ஆந்திரே சாகரவ்

சோவியத் ஒன்றிய அணுக்கருவியலாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்

ஆந்திரே திமித்ரியேவிச் சாகரவ் (Andrei Dmitrievich Sakharov, உருசியம்: Андре́й Дми́триевич Са́харов; மே 21, 1921 – திசம்பர் 14, 1989) உருசிய அணுக்கருவியலாளரும், சோவியத் அதிருப்தியாளரும், அணுவாயுதக் குறைப்பு, அமைதி மற்றும் மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளரும் ஆவார்.[1]

ஆந்திரே திமித்ரியேவிச் சாகரவ்
Andrei Dmitrievich Sakharov
மார் 1, 1989 அறிவியல் மாநாடொன்றில்
இயற்பெயர்Андрей Дмитриевич Сахаров
பிறப்பு(1921-05-21)21 மே 1921
மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்
இறப்பு14 திசம்பர் 1989(1989-12-14) (அகவை 68)
மாஸ்கோ, உருசியா, சோவியத் ஒன்றியம்
வாழிடம்மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்
குடியுரிமைசோவியத்து
துறைஅணுக்கருவியல்
கல்வி கற்ற இடங்கள்
அறியப்படுவது
  • சோவியத் அணிவாயுதம் - மூன்றாம் கருத்துரு
  • சோவியத் அணுக்கருத் திட்டம்
  • டோகாமாக்
  • அதிருப்தியாளர்
  • மனித உரிமைகள் செயற்பாட்டாளர்
  • பேரயோனியல்#சாகரவ் நிபந்தனைகள்
விருதுகள்
  • சோசலிசத் தொழிலாளர் நாயகர்
    (1953 1955 1962)
  • இசுடாலின் பரிசு (1953)
  • லெனின் பரிசு (1956)
  • அமைதிக்கான நோபல் பரிசு (1975)
  • எலியட் கிரெசன் பதக்கம் (1985)
துணைவர்கிளாவிடியா விக்கிரீவா (1943–1969; மனைவி மரணம்)
எலனா பானர் (1972–1989; அவர் மரணம்)

சோவியத் ஒன்றியத்தின் அணுவாயுதத் திட்டத்தின் மூன்றாம் கருத்துரு எனக் குறியீடு இடப்பட்ட அணுவெப்பாற்றல் ஆயுதங்களின் வடிவமைப்பிற்காக மிகவும் அறியப்பட்டார். பின்னதாக சோவியத் ஒன்றியத்தில் மனித உரிமைகளுக்காகவும் குடிமைச் சீர்திருத்தங்களுக்காகவும் போராடினார். இதற்காக அரசின் துன்புறுத்தல்களை எதிர்கொண்டார். இவரது முயற்சிகளுக்காக 1975இல் சாகரவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரைப் போற்றும் வண்ணம் ஐரோப்பிய நாடாளுமன்றம் ஆண்டுதோறும் மனித உரிமைகளுக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்ட நபர்களுக்கும் அமைப்புகளுக்கும் சாகரவ் பரிசு வழங்கி வருகின்றது.[2]

வாழ்க்கை தொகு

சாகரவ் மிகச்சிறந்த அறிவியலாளராக இருந்தார். இரண்டாம் உலகப் போரின் போது கல்லூரியிலிருந்து பட்டம் பெற்று வெளிவந்த சாகரவ் கட்டாய படைத்துறைப் பணிக்கு மாறாக அரசுக்கான இரகசிய அறிவியல் ஆய்வுப்பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.[3] 1950களில் சோவியத்து ஐதரசன் அணுகுண்டைத் தயாரிக்க உதவினார். அதேநேரம் பல அமைதிப்பணிகளிலும் அணுவாற்றலை பயன்படுத்தினார்.

தான் கண்டறிந்த அணுகுண்டே அவரை அரசுக்கு எதிராக மாற்றியது. தேவையற்ற அணுகுண்டு சோதனைகளை நடத்துவதாக நிக்கிட்டா குருசேவிடம் வாதிட்டார். இதனால் மக்களின் உயிரும் உடல்நலமும் கேடுறுவதாக அறிவுறுத்தினார். கூடுதலான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்காக போராடினார். இதனால் அரசு அவரை அவராற்றிய பணியிலிருந்து நீக்கியது.[3] பாதுகாக்கப்பட்ட சூழலில் இருந்து வெளிவந்த சாகரவ் மற்ற சோவியத் மக்களின் கவலைமிகு வாழ்க்கையை கண்டார்.

அரசின் அடக்குமுறைகள் அவரை மேலும் பேசத் தூண்டின. கூடிய சமயச் சுதந்திரம் கோரியதோடு இவ்வாறு அரசுக்கு எதிராக போராடியவர்களை ஆதரித்தார். இதனால் அவர் சிறையிலிடப்பட்டார். சோவியத் இரகசியக் காவல்துறை அவரைக் குறித்த தகவல்களைத் திரட்டத் துவங்கினர். சோவியத்தின் அராபியர் கொள்கைகளை விமர்சித்ததால் அராபிய வன்முறையாளர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவரையும் அவரது குடும்பத்தையும் அவரது வீட்டிலேயே சிறை பிடித்தனர். அவர்களை மிகக் கொடூரமாகத் துன்புறுத்தப் போவதாகப் பயமுறுத்தினர்.[3] ஆனால் எதுவும் செய்யாமல் ஒருமணி நேரத்திற்குப் பிறகு சென்று விட்டனர்; இதனைக் குறித்து சாகரவ் காவல்துறையில் புகாரளித்தபோதும் அதனைக் காவல்துறை கண்டுகொள்ளவில்லை.

சோவியத் ஒன்றியத்திற்கு வெளியிலும் சாகரவ் புகழ் பெற்றிருந்தமையால் அரசு அவரைக் கவனத்துடன் கையாள வேண்டியதாயிற்று. அவருக்கு ஏதாவது நேர்ந்தால் தங்கள் பிம்பத்திற்கு ஊறு விளையும் என்று பொதுவுடமையாளர்கள் அஞ்சினர். இருப்பினும் 1979இல் சோவியத் ஒன்றியத்தின் ஆப்கானித்தான் ஆக்கிரமிப்பை விமரிசித்ததை அடுத்து[3] அவரை கோர்க்கி நகருக்கு இடம் பெயரச் செய்தனர். அங்கு அவரது வீட்டை எந்நேரமும் காவல்துறை கண்காணித்து வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாகரவ் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டார். காவல்துறை அவருக்கு கட்டாயமாக உணவூட்டியது.[3]

சாகரவ் கிளாஸ்னாஸ்ட் எனப்படும் வெளிப்படைத் தன்மைக்கு கோரிக்கை விடுத்தார்.[3] 1986இல், சாகரவுடன் உடன்பட்ட மிக்கைல் கொர்பச்சோவ், அவரை விடுவித்து வீடு திரும்ப அனுமதித்தார். சீர்திருத்தங்களுக்காகத் தொடர்ந்து போராடி வந்த சாகரவ் திசம்பர் 1989இல் தமது 68ஆம் அகவையில் இயற்கையெய்தினார்.[3] அவரது மரணத்திற்கு பிறகு இரண்டாண்டுகளில் அவரது கனவு நனவாயிற்று; சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.

மேற்சான்றுகள் தொகு

  1. "Sakharov Human Rights Prize 25th anniversary marked in US". வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா. 15 January 2014. http://www.voanews.com/content/anniversary-of-andrei-sakharov-human-rights-prize/1830297.html. 
  2. "Andrei Sakharov: Soviet Physics, Nuclear Weapons and Human Rights". Archived from the original on 2015-12-29. பார்க்கப்பட்ட நாள் 2016-10-30.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Koontz, Terri; Mark Sidwell, S.M.Bunker (2005-01). World Studies for Christian Schools. Greenville, South Carolina 29614: Bob Jones University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-59166-431-4. https://archive.org/details/worldstudiesforc0000terr. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திரே_சாகரவ்&oldid=3849245" இலிருந்து மீள்விக்கப்பட்டது