ஆணல்ட் சதாசிவம்பிள்ளை
ஆணல்ட் சதாசிவம்பிள்ளை (11 அக்டோபர் 1820 – 20 பெப்ரவரி 1896) என்று பரவலாக அறியப்படும் ஜே. ஆர். ஆர்ணல்ட் (J.R. Arnold) ஈழத்தின் தமிழறிஞர், தமிழாசிரியர், இதழாசிரியர் மற்றும் புலவர் ஆவார்.[1] இவர் சோவல் ரசல் இராசசேகரம் பிள்ளை எனவும் அறியப்படுகிறார்.[2]
ஜே. ஆர். ஆர்ணல்டு சதாசிவம்பிள்ளை | |
---|---|
பிறப்பு | அருணாசலம் சதாசிவம்பிள்ளை 11 அக்டோபர் 1820 நவாலி, யாழ்ப்பாணம் |
இறப்பு | பெப்ரவரி 20, 1896 | (அகவை 75)
பணி | ஆசிரியர் |
அறியப்படுவது | தமிழாசிரியர், இதழாசிரியர், புலவர் |
சமயம் | கிறித்தவம் |
பெற்றோர் | அருணாசலம் |
வாழ்க்கைச் சுருக்கம்
தொகுஆணல்டின் தமிழ்ப் பெயர் அருணாசலம் சதாசிவம்பிள்ளை என்பதாகும். இவரது தந்தையார் தெல்லிப்பளையைச் சேர்ந்த அருணாசலம் என்பவர். நவாலி, மானிப்பாயில் பிறந்த சதாசிவம்பிள்ளை 1835 இல் கிறித்துவத்திற்கு சமயம் மாறினார்.
மானிப்பாய் ஆங்கிலப் பாடசாலையில் தனது ஆரம்பக்கல்வியைப் பெற்ற சதாசிவம்பிள்ளை, 1832 இல் பட்டிகோட்டா செமினறி என அழைக்கப்பட்ட வட்டுக்கோட்டை மதப்பள்ளியில் இணைந்து 1840 இல் பட்டம் பெற்றார்.[3] இவரின் ஆசிரியர்களாகக் குறிப்பிடத்தக்கவர்கள் கலாநிதி புவர், ஒய்சிங்டன் ஆகியோர் ஆவர்.[3] இவருடன் படித்தவர்களில் நெவின்சு, கரோல், எவார்ட்சு, இசுட்டிக்னி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.[3] பட்டம் பெற்ற பின்னர் இவர் மானிப்பாய் ஆங்கிலப் பாடசாலை ஆங்கில ஆசிரியராகச் சேர்ந்தார். 1844 இல் சாவகச்சேரி அமெரிக்க மிசன் ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அதன் பின்னர் உடுவில் மகளிர் கல்லூரிக்கு 1847 இல் தலைமை ஆசிரியராக மாற்றம் பெற்றார்.[3] சதாசிவம்பிள்ளை 1846, சூலை 9 மார்கரெட் ஈ. நிச்சி (Margaret E. Nitchie) என்ற முத்துப்பிள்ளை என்பாரைத் திருமணம் புரிந்தார்.
இதழாசிரியர்
தொகுஈழத்தின் முதல் பத்திரிகையான உதயதாரகை, மற்றும் Morning Star ஆகியவற்றின் ஆசிரியராக 1857 இல் கரோல் விசுவநாதபிள்ளைக்குப் பின்னர் பணிபுரிந்தது மட்டுமல்லாமல்[3] யாழ்ப்பாணத்தில் பத்திரிகைத்துறையின் வளர்ச்சிக்குப் பெருந்தூணாக இருந்தார். 1996 இல் இறக்கும் வரை உதயதாரகையின் ஆசிரியராகப் பணியாற்றினார்.[3] இவர் எழுதிய நூல்களுள் மிக முக்கியமானது பாவலர் சரித்திர தீபகம் ஆகும். இது தவிர கிறித்தவ தமிழ் இலக்கியங்களையும் இயற்றி வெளியிட்டார்.
தமிழாசிரியப் பணி
தொகுஆர்ணல்டு வட்டுக்கோட்டை மதப்பள்ளியின் தொடர்ச்சியாக அதனை யாழ்ப்பாணக் கல்லூரியாக நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார். கல்லூரியின் இயக்குநரகத்தின் உறுப்பினராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார்.[3] 1881 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் கல்லூரியில் தமிழ் இலக்கியப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1892 வரை பணியாற்றினார்.[3]
எழுதிய நூல்கள்
தொகுஇவர் எழுதிய நூல்கள்:[3]
- இந்து தேச சரித்திரம் (1858)
- இரட்சாபெருமான் மீது பாடிய திருச்சதகம் (1849)
- இல்லற நொண்டி (1887, நொண்டி ஒருவன் உத்தம ஆடவர், நற்குணப் பெண்டிர், துர்க்குணப் பெண்டிர் ஆகியோரின் இயல்புகளைக் கூறுவதாக அமைந்துள்ளது)
- ஏசுநாதர் திருச்சதகம்
- சர்போத சரணம்
- சாதாரண இதிகாசம் (1858)
- பாவலர் சரித்திர தீபகம் (1886)
- மெய்வேதசாரம் (1852)
- திருக்கடகம்
- நன்நெறிமாலை
- நன்நெறிக்கொத்து (1859)
- Carpotacharam
- வானசாத்திரம் (1851)
- வெல்லை அந்தாதி (சிறுவர் நூல், 16 பக்கங்கள், 1890)
- குடும்ப தர்ப்பணம்
- கீர்த்தன சங்கிரகம் (1890)
- நன்னெறிக் கதாசங்கிரகம் (1869)
பதிப்பித்தவை
தொகு- குடும்ப தருப்பணம்
- ஞான வெண்பா
- உரிச்சொல் நிகண்டு (1889)[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ தமிழ்க் கலைக்களஞ்சியம் முதல் தொகுதி, ஆணல்
- ↑ ஆணல்ட் சதாசிவம்பிள்ளை நூல்கள் 3ஆம் தொகுதி
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 "Some friends of Jaffna College - J. R. Arnold". Jaffna College Miscellany XVV (1): pp. 17. 1915.
- ↑ ":: மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம்- 16 ::". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2023-04-23.