ஆலிவர் கிராம்வெல்

ஆலிவர் கிராம்வெல் (Oliver Cromwell, ஒலிவர் குரொம்வெல், 25 ஏப்ரல் 1599 – 3 செப்டம்பர் 1658) இங்கிலாந்தின பெருந்திறமை வாய்ந்த எழுச்சியூட்டும் இராணுவத் தலைவராக விளங்கியவர். இங்கிலாந்து உள்நாட்டுப் போரின்போது நாடாளுமன்ற படைகளுக்குத் தலைமை தாங்கிப் போரிட்டு வெற்றி தேடித் தந்த செயல் வீரர். இவர் இங்கிலாந்தின் வரம்பற்ற முடியாட்சி முறையை மாற்றி நாடாளுமன்ற மக்களாட்சி அரச முறையாக அமைப்பதற்கு மூல காரணமாக இருந்தவர்.

ஆலிவர் கிராம்வெல்
Oliver Cromwell
ஒலிவர் கிராம்வெல் (சாமுவேல் கூப்பர் வரைந்த ஓவியம்)
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து பொதுநலவாயத்தின் 1வது காப்பாளர் பிரபு
பதவியில்
16 திசம்பர் 1653 – 3 டெப்டம்பர் 1658
(4 ஆண்டுகள், 261 நாட்கள்)
முன்னையவர்அரசுப் பேரவைத் தலைவர்
பின்னவர்ரிச்சார்ட் கிராம்வெல்
நாடாளுமன்ற உறுப்பினர்
for ஹண்டிங்டன்
பதவியில்
1628–1629
ஆட்சியாளர்சார்ல்ஸ் I
நாடாளுமன்ற உறுப்பினர்
for கேம்பிரிட்ஜ்
பதவியில்
1640–1649
ஆட்சியாளர்சார்ல்ஸ் I
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1599-04-25)25 ஏப்ரல் 1599
ஹண்டிங்டன், இங்கிலாந்து
இறப்பு3 செப்டம்பர் 1658(1658-09-03) (அகவை 59)
வைட்ஹால், லண்டன்
இளைப்பாறுமிடம்டைபர்ன், லண்டன்
தேசியம்ஆங்கிலேயர்
துணைவர்எலிசபெத் பூர்ச்சியெர்
உறவுகள்
  • ராபர்ட் கிராம்வெல் (தந்தை)
  • எலிசபெத் ஸ்டுவர்ட் (தாய்)
பிள்ளைகள்
  • ராபர்ட் கிராம்வெல்
  • ஆலிவர் கிராம்வெல்
  • பிரிட்ஜெட் கிராம்வெல்
  • ரிச்சார்ட் கிராம்வெல்
  • ஹென்றி கிராம்வெல்
  • எலிசபெத் கிளேபோல்
  • மேரி கிராம்வெல்
  • பிரான்செசு கிராம்வெல்
முன்னாள் கல்லூரிசிட்னி சசெக்சு கல்லூரி, கேம்பிரிட்ஜ்
வேலைவிவசாயி; நாடாளுமன்ற உறுப்பினர், இராணுவத் தலைவர்.
கையெழுத்து
புனைப்பெயர்Old Ironsides
Military service
பற்றிணைப்புRoundhead
கிளை/சேவைEastern Association (1643–1645); New Model Army (1645–1646)
சேவை ஆண்டுகள்1643–51
தரம்கேர்ணல் (1643–44); லெப். ஜெனரல் (1644–45); Lieutenant-General of Cavalry (1645–46)
கட்டளைCambridgeshire Ironsides (1643 – 1644); Eastern Association (1644–45); New Model Army (1645–46)
போர்கள்/யுத்தங்கள்கெயின்சுபரோ; மார்ஸ்டன் மூர்; இரண்டாம் நியூபெரி; நேஸ்பி; லாங்போர்ட்; பிரெஸ்டன்; டன்பார்; வூர்ஸ்டர்

இளமை

தொகு

இங்கிலாந்திலுள்ள ஹன்டிங்டன் என்னும் ஊரில் 1599 ஆம் ஆண்டில் ஏப்ரல் 25 அன்று இராபர்ட் குரோம்வெல்- எலிசபெத் ஸ்டெவார்ட் என்பவருக்குக் குரோம்வெல் மகனாப் பிறந்தார். இவரின் குடும்பம் ஒரு வேளாண்மைக் குடும்பம் ஆகும். இவர் தனது கிராமத்தில் ஒரு சீமானாக வாழ்ந்து வந்தார். குரோம்வெல் பக்தி மிகுந்த ஆனால் கடுஞ்சீர்திருத்தச் சமயவாதியாகவும் (Purtian) விளங்கினார். கேம்பிரிட்ஜில் உள்ள சிட்னி சசெக்சு கல்லூரியில் சேர்ந்து சமயக் கல்வியைப் பயின்றார். ஆனால் இவருடைய தந்தை இறந்ததன் காரணமாக இவர் 1617-ல் பட்டம் பெறாமலேயே தனது கிராமத்திற்குத் திரும்ப வேண்டியதாயிற்று.

குரோம்வெல் 1620-ல் எலிசபெத் என்ற மங்கையை மணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 9 குழந்தைகள் பிறந்தனர். எலிசபெத்தின் தந்தை லண்டனில் ஒரு பெரிய தோல் வணிகராகவும், எசெக்சு என்ற நகரில் பல பரந்த நிலப்பரப்புகளுக்குச் சொந்தக்காரராகவும் இருந்தார். அதனால் அங்கு உயர்தட்டு மக்களிடையே அவர் செல்வாக்கு பெற்றவராக விளங்கினார். இந்தத் திருமணம் மூலமாக ஆலிவர் செயின்ட் ஜான் மற்றும் லண்டன் வணிக சமூகத்தின் முன்னணி உறுப்பினர்கள் தொடர்பு குரோம்வெல்லுக்குக் கிடைத்தது. இதனால் வாரிக் மற்றும் ஒல்லாந்திலும் குரோம்வெல்லுக்கு செல்வாக்கு கிட்டியது. கிராம்வெல்லின் இராணுவ மற்றும் அரசியல் வாழ்க்கைக்கு இந்தச் செல்வாக்கு போதுமானதாக இருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்

தொகு

1628 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு தமது 30 ஆம் வயதில் தேர்ந்த்தெடுக்கப்பட்டார். இவர் தமது இளமைக் காலத்தில் சமயப் பூசல்களால் அலக்கழித்துக் கொண்டிருந்த இங்கிலாந்தில் வாழ்ந்தார். அப்போது வரம்பற்ற முடியாட்சி மீது நம்பிக்கை கொண்டு அதை நடைமுறைப்படுத்த விரும்பிய முதலாம் சார்லஸ் மன்னர் இங்கிலாந்தை ஆண்டு வந்தார். எனவே 1629 -ல் அவர் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டுத் தாமே நாட்டை ஆளத் தொடங்கினார். எனவே கிராம்வெல் நாடாளுமன்ற உறுப்பினராகச் சிறிது காலமே பணியாற்றினார். 12 ஆண்டுகள் வரையில் சார்லஸ் மன்னர் நாடாளுமன்றத்தைக் கூட்டவே இல்லை.

1640 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டிற்கு எதிராகப் போர் தொடுப்பதற்காக மன்னருக்குப் பணம் தேவைப்பட்டது. அந்தப் பணத்தைப் பெறுவதற்காகவே 1640-ஆம் ஆண்டில் மன்னர் நாடாளுமன்றத்தைக் கூட்டினார். அந்தப் புதிய நாடாளுமன்றத்தில் ஆலிவர் கிராம்வெல் 1642 வரை உறுப்பினராக இருந்தார்.

ஆங்கில உள்நாட்டுப் போர்கள்

தொகு

முதல் போர்

தொகு

அரசர் எதேச்சாதிகார ஆட்சியை நடத்துவதற்கு எதிரான வாக்குறுதிகளையும் பாதுகாப்புகளைய்ம் அரசரிடமிருந்து நாடாளுமன்றம் கோரியது. ஆனால் நாடாளுமன்றத்திற்கு அடிபணிந்து நடக்க அரசர் சார்லஸ் விரும்பவில்லை. 1642-ல் அரசரிடம் பற்றுறுதி கொண்ட படைகளுக்கும், நாடாளுமன்றத்திடம் பற்று கொண்ட படைகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் மூண்டது. குரோம்வெல் நாடாளுமன்றத்திற்கு ஆதரவு அளித்தார். ஹன்டிங்டன் திரும்பி அங்கு அரசருக்கு எதிராகப் போரிடுவதற்காக ஒரு குதிரைப் படையைத் திரட்டினார். போர் நடந்த நான்கு ஆண்டுகளில் குரோம்வெல்லின் மகத்தான இராணுவத்திறமை வெளிப்பட்டுப் பாராட்டப்பட்டது. இந்த உள்நாட்டுப் போரிலும் (1644), நேஸ்பியில் நடந்த இறுதிப் போரிலும்(1645) குரோம்வெல் மிக முக்கியப் பங்கு வகித்தார். 1646 ஆம் ஆண்டில் போர் முடிவடைந்தது. முதலாம் சார்லஸ் சிறைப் பிடிக்கப்பட்டார். நாடாளுமன்றத் தரப்பில் பெரும் வெற்றி பெற்ற தளபதியாகக் குரோம்வெல் போற்றப்பட்டார்.

இரண்டாம் போர்

தொகு

முதல் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததும் நாட்டில் அமைதி நிலவவில்லை. நாடாளுமன்றத் தரப்பினர் பல்வேறு கருத்துவேறுபாடுகள் காரணமாகப் பல பிரிவுகளாகப் பிளவுபட்டுக் கிடந்தனர். இதை உணர்ந்த அரசர் நாடாளுமன்றத்திடம் ஓர் உடன்பாட்டிற்கு வராமல் தட்டிக் கழித்து வந்ததும், நாட்டின் அமைதியின்மைக்கு ஓர் காரணமாகும்.சார்லஸ் மன்னர் சிறையிலிருந்து தப்பி தமது படைகளை மீண்டும் ஒன்று திரட்டுவதில் முனைந்தார். இதனால் ஓராண்டுக்குள்ளேயே இரண்டாம் உள்நாட்டுப் போர் மூண்டது. இந்த இரண்டாவது போரிலும் அரசரின் படைகளைக் குரோம்வெல் தோற்கடித்தார். அத்துடன் மிதவாத நாடாளுமன்ற உறுப்பினர்களெல்லாம் ஒழிக்கப்பட்டனர். சார்லஸ் மன்னர் 1649 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தூக்கிலிடப்பட்டார்.

மக்கள் பொதுவுரிமை அரசு

தொகு

மன்னர் இறந்தபின் இங்கிலாந்தில் குரோம்வெல்லைத் தலைவராகக் கொண்டு மக்கள் பொதுவுரிமை அரசு என்ற பெயர் கொண்ட ஒர் ஆட்சி மன்றம் (Council of State) தற்காலிகமாக நாட்டை ஆண்டது. இக்காலத்தில் எஞ்சியிருந்தததெல்லாம் பிரதிநிதித்துவம் வாய்ந்திராத ஒரு சிறிய, தீவிரவாத சிறுபான்மைக் குழுமமே ஆகும். பல கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு தொடர்ந்திருந்த இந்தக் குழுமம் "எச்சமா மன்றம்"(The Rump) என்று அழைக்கப்பட்டது. அயர்லாந்து போர் (1649-1650) மற்றும் ஸ்காட்லாந்துப் போர் (1650-1651) ஆகியவற்றுக்குப் பின் குரோம்வெல் முதலில் புதிய தேர்தல்கள் நடத்துவது குறித்துப் பேச்சுகள் நடத்த முயன்றார். ஆனால், இந்தப் பேச்சுகள் தோல்வியடைந்ததும், எச்சமா மன்றத்தை 1653 -ல் கலைத்தார். அது முதல் 1658 -ல் குரோம்வெல் இறக்கும் வரையில் மூன்று வெவ்வேறு நாடாளுமன்றங்கள் அமைக்கப்பட்டு கலைக்கப்பட்டது. இரு வெவ்வேறு அரசமைப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால் இவற்றில் எதுவும் வெற்றிகரமாகச் செயல்படவில்லை. இந்தக் கால அளவு முழுவதும் இராணுவத்தின் ஆதரவுடன் குரோம்வெல் ஆட்சி புரிந்தார்.

அயர்லாந்து-ஸ்காட்லாந்துப் போர்கள்- 1649-1651

தொகு

குரோம்வெல்லின் ஆட்சி காலத்தில் அரசரின் ஆதரவாளர்கள் விரைவிலேயே அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் வலைமை பெற்றார்கள். அவர்கள் இறந்து போன அரசனின் புதல்வன் இரண்டாம் சார்லசுக்கு ஆதரவு அளித்தார்கள். இதனால் இங்கு போர் மூண்டது. குரோம்வெல்லின் படைகள் அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து மீதும் படையெடுத்து அவர்களை முறியடித்தன. 1649-1651 வரை அடுத்தடுத்து நடந்த இந்த நீண்டகாலப் போரில் இறுதியாக 1652-ல் அரசரின் ஆதரவுப்படைகள் தோற்கடிக்கப்பட்டன. இதனால் போர் முடிவடைந்தது.

குரோம்வெல்லின் ஆட்சி முறை

தொகு

நடைமுறையில் குரோம்வெல் ஓர் இராணுவ சர்வாதிகாரியாக இருந்தாலும் அவர் தமது ஆட்சிக் காலத்தில் பல முறை மக்களாட்சி நடைமுறைகளைப் புகுத்த முயன்றார். அவருக்கு அரச பதவி வழங்கப்பட்ட போது அதை ஏற்க மறுத்தார். நன்கு செயல்படக்கூடிய ஓர் அரசு முறையை அவருடைய ஆதரவாளர்களால் நிறுவ முடியாமற்போனதன் காரணமாக, வேறு வழியின்றி சர்வாதிகார ஆட்சியை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு அவர் உள்ளானார். குரோம்வெல் "ஆட்சிக் காவலர் பெருமகனார்" (Lord Protector) என்ற பட்டத்துடன் 1653 முதல் 1658 வரையில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றை ஆண்டார். இந்த 5 ஆண்டு காலத்தில் குரோம்வெல் பிரித்தானியாவுக்குப் பொதுவான ஒரு நல்லரசை வ்ழங்கினார். சீரான நிருவாக முறையை ஏற்படுத்தினார். கடுமையான சட்டங்கள் பலவற்றை சீர்படுத்தினார். கல்வி கற்பதை ஆதரித்தார். சமயப் பொறையுடைமையில் குரோம்வெல் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் முதலாம் எட்வர்டு மன்னரால் இங்கிலாந்திலிருந்து வெளியேற்றப்பட்ட யூதர்கள் இங்கிலாந்தில் மீண்டும் குடியேறவும் அவர்கள் தங்கள் சமயத்தைப் பயிலவும் அவர் அனுமதியளித்தார். குரோம்வெல் வெற்றிகரமான ஒரு அயல்நாட்டுக் கொள்கையையும் செயல்படுத்தினார். இவர் ஒரு போதும் அரச பதவியை ஏற்றுக் கொள்ளவோ நிரந்தரமாகச் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தவோ முயலவிலலை. அவருடைய ஆட்சி பெரும்பாலும் நடுநிலையானதாகவும் சமரச நோக்குடையதாகவும் விளங்கியது. குரோம்வெல் பெற்ற வெற்றிகளின் பயனாக, இங்கிலாந்தில் மக்களாட்சி அரச முறை வெற்றிபெற்று வலுப்பெற்றது. குரோம்வெல் 1658-ஆம் ஆண்டு லண்டனில் மலேரியா நோய் கண்டு இறந்தார்.

வரம்புடை மக்களாட்சி

தொகு

குரோம்வெல்லுக்குப் பிறகு அவருடைய மூத்த மகன் ரிச்சர்டு குரோம்வெல் ஆட்சிக்கு வந்தார். ஆனால் அவர் மிகக் குறுகிய காலமே ஆட்சி நடத்தினார். 1660-ல் இரண்டாம் சார்லசுக்கு மீண்டும் அரச பதவி அளிக்கப்பட்டது. ஆலிவர் குரோம்வெல்லின் சடலம் கல்லறையிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டு ஒரு கம்பத்தில் தூக்கிலிடப்பட்டது. இந்தப் பழிவாங்கும் நடவடிக்கையால் வரம்பற்ற முடியாட்சியை ஏற்படுத்த நடந்த போராட்டம் படு தோல்வி அடைந்தது. இதை உணர்ந்த இரண்டாம் சார்லஸ் நாடாளுமன்றத்தின் மேலாண்மை உரிமையை ஒரு போதும் எதிர்க்கவில்லை. அவருக்குப் பின் அரியணை ஏறிய இரண்டாம் ஜேம்ஸ் மன்னர் மீண்டும் வரம்பற்ற முடியாட்சியை ஏற்படுத்த முயன்ற போது 1688-ல் நடந்த 'இரத்தம் சிந்தாப் புரட்சியில்' அவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். இதன் விளைவாக "வரம்புடை முடியாட்சி" (Constitutional Monarchy) இங்கிலாந்தில் அமைந்தது. இதன் படி அரசர் திட்டவட்டமாக நாடாளுமன்றத்திற்கு கீழமைந்தவரானார். அத்துடன் சமயப் பொறையுடைமைக் கொள்கையும் அரசின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றாக அமைந்தது.

உசாத்துணை

தொகு

மைக்கேல் ஹெச்.ஹார்ட், 100 பேர் (புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை), மீரா பதிப்பகம்-2008

வெளியிணைப்புகள்

தொகு

http://www.annavinpadaippugal.info/Kurunavalgal/makkal_karamum_mannar_siramum_4.htm

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலிவர்_கிராம்வெல்&oldid=3858726" இலிருந்து மீள்விக்கப்பட்டது