ஆதிசிவன் திருக்கோயில் - நாட்டாமங்கலம்



மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து 13 கி மீ தொலைவில் உள்ள நாட்டாமங்கலம் எனும் ஊரில்,சிவன் நாட்டார் தெய்வமாக எழுந்தருளியுள்ள ஆதிசிவன் திருக்கோயில் அமைந்துள்ளது. பெருந்தெய்வ வழிபாடாகவே பெரும்பாலும்  அறியப்பட்ட சிவ வழிபாடு, இங்கு நாட்டார் தெய்வ வழிபாடாக காணப்படுகிறது. அநேக திருத்தலங்களில் லிங்க ரூபமாகவே எழுந்தருளியுள்ள சிவபெருமான், இங்கு சிலா ரூபமாக (சிலை வடிவில்) காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். மேலும் இங்கு சிறு தெய்வ வழிபாடும் சேர்ந்தே காணப்படுகிறது. இங்கு ஸ்தல விருட்ச்சமாக வில்வமரம் அமைந்துள்ளது. சிவபெருமானுடன் கீழ்கண்ட தெய்வங்களும் இங்கே வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

  1. மாயாண்டி சாமி
  2. வீரபத்திர சாமி
  3. பெரிய கருப்ப சாமி
  4. சின்ன கருப்ப சாமி
  5. பேச்சியம்மன்
  6. ராக்காச்சியம்மன்

ஸ்தல வரலாறு தொகு

முன்பொரு காலத்தில் உண்டாத் தேவர், உலகாத் தேவர் சகோதரர்கள் வெள்ளரிபட்டி என்ற கிராமத்திலிருந்து வெளியேறி தத்தம் மனைவிமாருடன் வந்து கொண்டிருந்தனர். அப்போது  அடர்ந்த வனப்பகுதியாக இருந்த நாட்டமங்கலம் கிராமத்தை அடைந்த போது, அங்கிருந்த நீர் வளத்தை கண்டு அப்பகுதியைத் தங்கள் வாழ்விடமாகக் கொண்டனர். அதே பகுதியில் மறைந்து வாழ்ந்து வந்த சில வேடர்கள், அவர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர். இந்நிலையில் உலகாத் தேவரின் மனைவி கருவுற்று, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ஒரு நாள், நீர் எடுத்து வந்த அவர் வயிற்றில், வேடர்களின் அம்பு பாய்ந்தது. வலியில் துடித்த  உலகாத் தேவர் மனைவியின் குரலுக்காக கருணை உள்ளதோடு இறங்கி வந்து காட்சி தந்தார் சிவபெருமான். உண்டா தேவர், உலகத் தேவரின் வாரிசுகளை காப்பதாக வாக்களித்த சிவபெருமான், அங்கேயே தவக்கோலத்தில் அமர்ந்தார். உண்டா தேவர், உலகத் தேவரின் வாரிசுகள் இன்னமும் பெரியவாகைக்குளம், சின்னவாகைக்குளம், பெருங்காமநல்லூர், நட்டமங்கலம்,  அய்யம்பட்டி, சக்கரைப்பட்டி, நாகலாபுரம் ஆகிய கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் இந்த ஆதிசிவனை தங்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

மூலவர் சன்னதி திறக்கப்படும் நாட்கள் தொகு

இங்கு எழுந்தருளியுள்ள சிவ பெருமான் தவக்கோலத்தில் இருப்பதால்,  மூலவர் சன்னதி வருடத்தில் கீழ்கண்ட  ஐந்து தினங்களில் மட்டுமே திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும்.

  1. சித்திரை முதல் நாள்
  2. ஆடி முதல் நாள்
  3. ஆடி கடைசி நாள்
  4. மார்கழி முதல் நாள்
  5. தை முதல் நாள்