கள் சான்று பகர்ந்தனர். இதையடுத்து, இவருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கான முயற்சி 1947ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1969 மே 27ந்தேதி, புனிதர் பட்டத்துக்கான முதல் நிலையான இறை ஊழியர் என்ற பட்டம் இவருக்கு கிடைத்தது. 1986 நவம்பர் 10ந்தேதி அருட்தந்தை ஆக்னெலோவை வணக்கத்திற்குரியவர் என்று கத்தோலிக்க திருச்சபை அறிவித்தது. அவருக்கு அருளாளர் பட்டம் வழங்குவதற்கான அற்புதத்தை எதிர்பார்த்து இந்திய கிறிஸ்தவர்கள் காத்திருக்கின்றனர்.

ஆதாரங்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "வணக்கத்திற்குரிய ஆக்னெலோ வலைதளம்". Archived from the original on 2018-05-22. பார்க்கப்பட்ட நாள் 2018-05-08.
  2. [1][தொடர்பிழந்த இணைப்பு] Indian Currents, 06-12 October 2008, p.41, retrieved 18-09-2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்னெலோ_டிசூசா&oldid=3542370" இலிருந்து மீள்விக்கப்பட்டது