ஆர். பிச்சுமணி ஐயர்

ஆர். பிச்சுமணி ஐயர் (R. Pichumani Iyer, 18 மே 1920[2] – 20 சூன் 2015)[1] தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற வீணை இசைக்கலைஞர் ஆவார். கலைமாமணி விருது பெற்றவர்.[3] வீணையிசையில் தஞ்சாவூர் பாணியில் சிறந்து விளங்கியவர்.[4] அனைத்திந்திய வானொலியில் முதல் தரக் கலைஞராக விளங்கியவர்.[3]

ஆர். பிச்சுமணி ஐயர்
ஆர். பிச்சுமணி ஐயர்
பிறப்பு(1920-05-18)18 மே 1920
கத்தரிப்புலம், நாகப்பட்டினம் மாவட்டம், இந்தியா
இறப்பு20 சூன் 2015(2015-06-20) (அகவை 95)
இருப்பிடம்மைலாப்பூர்[1]
தேசியம்இந்தியர்
கல்விசங்கீதபூசணம் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)
பணிவீணை இசைக் கலைஞர்
அறியப்படுவதுவீணை இசைக் கலைஞர்
பெற்றோர்இராஜகோபால ஐயர்
ஞானாம்பாள்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

பிச்சுமணி ஐயர் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், கத்தரிப்புலம் என்ற ஊரில் இசைக் குடும்பம் ஒன்றில் இராஜகோபால ஐயர், ஞானாம்பாள் ஆகியோருக்குப் பிறந்தார்.[4] ஆரம்ப இசைப்பயிற்சியை `ஜாலர்’ கோபால ஐயர், `தின்னியம்’ வெங்கட்ராம ஐயர் ஆகியோரிடம் பெற்றார். பின்னர் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த வீணை குப்பண்ணாவிடம் மேலதிக பயிற்சியைப் பெற்றார். திருச்சி தேசியக் கல்லூரியில் தனது கல்வியை முடித்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டுகள் படித்து வீணையிசையில் `சங்கீத பூசணம்’ பட்டத்தைப் பெற்றார்.[4]

நாட்டைக் குறிஞ்சி, கதனகுதூகலம் மற்றும் மலயமாருதம் ஆகிய இராகங்களில் சுவரஜதிகளையும், வசந்த கைசிகி, பிருந்தாவன சாரங்கா, அமீர் கல்யாணி ஆகிய இராகங்களில் தில்லானாக்களையும் உருவாக்கி இருக்கிறார்.[4] ஏவிஎம், ஹெச்எம்வி நிறுவனங்களுடன் இணைந்து ஆர்பிஎம் ஒலித்தட்டுகளாக இவரது கச்சேரிகள் வெளிவந்துள்ளன.[4]

திரையுலகில் தொகு

1940-இல் பிச்சுமணி ஐயரை திரைத்துறைக்கு அழைத்து வந்தவர் இயக்குநர் கே. சுப்பிரமணியம். அவருடைய மெட்ராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். இந்நிறுவனத்தில் பணியாற்றிய கலைஞர்களே வானொலியில் இசை நிகழ்ச்சிகளை அளித்தனர். அத்தோடு ஜூபிடர் கலையகத்தில் ஆஸ்தான வீணைக் கலைஞராகச் சேர்ந்தார். பிரபலமான பலருக்கும் அவர் வீணை கற்றுக் கொடுத்தார். ஏ. வி. மெய்யப்பச் செட்டியார் அவரை ஏவிஎம்மில் நிரந்தரப் பணியில் சேர்த்தார். அங்கு அவர் 16 ஆண்டுகள் பணியாற்றினார். ஏவிஎம்மின் வேதாள உலகம், ராம ராஜ்ஜியம், வாழ்க்கை, பெண், பக்த ராவணா போன்ற பல திரைப்படங்களில் வீணை இசை வழங்கினார்.[4]

கே. வி. மகாதேவன், எம். எஸ். விஸ்வநாதன் போன்ற திரைப்பட இசையமைப்பாளர்களுக்கு வீணை வாசித்திருக்கிறார். இவரது வீணையிசை இடம்பெற்ற சில பாடல்கள்:[4]

விருதுகள் தொகு

  • மூன்று முறை வீணை சண்முக வடிவு விருதை சென்னை இசைக் கழகம் வழங்கிக் கௌரவித்துள்ளது.[4]
  • சங்கீத நாடக அகாதமி விருது[4]
  • தமிழக அரசின் கலைமாமணி விருது[3]
  • சங்கீத கலா நிபுணர் (மைலாப்பூர் நுண்கலைக் கழகம், 1991)[3]

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இவர் இருந்திருக்கிறார்.[4]

மறைவு தொகு

ஆர். பிச்சுமணி ஐயர் 1941 முதல் மைலாப்பூரில் வாழ்ந்து வந்தார். 2015 சூன் 20 இல் காலமானார். இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும், இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.[1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._பிச்சுமணி_ஐயர்&oldid=3448686" இருந்து மீள்விக்கப்பட்டது