ஆர்கண்ட் விளக்கு

ஆர்கண்ட் விளக்கு (Argand lamp) 1780 ஆம் ஆண்டளவில் அய்மே ஆர்கண்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு உரிமம் பெறப்பட்டது. இது அக்காலத்தில் இருந்த எண்ணெய் விளக்குகளிலும் கூடுதலான ஒளியை வழங்கி வீடுகளில் கிடைக்கக்கூடிய ஒளியின் அளவை மேம்படுத்தியது. இது சுமார் 6 தொடக்கம் 10 மெழுகுதிரிகள் வழங்கக்கூடிய ஒளியை வழங்கக்கூடியது. இது ஒரு வட்டவடிவில் அமைந்த திரியைக் கொண்டது. இது ஒன்றினுள் இன்னொன்றாக அமைந்த இரண்டு உலோக உருளைகளுக்கு இடையில் பொருத்தப்பட்டிருந்தது. இதனால், திரியின் நடுப்பகுதி ஊடாகவும், வெளிப்புறத்திலும் வளி சென்று வரக்கூடியதாக இருந்தது. அக்காலத்து முறையில் தேய்த்துச் செய்யப்பட்ட கண்ணாடி உருளை ஒன்றினால் திரி பக்கங்களில் மூடப்பட்டிருந்தது. இது சுவாலையை உறுதியாக எரியும்படி செய்ததுடன், சுவாலையைச் சுற்றிய காற்றோட்டத்தையும் மேம்படுத்தியது. இவ் விளக்கில் திமிங்கில எண்ணெய் போன்ற நீர்ம எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. தனியான கொள்கலன் ஒன்றிலிருந்து இந்த எண்ணெய் திரிக்கு வழங்கப்பட்டது. இவ்விளக்கின் வடிவமைப்பு கூடுதலான ஒளியைக் கொடுத்தது ஒருபுறம் இருக்க, எண்ணெயும், திரியும் முழு எரிதலுக்கு உள்ளாவதால் அடிக்கடி திரியை வெட்டிச் சுத்தம் செய்யவேண்டிய தேவையும் இருக்கவில்லை.

1822 ஆம் ஆண்டில் சார்லஸ் வில்சன் பீலே எனபவரால் வரையப்பட்ட அவரது சகோதரர் ஜேம்ஸ் பீலேயின் உருவப்படத்தில் ஆர்கண்ட் விளக்கு வரையப்பட்டுள்ளது.
ஆர்கண்ட் விளக்கைக் கண்டுபிடித்த அய்மே ஆர்கண்ட்


விரைவிலேயே இவ் விளக்கு, ஏனைய வகை விளக்குகளைப் பயன்பாட்டிலிருந்து நீக்கியது. பல்வேறு அழகிய வடிவங்களில் இவ் விளக்குகள் செய்யப்பட்டன. சிக்கல் கூடிய அமைப்பின் காரணமாக, இவை அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த எண்ணெய் விளக்குகளை விடக் கூடிய விலை கொண்டவையாக இருந்தன. இதனால் முதலில் பண வசதி கொண்டவர்களே இவற்றைப் பயன்படுத்தக் கூடியதாக இருந்தது. எனினும், விரைவிலேயே நடுத்தர வசதி கொண்டவர்களும், பின்னர் குறைந்த வசதி உள்ளவர்களும் கூட இவ்விளக்குகளைப் பயன்படுத்தும் நிலை வந்தது. 1850 ஆம் ஆண்டுகள் வரை இவ் விளக்கே எல்லோராலும் விரும்பப்பட்டது. 1850 ஆம் ஆண்டளவில், தட்டையான திரியும், நடுவில் பருத்த அமைப்பும் கொண்ட கண்ணாடி உருளைகளுடன் கூடிய மண்ணெய் விளக்குகள் அறிமுகமாயின. மண்ணெய், திமிங்கில எண்ணெயை விடக் குறிப்பிடத்தக்க அளவு மலிவாக இருந்தது. இதனால் புழக்கத்தில் இருந்த ஆர்கண்ட் விளக்குகள் கூட மண்ணெயைப் பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டன.

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Argand lamps
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்கண்ட்_விளக்கு&oldid=3233123" இலிருந்து மீள்விக்கப்பட்டது