இந்திய கதிரியக்க ஓரிடத்தனிம தொழிநுட்ப வாரியம்
இந்திய கதிரியக்க ஓரிடத்தனிம தொழிநுட்ப வாரியம், (Board of Radiation and Isotope Technology) என்பது இந்திய அணு சக்தித்துறையின் கீழ், மும்பை[1] நகரத்தை தலைமை அலுவலகமாகக் கொண்டு செயல் படும் ஒரு அமைப்பாகும்.[2] நடுவண் அரசின் திட்டக் குழு இந்திய அரசின் அறிவுரைகளைக் கருத்தில் கொண்டு நாட்டின் திட்டங்களை உருவாக்கி அதற்கான வழிமுறைகளையும், செயல்முறைகளையும் பரிந்துரைகின்றன. இதன் அடிப்படையில், இந்திய கதிரியக்க ஓரிடத்தனிம தொழிநுட்ப வாரியம், அணு சக்திப் பயன்பாட்டைச்சார்ந்த நாட்டின் ஐந்தாண்டுத் திட்டங்கள், ஓராண்டிற்கான திட்டங்கள், இதர திட்டப்பணிகள் ஆகியவற்றை பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைக்கின்றது. அணு சக்திதுறையின் கீழ் செயல்படும் வெவ்வேறு துறைகளின் செயல்பாடுகளையும் கண்காணித்து, மேற்பார்வையிட்டு, கட்டுப்படுத்தவும் செய்கிறது.[3] திட்டங்களின் செயல்பாடுகளை சரியான முறையில் ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்துகிறது. அறிவியல், தொழில் நுட்பம் சார்ந்த விவகாரங்கள், குழப்பங்கள் ஆகியவற்றை தீர்த்து வைக்கிறது.
இந்த அமைப்பு பல வகையான கதிரியக்க ஓரிடத்தனிமப் பொருட்களையும் இந்தியாவில் தயாரித்து, அவற்றை அணு சக்தித்துறையின் கீழ் செயல்படும் நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது. அவற்றில் சில கதிரியக்க வேதிப்பொருட்களும், (radiochemicals) கதிர்வீச்சு மூலக்கருவிகள், காமா கதிரியக்க வரைவியல் கருவிகள் ஆகியவையும் அடங்கும். இவற்றில் சில ஆய்வுக்கூடங்களில் பயன்படுபவை யாகும், இது போன்ற கருவிகளையும், வேதிப்பொருட்களையும் வெளிநாடுகளுக்கும் வழங்கி வருகின்றனர்.[4]