ஆபிரகாம் கோவூர்


ஆபிரகாம் கோவூர் (ஏப்ரல் 10, 1898 - செப்டம்பர் 18, 1978), பகுத்தறிவாளர், உளவியலாளர், எழுத்தாளர், ஆசிரியர்.

ஆபிரகாம் தோமஸ் கோவூர்
Abraham Thomas Kovoor
Abraham T. Kovoor.jpg
ஆபிரகாம் கோவூர்
பிறப்பு ஏப்ரல் 10 1898
திருவள்ளா, கேரளா
இறப்பு செப்டம்பர் 18 1978
கொழும்பு,இலங்கை
பணி பகுத்தறிவாளர், உளவியலாளர், எழுத்தாளர், ஆசிரியர்

வாழ்க்கைக் குறிப்புதொகு

இவர், கேரளாவில் திருவள்ளா என்னுமிடத்தில் 1898ஆம் ஆண்டு ஏப்பிரல் 10ஆம் நாள், மார் தொம்மா சிரியன் திருச்சபையின் தலைவரான கோவூர் ஈய்ப்பெ தொம்மா காத்தனாரின் மகனாகப் பிறந்தார். கொல்கத்தாவில் கல்வி கற்று பின்னர் கேரளாவில் சில காலம் கல்லூரி உதவி விரிவுரையாளராக இருந்த கோவூர், தன் வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தைக் கொழும்பில் கழித்தார். இலங்கையில் பல பாடசாலைகளில் தாவரவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியிலிருந்து 1959 இல் பணி ஓய்வு பெற்றார். கல்லூரிப் பணி ஓய்வு பெற்ற பின்னரே, ஆவிகள் ஆதன்களின் விந்தை நிகழ்வுகள் தொடர்பான தம் வாழ்நாள் ஆராய்ச்சியைப் பற்றிப் பேசவும் எழுதவும் தொடங்கினார்; இறுதிவரை அவர் தீவிர பகுத்தறிவாளராகவே கொள்கை முழக்கம் செய்தார்.

தான் கடவுளின் அவதாரம் அல்லது தெய்வீக ஆற்றல் உள்ள மகான் என்று சொல்லும் அனைவருமே பொய்யர்கள், ஏமாற்றுவாதிகள் என்பதை நிறுவுவதே கோவூரின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. Rationalist Association of Sri Lanka என்னும் சங்கத்தைத் தோற்றுவித்து, வெகு காலம் அதன் தலைவராக இருந்தார்.

பகுத்தறிவுப் பணிதொகு

ஆவி, பிசாசு தொடர்பாகக் கூறப்பட்ட எல்லாவகை விந்தை நிகழ்வுகளையும் அரை நூற்றாண்டுக்கும் மேல் முழுவதுமாக ஆராய்ந்தவர்.அத்தகைய நிகழ்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் பின்னால், நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டதான உண்மை ஏதும் சிறிதும் இல்லை என்று முடிவு கண்டவர் கோவூர். ஆவி, பேய் ஆகியவை தொடர்பான ஆற்றல்கள் பெற்றுள்ளதாகக் கூறுகின்ற எல்லாரும் ஒன்று ஏமாற்றுக்காரர்களாக இருக்க வேண்டும் அல்லது மூளைக்கோளாறோ மனநோயோ கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே அவரின் உறுதியான கருத்தாகும்.[1]

அவை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டாருள், அத்துறைப் பணிக்காக மின்னசோட்டா மெய்யறிவு நிலையம் (இப்போது இந்நிறுவனம் செயல்பாட்டில் இல்லை) கவுரவ முனைவர் பட்டம் வழங்கியது -- இத்தகைய பட்டங்களை முதலில் இருந்தே எதிர்த்து வந்த கோவூர், முனைவர் பட்டத்தைத் திருப்பி அனுப்பினார்.[2]

ஒரு இலட்சம் பரிசுதொகு

இயற்கைக்கு அப்பாற்பட்ட வியக்கத்தக்க ஆற்றல்களைப் பெற்றுள்ளதாகக் கூறும், உலகின் எந்தப் பகுதியிலுள்ள எவரும், மோசடியின்றி செய்முறைகள் மூலம், அவர்கள் திறமைகளை மெய்ப்பித்துக் காட்ட முடியுமானால், அவருக்கு ஓரிலட்ச சிறீலங்க ரூபாய் பரிசளிக்க அவர் தயாராக இருப்பதாக அறைகூவினார். தான் இறக்கும் வரையில், அல்லது இதன் தொடர்பான முதல் வெற்றியாளரைக் காணும் வரையில், இந்த அறிவிப்பு செயற்பாட்டிலிருக்கும் என்றும் அறிவித்தார். இறுதி வரையில் எவருமே அப்பரிசை வெல்லவில்லை.

டாக்டர்.கோவூரின் சவால்கள்:

 • முத்திரையிடப்பட்டுள்ள உறையின் உள்ளே ஒரு கரன்சி நோட்டின் வரிசை எண்ணைப் படித்துக் காட்டுக.
 • ஒரு கரன்சி நோட்டினைப் போன்று மற்றொரு கரன்சி நோட்டினை உண்டாக்கிக் காட்டுக.
 • கடவுள் துணையால் பாதத்தில் எவ்விதப் புண்ணோ, கொப்பளமோ ஏற்படாமல் அரை நிமிட நேரம் எரியும் தணலில் அசையாமல் நின்று காட்டுக.
 • நான் கேட்கும் ஒரு பொருளை ஒன்றுமில்லாமல் (சூனியத்தில்-வெற்றிடத்தில்) இருந்து உண்டாக்கிக் காட்டுக.
 • மனோபலத்தைப் பயன்படுத்தி ஒரு திடப் பொருளை அசைத்தோ, வளைத்தோ காட்டுக.
 • தொலைவில் உணர்தல் ஆற்றலைப் பயன்படுத்தி மற்றொருவன் நினைப்பதை வெளியில் எடுத்துக்கூறுக.
 • பிரார்த்தனை, அத்மபலம், புனித தீர்த்தம், விபூதி, ஆசீர் வாதம் இவை போன்றவற்றின் மூலம் துண்டிக்கப்பட்ட ஒர் உடல் உறுப்பை ஓர் அங்குல நீளம் வளரச் செய்து காட்டுக.
 • யோக சக்தியால் ஆகாயத்தில் எழுப்பிக் காட்டுதல் அல்லது மிதப்பது போல் செய்து காட்டுக.
 • யோக சக்தியால் ஐந்தே மணித்துளி ஐந்து நிமிடம் இதயத் துடிப்பை நிறுத்திக் காட்டுக.
 • நீரில் நடந்து காட்டுக.
 • உன் உடலை ஓர் இடத்தில் இருக்க வைத்துவிட்டு வேறு ஓர் இடத்தில் இவ்வுடலை உருவாக்கிக் காட்டுக.
 • யோக சக்தியால் அரை மணி நேரம் சுவாசிப்பதை நிறுத்திக் காட்டுக.
 • ஆழ்நிலை தியானத்தாலோ, வேறு எவ்வகை தியானத்தாலே படைப்பாற்றல் மிக்க நுண்ணறிவையோ, பேரறிவையோ பெருக்கிக் காட்டுக.
 • நிழற்படம் பிடிப்பதற்காக ஓர் ஆவி அல்லது ஒர் பேயினை நேரில் தோன்றச் செய்க.
 • நிழற்படம் பிடிக்கும்போது படத்தாளில் பதிவாகாதவாறு உன்னை மறைத்துக் காட்டுக.
 • மறுபிறவியின் விளைவாலோ, நல்ல அல்லது கெட்ட ஆவிபிடித்து இருப்பதாலோ உனக்குத் தெரியாத மொழியினைப் பேசிக்காட்டுக.
 • பூட்டப்பட்ட அறையிலிருந்து தெய்வீக ஆற்றலால் வெளியே வந்து காட்டுக.
 • மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொருளைக் கண்டுபிடித்துக் காட்டுக.
 • வெறும் நீரை பெட்ரோலாகவோ, ஒயினாகவோ மாற்றிக் காட்டுக.
 • ஒயினை ரத்தமாக மாற்றிக் காட்டுக.

கண், உடல் தானம்தொகு

“எனக்கு சாவைக் கண்டு அச்சமில்லை; எனவே, என்னை புதைக்க வேண்டாம்” என்று தன் உயிலில் எழுதி வைத்த கோவூர், தன் கண்களை ஒரு கண் வங்கிக்குத் தானமாக அளித்தார்; தன் உடலை மருத்துவக்கல்லூரிக்கு ஆய்வுக்காகவும் தன் எலும்புக்கூடு தற்சுட்டன் கல்லூரியின் அறிவியல் ஆய்வகத்திற்கு அளிக்கப்பட வேண்டும் என்று எழுதியிருந்தார்.

வெளியான நூல்கள்தொகு

கோவூரின் நூல்களிலுள்ள நிகழ்வாய்வு (case study) உண்மை நிகழ்ச்சிகளை பல்வேறு நாடுகளில் பல பத்திரிகைகளும், செய்தித் தாள்களும் தொடர்ச்சியாக வெளியிட்டன.

அக்கதைகளுள் ஒன்று, மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அவருடைய நூலின் மற்றொரு உண்மைக்கதை, 'நம்பிக்கை' என்ற பெயரில் தமிழ் நாடகமாகப் பலமுறை அரங்கு நிறைந்த அவையோர் முன் நடித்துக் காட்டப் பட்டது.[1]

 • Begone Godmen! Encounters with Spiritual Frauds, Jaico Publishing House, Mumbai, India.
 • Gods, Demons and Spirits - Jaico Publishing House, Mumbai, India.
 • Selected Works of A T Kovoor- Indian Atheist Publishers, New Delhi, India.
 • Exposing Paranormal Claims - தமிழ் நாடு
 • கோர இரவுகள் (வீரகேசரி வெளியீடு, கொழும்பு)
 • மனக்கோலங்கள் (வீரகேசரி வெளியீடு, கொழும்பு)
 • இருளும் ஒளியும் (திராவிடன் புத்தக நிலையம், சென்னை)

வெளி இணைப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

 1. 1.0 1.1 திண்ணை
 2. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆபிரகாம்_கோவூர்&oldid=2711485" இருந்து மீள்விக்கப்பட்டது