இந்திய வானொலி வரலாறு

இந்திய வானொலி நிலையங்களின் வரலாறு

இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான வானொலி நிலையங்கள் மத்திய அரசின் பிரசார் பாரதி மூலம் செயல்படும் வானொலி நிலையங்களாகும். இதுபோக, தனியார் நிறுவனங்கள் நடத்தி வரும் பண்பலை வானொலி நிலையங்களும் உள்ளன. இந்தியாவில் வானொலி சேவை 75 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பாரம்பரியம் கொண்டது.

வரலாறு தொகு

இந்தியாவின் முதல் வானொலி நிலையம் 1927 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மும்பை மற்றும் கொல்கத்தாவில் ஒரே நேரத்தில் ஒலிபரப்புச் செய்யப்பட்டது. முதல் வானொலி நிகழ்ச்சிகளை 'ரேடியோ கிளப் ஆப் பாம்பே' என்ற தனியார் நிறுவனமே தயாரித்து, நிர்வாகம் செய்து வந்தது. 1936 ஆம் ஆண்டில் இருந்து வானொலி, அகில இந்திய ஒலிபரப்பில் காலூன்றியது. 1947 ஆம் ஆண்டு, இந்தியா சுதந்திரம் அடையும் போது 6 வானொலி நிலையங்களும், 18 டிரான்ஸ் மீட்டர்களும் இருந்தன. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 2.5 சதவிகித இடத்திற்கு மட்டுமே வானொலி ஒலிபரப்பு சென்றடைந்துகொண்டிருந்தது. வெறும் 11 சதவீத மக்கள் மட்டுமே வானொலி ஒலிபரப்பை கேட்கும் நிலையில் இருந்தார்கள்.

இன்று நாடு முழுவதும் 208 ஒலிபரப்பு நிலையங்கள் உள்ளன. பல்வேறு அலை நீளம் கொண்ட 326 டிரான்ஸ் மீட்டர்கள் உள்ளன. இந்த பிரம்மாண்ட வானொலி சேவை 89.5 சதவிகித பகுதிக்கு சென்று சேர்கிறது. 98.82 சதவீத மக்கள் வானொலி ஒலிபரப்பை கேட்கிறார்கள். அகில இந்திய வானொலி 24 இந்திய மொழிகளில் தனது உள்நாட்டு ஒலிபரப்பை நடத்தி வருகிறது. இவை மட்டுமல்லாது ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன் போன்ற அயல்நாட்டு மொழிகளிலும், 16 தேசிய மொழிகளிலும் சர்வதேச ஒலிபரப்பை செய்து வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்தபோது, 2.25 லட்சம் வானொலி பெட்டிகள் மட்டுமே இருந்தன. தற்போது, 11.10 கோடி வானொலி பெட்டிகள் உள்ளன.

அகில இந்திய வானொலியின் டெல்லி நிலையம் மட்டும் 88 செய்தி தொகுப்புகளை ஒலிபரப்பு செய்கிறது. இத்துடன் 42 மாநில மொழி நிலையங்கள் வழியாக 202 செய்தி தொகுப்புகளும் ஒலிபரப்பாகின்றன.

வர்த்தக நோக்கில் 'விவித்பாரதி' என்ற சேவை 1957 ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி தொடங்கியது. 1969 ஆம் ஆண்டு 'யுவவாணி ' என்ற ஒலிபரப்பு சேவை தொடங்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டு பண்பலை ஒலிபரப்பு தொடங்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டில், டிஜிட்டல் ரேடியோ, 'பிராட்காஸ்டிங்' ஒலிபரப்பு சேவை தொடங்கப்பட்டது. இணையதளம் வழியாக நேயர்கள் விரும்பும் பாடல்களை ஒலிபரப்பும், 'ரேடியோ ஆன் டிமாண்ட் சர்வீஸ்' என்ற இணையதள சேவையும் தொடங்கப்பட்டது. மேலும், 1998 ஆம் ஆண்டு, நியூஸ் அண்ட் டெலிபோன் என்ற தொலைபேசி வாயிலாக செய்திகளை கேட்டு தெரிந்துகொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

பண்பலை வானொலி தொகு

சென்னையில், முதல் பண்பலை நிலையம் 1977 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23 ஆம் நாள் தொடங்கப்பட்டது. சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் அகில இந்திய வானொலி 'ரெயின்போ', 'கோல்டு' என்ற இரண்டு அலைவரிசைகளில் ஒலிபரப்பு வருகிறது. ரெயின்போ என்பது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும், சிறு சிறு தகவல்களையும் அந்தந்த பகுதிக்கு ஏற்றாற்போல் ஒலிபரப்பு செய்யும். கோல்டு என்ற இரண்டாவது அலைவரிசை இந்தியா முழுமைக்குமான ஒலிபரப்பாகும். இதில், தேசிய செய்திகள், செய்தி விமர்சனம் போன்றவற்றை முக்கியமாக கொண்டு கூடவே பொழுதுபோக்கு அம்சங்களையும் ஒலிபரப்புகிறது.

பொதுவாக, ஒரு பண்பலை வானொலியின் ஒலிபரப்பு எல்லை 40 முதல் 50 கிலோ மீட்டர்களாகும். குறைந்த தூரம், தெளிவான, துல்லியமான ஒலிபரப்பு என்பதுதான் பண்பலையின் இலக்கணமாகும். இதில், விதிவிலக்காக, கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம் உள்ளது. இதன் டிரான்ஸ் மீட்டர் என்கிற ஒலிபரப்பு கோபுரம் மலையின் உச்சியில் அமைந்திருப்பதால், இதன் ஒலிபரப்பு எல்லை, கிட்டத்தட்ட 250 முதல் 300 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றடைகிறது. இதனால், தென் தமிழகத்தின் 22 மாவட்டங்களுக்கு இதன் ஒலிபரப்பு சென்றடைகிறது.

இவற்றையும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_வானொலி_வரலாறு&oldid=1834802" இலிருந்து மீள்விக்கப்பட்டது