இந்திய அனுமதி இலக்கத்தகடுகள்

(இந்திய அநுமதி இலக்கத்தகடுகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தியாவில் ஓட்டப்படும் அனைத்து தானுந்து ஊர்திகளுக்கும் அடையாளம் காட்டும் வண்ணம் அனுமதி இலக்கத்தகடுகள் (உரிம எண்) வழங்கப்படுகின்றன. இந்த இலக்கத்தகடுகள் இன்றி வாகனம் ஓட்டுதல் சட்டத்திற்குப் புறம்பானதாகும். ஆங்கில வழக்காக நம்பர் பிளேட் என்பதும் பரவலாக பயன்பாட்டில் உள்ளது. இந்த எண்கள் மாவட்ட அளவில் அந்தந்த மாநிலங்களின் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (RTO) வழங்குகிறது. இந்த இலக்கத் தகடுகள் வண்டியின் முன்புறத்திலும் பின்புறத்திலும் காட்சிப்படுத்தப்படுகின்றன. சி மாநிலங்களில் வாடகை வண்டிகளின் பக்கவாட்டிலும் இந்த எண்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும். சட்டப்படி, அனைத்து தகடுகளும் இலத்தீன் எழுத்துகள் மற்றும் அராபிய எண்ணுருக்கள் கொண்டு பொறிக்கப்பட வேண்டும்.[1] இவை இரவில் ஒளியூட்டப்பட வேண்டும் என்பதும் பயன்படுத்தப்படும் எழுத்துரு இன்ன அளவில் இருக்க வேண்டும் என்பதும் கூடுதல் விதிகளாகும். சிக்கிம் போன்ற சில மாநிலங்களில் வெளிமாநில இலக்கத்தகடுகள் கொண்ட ஊர்திகள் சில பகுதிகளுக்குச் செல்வது தடைபடுத்தப்படலாம்.

இந்தியாவின் ஈரெழுத்து மாநிலக் குறியீடுகள்

வடிவம்

தொகு
 
இந்தியாவில் பயன்படுத்தப்படும் பல்வகை அனுமதி இலக்கத் தகடுகள்
 
இந்திய இராணுவ வாகன அனுமதி இலக்கத் தகடு

இந்தியாவில் தற்போது ஆறு வகையான அனுமதி இலக்கத் தகடுகள் புழக்கத்தில் உள்ளன. மின்கலத்தில் இயங்கும் வாகனங்களுக்கு பச்சை நிற அனுமதி இலக்கத் தகடுகளை வழங்குவது குறித்து இந்திய அரசு பரிசீலித்து வருகிறது.[2]

  • சொந்த பயன்பாட்டுக்கான வண்டிகள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு வெள்ளை வண்ணப் பின்னணியில் கருமை வண்ண எழுத்துக்களால் அனுமதி இலக்கத் தகடுகளை பொறிக்க வேண்டும். (காட்டாக TN 81 NZ 0025).
  • வாடகை உந்துக்கள், சரக்குந்துகள் போன்ற வணிகப் பயன்பாட்டு வண்டிகள் மஞ்சள் வண்ணப் பின்னணியில் கருமை வண்ண எழுத்துக்களைக் கொண்டிருக்க வேண்டும். (காட்டாக, AP 32 VA 2223).
  • ஓட்டுநர் இல்லாமல் வாடிக்கையாளரே தன் தேவைக்கு வாடகைக்கு எடுத்து ஓட்டும் வாடகை உந்துகளுக்கு கருப்பு வண்ணப் பின்னணியில் மஞ்சள் எழுத்துகளைக் கொண்டிருக்க வேண்டும் ( காட்டாக MH.41.UB.8192).
  • வெளிநாட்டு தூதரக வண்டிகள் வெளிர்நீல பின்னணியில் வெள்ளை எழுத்துக்களைக் கொண்டிருக்கும். (காட்டாக 22 UN 14[3])
  • இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களின் அலுவல்முறைத் தானுந்துகளுக்கு இலக்கத்தகடுகள் தேவையில்லை. மாற்றாக சிவப்புத் தகட்டில் தங்கத்தில் பொறிக்கப்பட்ட இந்திய தேசிய இலச்சினையை பயன்படுத்துகின்றனர்.
  • இந்திய இராணுவ பயன்பாட்டுக்கான வாகனங்கள் பிரத்யேக எண்களைக் கொண்டவையாக இருக்கும். இதில் முதல் எழுத்து அல்லது மூன்றாம் எழுத்தில் மேல் நோக்கி அம்புக்குறி கொண்டதாயிருக்கும்

தற்போதைய வடிவம்

தொகு

தற்போதைய இலக்கத் தகடுகளின் வடிவமைப்பு மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது:

  • முதல் ஈரெழுத்துக்கள் வண்டி பதியப்பட்டுள்ள மாநிலத்தைக் குறிக்கிறது.
  • அடுத்த இரு இலக்கங்கள் மாவட்டத்தின் குறியீடு ஆகும். இது பொதுவாக உரிமத் தகடுகள் வழங்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தைக் குறிக்கும்.
  • மூன்றாம் பகுதி ஒவ்வொரு இலக்கத்தகட்டிற்கும் தனித்துவமான 4 இலக்கங்கள் உள்ள எண்ணாகும். நான்கு இலக்கங்களும் முடிந்த பிறகு முதலில் ஒன்று பின்னர் இரு எழுத்துக்கள் முன்னொட்டாக வழங்கப்படுகின்றன.

மாநிலங்கள்

தொகு

அனைத்து இந்திய மாநிலங்களும் ஒன்றியப் பகுதிகளும் தங்களுக்கான ஈரெழுத்துக் குறியீட்டைக் கொண்டுள்ளன. இந்த முறை 1980களில் நடைமுறைக்கு வந்தது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு மாவட்டம்/வட்டாரப் போக்குவரத்து அலுவலகமும் தங்களுக்கான மூன்றெழுத்துக் குறியீட்டைக் கொண்டிருந்தன. இது மாநிலத்தை அடையாளப் படுத்தாமையினால் குழப்பங்கள் விளைந்தன. இதற்கான தீர்வாகவே மாநிலங்களுக்கான குறியீடும் சேர்க்கப்பட்டது. சில மாநிலங்களில் 1960 களில் நிலவிய (மகாராட்டிரம் - பம்பாய் மாகாணம் - BMC, தமிழ்நாடு - மதராசு மாகாணம் - MDR) இன்றும் செல்லுபடியாகும்.

புதியதாக உருவாக்கப்பட்ட மாநிலங்களான உத்தராகண்டம், சத்தீசுகர் சார்க்கண்ட் (முறையே உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் பீகாரிலிருந்து பிரிந்தவை), தங்களுக்கான புதிய குறியீடுகளில் இலக்கத்தகடுகள் வழங்குகின்றன. இருப்பினும் முந்தைய மாநிலத்தின் வட்டார போக்குவரத்து அலுவலகத்தால் வழங்கப்பட்ட இலக்கத்தகடுகளும் இங்கு செல்லுபடியாகும். 2007இல் உத்தராஞ்சல் என்றழைக்கப்பட்ட மாநிலம் உத்தராகண்டம் என மறுபெயரிடப்பட்டது. எனவே மாநிலக் குறியீடும் UA இலிருந்து UK ஆக மாறியது.

ஈரெழுத்து மாநிலக் குறியீடுகள் பின்வருமாறு:

மாநிலம் ஈரெழுத்துக் குறியீடு
ஆந்திரப் பிரதேசம் AP
அருணாசலப் பிரதேசம் AR
அசாம் AS
பீகார் BR
சத்தீசுகர் CG
கோவா (மாநிலம்) GA
குசராத்து GJ
அரியானா HR
இமாச்சலப் பிரதேசம் HP
சார்க்கண்ட் JH
கருநாடகம் KA
கேரளம் KL
மத்தியப் பிரதேசம் MP
மாநிலம் ஈரெழுத்துக் குறியீடு
மகாராட்டிரம் MH
மணிப்பூர் MN
மேகாலயா ML
மிசோரம் MZ
நாகாலாந்து NL
ஒடிசா OD [4]
பஞ்சாப் PB
இராச்சசுத்தான் RJ
சிக்கிம் SK
தமிழ்நாடு TN
திரிபுரா TR
உத்தராகண்டம் UK
உத்தரப் பிரதேசம் UP
மேற்கு வங்காளம் WB
தெலுங்கானா TS[5][6]
ஒன்றியப் பகுதி ஈரெழுத்துக் குறியீடு
அந்தமான் நிக்கோபார் தீவுகள் AN
சண்டிகர் CH
தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ DD
தில்லி DL
ஜம்மு காஷ்மீர் JK
லடாக் LA
இலட்சத்தீவுகள் LD
புதுச்சேரி PY

முன்னாள் குறியீடுகள் பின்வருமாறு:

மாநிலம் அல்லது

ஒன்றியப் பகுதி

ஈரெழுத்துக் குறியீடு
ஒரிசா OR
உத்தராஞ்சல் UA
தாத்ரா மற்றும் நகர் அவேலி DN


உயர் பாதுகாப்பு ஊர்திப்பதிவு இலக்கத்தகடுகள்

தொகு

இந்திய அரசு சூன் 1, 2005 அன்று நடுவண் இயந்திர ஊர்திகள் விதிகள் 1989இன் 50வது விதியை திருத்தி புதிய சோசடி செய்யவியலாத பாதுகாப்பு ஊர்திப்பதிவு இலக்கத்தகடுகளை (HSRP) கொண்டுவருவதை கட்டாயமாக்கியது. [7][8]

அனைத்துப் புதிய, இயந்திரத்தினால் இயங்கும், சாலை ஊர்திகளும் புதிய இலக்கத்தகடுகளைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் ஏற்கனவே இயங்கும் ஊர்திகள் இரண்டாண்டுகளுக்குள் தங்கள் இலக்கத்தகடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவித்தது. இந்த உயர் பாதுகாப்பு இலக்கத்தகடுகள் காப்புரிமை பெற்ற குரோமியம் முப்பரிமாண ஒளிப்படம்,[7] சீரொளி எண்ணமைப்பு, எண்-எழுத்து வழி ஊர்தி சோதனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் அடையாளம், 45 பாகை சரிவில் இந்தியா எனப் பொறிக்கப்பட்ட மீள்-எதிரொளிப்பு சுருள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இந்த எழுத்துருக்கள் தெளிவான காட்சிக்காக பொறிக்கப்பட்டிருக்கும். முப்பரிமாண ஒளிப்படத்தின் கீழே இடது புறத்தில் வெளிர் நீலத்தில் "IND" என்ற எழுத்துக்கள் காணப்படும்.[7] எனினும் இந்த செயல்முறை இன்னமும் செயலாக்கத்திற்கு வரவில்லை; நடைமுறைப்படுத்த வேண்டிய மாநில அரசுகள் இத்தகைய உயர் பாதுகாப்புப் பலகை தயாரிப்பாளர்களை அலுவல் முறையில் நியமிக்காததே காரணமாக கூறப்படுகிறது. [9] மேலும் நியமனம் குறித்த பல வழக்குகள் இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.[8][9] ஏப்ரல் 8, 2011 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் இந்த நவீன இலக்கத்தகடுகளை அறிமுகப்படுத்தாதற்காக நீதிமன்றத்தை அவமதித்ததாக தில்லி, பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச போக்குவரத்து செயலர்களை நேரில் தோன்ற அழைத்தது.[10] மேலும் உச்ச நீதிமன்றம் நவம்பர் 30, 2004, அன்று இந்த விதியை அனைத்து மாநிலங்களும் செயற்படுத்த வேண்டும் என விளக்கம் வெளியிட்டது.[10] தற்போது மேகாலயா, சிக்கிம் மற்றும் கோவா மட்டுமே இதனை முழுமையாக செயற்படுத்தி உள்ளன. திரிபுரா, கர்நாடகா, மகாராட்டிரம் மற்றும் கேரளா ஒப்பந்தப் புள்ளிகள் அழைத்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கள் எதுவும் எடுக்கவில்லை.[10] இவற்றைத் தவிர மற்ற மாநிலங்கள் எதுவும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.[10]

புதுச்சேரியில் இயங்கும் அனைத்து வாகனங்களுக்கும், பதிவாகும் புதிய வாகனங்களுக்கும் இனி உயர் பாதுகாப்பு இலக்கத் தகடுகள் பொருத்தப்பட இருக்கின்றன.[11]

மேற்சான்றுகள்

தொகு
  1. "Central Motor Vehicle Rules 1989, Rule-50(2)(d)" (PDF). GOI. இந்திய அரசு - Department of Road Transport & Highways. 1989. p. 4. பார்க்கப்பட்ட நாள் 2009-03-15.
  2. "பேட்டரி வாகனங்களுக்கு பச்சை நிற நம்பர் பிளேட்". செய்தி. தி இந்து தமிழ். 9 சனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 10 சனவரி 2018.
  3. GHeather_UK [cancellato] (2007-06-09). "Idiot No. 3 at DEL | Flickr – Condivisione di foto!". Flickr.com. Archived from the original on 2013-10-23. பார்க்கப்பட்ட நாள் 2013-07-06.
  4. "Number plates to sport OD". telegraphindia.com (Calcutta, India). 2012-07-19. http://www.telegraphindia.com/1120719/jsp/odisha/story_15744103.jsp#.UD8gQaAbttY. பார்த்த நாள்: 30 ஆகத்து 2012. "the vehicles will have OD instead of OR" 
  5. "Telangana begins vehicles registration with Prefix TS". biharprabha. பார்க்கப்பட்ட நாள் 15 நவம்பர் 2014.
  6. "TS registration series rolls out in Telangana". The Hindu (Hyderabad). பார்க்கப்பட்ட நாள் 15 நவம்பர் 2014.
  7. 7.0 7.1 7.2 "HIGH SECURITY REGISTRATION PLATES". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 2010-06-29.
  8. 8.0 8.1 "M J Antony: Number plate logjam". Sify Finance. 2010-06-09. http://sify.com/finance/b-m-j-antony-b-number-plate-logjam-news-columns-kgjblabibgg.html. பார்த்த நாள்: 2010-06-29. 
  9. 9.0 9.1 "Don’t buy high-security number plates, it’s illegal’". Hindustan Times. 2010-06-20 இம் மூலத்தில் இருந்து 2013-01-25 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125095647/http://www.hindustantimes.com/Don-t-buy-high-security-number-plates-it-s-illegal/Article1-560379.aspx. பார்த்த நாள்: 2010-06-29. 
  10. 10.0 10.1 10.2 10.3 "Number plate scheme: SC notices to UP, Delhi, Haryana". Indian Express. 2011-04-08. http://www.indianexpress.com/news/number-plate-scheme-sc-notices-to-up-delhi-haryana/773373/. பார்த்த நாள்: 2011-04-11. 
  11. 24 மார்ச்சு 2012. "அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு "நம்பர் பிளேட்': புதுவையில் இம்மாத இறுதிக்குள் அறிமுகம் எஸ். ஜெய்சங்கர்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2014.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)