ஆசிரியத் துறை

ஆசிரியத் துறை என்பது தமிழ் பாவினங்களில் ஒன்றான ஆசிரியப்பாவின் இனங்களில் ஒன்றாகும். இது நான்கடியில் அமையும்; முதலடி தவிரப் பிற அடிகளில் ஏதேனும் ஒன்று அளவு குறைந்து வரும். இடையே வரும் அடிகள் இடைமடக்காக ( வந்த அடியே திரும்பவும் அடுத்த அடியாய் வருதல்) அமையும். நான்கடியாய் இடையிடை குறைந்து வருவதும் உண்டு. நான்கடியாய் இடை இடை குறைந்து, இடைமடக்காக வருவதும் உண்டு.அனைத்துவகை சீர்களும் அடிகளும் இடம்பெறும். ஆசிரியத் துறையில் எவ்வகைச் சீரும் வரலாம் ; எவ்வகை அடியும் வரலாம். மிக நீண்ட கழி நெடிலடிகள் கூட வரலாம். ஈற்றயலடி அளவு குறைந்து வருவது ஆசிரிய நேர்த்துறை என்றும் இடையிடை குறைந்து வருவது ஆசிரிய இணைக்குறள் துறை என்றும் அழைக்கப்படும்.[1] [2]

எடுத்துக்காட்டு 1

" போதுறு முக்குடைப் பொன்னெயில் ஒருவன்
தாதுறு தாமரை அடியிணை பணிந்தார்
தாதுறு தாமரை அடியிணை பணிந்தார்
தீதுறு தீவினை இலரே "

ஆசிரிய நேர்த்துறை

தொகு
எடுத்துக்காட்டு 2

"வண்டுளர் பூந்தார் வளங்கெழு செம்பூட்சேய் வடிவே போலத்
தண்டளிர்ப்பூம் பிண்டித் தழையேந்தி மாவினவித் தணந்தோன் யாரே
தண்டளிர்ப்பூம் பிண்டித் தழையேந்தி வந்துநம்
பண்டைப் பதிவினவிப் பாங்கு படமொழிந்து படர்ந்தோ னன்றேர்" [3]


இப்பாடல், நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து, இரண்டாமடியே இடைமடக்காகி மூன்றாம் அடியாக வந்துள்ளது, ஆகவே இது ஆசிரியத்துறை. இதனை ஆசிரிய நேர்த்துறை எனவும் கூறலாம்

ஆசிரிய இணைக்குறள் துறை

தொகு
எடுத்துக்காட்டு 3

"இரங்கு குயில்முழவா இன்னிசையாழ் தேனா
அரங்கு மணிபொழிலா ஆடும் போலும் இளவேனில்
அரங்கு மணிபொழிலா ஆடு மாயின்
மரங்கொல் மணந்தகன்றார் நெஞ்சமென் செய்ததிளவேனில்"[3]

இப்பாடல் நான்கடியாய் இடையிடை குறைந்து (முதலடியும், மூன்றாமடியும் ) வந்திருக்கிறது. இரண்டாமடியே மடங்கி மூன்றாமடியாய் வந்துள்ளது. ஆகவே இது ஆசிரிய இணைக்குறள் துறை ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. கடையதன் அயலடி கடைதபு நடையவும்
    நடுவடி மடக்காய் நான்கடி யாகி
    இடையிடைகுறைநவும் அகவற் றுறையே’. (யாப்பருங்கலம் நூற்பா 76)

  2. ‘அடித்தொகை நான்குபெற் றந்தத் தொடைமேற்
    கிடப்பது நாற்சீர்க் கிழமைய தாகி
    எடுத்துரை பெற்ற இருநெடில் ஈற்றின்
    அடிப்பெறின் ஆசிரி யத்துறை ஆகும்’.
         
    ‘அளவடி ‘ஐஞ்சீர் நெடிலடி தம்முள்
    உறழத் தோன்றி ஒத்த தொடையாய்
    விளைவதும் அப்பெயர் வேண்டப் படுமே’. என்றார் காக்கைபாடினியார்.

    ‘எண்சீர் அடியீற் றயலடி குறைநவும்
    ஐஞ்சீர் அடியினும் பிறவினும் இடையொன்ற
    அந்தத் தொடையாய் அடிநான் காகி
    உறழக் குறைநவும் துறையெனப் படுமே’. என்றார் மயேச்சுரர்.

    ‘நாற்சீர் அடிநான் கந்தத்தொடை நடந்தவும
    ஐஞ்சீர் அடிநடத் துறழவடி5 குறைந்தவும்
    அறுசீர் எழுசீர் அவ்வியல் நடந்தவும்
    எண்சீர் நாலடி யீற்றயல்4 குறைந்தும்
    தன்சீர்ப் பாதியின் அடிமுடி வுடைத்தாய்
    அந்தத் தொடையின் அவ்வடி11 நடப்பிற்
    குறையா உறுப்பினது துறையெனப் படுமே’. என்றார் அவிநயனார். ('யாப்பருங்கல விருத்தி - பக்கம் 298)

  3. 3.0 3.1 யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிரியத்_துறை&oldid=1465269" இலிருந்து மீள்விக்கப்பட்டது